' அமைச்சரே நாட்டில் மும்மாரி பொழிந்ததா? ' என்ற வசனத்தை நாடகங்களிலும், கதைகளிலும் நாம் கேட்டிருப்போம். அதைப்போல, நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங்கும்,' என்ன அமைச்சரே, இந்த மாதம் பெட்ரோல் விலையை உயர்த்தியாகிவிட்டதா? ' என்று கேட்பார் போலத் தெரிகிறது. கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. கடந்த மே மாதம் தான் பெட்ரோல் விலை 5 ரூபாய் உயர்ந்தது. மூன்று மாதத்திற்குள், செப்டம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு முதல், லிட்டருக்கு மேலும் ரூ 3.14 அதிகரித்திருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் யின் விலை உயர்ந்ததையும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததையும் இந்த விலையேற் றத்துக்குக் காரணமாக முன்வைக்கிறது மத்திய அரசு. ' உலக அளவில் எரிபொருள் விலை உள்ள அளவில் இந்தியாவிலும் இருக்கும் ' என்று அரசு சொல்வதாக, திட்டக் கமிசன் துணைத் தலைவர் மாண்டேசிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். ஆனால் உண்மைநிலை வேறுமாதிரியாக இருப்பதாக இணையத்தள தரவுகள் தெரிவிக்கின்றன.

நாடு பெட்ரோல் விலை ரூபாயில்/ 1 லி

பாகிஸ்தான் 22

பங்களாதேஷ் 22

க்யூபா 19

நேபாள் 34

பர்மா 30

ஆப்கானிஸ்தான் 36

இந்தியா 70

மேலே உள்ள அட்டவணையில், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளின் பெட்ரோல் விலையையும் பாருங்கள், இந்தியாவின் பெட்ரோல் விலையையும் கவனியுங்கள். இதைப் படிக்கும் சாதாரணமானவர்களுக்கே ஒரு கேள்வி இயல்பாக எழும். அதாவது, சர்வதேச அளவில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய்யின் விலை, அந்த நாடுகளின் பெட்ரோலியப் பொருள்களின் கொள்முதல்களிலும், விற்பனையிலும் எந்தவித தாக்கத்தையும் உருவாக்கவில்லையா? அதிலும் அவை இந்தியாவோடு ஒப்பிடும்போது, பலவிதங்களிலும் வலிமை குறைந்த நாடுகள் அல்லவா? அந்த நாடுகளால் மட்டும் எப்படி குறைந்த விலை நிர்ணயிக்க முடிந்தது?

அடக்க விலைக்குக் குறைவாகப் பெட்ரோலை விற்பனை செய்வதன் காரணமாக, இந்த ஆண்டில் மட்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 2450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். முதலில் அடக்க விலை என்னும் அண்டப் புளுகை எடுத்துக் கொள்வோம்.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலையாகப் புள்ளிவிவரங்கள் சொல்வது 16 ரூபாய் 50 காசுகள். இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 70 ரூபாய்.இதில் 16.50 க்கும், 70க்கும் இடையில் நடப்பது என்ன?

Basic cost per liter 16.50 +Centre tax  11.80% + Vat cess 4% + State tax 8%  = Total 50.05 + extra Rs.23.35per liter

இதுதான் நடக்கிறது. இப்படித்தான் பெட்ரோல் விலை ஏற்றப்படுகிறது.   இது எப்படி அடக்க விலைக்குக் குறைவாகும். நம்முடைய சிற்றறிவிற்கு இந்தக் கணக்கு ஏணி வைத்தாலும் எட்டாது போலத் தெரிகிறது.

அடுத்தது, அடக்க விலைக்குக் குறைவாகக் கொடுத்து மக்கள் சேவையாற்றியதில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் 2450 கோடி இழப்பு.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்தி: இந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 75000 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இதில் ரூ. 42000 கோடி அரசிடமிருந்து மானியமாகக் கிடைத்துள்ளது.

இந்த இரண்டில் எது உண்மை?

' எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா; ரொம்ப நல்லவன்டா ' என்று ஒரு படத்தில் வடிவேல் சொல்வதைப் போல, பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்தினாலும்  தாங்குறாங்க; நம்ம மக்கள் ரொம்ப நல்லவங்கப்பா என்று கிடுகிடுவென விலையை ஏற்றிவிட்டார்கள். அரசின் பொருளாதார வல்லுனர்களும், நிதி நிர்வாகிகளும் நமக்கு எளிதில் புரியாத சூத்திரங்களை எல்லாம் சொல்லி, விலை ஏற்றத்திற்கான காரணத்தை விளக்கு கிறார்கள். அவற்றைத் தவிர, முன்னும் பின்னும் பல உண்மைகள் இருக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் பட்டியலிடு கிறார்கள். அதிலிருந்து நமக்குத் தெரிந்த கொஞ்சத்தைப் பார்ப்போம்.

1976 இல் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, பர்மா செல், கால்டெக்ஸ் போன்ற மிகப்பெரிய  வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். அதற்கு முன், அந்த நிறுவனங்கள் சர்வதேச விலை நிர்ணயத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிவந்தன. 1991இல் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த, உலகமாயமாக்கல் கொள்கை, மீண்டும் தனியார் முதலீடுகளை அதிகரித்தது. விளைவு கட்டுப்பாடில்லாத விலை நிர்ணய நடைமுறை உருவானது.

இதற்கிடையில், 2010 ஜுன் 26 முதல் பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை, மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தது. அதற்குப் பிறகு, தனியார் முதலாளிகள் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்தத் தொடங்கினர். இப்போது, ஒரே ஆண்டிற்குள், 10ஆவது முறையாக விலையேற்றம் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர். தனியார் பெருமுதலாளிகளைக் காப்பாற்றுவதில்தான் அரசுகள் கவனமாய் இருக்கின்றனவே அன்றி, மக்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால், அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் ஆடம்பரப் பொருட்களாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

அதிலும் இந்த விலையேற்றம் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியானதாக இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் இந்த விலை உயர்வு வேறுபடுகிறது. முக்கிற நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை,  சென்னை ஆகியவற்றில் பெட்ரோல் விலையில் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.

பழைய விலை புதிய விலை விலை உயர்வு

டெல்லி 63.70 66.84. 3.14

கொல்கத்தா 68.01 71.28 3.27

மும்பை 68.62 71.92 3.30

சென்னை 67.50 70.82 3.32

வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மிதிவண்டிகளில், முதல் வண்டியைத் தட்டிவிட்டால், அடுத்தடுத்து அத்தனை வண்டிகளும் சரிந்து விழுந்துவிடும். அப்படித்தான் பெட்ரோல் விலையேற்றமும். பேருந்து கட்டணம் உயரும்; ஆட்டோக் கட்டணம் உயரும்; போக்குவரத்து செலவு அதிகரிப்பதால், காய்கறிகள், பால் விலை உயரும். ஒரு நாளைக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், இந்த விலை உயர்வுகள் எத்தனை கொடுமையான விளைவுகளை உருவாக்கும் என்பது, பொருளாதார மேதைகளுக்குத் தெரியாமலா இருக்கும். தெரிந்து என்ன செய்வது, தொடர்ந்து ஆட்சியில் ஒட்டியிருக்க முதலாளிகளின் தயவு தேவைப்படுகிறதே! அப்பாவி குடிமக்களைப் பார்த்தால், அம்பானிகளைக் காப்பாற்றுவது எப்படி?