ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல் விலை உயர்வு, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.

இந்த விலை உயர்வை எதிர்த்தும், விலை உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கலைஞர் தலைமையில் தி.மு.க. கண்டனக் கூட்டம் நடத்தியது. பிற அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கண்டனக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, நலத்திட்டங்களை அறிவித்ததைவிட, அதிகமான முறைகள் பெட்ரோல் விலை உயர்வைத் தான் அறிவித்திருக்கிறது! இதில் ஏதேனும் சாதனை படைக்கும் முயற்சி இருக்கிறதா என்பதைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம்தான் கேட்க வேண்டும்.

அந்தியாவசியப் பொருள்களின் வரிசையில் பெட்ரோலும் சேர்ந்து விட்ட நிலையில், இந்த அறிவிப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோவா மாநில அரசு, பெட்ரோலின் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரியை விலக்கிக் கொண்டு, மக்களின் சுமையைக் குறைத்திருப்ப தாகக் கூறப்படுகிறது.

விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்து வதோடு, பெட்ரோல் மீதான விற்பனை வரியைக் குறைப்பது பற்றியும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

2006இல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்தியபோதும், 2008இல் டீசல் விலையை உயர்த்தியபோதும், அன்றைய தி.மு.கழக அரசு விற்பனை வரியைக் குறைத்து, மக்கள் பாதிக்கப் படாமல் பார்த்துக் கொண்டது.

எதற்கெடுத்தாலும் முன் உதாரணங்களைப் பற்றிப் பேசும் முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. அரசின் இந்த முன் உதாரணத்தை எடுத்துக் கொள்ள முன்வருவாரா? அப்படிச் செய்தால், வாக்களித்த தமிழக மக்கள் இந்த ஒரு பலனையாவது கண்டதாக இருக்கும்.

அதே சமயத்தில், மக்களின் மீது அக்கறையற்ற மத்திய காங்கிரஸ் அரசின் போக்கு, கடுமையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே ஒரு லிட்டர் பெட்ரோல் ஏறத்தாழ ரூ.70க்கு விற்கப்படுகின்ற நிலையில், மேலும் 7 ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்டிருப்பது, ஆட்சியாளர்கள் மனச்சாட்சி உடைய வர்கள்தானா என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

“பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு தன்னிடம் இருந்து விடுவித்து எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுள் ளது. ஆகவே பெட்ரோல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம், மத்திய அரசு அல்ல” என்கிறார் நிதிமந்திரி பிரணாப் முகர்ஜி.

இதில் அரசுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றால், பெட்ரோலியத் துறை என்று தனியாக ஒரு துறை எதற்கு? அமைச்சர் எதற்கு?

வியாபாரத்தில் லாபத்தை தனக்குரியதாக ஆக்கிக் கொள்ளும்போது, நட்டத்தையும் தனக்குரியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இது எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது அரசுக்குத் தெரியாதா?

ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் தலையில் சுமையை ஏற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது என்றால், மக்களின் பொருளாதாரத்தைப் பற்றி அக்கறையில்லாத பொருளாதாரக் கொள்கையை உடையது இந்த அரசு என்றுதானே பொருள்!

ஆட்சியாளர்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், தொலைபேசி, மின்சாரம், பயணம் உள்ளிட்ட அத்தனை இலவச சலுகைகளையும் நிறுத்தினால்தான், பொறுப்பற்ற பதில்களும், மக்களின் மீது அக்கறை யில்லாத அறிவிப்புகளும் வராது!