பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றத்துக்கு அரசு கூறும் காரணங்கள் மூன்று. முதலாவது காரணம், கச்சா எண்ணெய் விலை. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால் அதற்கேற்றபடி பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர, வேறு வழியில்லை என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுகின்றன. ஆனால், இதில் உண்மையில்லை. கச்சா எண்ணெயின் இப்போதைய விலை பீப்பாய்க்கு 94 அமெரிக்க டாலர்கள். கடந்த மாதத்திலிருந்து எடுத்துக்கொண்டால் சராசரியாக 100 டாலர்கள். ஒரு டாலரின் மாற்று மதிப்பு 44.9 ரூபாய். சராசரியாகக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் விலை ரூ.4490. ஒரு பீப்பாய் என்பது 159.99 லிட்டர். ஆக ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் மதிப்பு ரூ.28.

பெட்ரோல் உற்பத்தியில் கச்சா எண்ணெய் 90 சதவீதமும் உள்நாட்டில் தயாராகும் பொருள்கள் 10 சதவீதமும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒட்டு மொத்தமாக உற்பத்திச் செலவு ஒரு லிட்டருக்கு 30 ரூபாயைத் தாண்டாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால் கடந்த 2006-07 ஆம் ஆண்டில் உற்பத்திச் செலவு ரூ.19.47 ஆகவும், 2007-08 ஆம் ஆண்டில் ரூ.25.71 ஆகவும், 2008-09 ஆம் ஆண்டில் ரூ.26.11ஆகவும், 2009-10 ஆம் ஆண்டில் ரூ.21.75 ஆகவும் இருந்திருக்கும். அரசின் தகவல்களும் இதை உறுதிப்படுத்துகின்றன. வரி வகையில் அரசு எந்த லாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றால் பெட்ரோலை இதே விலைக்கே மக்களுக்குத் தந்திருக்க முடியும். அதனால் கச்சா எண்ணெயைக் காரணம் காட்டுவது போலியானது.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் இரண்டாவது காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ.78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வாதமும் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. (லாபத்தில் ஏற்படும் குறைவு) இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங் களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.  கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோலிய உயர்வுக்கு அரசு கூறும் மூன்றாவது காரணம், மானியங்களால் ஏற்படும் பொருளாதாரச் சுமை. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல் போன்ற வற்றுக்கு அதிக அளவில் மானியங்கள் தரப்படுவதால் அவற்றை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டியிருக்கிறது என்று அரசு கூறுகிறது.

ஆனால், புள்ளி விவரங்களின்படி 2006-07 முதல் 2009-10 வரையிலான நிதியாண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அரசு வழங்கியிருக்கும் மானியம் ரூ.23,325 கோடி. இதே காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள் மூலம் அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் ரு.4,10,842 கோடி. இதன்படி அரசு வழங்கியிருக்கும் மானியம், லாபத்தில் வெறும் 5.67 சதவீதம்தான். மாநிலங்களின் வரி வருவாயான ரூ.2,63,766 கோடியையும் சேர்த்தால் இந்த அளவு வெறும் 3.45 சதவீதம்தான்.

கிடைக்கும் லாபத்தில் சிறு துரும்பைத் தான் மானியம் என்கிற பெயரில் அரசு கிள்ளிப் போட்டிருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மொத்தத்தில் பெட்ரோலியத் துறை லாபம் கொழிக்கும் துறை. பெட்ரோலியப் பொருள் களின் விலைகளை உயர்த்துவதன் நோக்கம் லாபத்தை அதிகரிப்பதேயன்றி, நஷ்டத்தைச் சமாளிப்பதல்ல. இதுதவிர டீசலில் லிட்டருக்கு ரூ.18.19, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெயில் லிட்டருக்கு ரூ.29.69, சமையல் எரிவாயு சிலிண்டரில் ரூ.329.73 நஷ்டம் ஏற்படுவதாக அரசு கூறி வருகிறது. இப்படி மிகைப்படுத்தி நஷ்டக் கணக்கைக் காட்டுவதன் மூலம் மக்களின் எதிர்ப்பை அடக்கலாம் என்பது அரசின் திட்டம்.

(‘தினமணி’ ஏட்டில் வெளிவந்த கட்டுரையிலிருந்து)