சமீபத்திய விலைவாசி உயர்வு எல்லோரையும் ஒரே நேரத்தில் அதிசயிக்கவும், ஆத்திரப்படவும் வைத்துள்ளது. இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக ஏறுகிற பொழுதும், ஆடம்பரப் பொருட்களின் விலைகள் நிதானமாகவே உள்ளன. இந்த முரண்பாட்டிற்கு அரசும், பத்திரிகைகளும் எத்தனையோ விளக்கங்களை கொடுக்கலாம். அவைகள் எல்லாம் பணமூட்டைகளின் தன்மையை குழப்பியோ அல்லது புரிந்து கொள்ள முடியாத அளவிலோ கூறப்படுபவைகளே.

நாம் கையாள்கிற பணம் என்பது வெறும் பரிவர்த்தனை செய்ய அரசு தயாரித்த ‘தாள்’ மட்டுமல்ல. அது வட்டி சம்பாதிக்கும் கடன் பத்திரமும் ஆகும். பணம் வட்டியை சம்பாதிக்க வேண்டுமானால் அது முதலீடாக மாறி பெருக வேண்டும். அதாவது தொழில் (உற்பத்தி) அல்லது வர்த்தகம் இவை இரண்டின் மூலமே பணம் பெருக முடியும். ஆனால் தற்போது நடப்பதென்ன? பணம் நிறைய வைத்திருப்பவர்களும், பெரும் நிதி நிறுவனங்களும் பணத்தை பெருக்கிட குறுக்கு வழியையே நாடும் நிலைமை உள்ளது. அரசியல் செல்வாக்குள்ள இத்தகைய நிதி நிறுவனங்கள் பணத்தை பெருக்க பல குறுக்குவழிகளை உருவாக்கி விட்டனர். அதில் ஒன்று அத்தியாவசியப் பொருட்களை குறி வைத்து சூதாடுவது.

தக்காளி விவசாயி இடமிருந்து சில்லறை வியாபாரிகள் கைக்கு வருவதற்குள் இடையில் சில நிதி நிறுவன பணமூட்டைகள் குறுக்கே புகுந்து அந்த சரக்கை கைப்பற்றி ஒவ்வொருவரும் அவரவர் போட்ட பணத்திற்கு வட்டியும் லாபமும் கணக்குப்போட்டு விற்க முனைவதால் விலை பலமடங்கு எகிறிவிடுகிறது. வத்தலக்குண்டிலிருந்து வெங்காய லாரி சென்னை கோயம்பேடு வருவதற்குள் அதன் விலை விண்ணைத் தொட்டு விடுகிறது. நிதி நிறுவனங்களிலே திரண்டு கிடக்கும் பல லட்சம் கோடி பணத்தையும் பணப்புழக்கத்தின் அளவையும் கட்டுப்படுத்த அரசு தவறினால் விலைகள் இப்படித்தான் தாறுமாறாகப் போகும். இது சந்தையின் பொதுவிதியாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் வேகமாக விற்பனையாகிவிடும், குறைந்த அளவா வது வாங்காமல் மக்கள் வாழ முடியாது. ஆடம் பரப் பொருள் அப்படி அல்ல. விற்க கால தாமதமானால் போட்ட பணத்தின் வட்டி இழப்பு ஏற்படும். எனவே வேகமாக பணத்தை பெருக்க ஆசைப்படும் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தை கையிலெடுக்கிறது. தொடர் ஓட்டம் போல் பல பண மூட்டைகள் வரிசையில் நின்று கூடுதல் விலையை சுமத்துகின் றன. இவ்வாறு பல கைகளுக்கு மாறி சந்தையில் நாம் வாங்கப் போகிற பொழுது மிகஅதிக விலையானாலும் மக்கள் முனகிக் கொண்டே வாங்கிவிடுவர். அதே நேரம் முனகல், போராட்டமாக வெடிக்காமல் இருக்க விலை குறையும் என மக்களை நம்ப வைக்க சில காரணங்களை நிபுணர்கள் மூலம் அவிழ்த்துவிடுவர். ஆளும் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விடுவார்கள்.

வெங்காய விலை ஏறிய பொழுது கூறப்பட்ட காரணம் வெள்ளம். இதன் மூலம் வெங்காய ஏற்றுமதியால் செயற்கையான பற்றாகுறை உருவாக்கப்பட்டதை மறைத்தனர். அதேநேரத்தில், வெள்ளத்தால் அதி கம் பாதிப்பிற்குள்ளான பாகிஸ்தானிலிருந்து வெங் காய இறக்குமதி செய்து வரலாறு காணாத விலைக்கு விற்கின்றனர். முதலில் 15 ரூபாய் வெங்காயத்தை 80 ரூபாய்க்கு விற்று மின்னல் வேகத்தில் பணத்தை சுருட்டினர். இப்பொழுது பாகிஸ்தானிலிருந்து கிலோ சுமார் ரூ.25க்கு வாங்கி ரூபாய் 50க்கு விற்று விலையை குறைத்ததாக உணர்வை ஏற்படுத்தி விட்டனர். இந்திய விவசாயிக்கு கிடைத்ததோ அந்த ரூ15தான். பாகிஸ்தான் விவசாயிக்கு கிடைப்பது ரூபாய் 15க்கும் குறைவேதான். ஆக, பணமூட்டைகள் சரக்கு நகர்கிற பாதையில் வரிசையில் நின்று சரக்கின் விலையை உயர்த்து கின்றனர். அதேநேரத்தில் ஆட்சியாளர்கள். உண்மை மக்கள் கண்ணில் படாமல் பார்த்துக் கொள் கின்றனர்.

பணமூட்டைகள் மட்டுமல்ல, இந்திய அரசும் கொள்ளை லாபம் சம்பாதிக்க முனைந்து பெட் ரோலிய பொருட்களின் விலைகளை உச்சிக்கு கொண்டு போகிறது. பெட்ரோலிய பொருட் களின் பெரும்பகுதியை பொதுத்துறை நிறுவனங் களே தயாரிக்கின்றன. ஆனால் அரசும் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே ஆசைப்படுகிறது. ஊழலா லும், முதலாளிகளுக்கு கொடுக்கிற சலுகைகளா லும் ஏற்படுகிற நட்டத்தை சரிக்கட்ட பெட் ரோலிய வர்த்தக வருவாயை பயன்படுத்துகிறது.

இந்த முரண்பட்ட நிலைக்கு முக்கியமான சமூக காரணமுள்ளது. மக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பது அடிப்படை காரணங்களில் ஒன்று. சிலர் கையில் லஞ்சமாகவோ, லாபமாகவோ பல லட்சம் கோடிகள் திரள் கிறது அல்லது சிலரால் எளிதில் ஆயிரக்கணக் கான கோடிகள் கடன் வாங்க முடிகிறது. விவரம் அறிந்த அரசியல் செல்வாக்குள்ள இந்த நபர் அந்த பணத்தால் சரக்குகளின் நடமாட்டத்தை அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடுகிறார். கிடைக்கிற லாபத்தை முதலீடு செய் பவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது? அது பணத்தை பெருக்க ஆசைப்படுபவரின் அறியாமை, அல்லது பணம் அற்புத சக்தி படைத்தது என்ற மூட நம்பிக்கையே. பணத்தை சரக்கு உற்பத்தியிலோ, அல்லது நேரடி வர்த்தகத்திலோ ஈடுபடுத்தாமல் குறுக்கு வழியில் பணத்தை பெருக்க முயன்றால் பணம் வீங்கி பணத்தின் மதிப்பு குறையுமே தவிர அதன் மதிப்பு கூடாது. அதைவிட பொருளாதார சக்கரம் சுழலாது. அவ்வளவு இருந்தும் அமெ ரிக்கா நெருக்கடியை சந்திப்பதற்கு காரணம் அம் மக்களின் பணத்தின் மதிப்பு பற்றிய அறியா மையே!

அரசு செய்ய வேண்டியது,

(அ) நிதி நிறுவனங்களையும் தனியார் பாண்டு களையும் அரசு கண்காணிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்படும் குறுக்கு வழிகளை கிரிமினல் குற்றமாக்கி தண்டிக்க வேண்டும்

(ஆ) வர்த்தக ரகசியம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதை தடுக்க, தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு கொடுக்க வேண்டும். ஏன் அந்த விலை என்பது பற்றிய தகவலை கொடுக்க மறுத்தால் குற்றம் என்ற நிலை வந்தால் ஊக வாணி பம் முடங்கும். அரசும் தகவல்களை மக்களுக்கு கேட்டவுடன் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

(இ) விலைவாசியை கட்டுப்படுத்து என்ற இயக்கத்தோடு ஏற்றத்தாழ்வை குறைக்க சம்பள உயர் விற்கும், விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைக்கும், போராட மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.

20 ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட் களின் விலை சர்வதேச அளவில் ஊசலாடிக் கொண்டே ஏறுமுகமாகவே இருக்கிறது, 1980இல் பெட்ரோலியக் கூழின் (கச்சா எண்ணெய்) விலை பேரலுக்கு 25 டாலரில் இருந்தது. 2003வரை இது தான் விலையாக இருந்தது. 2003லிருந்து 2005இல் 60 டாலரை தொட்டது, 2008இல் 147 டாலரை தொட் டது 2010க்குள் அது கீழே விழுந்து 60 டாலரை தொட்டு மீண்டும் 90 டாலரில் ஊசலாடுகிறது. ஆனால் இந்திய அரசு மானியத்தை நிறுத்தி பெட் ரோலியப் பொருட்களின் விலையை ஊசலாடா மல் ஏறுமுகமாகவே வைத்து வருகிறது. சர்வதேச விலை உயர்விற்கு காரணம் ஏகாதிபத்திய நாடு களில், டாலர் வடிவில் நிதி மூலதனம் உருவாக்கிய நெருக்கடியிலிருந்து மீள கையாண்ட நடைமுறையே ஆகும்.

டாலரின் மதிப்பு குறைந்தால் ரூபாயின் மதிப்பைபும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டது எனவே, அரசு அதைக்காட்டி விலையை உயர்த்தி விட்டது. உண்மையில், நாம் பெட்ரோலிய கூழை இறக்குமதி செய்து, சுத்தப்படுத்தி பெட்ரோலிய பொருட்களாக ஏற்றுமதி செய்கிறோம், அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மானியமாக கொடுத்தாலே பெட்ரோல் விலையை குறைக்க முடியும். அரசும், பெருமுதலாளிகளும் இதற்கு தயாரில்லை.

அ) பெட்ரோலியப் பொருட்களின் விலையில் சரி பாதியாக வரி உள்ளது. விமானப் போக்குவரத் திற்கு பயன்படும் எரிபொருளுக்கு விலையை குறைத்தது போல் வரிகள் குறைக்கப்பட வேண்டும்

ஆ) உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலிய பொருட்களுக்கு சர்வதேச விலையை நிர்ணயிக்கக் கூடாது.

இ)சந்தை விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

ஈ) பற்றாக்குறையை சரிகட்ட பெட்ரோலிய விலையில் தகிடுதித்தம் செய்யக் கூடாது. உள் நாட்டு பெட்ரோலிய கச்சா உற்பத்தியை பெருக்க வேண்டும். நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அந்த உற்பத்தி முறை இருக்க வேண்டும்.

****

இந்தியா ஒரு பீப்பாய்க்கு 90 டாலர்கள் வரை விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. நடப்பு நிதியாண்டில் சராசரியாக கச்சா எண்ணெயின் விலை 79.35 டாலர்களாக இருந்து வந்திருக்கிறது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 13.74 சதவீதம் அதிகமாகும். நடப்பு ஆண்டில் இந்த விலை 100 டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் 110 டாலர்களாகவும் அதிகரிக்கும்

கடந்த நிதியாண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.76 டாலர்களாக இருந்தது. ஒரு பீப்பாய் என்பது கிட்டத்தட்ட 160 லிட்டர்களுக்குச் சமம்.

பெட்ரோலியத் துறை மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் அரசுக்கு ரூ.1,83,860 கோடி வருமானம் கிடைத்திருக் கிறது. இதில் மத்திய அரசுக்கு ரூ.1,11,779 கோடியும் மாநில அரசுகளுக்கு ரூ.72,081 கோடியும் பங்கு. கச்சா எண்ணெய் மீதான சுங்க மற்றும் கலால் வரிகள், ராயல்டி, நிறுவன வரி, பங்கு ஈவுத் தொகை மீதான வரி, சேவை வரி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு வகையில் மத்திய அரசுக்கும் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் மாநில அரசுகளுக்கும் இந்த வருவாய் போய்ச் சேருகிறது. பெட்ரோல் விலையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வரியாகவே வசூலிக்கப்படுகிறது. அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதால், அரசின் கஜானாவில் பணம் கொட்டப் போகிறது என்பது தெளிவு.

கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோலியத் துறைக்காக அரசு வழங்கிய மொத்த மானியமே ரூ.23,325 கோடிதான் கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா ரூ.4,10,842 கோடி மாநில அரசுகளின் வருவாய் ரூ.2,63,766 கோடி. இந்த வருமானத்தில் அரசு தரும் மானியம் வெறும் 3.45 சதவீதம்தான்.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ.1.26,288 கோடி லாபமடைந்திருப்பதாக அவற்றின் ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அச்சப்படுவதுபோல 110 டாலர் அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதை எளிதாகச் சமாளிக்க முடியும். 2008ஆம் ஆண்டில் 148 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்றபோதுகூட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தாமலேயே அரசு சமாளித்தது.

(அரசு காட்டும் போலி கணக்கு, பி.எஸ்.எம்.ராவ் தினமணியில் எழுதியிருந்த கட்டுரையிலிருந்து)

Pin It