“சர்க்கரை சாப்பிடாவிட்டால் யாரும் செத்துவிட மாட்டார்கள். சர்க்கரையை ஏன் அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படியே சர்க்கரை விலை ஏறினால்தான் என்ன? அதனால் குடியாமுழுகிவிடும்... சர்க்கரை வியாதிக்காரர்களைப் போல மற்றவர்களும் சர்க்கரையைச் சாப்பிடாமல் இருந்தால் என்ன? ” ‡

இப்படி ஒரு தலையங்கத்தை மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழ் ‘ராஷ்டிரவாதி’யில் வெளி வந்திருக்கிறது.

சர்க்கரை அனைத்து மக்களின், குறிப்பாக ஏழை எளிய மக்களின் முக்கிய உணவுப் பயன்பாட்டுப்  பொருள்களில் ஒன்று. சில நேரம்  தேனீர்தான் ஏழைகளின் உணவாகக் கூட இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் ஒதுக்கவேண்டும் என்று சொல்லும் மருத்துவர்கள், எல்லா மக்களும் சர்க்கரையை ஒதுக்க வேண்டும் என்று சொல்வதில்லை.

காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தில் நாடே கலந்து கொண்டது. யாரும் உப்பு என்ன அத்தியாவசியப் பொருளா என்று கேட்கவில்லை. மருத்துவர்கள் உப்பைக்கூட ஒதுக்கச் சொல்கிறார்கள். ஆனால் எல்லா மக்களையும் இல்லை. சரக்கரையும் உப்பும் அடிப்படையில் முக்கிய உணவாக இல்லை என்றாலும், அத்தியாவசிய உணவுப் பொருள்களில் அவையும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

குளிர்சாதனப் பெட்டி, மகிழுந்து, மெத்தை, குளிரூட்டும் பெட்டி போன்ற பொருள்கள் இல்லாமலும் மக்கள் வாழ்கிறார்கள். இவை அத்தியாவசியப் பொருள்கள் அல்ல வாழ்க்கைக்கு. சர்க்கரை இல்லாமல் சரத்பவார் அவரது தீபாவளி பண்டிகையைக்கூட கொண்டாட முடியாது.

விலைவாசி நஞ்சுபோல் ஏறிக்கொண்டு இருக்கிறது. அதைக் குறைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு, அவரது கட்சிப் பத்திரிகையில் வரும் இது போன்ற பொருளற்ற தலையங்கம் வெளிவருவது சரியல்ல.

அதிலும் இப்படி ஒரு தலையங்கம் தன்னுடைய கட்சிஇதழில் வெளிவந்த பின்னர் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது எழுதியவரின் நிலைப்பாடு என்று சொல்லி தப்பித்துக் கொள்ள நினைப்பது சரத்பவார் போன்ற முதிர்ந்த அரசியல் அனுபவம் பெற்று, மத்திய அமைச்சராக இருப்பவர்களுக்கு அழகல்ல!

 

Pin It