தலித்துகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் மன்மோகன் ஆட்சி இழைக்கும் மற்றொரு துரோகம்

மத்திய அரசாங்கத்தின் 'அலுவலர்கள் மற்றும் பயிற்சித் துறை' கொண்டு வந்த, 'அட்டவணை சாதி யினருக்கும் அட்டவணைப் பழங்குடியினருக்கும் பணியிடங்களிலும் இடஒதுக்கீடு மசோதா 2008' கடந்த நாடாளுமன்றத் (மாநிலங்கள் அவை) தொடர் கூட்டத்தின் கடைசி நாளன்று, வழக்கம் போலவே எந்தவிதமான விவாதங்களுமின்றி நிறைவேற்றப்பட்டு விட்டது. 2009 பிப்ரவரி மாதத்தில் நடக்க விருக்கும் மக்களவைத் தொடர் கூட்டத்திலும் அது 'விவாத'த்திற்கு வைக்கப்பட்டு எந்தவித எதிர்ப்பு மின்றி நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடு உள்ளது.

மேற்சொன்ன சமூகப் பிரிவினருக்குத் தரப்படும் 'இடஒதுக்கீடுகளுக்கு' சட்டரீதியான தகுதியை வழங்கவும் அவர்களது தன்னம்பிக்கையை வலுப் படுத்தவும் இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக மத்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அவர்களது தன்னம்பிக்கையைக் குலைப்பதும், ஏற்கனவே அவர்கள் அனுபவித்து வரும் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதும், இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் பார்ப்பன - மேல் சாதியினரின் ஆதிக்கத்தை எவ்வித எதிர்ப்புமின்றி நிலை நிறுத்துவதுமே இந்த மசோதாவின் உண்மையான குறிக்கோளாகும். அதாவது 'தேசம் முழுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த' உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பதவிகளில் 'இட ஒதுக்கீட்டின்' வழியாக அட்டவணை சாதியினரையும் அட்டவணைப் பழங்குடி மக்களையும் சார்ந்தவர்களை பணிக்கு அமர்த்துவதை ஒழித்துக் கட்டும் மசோதாதான் இது.

உயர் கல்வி நிலையங்களில் ஆசிரியர் பதவிகளில் அட்டவணை சாதியினர் / பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரைச் சார்ந்தவர்களை 'இட ஒதுக்கீட்டின்' மூலம் பணியில் அமர்த்துவதற்கு மத்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கொண்டு வந்த முயற்சிகளை, இந்தியாவிலுள்ள ஐஐடி இயக்குநர்கள் விடாப்பிடியாக எதிர்த்து, அந்தத் திட்டம் கைவிடப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

'இட ஒதுக்கீட்டின்' மூலம் அந்த நிறுவனங்களினதும் அவற்றில் சேர்ந்து பட்டம் பெறுபவர்களினதும் 'திறமை' பாதிக்கப்படும் என்னும் மனுவாதத்தைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இந்த இயக்குநர்களின் கோரிக்கைகளுக்கு (அதாவது இந்த நிறுவனங்கள் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்னும் அவர்கள் பாராட்டிக் கொள்ளும் உரிமைகளுக்கு) ஒப்புதல் தரும் வகையில், சில மாதங்களுக்கு குவஹாத்தி ஐஐடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் கொடுத்த வாக்குறுதியும் அமைந்திருந்தது. உயர்கல்வி நிறுவனங்களில் 'இடஒதுக்கீடு முறை'யைப் புகுத்துவதால் அவற்றின் திறமை கெட்டுவிடும் என ஐஐடி இயக்குநர்கள் கூறி வந்ததையும் அவர்கள் தெரிவித்து வந்த 'கவலை உணர்வுகளை'யும் மத்திய அரசாங்கம் அனுதாபத்துடன் பரிசீலிக்கும் என மன்மோகன் சிங் அங்கு வாக்குறுதி தந்தார். அந்த வாக்குறுதிதான் மேற்சொன்ன மசோதா வடிவத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

பார்ப்பனர்களைத் தவிர்த்த, மற்றவர்களுக்கு அட்டவணை சாதியினர்/பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு 'திறமை' இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழிமுறையாக இருந்து வருவது 'இடஒதுக்கீடு' தான். அந்த இடஒதுக்கீட்டின் வழியாகவே பல்கலைக்கழக மானியத்தின் தலைவராக சுக்தேவ் தோரட்டும், மத்தியத் திட்டக் குழு உறுப்பினராக முங்கேகரும், ராஞ்சி பல்கலைக்கழக (முன்னாள்) துணை வேந்தராக ராம்தயாள் முண்டாவும், அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக ஆனந்தகிருஷ்ணன் போன்றோரும் இருக்க முடிந்தது. அவர்கள் தத்தம் துறையில் பார்ப்பனர்களுக்கோ, பிற முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கோ எவ்வகையிலும் திறமை குறைந்தவர்கள் அல்லர் என்பதும், இடஒதுக்கீட்டின் மூலமே வெளிப்பட்டது. இடஒதுக்கீடு என்பது இல்லாமலிருந்தால் இந்தியாவில் பொருளுற்பத்தியில் ஈடுபட்டுள்ள சாதிகளைச் சேர்ந்தவர்களால் 'மூளை உழைப்பிலும்' பெரும் சாதனையைச் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்துவதற்கான வேறு எந்த வாய்ப்பும் இருந்திருக்காது.

மேற்சொன்ன மசோதா மக்களவையின் ஒப்புதலையும் பெற்றுவிடுமேயானால், கீழ்க்காணும் 47 உயர் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டின் மூலம் அட்டவணை சாதியினரையும் பழங்குடி யினரையும் ஆசிரியர்களாகப் பணியிலமர்த்துவது ஒழித்துக் கட்டப்படும்: இந்தியா முழுவதிலுமுள்ள ஏழு ஐ.ஐ.டி.கள், ஏழு ஐஐஎம்-கள், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், பத்து தேசியத் தொழில் நுட்ப நிறுவனங்கள், புதுச்சேரியிலுள்ள ஜிப்மர், வாரனாசி இந்துப் பல்கலைக்கழகம், டெல்லிப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முது கலைப் பட்டப் படிப்பு நிறுவனம், சந்திகர், மேற்கு வங்காளத்திலுள்ள விசுவ பாரதி, கோல்கொத்தாவிலுள்ள விக்டோரியா நினைவகம், தேசிய நூலகம், இந்திய அருட்காட்சியகம், புதுடெல்லியிலுள்ள இந்திய போர் நினைவகம்.

ஏற்கனவே பல்வேறு ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியது போல 'டி' பிரிவு பணிகளில் மட்டுமே அட்டவணை சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆசிரியர் பதவிகளைப் பொறுத்தவரை, உயர் கல்வி நிறுவனங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு:

டெல்லி பல்கலைக் கழகத்தில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 6500 ஆகும். அட்டவணை சாதியினருக்கும் பழங்குடி மக்களுக்கும் இதில் 1500 இடங்கள் இருக்க வேண்டும். ஆனால், 2001 இல் இந்தப் பிரிவினரைச் சேர்ந்த ஆசிரியர்கள் 100 பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் இது 400 ஆக உயர்ந்தது. நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆசிரியர்களாகப் பணியாற்றிய டெல்லி பொருளாதாரப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு நிலவரப்படி மேற்சொன்ன பிரிவினரைச் சேர்ந்த ஆசிரியர்கள் 4 பேர் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒருவர் மட்டுமே அங்கிருந்தார்.

அட்டவணை சாதியினர் / பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் (இந்த ஆணையம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் இருந்த காலத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது) 1999-2000-த்திற்கான அறிக்கை, கீழ்காணும் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்த மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தந்துள்ளது (அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை மேற்சொன்ன பிரிவினருக்கு உள்ள இடங்கள்):

பேராசிரியர் : வாரனாசி இந்து பல்கலைக்கழகம்: 360(1); அலிகார் பல்கலைக்கழகம்: 233(0); ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி: 183(2); டெல்லி பல்கலைக்கழகம் : 332(3); ஜமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி : 90(0); விசுவ பாரதி, மேற்கு வங்கம்: 148(1); ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம்: 72(1).

இணைப் பேராசிரியர் (ரீடர்): வாரனாசி இந்து பல்கலைக்கழகம் : 396(1); அலிகார் பல்கலைக்கழகம் : 385(0); ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்: 100(3); டெல்லி பல்கலைக்கழகம்:197(2); ஜமியா இஸ் லாமியா பல்கலைக்கழகம், டெல்லி: 128(1); விசுவ பாரதி: 70(1; ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் : 187(2).

விரிவுரையாளர்: வாரனாசி இந்து பல்கலைக் கழகம் : 329(1); அலிகார் பல்கலைக்கழகம் : 521(1); ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் : 70(10); டெல்லி பல்கலைக்கழகம்: 140(9); ஜமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், டெல்லி: 216(1); விசுவ பாரதி: 188(16); ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம்: 44(13).

மேற்சொன்ன விவரங்கள் ஏறத்தாழ பத்தாண்டு களுக்கு முற்பட்டவை. எனினும், தற்போது நிலைமை பெருமளவில் மாறியிருப்பதற்கான ஆதாரங்கள் ஏதுவுமில்லை. பல்கலைக்கழக மானிய ஆணையம் 1959 இல் நிறுவப்பட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவிலுள்ள 250க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும் எண்ணற்ற கல்லூரிகளிலும் அட்டவணை சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள 75000 ஆசிரியர் பதவிகளில் பாதிகூட இன்னும் நிரப்பப்பட வில்லை. பல பணியிடங்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பு களையும் பழங்குடி மக்களையும் சேர்ந்தவர்கள் எனப் போலிச் சான்றிதழ்கள் கொடுத்துப் பதவி பெற்றவர்களால் நிரப்பப்பட்டுள்ளன.

'திறமை' என்னும் பெயரால், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் போன்ற மோசடி நிறுவனங்களுக்கு எண்ணற்ற பட்டதாரிகளை வழங்கியுள்ள ஐ.ஐ.டி.கள், ஐஐஎம்-கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் 'தேசத்திற்கு' ஆற்றியுள்ள ஒட்டு மொத்தமான சேவைகளைக் காண்போம்:

மக்களின் வரிப்பணத்திலிருக்கும் உழைக்கும் மக்கள் உருவாக்கும் செல்வத்திலிருந்தும் பன்னூறு கோடி ரூபாய் ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செலவிடப்படுகின்றது. மிக இன்றியமையாத தொடக்கக் கல்வியைக்கூட வெகுமக்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குச் சரிவரக் கிடைப்பதில்லை. ஆனால், ஐ.நா. அவையின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு மேற்கொண்ட ஆய்வு, அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களில், படிப்பு முடிந்ததும் அந்த நாட்டிலேயே தங்கிவிட விரும்பும் மாணவர்களில் மற்ற எல்லா நாட்டு மாணவர்களையும்விட மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்திய மாணவர்களே (அதாவது, மொத்த இந்திய மாணவர்களில் 80 சதவீதம்) என்பதை வெளிப்படுத்தியதாக இங்கிலாந்திலிருந்து வெளிவரும் 'தி எகனாமிஸ்ட்' என்னும் ஏடு 26.9.2002 இல் தெரிவித்தது.

டெல்லியில், ஊடகங்களில் பணிபுரிகின்றவர் களும், களப் பணியாளர்களுமடங்கிய 'ஊடக ஆய்வுகள் குழு' என்னும் அமைப்பு டெல்லியிலுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல்கள் நிறுவனத்தி லிருந்து பட்டப்படிப்பு முடித்துச் சென்ற 42 'பேட்சு'களை சேர்ந்த மாணவர்கள் எங்கு பணிபுரி கிறார்கள் என்பதைக் கண்டறியும் ஆய்வை நடத்தியது. அந்த நிறுவனம் நிறுவப்பட்ட 1956 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரையில் பட்டம் பெற்றுச் சென்றவர்களில் 1477 பேர் மட்டுமே எங்கு இருக்கிறார்கள் என்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது. அந்த 1477 பேரில் 780 பேர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது.

அதே போல ஐஐடியில் படித்துப் பட்டம் பெற்றுச் சென்றவர்கள் பற்றிய விவரங்களும் கிடைத்துள்ளன.

'பிரண்ட்லைன்' 1.14.2003 இதழில் காந்தா முரளி என்பவர் எழுதியுள்ள கட்டுரை கீழ்க்காணும் விவரங்களைத் தருகிறது:

1. 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள ஏழு ஐஐடி நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி ரூ.3577 கோடியாகும். அதே ஆண்டில் தொடக்கக் கல்விக்காக அது ஒதுக்கிய நிதி ரூ.564 கோடி மட்டுமே.

2. ஐஐடிகளில் சேர்க்கப்படும் அட்டவணை சாதியினர், அட்டவணைப் பழங்குடியினர், பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.

3. அட்டவணை சாதியினர் / பழங்குடி மக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கிட்டத்தட்ட பாதி நிரப்பப்படவே இல்லை; நிரப்பப்பட்ட இடங்களிலும் ஏறத்தாழ 25 சதவீதம் மாணவர்கள் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நின்று விட்டனர்.

4. ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் என்றால் அவர்கள் பெரும்பாலும் உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆண் மாணவர்களே, பெண்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றனர்.

5. ஏழு ஐஐடிகளில் படிக்கும் மாணவர்களில் (1500 முதல் 200 வரை) ஏறத்தாழ சரிப்பாதிப் பேர், ஒவ்வோராண்டும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். (பெரும்பான்மையினர் அமெரிக்காவுக்குச் சென்று விடுகின்றனர்) அமெரிக் காவில் மட்டும் ஐஐடியின் பழைய மாணவர்கள் 25000 பேர் இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க, அட்டவணை சாதியினரையும் பழங்குடி மக்களையும் சேர்ந்தவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களில் ஆசிரியர் பதவிகளில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் மேற்சொன்ன மசோதா, வருண-சாதி மனுதர்மத்தை வலுப்படுத்தவே செய்யும். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த இப்போதாவது, தலித், பழங்குடி, பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Pin It