தேர்தல்கள் முடிந்தவுடன் இப்படியொரு அடி விழுமென்று வாக்காளர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பெட்ரோல் விலை ரூ.5 உயருமென அறிவிக்கப்பட்டது. ஓராண்டிற்குள் ஒன்பதாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.20க்கு எகிறிவிட்டது. நடுத்தர வர்க்க டூ வீலர்காரர்கள் பலரும் கூட திட்டித் தீர்த்து விட்டார்கள்.
இப்போதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு கொஞ்ச, நஞ்ச கூச்சம் கூட இல்லாமல் போய்விட்டதென்பதற்கு இது அறிவிக்கப்பட்ட நேரமே சாட்சி. தேர்தல்கள் முடிந்த கையோடு மக்களுக்கு அளிக்கப்பட்ட முதல் பரிசாக அமைந்தது. என்னிடம் கலந்து ஆலோசிக்கவேயில்லை என மம்தா கூறித் தப்பித்துவிட்டார். கனிமொழியையே காப்பாற்ற முடியாத கலைஞர் இதைப் போய் காங்கிரசிடம் கேட்க முடியுமா என்று பரிதாபப்பட்டு பத்திரிகையாளர்கள் கூட அவரைத் தொந்தரவு செய்யவில்லை போலும்.
இந்தியா என்ன செய்யும்?
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 பேரலுக்கு ரூ. 125 வரை போய்விட்டது. பெட்ரோல் விலையை எப்படி உயர்த்தாமல் இருக்கமுடியும், என்பது ஆட்சியாளர்களின் வாதம். ஆனால் உலகச் சந்தையில் மற்ற நாடுகளெல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோலை விற்கிறார்கள் தெரியுமா? டோகாவில் ரூ. 8.25, சௌதி அரேபியாவில் ரூ 8.53, யுனைடெட் அரேபிய எமிரேட்டில் ரூ. 18.14 என்று சொன்னால் இவையெல்லாம் பெட்ரோல் உற்பத்தி செய்கின்ற நாடுகள் என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் அண்ணாந்து பார்க்கிற அமெரிக்காவில் கூட 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 37.31, பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானில் ரூ. 35.75, இலங்கையில் ரூ. 47.04 தான்.
உலகச் சந்தையைக் கைகாட்டும் மத்திய நிதியமைச்சர். பிரணாப் முகர்ஜி இவ்வளவு நாடுகளில் பெட்ரோல் விலைகள் குறைவாக இருப்பது ஏன் என விளக்குவார்களா? பெட்ரோல் என்பது மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடையது. இதன் விலை உயர்ந்தால் காய்கறி, பலசரக்கு, பொருட்கள் எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிடும். எனவே தான் பலநாடுகள் பெட்ரோலுக்கு மானியங்கள் தருகின்றன. அதன் மீது வரிகளைக் குறைக்கின்றன. உதாரணமாக அமெரிக்காவில் 1916 லிருந்து 94 ஆண்டுகளாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேல் விலை போய்விடக் கூடாதென்பதற்காக இம்மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பெட்ரோலிய விலை உயர்வை உலகளாவிய போக்கு என சித்தரிப்பது வடிகட்டிய பொய்.
யாருக்கு லாபம்?
பெட்ரோலிய விலை உயர்வால் யாருக்கு லாபம் என்பது முக்கியமானது. அரபு நாடுகளிலும், லிபியாவிலும் ஏற்பட்டிருக்கிற பிரச்னைகளினால் பெட்ரோலிய விலை உயர்வு ஏற்படுவதாக ஒரு கருத்து உலவவிடப்படுகிறது. ஆனால் சரக்குச் சந்தையில் அரங்கேறும் யூக வணிகமே விலை உயர்வுக்கு முக்கியக் காரணியென்பது உண்மை. எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் (OPEC) பொது செயலர் அப்துல்லா எல்பரேடி, “யூக வணிகமே பெட்ரோல் விலைகளைத் தீர்மானிக்கிறது. கிராக்கி அளிப்பு சம்பந்தமான பொருளாதார விதிகள் அல்ல” என்கிறார்.
இதை அமெரிக்க அதிகார வர்க்கத்தாலும் முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. அமெரிக்க நாட்டின் நிதிமோசடி கண்காணிப்பு நடவடிக்கைக் குழுவிலுள்ள அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் “டாலர்கள் விலைகளைப் பாதிக்கின்றன. முதலீட்டாளர்கள் யூக லாபத்தையே நாடுகிறார்கள்” என்கிறார். எண்ணெய் விலை ஆணையத்தின் செயலாளர் டாம் குளோசா என்பவர் “யாரும் விதிகளை மீறுவதில்லை. எனினும் ஒருசில கணினி அழுத்தல்களிலேயே லட்சக் கணக்கான, கோடிக்கணக்கான டாலர் சரக்குகள் சந்தைக்குள் வருகின்றன. அது உலகம் முழுவதிலும் விளிம்பு நிலையிலுள்ள மக்களை பாதிக்கிற வகையில் அவர்களின் உயிர் ரத்தமாக உள்ள பெட்ரோல் விலையினை உயர்த்தி விடுகிறது”
விதிகள் மீறப்படவில்லை என்பது ஏன் தெரியுமா? மீறல்களையே விதிகளாக்கிவிட்டால் அது எப்படி குற்றமாகும். சூதாட்டத்தை சரக்குச் சந்தை முன்பேர வர்த்தகமாக அங்கீகரித்து விட்டார்களல்லவா! சரக்குகள் கைமாறாமலேயே கணினி மூலம் சுற்றுக்கு விடப்படுவதும், பதுக்கப்படுவதும் பெட்ரோலியத்தை மட்டுமல்ல, பல்வேறு உணவு, நுகர்வுப் பொருட்களின் விலைகளையும் எக்கச்சக்கத்திற்கு ஏற்றிவிடுகின்றனர் என்பதே அனுபவத்தின் உண்மை. அதைத்தவிர அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிற மானியங்களும் “வானம் பொழிகிற லாபங்களை” தந்திருக்கின்றன.
அமெரிக்க நாட்டின் எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் 2011 ஏப்ரலில் 69 சதம் உயர்வையும், செவ்ரான் 33 சதம் ஷெல் நிறுவனம் 22 சதம் லாபத்தையும் ஈட்டியுள்ளன என்றால் என்ன நடந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒருபுறம் ஒபாமா பெட்ரோலிய நுகர்வைக் குறைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். மறுபுறம் இப்பன்னாட்டு நிறுவனங்களின் கல்லாப் பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. டாப்-5 எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் (2001-+2010) 45 லட்சம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளன.
இது அமெரிக்காவின் கதை மட்டுமல்ல. இந்தியாவிலும் அதே நிலைமைதான். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் நாமெல்லாம் கவலைப்படுகிறோம். வே டூ வெல்த் சர்வீசஸ் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அலுவலர் அம்பரிசு பாலிகா சொல்லுவது என்ன தெரியுமா?“கச்சா எண்ணெய் விலைகளின் ஏறுமுகம் ரிலையன்சுக்கும், ஒஎன்ஜிசிக்கும் நல்ல செய்தியாகும்”.
இந்தச் செய்தியை கேட்டு அம்பானி மகிழ்ச்சியடைவது ஏன் தெரியுமா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடினால் அதே விலைக்கு இங்கே எண்ணெய் எடுக்கிற அம்பானியும் விற்கலாம். உற்பத்திச் செலவுக்கும், விலைக்கும் சம்பந்தமே கிடையாது. எண்ணெயைத் தோண்டி எடுப்பதற்கான உரிமக் கட்டணமும் உலக ரேட்டைக் காட்டிலும் குறைவு. உலகமயத்தின் இலட்சணம் இது.
ரிலையன்ஸ் போன டிசம்பரில் முடிகிற காலாண்டில் மட்டும் 17 சதவிகித இலாபம் சம்பாதித்தது. இதுவரை எந்தக் காலாண்டிலும் இல்லாத இலாபம். ஒஎன்ஜிசி 34 சதவிகித லாபத்தை ஈட்டியுள்ளது. இது எண்ணெய் வர்த்தகக் கம்பெனிகளுக்கு ஒஎன்ஜிசி தருகிற மானியம் போகக் கிடைத்த இலாபம். மக்களின் முதுகுகளில் கடந்த ஆண்டு ஒன்பது முறை விளாசித் தள்ளிய சாட்டை அம்பானியின் கைகளில் இருக்கிறது என்பது தெரிகிறதா!
இரட்டைச் சவுக்கு
இப்படி பெரும், பெரும் கம்பெனிகளின் இலாப வேட்டை ஒருபுறம், மறுபுறம் ஆட்சியாளர்களின் வரிச்சாட்டையும் புகுந்து விளையாடுகிறது. இந்தக் கணக்கை கீழே பாருங்கள்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை - 112.5 டாலர்
ரூபாய் மதிப்பில் - ரூ. 50.85
ஒரு பேரலுக்கு - 158.76 லிட்டர்
ஒரு லிட்டர் கச்சாஎண்ணெய் விலை - ரூ32
சுத்திகரிப்புச் செலவு - ரூ0.52
மூலதனச் செலவு - ரூ 6.00
போக்குவரத்து செலவு - ரூ 6.00
முகவர் கழிவு - ரூ 1.05
மொத்தம் 1 லிட்டர் விலை - ரூ 45.57
எப்படிப் பார்த்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 45.57தான். ஆனால் மும்பையில் ரூ. 68, சென்னையில் ரூ. 67, டெல்லியில் ரூ. 63, பெங்களுரில் ரூ. 71 எப்படி!மத்திய அரசு போடுகிற கஸ்டம்ஸ், எக்சைஸ் வரிகளும், மாநில அரசு போடுகிற விற்பனை, நுழைவு வரிகளும் தான். பெட்ரோல் விலை உயர உயர வரிகளும் உயருகின்றன. ஒரு ஆண்டில் பெட்ரோல் மீது வசூல் செய்யப்படுகின்ற வரிகள் எவ்வளவு தெரியுமா? 2010+-11ல் மட்டும் ரூ. 1,11,000 கோடிகள். இந்த ஆண்டு ரூ. 1,35,000 கோடிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
மானியம், மானியமென்று மாய்ந்து போகிறார்களே, போன ஆண்டில் ரூ. 38,400 கோடிகள்தான் திருத்தப்பட்ட மதிப்பீடு. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் கடந்த 2010 டிசம்பர், 31 வரையிலான காலத்தில் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 134 சதம் நிகர லாபத்தில் உயர்வு காண்பித்துள்ளது. அரசு தருகிற மானியத்தையும் சேர்த்ததால்தான் அந்த லாபம் என அரசு விளக்கம் தருகிறது. ஆனால் 1,35,000 கோடிகள் சுளையாய் பெட்ரோலிய வரிகள் மூலம் கிடைக்கிறது என்பதை மறைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
சரி! மானியம் தருவதால் என்ன கெட்டுவிடுகிறது. ஒவ்வோராண்டும் கஸ்டம்ஸ், எக்சைஸ் நிறுவன வரிகளில் எவ்வளவு சலுகை தரப்படுகின்றன! 2011 பட்ஜெட் கணக்குப்படி நிறுவன வரிகள் - 88,263 கோடி எக்சைஸ் - 1,98,291 கோடி கஸ்டம்ஸ் - 1,74,418 கோடி கடந்த 5 ஆண்டுகளில் (2006+-11) இப்படி வாரி வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தம் 21 லட்சம் கோடிகளை தாண்டுகிறது. வைரம், தங்கம் இறக்குமதிக்கு மட்டும் தரப்படும் கஸ்டம்ஸ் வரிச்சலுகையான ரூ. 48,798 கோடிகளை ஒதுக்கினாலே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு அரசு தருகிற மானியங்களுக்குப் போதுமானது.
பிரச்னை என்ன?
பன்னாட்டு நிறுவனங்களின், தனியாரின், வசதி படைத்தோரின் இலாபங்களை தாங்குகிற சுமைதாங்கிகளாக இந்திய மக்களின் முதுகுகள் மாற்றப்பட்டுள்ளன.
வழியில்லாமல் இல்லை! மனமில்லை! அரசியல் துணிவில்லை! இந்த கணக்கை தேசம் எழுப்பினால் வாழ்வான் சாமானியன்!