நாள்தோறும் நான்காயிரம் அடி நடந்தால் எந்த நோய் பாதிப்பாலும் மரணம் ஏற்படுவதைக் குறைக்கலாம் என்று இது குறித்து இதுவரை நடந்தவற்றில் இப்போது மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்காயிரம் அடிகளுக்கும் கூடுதலாக நடந்தால் ஆரோக்கிய ரீதியில் கூடுதல் பயன்கள் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறைக்கும் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு இன்று துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆரோக்கியத்தைப் பெற ஒருவர் எவ்வளவு அடிகள் நடக்க வேண்டும் அல்லது இதற்கான அதிகபட்ச வரையறை எவ்வளவு என்பது பற்றி தெளிவாகத் தெரியாமல் இருந்தது.
இது பற்றி போலந்து லாட்ஸ் (Lodz) மருத்துவப் பல்கலைக்கழக இதயநோய்ப் பிரிவு பேராசிரியர் மேசியே பேனக் (Maciej Banach) தலைமையில் நிபுணர்கள் ஆராய்ந்தனர். பதினேழு ஆய்வுகளின் தரவு விவரங்கள் ஆராயப்பட்டது. இதில் சராசரியாக கடந்த ஏழு ஆண்டுகளில் 226,889 பேரின் அன்றாட நடத்தல், அடிகளின் எண்ணிக்கை போன்றவற்றால் அவர்களுக்கு கிடைத்த ஆரோக்கிய நலன்கள் பற்றி ஆராயப்பட்டது.
3967 அடிகள்
ஒருவர் தினமும் குறைந்தபட்சம் 3,967 அடிகள் நடந்தால் எந்தவிதமான நோய் பாதிப்பின் மூலமும் மரணம் ஏற்படுவது குறையத் தொடங்குகிறது என்று ஐரோப்பிய இதயநோய் பாதுகாப்பு (Preventive Cardiology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.அவர் மேலும் 2,337 அடிகள் நடந்தால் இதய நோய்களில் இருந்து உயிரிழப்பதற்கான ஆபத்து குறைய ஆரம்பிக்கிறது.
இந்த வரையறைக்கும் அப்பால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் அடிகள் கூடுதலாக நடப்பதன் மூலம் அதே நபர் எந்த நோய் பாதிப்பினாலும் இறப்பது 15% குறையத் தொடங்கும். அவர் மேலும் 500 அடிகள் நடந்தால் இதயநோய்களால் உயிரிழப்பது 7% குறையும். கூடுதல் தூரம் நடக்க நடக்க, அதனால் கிடைக்கும் பயன்களும் அதிகரிக்கின்றன என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.
அனைவருக்கும் பயன் தரும் நடை
இந்த பயன்கள் வயது, வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலம், துருவங்களுக்கு அருகில் உள்ள பகுதி அல்லது இவை கலந்த பகுதி என்று பூமியில் எந்த தட்பவெப்ப நிலையில் வாழும் ஆண் பெண் எல்லோருக்கும் எந்த வேறுபாடுமின்றி கிடைக்கிறது. நோய் பாதிப்பு மூலம் மரணம் ஏற்படுவதைக் குறைக்க ஒருவர் தினமும் நான்காயிரம் அடி நடந்தால் போதும். மேலும் ஐநூறு அடி நடந்தால் இதயநோய் பாதிப்பால் நிகழும் இறப்புகளையும் குறைக்க முடியும் என்று பேனக் கூறுகிறார்.
இளம் வயதில் இருக்கும் ஒருவர் தினம் 7,000 முதல் 13,000 அடி நடக்கும்போது அற்புதமான நன்மைகள் கிடைக்கின்றன. அறுபது வயது மற்றும் அதற்கு மேலும் வயதில் இருப்பவர்களுக்கு இந்த பலன்கள் 6,000 முதல் 10,000 அடி நடக்கும்போது கிடைக்கிறது. ஒருவர் 9-10 மைல் தூரத்திற்கு சமமான 20,000 அடி நடக்கும்போது கிடைக்கும் பயன்கள் பற்றி ஆராய்ந்தபோது ஆரோக்கியபயன்கள் அதிகரிப்பது தெரியவந்தது.
நடந்தால் பாதிப்புகள் இல்லை
நடப்பதால் உடல் நல பாதிப்பு ஏற்படுவதில்லை என்று ஆய்வுக்குழு கூறுகிறது. என்றாலும் அதிக தூரம் நடப்பவர்கள் பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் இது பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதயக் கோளாறுகள் போல குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை செய்ய தனித்தனி மருந்துகள் இன்று உள்ளன. உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் ஒருவர் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதயநோய் ஏற்படுவதைக் குறைக்கும். நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும்.
பலன்கள் மராத்தான் போன்ற மிகத் தீவிர உடற்பயிற்சி ஓட்டம், இரும்பு மனிதன் போட்டி (Iron man challenge) போன்ற உடல் வலுவைக் காட்டும் போட்டிகளில் ஈடுபடுபவர்கள், பல சமூகக் குழுக்களில் இருக்கும் பல்வேறு வயதினர் மற்றும் பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த அளவு கிடைக்கிறது என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.
சிகிச்சைகளின் உதவியுடன் தனி மனிதர்கள் தங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை உலகில் அதிக மரணங்கள் ஏற்பட நான்காவது முக்கிய காரணமாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆண்டிற்கு இதனால் மட்டும் 3.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர்.
கொரோனாவுக்கு முன்னும் பின்னும்
கொரோனா பாதிப்புக்கு முன்னால் உலகளவில் அன்றாட சராசரி நடையளவில் அடிகளின் எண்ணிக்கை 5,324 - 5,444. ஆனால் கொரோனா கொள்ளைநோய் உடற்பயிற்சிகளின் அளவை வெகுவாகக் குறைத்து விட்டது. மக்களின் அன்றாட நடையளவில் அடிகளின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போது முன்பிருந்த நிலையை அடையவில்லை.
நம் உடல்நலத்திற்கு எந்த அளவு நல்லது என்பதை இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. நடப்பதை மாத்திரை போல கருத வேண்டும். இது ஒரு அற்புத மருந்து. அனுபவித்து நடக்க வேண்டும். வேலை நெருக்கடி காரணமாக நடப்பதை நடுவில் விட்டுவிட்டால் அதைத் தொடர்வது கடினமாக இருக்கலாம்.
ஆனால் இதை நம்மால் மீண்டும் தொடர முடியும். இதற்கென்று சிறப்புக் கருவி அல்லது பயிற்சி தேவையில்லை. அதனால் நாம் எங்கிருந்தாலும் நடக்கலாம் என்று பிரிட்டிஷ் இதயநல அறக்கட்டளையின் மருத்துவப் பிரிவு இணை இயக்குனர் பேராசிரியர் ஜேம்ஸ் லேப்பர் (Prof James Leiper) கூறுகிறார்.
பூமியில் எங்கிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் நடக்கலாம். ஆயுளை நீட்டிக்க உதவும் செலவில்லாத நடை என்ற எளிய வழி பற்றிய இந்த கண்டுபிடிப்பு ஆரோக்கியத் துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்