இடுக்கியில் வாழும் மக்கள்
இடுக்கி மாவட்டம் கேரளாவில் உள்ளது. இம்மாவட்டத்தைச் சுற்றிலும் கேரளாவின் எர்ணாகுளம், கோட்டயம், பந்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களும், தமிழகத்தின் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களும் அமைந்துள்ளன.
இடுக்கி மாவட்டம் பசுமையான புல்வெளிப் பள்ளத்தாக்குகளையும், உயர்ந்த மலைகளையும், செறிந்துவளர்ந்த மரங்களையும் கொண்ட குறிஞ்சி நிலப் பகுதியாகும். இது பெரியார் வனச் சரணாலயம், சின்னார் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, மாட்டுப்பட்டி போன்ற அணைக்கட்டுக்களையும் கொண்டு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அங்குச் சென்றால் படையெடுத்து வரும் பள்ளி மாணவர்களையும், சுற்றுலாப் பேருந்துகளையும் காணமுடியும். யானைகள், வரையாடுகள், மலை அணில், காட்டு எருமை, அரியவகை மரங்களும் மலர்களும் இயற்கை தந்த வரம் நம் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.மறையூரில் இயற்கையாக விளைந்த சந்தன மரக்காடுகள் மணம் பரப்பும் சோலைகளாக விளங்குகின்றன.
இடுக்கி மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு காலகட்டங்களில் அப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு ஆதிவாசி மக்கள் தமிழகப் பகுதிகளிலிருந்தும், கேரளாவின் பிற பகுதிகளிலிருந்தும் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டுகளில் புலம் பெயர்ந்துள்ளனர் (பிஜூமோன் வர்கீஸ், 2015).
ஐரோப்பியர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நுழைந்து தேயிலை, காப்பித் தோட்டங்களை உருவாக்கினர். இக்காலகட்டத்திலும் தமிழகத்திலிருந்து பல மக்கள் இடுக்கி மாவட்டத்திற்குச் சென்று நிரந்தரமாய் வாழத் தொடங்கினர்.
தற்போது இடுக்கியில் மலையாளிகள், தமிழர்கள், ஆதிவாசி மக்கள் எனப் பலரும் வசித்து வருகின்றனர்.
இடுக்கியில் பேசப்படும் மொழிகள்
இடுக்கி மாவட்டத்தில் முக்கியமாக மலையாளமும் தமிழும் பேசப்படுகின்றன. மலையாளம் மாநில மொழி. அம்மொழியைக் கேரளர் தாய்மொழியாகப் பேசுகின்றனர். அத்துடன் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே பொதுவாக கருத்துப் பரிமாற்ற மொழியாகவும் அது பயன்படுகின்றது.
தமிழகத்திலிருந்து குடியேறி வாழும் தமிழ் மக்களால் தமிழ் மொழி பேசப்படுகின்றது. காலங் காலமாகத் தமிழர்கள் அங்கு வசித்து வந்தார்களா என்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம். இவ்விரு பெரிய மொழிகள் தவிர, பல பழங்குடி மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன. அவற்றுள் முதுவன், மன்னான், மலை வேடன், மலையரையன், உள்ளாடன், மலைப் பண்டாரம், மலைப் புலையன் போன்றவை முக்கியமான ஆதிவாசி மொழிகளாகும். மலையாள மொழியை ‘நாட்டுபாஷை’ என்றும், தமிழ் மொழியை ‘ஊர் பாஷை’ என்றும், பழங்குடி மொழிகளைக் ‘குடி பாஷை’ என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கட்டுரை மலைப்புலையர்களின் இனவரைவியல் குறித்து விவரிக்க முயற்சிக்கிறது.
மலைப்புலையர்
மலைப்புலையர்கள் பொலெயரு, பௌயரு, மலப்புலையர் என்றெல்லாம் அழைக்கப் படுகின்றனர்.1 ‘ஹில்புலையா’ என்ற ஆங்கிலப்படுத்தப்பட்ட (Hill Pulaya) சொல்லும் அறிந்து வைத்துள்ளனர். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அட்டவணையில் ‘Hill Pulaya’ என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. மலைப்புலையர்களில் மூன்று வகை உண்டு.
1. குறும்பப் புலையர்
2. கரைவழிப் புலையர்
3. பாம்புப் புலையர்
குறும்பப் புலையர்கள் ஆடு மாடுகள் மேய்க்கும் தொழில் செய்ததால் குறும்பர்கள் என்றும், கரைவழிப் புலையர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதால் (காடு கரை என்ற சொல் விவசாய நிலங்களைக் குறிக்கும் சொல்) கரைவழி வந்தவர்கள் என்றும் இரு பிரிவுகள் உண்டாயிற்று என்றும் கூறுகின்றனர்.
இந்த இரு பிரிவுகளே மட்டுமின்றி பாம்புப் புலையர் என்ற பிரிவினர் தமிழக எல்லைப் பகுதியில் வாழ்வதாகவும் தெரிகிறது. மூன்று பிரிவினரும் அசைவ உணவைச் சாப்பிடுகின்றனர். குறும்பர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை.
கரைவழிப் புலையர்கள் மாட்டிறைச்சி உண்பர். பாம்புப் புலையர்கள் பாம்புக் கறி சாப்பிடுவர். இதனை ஏனைய இருவரும் சாப்பிடுவதில்லை. உணவு அடிப்படையிலேயே பிரிந்துள்ளனர். இவர்களுக்கிடையே திருமண உறவோ, போக்குவரத்தோ அறவே கிடையாது.
மலைப்புலையர்- வாழ்விடமும் மக்கள்தொகையும்
மலைப்புலையர்கள் கேரளாவில் இடுக்கி மாவட்ட தேவிக்குளம் தாலுக்காவில் மறையூர், காந்தளூர் பஞ்சாயத்துகளில் வாழ்கின்றனர்.2 தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணார் செல்லும் பாதையில் சுமார் 35 கி.மீ. தொலைவில் மறையூர் உள்ளது.
மறையூருக்கு கிழக்காக சுமார் 15 கி.மீ. தொலைவில் காந்தளூர் உள்ளது. முற்றிலும் வனங்களும் மலைக் குன்றுகளும் சூழ்ந்த இப்பகுதிகளில் 24 குடிகளில் (Settlements) இம்மக்கள் வாழ்கின்றனர். கரைவழி புலையர், குறும்பப் புலையர்கள் தனித்தனியாகவே பிரிந்து வாழ்கின்றனர்.
ஒருவருக்கொருவர் தொடர்பில்லை. 1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3024 மலைப் புலையர்கள் இருந்ததாகவும், அதில் 1512 பேர் ஆண்கள்; 1512 பேர் பெண்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது (காண்க: என்சைக்ளோபீடியா திராவிட ஆதிவாசிகள், ப. 218). கீழ்க்கண்ட அட்டவணையில் புலையர்கள் வசிக்கும் குடிகளின் பெயர்களும், மக்கள் தொகையும் (குடிவாரியாக) தரப்பட்டுள்ளன.
கரைவழிப் புலையர் (குடிவாரியாக மக்கள் தொகை)
வ.எண் ஊர் மொத்த மக்கள் ஆண்கள் பெண்கள்
1. குமிடாங்குழி 579 297 282
2. பட்டிக்காடு 237 116 121
3. செம்மங்குடி 5 3 2
4. பிரியதர்ஷிணி 25 13 12
5. இந்திரா காலனி 308 140 168
6. நாச்சிவயல் 27 12 16
7. செறுவாடு 275 146 129
8. சொரக்குளம் 333 163 170
9. கர்ஷாநாடு 39 16 22
10. திண்டுகொம்பு 398 204 194
11. கோவில்கடவு 30 12 18
12. மிஷன்வயல் 190 85 105
குறும்பப் புலையர்
வ.எண் ஊர் மொத்த மக்கள் ஆண்கள் பெண்கள்
1. ஊஞ்சம்பாறை 25 15 10
2. புறவயல் 62 29 33
3. கரிமுட்டி 58 28 30
4. ஈச்சம்பட்டி 208 96 112
5. ஆலம்பட்டி 230 144 86
6. சம்பக்காடு 240 138 102
7. பாலப்பட்டி 222 109 113
8. வண்ணாந்துறை 45 18 27
9. பொங்கம்புளி 212 95 117
10. கொட்டப்பள்ளம் 60 28 32
11. கணக்காயம் 129 60 69
12. முனியற 60 28 32
இந்த அட்டவணைப்படி மொத்த மலைப்புலையர்களின் மக்கள் தொகை 4047 என்று தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு ஆதிவாசி மேம்பாட்டுப் பணியாளர்களால் 2014 இல் எடுக்கப்பட்டது.
குமிடாங்குழியில் வசிக்கும் ஆதிவாசி மேம்பாட்டுப் பணியாளரான திரு.முருகன்காளி என்பவரால் இந்த அட்டவணை எனக்கு வழங்கப்பட்டது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல குறும்பப் புலையர்களும், கரைவழிப் புலையர்களும் தனித்தனி குடிகளில் வசிக்கின்றனர். கலந்து வாழ்வதில்லை.
உணவுப் பழக்கங்களில் மாட்டிறைச்சி உண்பது கரைவழிப் புலையர்களிடையே காணப்படுகிறது. குறும்பப் புலையர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. அதனை விலக்குவதாகக் கூறுகின்றனர். குறும்பப் புலையர்கள் அடர்ந்த காடுகளில் வசிக்கின்றனர்.
கரைவழிப் புலையர்கள் சற்று சமவெளிப் பாங்கான இடங்களில் நகர்ப்புறமாகிற பாங்கில் வசிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட சின்னார் வனப் பகுதியில் சில குறும்பப் புலையர்களின் குடிகள் உள்ளன.
குடி (Settlement)
மலைப்புலையர்களின் வாழ்விடம் குடி (settlement) என்றழைக்கப்படுகிறது.3 50 முதல் 250 குடும்பங்கள் வரை ஒரு பகுதியில் வாழ்கின்ற இடத்தை குடி என்றழைக்கின்றனர். Colony (கோலனி) என்ற சொல்லையும் அம்மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
கணக்காயம் குடி, புங்கம்புளி குடி என்றே அழைக்கின்றனர். வீடுகளை ‘வூடு’ அல்லது ‘பூடு’ என்று குறிப்பிடுகின்றனர். ஒரு காலத்தில் தருவெ புல் முதலியவற்றால் வேய்ந்த கூரை வீடுகளில் வாழ்ந்தனர். பாறையில், கல்லங்காட்டில் இடம்கிடைத்த இடத்தில் வீடு அமைந்துள்ளது.
தெருக்களாக வீடுகள் இருப்பதில்லை. தற்போது எல்லா மக்களுக்கும் அரசாங்கம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்துள்ளது. காவல் குடிசையும் (காவ குடிசி) விலங்குகளைக் கண்காணிப்பதற்குக் கட்டிக் கொள்கின்றனர்.
சடங்குகளின்போதும் பிற நிகழ்ச்சிகளின்போதும் தற்காலிகக் குடிசை வீட்டுக்கு முன்னால் கட்டிக் கொள்கின்றனர். வீடுகள் பொதுவாக மலைச் சரிவில் இருப்பதைக் காணமுடிகின்றது. பொதுவாக யானை முதலிய விலங்குகள் எளிதாகச் சென்றுவிடாத மாதிரியான குன்றுகளில் வீடுகள் அமைந்துள்ளன. அப்படியிருந்தாலும் யானைகள் சில வேளைகளில் குடிக்குள் புகுந்துவிடுகின்றன.
குடி சமூக அமைப்பு
மலைப்புலையர் குடியின் தலைவர் காணி அல்லது மூப்பன் என்று கூறுகின்றனர். குடியில் வாழும் இளைஞர்களும், நடுவயது மனிதர்களும் காணிப்பாட்டன், காணியப்பன் என்று அன்போடு விளித்து அழைக்கின்றனர். குடியில் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் தலைவராக காணி விளங்குகிறார்.
குடியிலுள்ளோர் மீது சட்டம், காவல்துறை சார்ந்த விசாரணை இருந்தால் காணியை அணுகி அப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். காணிக்கு உதவுவதற்குத் தண்டல்காரன், கோல்காரன் போன்ற அடுத்த (கீழ்நிலை) தலைவர்கள் உள்ளனர். கோல்காரன்குடியில் நடைபெறும் நோன்பு விழா, ஒவ்வொரு வீட்டில் நடைபெறும் சடங்குகள் ஆகியவற்றை முறைப்படுத்திக் கண்காணிக்கும் பணிகளை (Supervising) மேற்கொள்வர்.
கண்காணிக்கும் பணியைக் கண்ணோட்டம் என்று கூறுவர். தண்டல்காரன் பணம் வசூலித்தல் போன்ற பிற பணிகளைச் செய்வர். இப்பதவிகள் பரம்பரை பரம்பரையாக வரும் வாரிசுகளுக்குப் போய்ச் சேரும். தலைவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லையென்றால் நோன்பு போன்ற குடியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும்.
பொதுப் பிரச்சினைகளை / குடியின் சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள ஒரு பொதுவிடம் இருக்கும். அவ்விடத்தைப் ‘பொது மந்தை’ என்று கூறுவர். அவ்விடத்தில் ‘மந்தெ கல்லு’ என்ற ஓர் இருக்கை இருக்கும்.
காணி அந்தக் கல்லில் அமர்ந்துதான் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். நமது பேச்சு வழக்கில் ‘மந்தை’ என்ற சொல் ஆடு, மாடு கூட்டத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மந்தை என்ற சொல் மன்று, மன்றம் என்ற பழந்தமிழ்ச் சொல்லோடு தொடர்புடைய சொல்லாகவிருக்கலாம்.
உணவுப் பழக்கவழக்கங்கள்
மலைப்புலையர்கள் அரிசி, ராகி ஆகியவற்றைப் பிரதான உணவாகக் கொள்கின்றனர். கரைவழிப் புலையர்கள், குறும்பப் புலையர்கள் இருவருமே அசைவ உணவை உண்பர். ஒரே வேறுபாடு என்னவென்றால் கரவழிப் புலையர்கள் மாட்டிறைச்சி உண்பார்கள்.
ஆனால் குறும்பப் புலையர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. அதனை விலக்கிவிட்டு, கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை உண்பர். இக்கருத்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டது. அரசு கொடுக்கிற ‘பாமாயில்’ போன்ற எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்துவர்.
காலையும் மாலையுமென இருவேளை மட்டுமே உணவு உட்கொள்வர். காட்டுக் கிழங்குகளையும் பழங்களையும் கிடைக்கும்போது உண்பர். குடிகளுக்குப் பக்கத்தில் ஆறு (பாம்பாறு) ‘பெரியாத்து’ ஓடுவதால் ஆற்றில் மீன்பிடித்துச் சமைத்து சாப்பிடுவர்.
சாம்பார் / குழம்பு என்ற சொல்லுக்குப் பதில் ‘சாறு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். மீன் குழம்பு என்பதை ‘மீன்சாறு’ என்கின்றனர். ஆற்றுப் பறைகளிலேயே காட்டுக் கீரைகளைப் பறித்து அரைத்து ‘சமந்தி’ (சட்னி, கீரை உணவு) தயாரித்துவிடுவார்கள்.
வேட்டை நாய்களைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடிச் சமமாகப் பிரித்துப் பங்கிட்டு உண்ணும் வழக்கமும் உள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தைப் பஞ்ச காலம் என்று நினைவுகூர்கின்றனர். அப்பொழுது மலையம்கிழங்கு / நூத்தக்கிழங்கு என்ற இரு கிழங்கு வகைகளை நம்பியே ஜீவிதம் இருந்துவந்துள்ளது. மலையம் கிழங்கைத் தோண்டுவதற்கு கொளுவுகோலு அல்லது தொட்ட கோலு என்றொரு கருவி பயன்படுத்தப்பட்டது.
அக்கருவியை இப்போதும் பயன்படுத்துகின்றனர். அதோடு மலையம் கிழங்குதான் அவர்களைக் காப்பாற்றியும் வந்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைகள்
அரசாங்கம் வனப்பகுதியில் இந்த ஆதிவாசி மக்களுக்கு சில ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கியுள்ளது. பட்டாயம் செய்து கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பூமியை இவர்கள் யாருக்கும் விற்றுவிடுவதற்கு உரிமையில்லை. இந்த நிலத்தில் சிலர் வரகு, சாமை, தினை வகைகளைப் பயிரிடுகின்றனர்.
சிலர் தென்னை, பாக்கு போன்ற மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் பொதுவாகக் காட்டுவிலங்குகளின் அட்டகாசத்தால் பயிரிடுவது சாத்தியப் படுவதில்லை என்கின்றனர். குறிப்பாக ‘யானை சல்லியம்’ (சல்லியம்-தொந்தரவு) கூடுதலாக இருப்பதால் விவசாயம் இல்லை. மலைப்புலையர்கள் வறுமையான வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றனர்.
அரசு தருகின்ற இலவச உணவுப் பொருட்களே இவர்களுக்கு அடிப்படை உணவு ஆதாரமாகவுள்ளது. சில குடிகளில் வாழும் மக்கள் வயலறுக்கச் செல்கின்றனர். விதை விதைத்தல், நீர் பாய்ச்சுதல், கரும்பு நடுதல் போன்ற கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர்.
மறையூர், காந்தளூர் பஞ்சாயத்துகளில் கரும்பு விவசாயம் முக்கியமான ஒன்றாகும். கரும்பு வெட்டி வெல்லம் தயாரித்தல் இப்பஞ்சாயத்திலுள்ள ஊர்களில் வெகுவாகச் செய்யப்படுகிறது. இந்த வேலைகளில் மலைப்புலையர்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.
‘தைலப்புல் அறுத்தல்’ மற்றொரு வேலை வாய்ப்பாகும். இவ்வேலைக்குப் பெண்களே செல்கின்றனர். ஒரு நாளைக்குக் கூலியாகக் கிடைக்கும் சுமார் 300/- ரூபாயை அவர்களே குடும்பச் செலவினங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். சில வீடுகளில் கோழி, ஆடு வளர்ப்பும் செய்கிறார்கள்.
முட்டைகளை அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று விற்றுவிட்டு வீட்டுக்கு வேண்டியதை வாங்குகின்றனர். வீடுகளில் பழத்தோட்டங்களில் விளையும் பழங்களையும் ஆதிவாசி கூட்டுறவுக் கடைகளில் விற்று பணம் பெறுவர். தேன் எடுத்தல், மூலிகை வேர்கள் ஆகிய காட்டுப் பொருள்களையும் சேகரித்துக் கடைகளில் விற்றுப் பணம் ஈட்டுவர்.
அரசாங்கம் இவற்றைச் சந்தைப்படுத்துவதற்குப் பல வசதிகளைச் செய்து தருகிறது. அமராவதி அணைக்கட்டிற்கு வந்து மீன்பிடித்து விற்பதும் உண்டு. கோவில்கடவு, மறையூர் ஆகிய ஊர்களில் வாரம் ஒரு முறை நடைபெறும் சந்தைக்கு வந்து விளைபொருட்களை விற்றுவிட்டுத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.
பூப்புச் சடங்கு
குறும்பப் புலையரின் பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் அப்பெண் தங்குவதற்கென்று வீட்டிற்கெதிரே சுமார் 30 அடி தூரத்தில் தற்காலிகக் குடிசை (குடிசி, குட்லு) கட்டப்படும்.
பெரும்பாலும் அக்குடிசையை அப்பெண்ணை மணந்துகொள்ளும் முறையுள்ள ஆண்களே கழியினை ஊன்றி கட்டுவதற்குத் தொடங்குவார். அந்த ஆண் சிறுவனாகவே இருந்தாலும் பரவாயில்லை.
அவ்வாறு கட்டப்பட்ட குடிசியில் அப்பெண் சுமார் ஒருமாத கால அளவு தங்க வேண்டும். அக்காலத்தில் அப்பெண்ணை ஆண்கள் யாரும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு நாள் இரவும் குடியிலுள்ளோர் பாதுகாப்பு அளிப்பர். குழல், மேளம் அடித்து இரவு வேளைகளில் ‘ஆட்டு பாட்டு’ இருக்கும்.
அப்பெண்ணுக்கான உணவு உறவினர்களாலும் ஊரில் உள்ளவர்களாலும் வழங்கப்படும். ஒரு மாதம் கழித்து அப்பெண்ணை அருகிலுள்ள ஆற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அங்கே அப்பெண்ணுக்கு சடங்கு முறையில் குளிப்பாட்டுவர்.
இதனை ‘உளுகக் காட்டுதல்’ என்று கூறுகின்றனர். அங்கே அக்குடிசை எரியூட்டப்படும். பூப்பெய்திய பெண்ணுக்குத் தோழியாக ‘நங்கெ’ உறவுள்ள ஒருத்தி உடன்வர, ஊர்வலமாக குழல், மேளம் குழுங்க அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவர்.
தோழிப் பெண்ணைத் ‘தோடகத்துகாரி’ என்று அவர்கள் மொழியில் கூறுவர். பூப்பெய்திய பெண்ணின் பெற்றோர் வசதி படைத்தவராக இருந்தால் தேனீரோ, காப்பியோ தந்து உபசரிப்பர். இல்லையெனில் அவரவர் வீட்டுக்குச் சென்று விடுவர். இந்நிகழ்ச்சி காணி, கோல்காரர் முன்னிலையிலே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் ஏழையாக இருந்தால் பூப்படைந்த செய்தியை வெளியில் சொல்லாமலேகூட முடித்துக் கொள்வர். பிள்ளைகள் கல்விக்கூடங்களுக்குச் செல்வதால் தற்காலத்தில் பூப்புச்சடங்கு சுருக்கமாக செய்துகொள்ளப்படுகிறது. மாதவிடாய் என்பதை ‘மாச குளிப்பு’ என்று குறிப்பிடுகின்றனர்.
திருமணம்
திருமணம் பெண்ணின் வீட்டில் இரவு நேரத்தில் நடைபெறும். மணமகன் பெண்ணின் கழுத்தில் கரும்பாசி என்கிற தாலியைக் கட்டுவார். திருமணம் காணி, கோல்காரர் முன்னிலையில் நடைபெறும்.
மணமக்களை வாழை இலை முன்பு அமர வைத்து அந்த இலையில் பரிமாறப்பட்ட உணவை ஒருவர் மற்றொருவருக்கு ஊட்ட வேண்டும். இவ்வாறு ஏழு கவளங்கள் ஏழு முறை ஊட்டவேண்டும்.
அடுத்தநாள் தம்பதியரை ஊர்வலமாக ஆற்றுக்கு அழைத்துச் செல்லுவர். அங்கே அவர்களைக் குளிக்கச் செய்து மாலை அணிவிப்பர். பின்னர் ஊர்வலமாகக் குடிக்கு அழைத்து வருவர். அதற்குப் பிறகே அவர்கள் ஒன்றாகத் தங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
புதுமணத் தம்பதிகள் திருமணமான பிறகு தனிக் குடித்தனம் சென்றுவிடுவர். பெற்றோரிடம் வாழ்வதில்லை. தற்காலத்தில் காதல் திருமணங்களும் நடைபெறுவதாகத் தெரிகிறது. சண்டையும் ஏற்படும். சமாதானமும் செய்து வைத்து ஒன்றுசேர்த்து வைக்கப்படும். கணவன் மனைவியிடையே ஒத்துவராவிட்டால் ‘விவாகரத்து’ அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் மறுமணமும் செய்து கொள்ளலாம்.
மலைப்புலையரின் சமயமும் நோன்பு விழாவும்
மலைப்புலையர்களுக்குத் தனித்துவமான வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் உள்ளன. குறும்பப் புலையர்கள் காட்டிலுள்ள சாப்ளியம்மா என்ற பெண் தெய்வத்தை வழிபடுகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தின் தொடர்ச்சியாகத் தமிழக எல்லையில் கோடாந்தூர் என்ற வனப் பகுதியில் சாப்ளி அம்மன் கோயில் இருப்பதாக ஒரு தகவலாளி தெரிவித்தார். சாப்ளி அம்மன் என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கும் சாப்ளி என்ற பெயர் ஆண் குழந்தைகளுக்கும் இடுகிற வழக்கம் காணப்படுகிறது.
பெரும்பாலும் முதல் குழந்தைக்கே இப்பெயர் வைக்கப்படுகிறது. சாப்ளி அம்மனைத் தவிர, கன்னிமாரு, நாகரு, நாச்சரம்மா, கருப்பி போன்ற பெண் தெய்வங்களும், மாரியம்மா தெய்வமும் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாகும். கரைவழிப் புலையர்கள் மீனாட்சி அம்மன், அருணாட்சி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடுகின்றனர்.
மறையூரில் அருணாட்சி அம்மன் கோயில் புகழ்பெற்ற கோயிலாகும். புலையர்களின் குடி (settlements) பழனிக்கு அருகில் இருப்பதால் முருகனை வழிபடுகின்ற நிலையையும் காணமுடிகிறது. பழனி, சுப்பிரமணி, முருகன் போன்ற முருகனைக் குறிக்கும் பெயர்கள் குடிகளில் காணப்படுகின்றன.
பழனிக்குச்சென்று முடி காணிக்கை செலுத்தி வருகிற நடைமுறையும் தற்போது காணப்படுகிறது. மணிகண்டன் போன்ற பெயர்கள் அய்யப்ப வழிபாட்டின் தாக்கத்தைக் காட்டுகின்றன.
நோன்பு விழாவும் பொங்கல் விழாவும் குடிகளில் காணப்படும் முக்கியமான நிகழ்ச்சிகளாகும்.
நோன்பு விழா
நோன்பு என்ற சொல்லை மலைப்புலையர்கள் ‘நோம்பி’ என்றே உச்சரிக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் நடத்தப்படுகிறது.
நோன்பு நிகழ்ச்சி ஒவ்வொரு குடியிலும் தனித்தனியாகவே நடத்தப்படுகிறது. குடியைச் சேர்ந்தவர்கள் பொது மந்தையில் ஒருநாள் கூடி நோன்பு நிகழ்ச்சி நடத்துவதைத் தீர்மானிக்கின்றனர்.
எவ்வளவு பணம் ஒவ்வொரு வீட்டிற்கும் தரவேண்டும் என்பதையும் முடிவெடுத்துப் பணத்தை வசூல் செய்கின்றனர். இதனைப் ‘பணம் பிரித்தல்’ என்பர். நோன்பு விழா ஒருவாரம் கொண்டாடப்படும்.
நோன்பு நிகழ்ச்சி தொடக்கத்தை உணர்த்த சாட்டு குத்தப்படும். ‘சாட்டு குத்தது’ அல்லது சாட்டுபோடுதல் என்று இதனைக் குறிப்பிடுகின்றனர். மாவிலை, வேப்பிலைத் தோரணங்களைக் கட்டி குடியின் முகப்பில் அலங்கரிப்பர்.
சாட்டு குத்திய பிறகு குடியில் உள்ள மக்கள் ‘சுத்த வத்தம்’ கடைப்பிடிக்க வேண்டும். குடியைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வர். கோயிலைச் சுற்றிலும் தூய்மை செய்வர்.
மாதவிடாய் வந்த பெண்கள் (தீட்டுமோட்டுகாரங்க) பகற் பொழுதில் குடியை விட்டு வெளியே சென்றுவிட வேண்டும். ஆனால் இரவு நேரத்தில் குடிக்குள் வந்துவிடலாம். வேற்று மனிதர்கள் குடிக்குள் வரமுடியாது.
அனுமதி பெற்று வரலாம். மாலைக்குள் வெளியேறிவிட வேண்டும். குடிமக்கள் வீட்டுக்கு வெளியில்தான் இரவு நேரத்தில் உறங்குவர்.
சாட்டு குத்தியதிலிருந்து எட்டாவது நாள் நோன்பு தொடங்கும். முதல் நாள் பூசை நாச்சரம்மாளுக்கு. பூசையை ‘பூசி’ என்று உச்சரிக்கின்றனர். நாச்சரம்மா கோயில் காட்டுள் இருக்கிறதாம்.
காட்டுக்குள் ஆண்கள் மட்டும் சென்று வழிபட்டுவிட்டு (சிறுவர்களும்) வருகின்றனர். நாச்சரம்மாவைக் குடிக்கு அழைத்து வருவதாக ஐதீகம். அன்று ஆற்றங்கரையிலுள்ள காளியம்மா கோயிலையும் அலங்கரித்து தூய்மை செய்து தோரணங்கள் கட்டுவர்.
காளியம்மாவுக்குப் பட்டாடை உடுத்தி வழிபடுவர். இரண்டாவது நாள் முருகன், கணேசனுக்கு வழிபாடு நடைபெறும். இவ்வழிபாட்டை ‘செவ்வாவந்தி’ என்று கூறுகின்றனர். புதன் கிழமை அதாவது மூன்றாவது நாள் மாரியம்மாவுக்கு மதியம் கோயிலுக்குச் சென்று கெடாவைப் பலியிடுவர்.
கோயிலுக்கு வேண்டிக் கொண்டவர் பொங்கல், தேங்காய், இளநீர் கொடுக்கலாம். பூசாரி அம்மனைப் போல வேடமிட்டு முன்செல்ல குடிமக்கள் அவர் பின்னால் செல்வர். வீட்டிலிருந்து மாவிளக்கு எடுத்துச் சென்று மாரியம்மாவை வழிபடுவர்.
மாலையில் கெடா வெட்டும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். நெல்லு போட்டுப் பார்த்து குடிக்கு ஏற்படும் நல்லது, கெட்டதை அறிந்து கொள்வர். வேப்பிலையை அம்மா பத்னி / பத்னி தழை என்றே அழைக்கின்றனர்.
நேர்ச்சை (நேர்ந்து கொண்டவர்களே) எடுத்துக் கொண்டவர்களே ஆடுகளையும் கோழிகளையும் பலியிடுகின்றனர். ஆடுகளைப் பலியிடுவதற்கு முன்னர் ஆட்டின் தலையில் மஞ்சள் நீரைத் தெளிக்கின்றனர்.
ஆடு தலையை உலுக்கினால் சாமி பலியை ஏற்றுக் கொண்டதாகக் கொள்வர். தலையை அசைக்கவில்லை என்றால் கடவுளுக்கு ஏற்பில்லை என்று கருதி பலியிடுவது நிறுத்தப்படுகிறது.
அவ்வாறு பலியிட்ட ஆடுகளும் கோழிகளும் பொதுவிடத்திலேயே சமைக்கப்படுகின்றன. அவ்வுணவு பொதுவாக அனைவராலும் உண்ணப்படுகிறது. உணவு முடிந்த பின்னர் இரவு வெகுநேரம் ‘ஆட்டு பாட்டு’ (ஆட்டம் பாட்டம்) நடைபெறும்.
உறுமி, மெர்சி, தாய்மேளம், குழலு ஆகிய இசைக்கருவிகளுடன் வட்டமாகச் சுற்றி வந்து ஆடும் நடனம் நீண்ட நேரம் நடைபெறும். மறுநாள் நோன்பு நிகழ்ச்சியின் ஒரு கூறாக ஆண்கள் பெண்கள் கடவுளர்களைப் போல வேடமணிந்து (கரி, முகமூடி போன்றவற்றால் அலங்காரம் செய்தல்) ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை ஆசிர்வதிப்பர்.
மக்களும் பரிசுப் பொருள்களும், சாராயம், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களும் வழங்குவர். இவ்வாறு நான்கு நாள்கள் நடைபெறும் நோன்பு ஐந்தாவது நாள் முடிவுறும். ஐந்தாவது நாள் சாமியை அனுப்பி வைப்பார்கள். இதனைச் ‘சாமியெ அனுப்புது’ என்கின்றனர்.
தெய்வத்தை அனுப்பும்போது மஞ்சள் நீர் தெளித்து விளையாட்டு நிகழ்த்துவார்கள். எட்டாவது நாள் மனை பொங்கலிட்டு வழிபடுவர். அத்துடன் நோன்பு முடிவுக்கு வரும். நோன்பு நிகழ்ச்சி முடிவுற்றதைக் குறிக்க மாவிலை, வேப்பிலைத் தோரணங்களைக் களைந்து நீக்குகின்றனர்.
இதனை ‘சாட்டு புடுங்குது’ (சாட்டு புடுங்குதல்) என்று அழைக்கின்றனர்.நோன்பு நிகழ்ச்சி முதுவன்மார் குடிகளிலும் நடைபெறுகின்றது. குடியில் நாட்டாமை, காணி போன்ற தலைவர்கள் உடல்நலம் குன்றியிருந்தாலோ யாராவது இறந்துவிட்டாலோ (துட்டி) அந்த ஆண்டு நோன்பு நிகழ்ச்சி நடைபெறாது.
மலைப்புலையர்கள் தங்களின் பாதுகாப்பு கருதியும், யானை போன்ற வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்கவும், தீய சக்திகளிடமிருந்து மீளவும் நோன்பு சடங்குகள் செய்து ஆண்டுதோறும் கடவுளை வழிபடுகின்றனர்.
‘ஆட்டுக்காரு, பாட்டுக்காரு, கொலவக்காரு எல்லாருமே குடியில் உள்ளவர்கள்தான். வெளியிலிருந்து யாருமில்லை. வெளியிலிருந்து விருந்தாளிகள் வரலாம்’ என்று ஒருவர் சொன்னார்.
மாட்டுப்பொங்கல் அன்று மட்டும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் கொண்டாடுவது போல் நான்கு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுவதில்லை.
மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர். கேரள அரசு ஓணம் பண்டிகையின்போது ஓணக்கோடி, உணவுப் பொருள்கள் தருவதால் ஓண விழாவையும் அறிந்துள்ளனர்.
நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
பூப்புச் சடங்கு காலத்தில் ஒரு பெண்ணை ஆண்கள் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்த்தால் அந்தப் பெண்ணின் முகம் ஆணைப் போலவே மாறிவிடும் என்று நம்புகின்றனர். தாங்கள் வீட்டில் வளர்த்த ஆடு, கோழி போன்றவற்றைத் தாங்களே சமைத்து உண்பதில்லை.
ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிடும்போது சாமி உத்தரவு கொடுக்க வேண்டும். அவ்வாறு உத்தரவு கொடுக்கவில்லை எனில் அதனைப் பலியிடுவதில்லை. பெண்கள், பாலுள்ள விறகு மரங்களை வெட்டினால் வீட்டிலுள்ள மாடு, ஆடுகளின் பால் வளம் குறைந்துவிடும் என்று நம்புகின்றனர்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை அறவே இல்லை. திருமணம் ஆனபிறகு தம்பதியர் தனி வீட்டிற்குச் சென்று வாழ்க்கை நடத்துவார்கள். அவ்வாறு தனிக் குடித்தனம் சென்ற மகன்/மகள் வீட்டில் சென்று உண்ணும் பழக்கமில்லை. ‘பச்செத் தண்ணிகூடக் குடிக்கமாட்டும்’ என்று ஒரு தகவலாளி கூறினார்.
வேட்டையாடிக் கிடைத்த விலங்கு மாமிசத்தைச் சரிசமமாகப் பிரித்துக் கொள்வர். மருத்துவத்திற்குப் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்துகின்றனர். மூலிகைகளின் பெயர்களைச் சொன்னால் மருத்துவச் சிகிச்சையின் பலன் கிடைக்காது என்று நம்புகின்றனர்.
குறும்பப் புலையர்கள் கரைவழிப் புலையர்கள் குறித்தோ, முதுவன் ஆதிவாசி மக்களைக் குறித்தோ ஏதாவது கருத்து (அ) தகவல்களைக் கூறும்போதோ மிகவும் எச்சரிக்கையுடனும் பரிமாறிக் கொள்கின்றனர். பல்வேறு இன மக்கள் ஒற்றுமையுடன் வாழும் வழியன்றோ அது? இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் உள்ள இம்மக்களிடம் குடிப்பழக்கமும் பரவலாகக் காணப்படுகிறது.
அரசாங்கத்தின் அரவணைப்பு கேரள அரசு மலைப்புலையர்களுக்கு வேண்டிய நல்வாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அரிசி, எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வழியாக வழங்கப்படுகின்றன.
இந்தச் சலுகையே இல்லையெனில் இந்த ஆதிவாசி மக்கள் வறுமையில்தான் வாட வேண்டும். இரண்டு வேளையும் கஞ்சி உணவுதான். ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் புதிய துணிமணிகள் வழங்குகின்றனர். ஒவ்வொரு குடியிலும் கான்கிரீட் வீடுகள் சிறிய வடிவில் கட்டித் தரப்பட்டுள்ளன.
வீட்டுக்கு வெளியே கழிப்பறையும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆதிவாசி குழந்தைகள் குடியிலிருந்து பள்ளிகளுக்குச் செல்ல ‘கோத்ர சாரதி’ என்ற வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிலும் அங்கன்வாடியும், ஆரம்பப் பள்ளியும் உள்ளன. உயர்நிலைப் பள்ளிக்கு மறையூருக்கு வரவேண்டும். ஆதிவாசி குழந்தைகளுக்கென்றே இருப்பிட விடுதியும், பள்ளியும் மூணாறில் உள்ளது. சில குழந்தைகள் கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று இலவசமாகப் படித்துவர அரசு உதவி செய்கிறது.
ஆதிவாசி மக்களுக்கு சுயவேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் நோக்கில் சூழல் விற்பனையகங்கள் (Eco-shops) பிரதான சாலைகளில் அவரவர் குடிகளுக்கு அருகில் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
இந்த Eco-shops களில் பெண்கள் அதிகம் பணியில் உள்ளனர். மூலிகைத் தேனீர், பலகாரங்கள், கஞ்சி உணவு போன்றவை விற்கப்படுகின்றன. மேலும், மலைப் பொருட்கள், ஏலக்காய், தேயிலைத் தூள், தேன், கருப்பட்டி போன்ற பொருட்களும் விற்கப்படுகின்றன.
குடிகளில் விளைந்த பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளும் விற்கப்படுகின்றன. அந்தப் பணம் பயனாளிகளுக்கே பிரித்தளிக்கப்படுகின்றது.
சின்னார் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயத்தில் மலைப் புலையர்களுக்கு தகுந்த பணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் காட்டுக்குள் பராமரிப்புப் பணிகள், அலுவலக உதவியாளர் பணிகள், டிரெக்கிங் அழைத்துச் செல்லுதல் (சுற்றுலா) போன்ற பணிகளை ஏற்படுத்திக் கேரளா அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.
போக்குவரத்து வசதிகள் இல்லாத குடிகளிலிருந்து கர்ப்பிணிப் பெண்களின் பிரசவக் காலத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலிருந்து எல்லாச் செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது. ஒவ்வொரு குடியிலும் ஆதிவாசி மக்கள் மேம்பாட்டு அரசுப் பணியாளர் (ST Promoters) உள்ளனர். இப்பணியாளர் குடியிலுள்ள மக்களின் தேவைகளை அரசுக்குச் சொல்லித் தீர்த்து வைப்பர்.
முடிவுரை
மலைப்புலையர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பருவமழைக் காலத்திலும் கோடையிலும் எந்த வேலையும் வருமானமும் இல்லை. ஒருவேளை உணவுக்கே வழியில்லை. காட்டில் வனவிலங்குகளின் எதிர்பாராத தாக்குதலால் மக்கள் உயிரிழப்பதால் குடும்பங்கள் ஆதரவு இல்லாமல் போய்விடுகின்றன. மக்களிடம் பரவலாகக் குடிப்பழக்கம் உள்ளது.
இதனால் ஆடவருக்கு உடல் நலிவு, சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மலைப்புலையரின் பேச்சு வேகமாக மாறி மறைந்துவருகிறது. இளைஞர்கள் தங்கள் பேச்சை தேவையற்றதாக, மதிப்பற்றதாகக் கருதுகின்றனர். இதனால் மலையாளம், தமிழ் போன்ற மாநில மொழிகளுக்கு மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இருமொழியாளர்களாக இருக்கும் அவர்கள் ஒரு சில பத்தாண்டுகளில் தங்கள் மொழியை இழந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அவர்களின் மொழியை ஆவணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அவர்களுக்குள்ள வனம் சார்ந்த, வன விலங்குகள் சார்ந்த, தாவரங்கள், மூலிகைகள் சார்ந்த அறிவுக் களஞ்சியத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. சங்க இலக்கியத்தில் புலையன், புலைத்தி ஆகிய சொற்கள் பயின்று வந்துள்ளன. இச்சொற்கள் தாழ்ந்த சாதி ஆண்மகன், பெண்மகள் என்று புரிந்து கொள்ளப்பட்டாலும், புலைத்தி என்ற சொல் முருகனுக்குச் சமயச்சடங்கு செய்பவளாகவும் (புறநானூறு 259), பூக்கூடை முடைந்து விற்பவளாகவும் (கலித்தொகை 117), புலையன் என்ற சொல் போரில் ஈடுபட்டவனாகவும் காட்டப்படுகின்றன.
பிற்காலத்தில் சைவத் திருமுறைகளிலும் புலையன் என்ற சொல் வருவதனைக் காண்கிறோம். ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்’ (அப்பர் தேவாரம்), புழுத்தலைப் புலையனேன்’ (திருவாசகம்). செருமர்/செரமர் என்ற ஒருவகை தாழ்த்தப்பட்ட மக்கள் கேரளா, தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர். இவர்களையும் புலையர் என்றே அழைக்கின்றனர். மலைப் புலையர்களுக்கும் செருமர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறுகின்றனர்.
2. மறையூர், காந்தளூர், காரையூர், கீழாந்தூர், கொட்டக்குடி ஆகிய ஐந்து ஊர்களும் ‘அஞ்சுநாடு’ என்று அழைக்கப்படுகின்றன. அப்பகுதி ‘அஞ்சுநாடு பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படுகின்றது. ‘அஞ்சு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் நாங்கள் என்று ஒரு தகவலாளி தெரிவித்தார்.
இப்பகுதியில் ஏராளமான பெருங்கற்காலக் கல்லறைகள் (Dolmens) காணப்படுகின்றன.
3. குடி என்ற சொல் மிகவும் பழமையான தமிழ்ச் சொல். ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை’ (புறநானூறு 335). துடியன் குடி, பாணன் குடி என்று குடி என்பது settlement என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
4. இக்கட்டுரை புலையர்களில் குறும்பப் புலையர்களின் வாழ்வியலை மட்டும் விவரிக்கிறது.
5. குறிப்பு : களஆய்வு மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கு நிதிநல்கை வழங்கிய காசர்கோடு, மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு மிக்க நன்றி.
துணை நூல்கள்
1. Bijumon Vargese & J.P.Mathew. Tribes of Idukki.SIL Survey.(2015).
2. The Encyclopaedia of Dravidian Tribe, DLA, Thiruvananthapuram.(1996).
- முனைவர் ஆ.கார்த்திகேயன்