எங்கோ நடக்கும் ஒரு வளைகுடா யுத்தத்திற்கும் நமது வீதியில் விற்கும் வெங்காயத்தின் விலைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றால் என் விவசாயத்தில் யாரோ தலையிடுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

 - அமெர்தியா சென்

விவசாயம் தொடர்பான புத்தகங்கள் தமிழில் மிகக்குறைவு என்பதை வருத்தத்தோடு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. நீர் பாசனம், நடவு, அதிவேக விளைச்சல் நவீனரக தானியங்கள் குறித்த கல்வியை கூட இங்கே ஆங்கிலத்தில் போதிக்கப்படுவது வெட்கக் கேடானதாகும். சென்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் படிக்கூட இந்தியாவில் ஐந்தில் ஒருவர் விவசாயத் தொழிலை நம்பி அதை பின்னொற்றி வாழ்பவராய் புள்ளி விபரங்கள் காட்டியும் நமது மைய அரசு விவசாயத்திற்கு ஒரு தனி பட்ஜெட் வெளியிடுவதே இல்லை. நாட்டின் விவசாயிகள் ஒரு மூன்றாம்தர குடிமக்களாகக் கூட குறைந்த பட்சம் நடத்தப்படுவது இல்லை. நலிவுற்ற ஒரு அடிப்படைத்தொழிலின் அழிவு அசுரவேகம் கொண்டதாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 40 சதவிகித விவசாய நிலம் முற்றிலும் அபகரிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் வாழிடங்களாகவோ தொழிற்பேட்டைகளாகவோ, பன்னாட்டு ரியல் எஸ்டேட் வாழிடங்களாகவோ தொழிற்பேட்டை களாகவோ, பன்னாட்டு நகர்புறமாகவோ மாற்றப் பட்டுள்ளது. பெரிய அணைக்கட்டுகள் மூலம் பல அரிய விவசாய கிராமங்களே அழிக்கப்படும் அவலம் வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாது. நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் அதிகாரிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கியிருக்கிறதே தவிர விவாசாயக்கூலிகளின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் அதனால் அவர்களின் தற்கொலைகளை குறைக்கக்கூட முடியவில்லை.

இரயில்வே துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யும் அரசு விவசாயத்திற்கு என செய்வதை நலத்திட்ட, இலவச பம்மாத்துகளாக்கி, பிச்சையாக இடுவதை ஆத்திரத்தோடு நாம் கவனிக்கவேண்டிய நிலை. மின்சாரத்தை முறைப்படுத்தி வீட்டு உபயோகம் என வழங்கி மீதியை விவசாயத்திற்கு வழங்க - எந்த முயற்சியும் எடுக்காத ஒரு அரசாங்கம் தண்ணீர் சேந்திட இலவசமாக மின்சார பம்புசெட் வழங்குவது பெரிய நகைச்சுவை. நிலவுடைமையாளன், இடைத்தரகன், உள்ளூர் ஈட்டிக்காரன் உட்பட பலரிடம் சிக்கி உலகமயமாதலில் முற்றிலும் சிதைக்கப்பட்டதன் எதிர்காலத்தை தற்கொலை எனும் முற்றுப்புள்ளியின் மூலம் ‘மீட்ட’ விவசாயிகள் எண்ணிக்கை 1.7 லட்சம்! ஒரு விவசாயின் தற்கொலை என்பது அவரது சமூகம் நோக்கிய இறுதித்தாக்குதல். ஆனால் சினிமா கிசுகிசுவிலிருந்து உலகஅரசியல் வரை பிசியாக இருக்கும் நம் ‘நடுநிலை’ நாளேடுகளில் தற்கொலை ஒரு பாரா செய்தியாக நாலாம் பக்கம் ஒரு ஓரமாய் கிடாசப்படுவதை பார்க்கிறோம்.

வால்மார்ட் வணிகமும், பிர்லாவின் மோர், அம்பானிகளின் ரிலையன்ஸ் எனத்தொடரும் சூப்பர் மார்கெட் கலாசாரமும் இந்திய விவசாயத்திற்கு சாவு மணி அடிப்பது அரசுக்கு ஏன் புரியவில்லை. தனது தரகு வேலையை முடுக்கிவிட்டு வசூல் வேட்டையில் இறங்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தாதாக்களாக அமைச்சர்கள் ‘பணியாற்றுவதை’ விவாயிகள் வேடிக்கை பார்ப்பதோடு அதற்கு முற்றிலும் பலியாகும் கொடுமையே தொடர்கிறது. இறக்குமதியான தொழில்நுட்பம், நவீன விவசாயமுறை என தங்கள் மீது திணிக்கப்பட்ட பன்னாட்டு சதிக்கு எளிதில் இலக்காகி தன்னிடம் இருப்பதையும் இழக்கும் அவலத்திற்கு பெயர் ‘பசுமைப் புரட்சி’. ‘விவசாயம்’ அடிப்படைப் பொருளாதார அம்சம். அதனையட்டி அதன் சார்பாக இயங்கும் தொழிற்துறை. இரண்டிற்கும் இடையே தனது கடமையாற்றும் சேவைத்துறை! உற்பத்தி என்பதும் உபரி என்பதும் இப்படித்தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் இன்றைய பன்னாட்டு உலகமயமாதல் எனும் கூட்டுச்சதி சேவைத்துறையை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறதே இந்த அநியாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது நமது கடமை அல்லவா.

தமிழில் விவசாயம், விவசாயிகளின் துயரங்கள், நம் பண்டை விவசாய அறிவியலின் அடிப்படைகள், நிலம் தொடர்பான விழிப்புணர்வு, அதை பாதுகாக்கும் அவசியம் குறித்த பதிவு என பல புத்தகங்கள், சஞ்சிகைகள், சிறு பிரசுரங்கள் ஆகியவைகளின் தேவை உணரப்படவேண்டும் என ‘புத்தகம் பேசுது’ முன்மொழிகிறது. விவசாயம் தொடர்பான நூல்களை, ஆய்வுப் பிரசுரங்களை மக்கள் பதிப்புகளாக வெளியிடுவதை ஒரு கடமையாக பதிப்பாளர்கள் கருதவேண்டும். வரும் தலைமுறையினரான குழந்தைகளிடம் விவசாயம் ஒரு அடிப்படை அறிவியல், ஒவ்வொரு விவசாயியும் ஒரு நிலம் சார்ந்த விஞ்ஞானி என்பதை ஆழப்பதிய வைக்க வேண்டும். அன்புத் தோழர்களே இந்த வேலையிலிருந்து நாம் தவறினால் நமது எதிர்கால சந்ததியினர், வெற்று கவுரவம் பார்த்து விவசாயத்தையே கைவிடும் கொடிய எதார்த்தத்தை சந்திக்க நேரும். சிந்திப்போம்.

- ஆசிரியர் குழு

Pin It