உழவுத் தொழிலே உயர்வு
ஒப்புமையில் படிப்புக்குத்தான் உயர்மதிப்பு
வண்மையில் உழைப்புத்தான் உச்சம்
உடல் உழைப்புத்தான் உச்சத்தின் உச்சம்
மிச்ச மெல்லாம் அதன் எச்சம்
உடல் உழைப்பின் உயர்வை உணர்க, உரைக்க
உடல் உழைப்புக்கு உயர்வு அளிக்க
உடல் உழைப்புத்தான் உயர் வாதியத்திற்கு உற்றது
உழைப்பின் மாண்பை மார்க்சின்றி
மற்றோர் மறந்தனர், மறைத்தனர், மறுத்தனர்
உடல் உழைப்பைப் பழித்த உலுத்தர்கள்
உற்றனர் உயர் வளவாழ்வு
உணவின்றேல் உயிரில்லை, உலகில்லை
உழவனின்றேல் உணவில்லை, உழவன்
உற்ற விளை பொருளுக்கு உரிய விலையில்லை
உணவின்றி உழல்கின்றான் வாடுகின்றான் வதைகிறான்
உற்ற கடனுக்காக உயிரை மாய்க்கின்றான்.
கொத்துக் கொத்தாய் இலக்கங்களில்,
உற்றவை செய் உடனே செய் உழவன் உயிர் மீட்க
உணர்ந்து கொள் உலகே!
உழவனின் உயர் வாழ்வை உறுதி செய்
உண்டே வாழ்வு உலகோர்க்கெல்லாம்-அன்றேல்
உழவன் வீழ்ந்தால், வீழ்த்தினால்
உலகே வீழும், மாளும் மானுடம்.