The best of all times:

The worst of all times :

- Charles Diking

(First line of ‘The tale of Two cities’)

2010-ம் வருடத்தைத் திரும்பிப் பார்க்கும் போது, பல்வேறு உலக நாடுகளின் அரசாங்கங்களை எப்படி அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்பதை மீண்டும் உலகறிய வைத்த வீக்கிலீக். ஒரே ஒரு இணைய தகவல் பரிமாற்ற அம்பலம் என்றென்றும் நினைக்கப்படும். ஒரே ஒரு இணைய தகவல் அம்பலமே இவ்வளவு செய்திகளைக் கொண்டுள்ளதென்றால், ஏனைய உலகளாவிய இணைய தகவல் பரிமாற்ற நிறுவனங்கள் உண்மைகளை வெளியிடத் தொடங்கினால் மக்கள் தனது முதுகில் குத்திய அரசாங்கங்களை முகமூடி கிழித்து அறிந்துகொள்ள எவ்வளவு விஷயம் கிடைக்கும் என்பதை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. லட்சக்கணக்கான கோடி சுருட்டும் உச்சகட்ட ஊழல்கள் அம்பலமான ஆண்டாகவும் 2010 இருந்துள்ளது.

இந்திய வளங்களை அமெரிக்கா உட்பட ஆறு பெரிய நாடுகளுக்கு கடைவிரிக்கும் ஒப்பந்தங்களை ஒபாமா தொடங்கி அதிபர்கள் வருகையால் எந்த கூச்சமும் இன்றி மன்மோகன் அரசு கைச்சான்று இட்டதும் இதே 2010ல் தான். ஆனால், இந்தியா வரும் போதெல்லாம் ராஜமரியாதையோடு வரவேற்கப்படும் ராஜபக்சே இங்கிலாந்து பயணத்தின்போது மறைகழண்டு மானமிழந்து ஓடிஒளிய நேர்ந்ததும் இதே ஆண்டில்தான். சந்தை வர்த்தக உலகமயமாதலில் சமரசம் செய்து கொண்ட ஒருவருக்கு நோபல் இலக்கியமும், வழக்கம் போல சிவப்பு அரசியலை சீண்டிப் பார்க்க ஒரு அமைதி நோபலும் வழங்கப் பட்டதைப் பார்த்தால் நோபலைக்கூட அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

தொடர்ந்து சர்வதேச தட்பவெப்ப மாநாடுகளில் ஏழைநாடுகளின் மீதே முழுவன்மத்தோடு பாயும் செல்வந்த நாடுகளின் கிடுக்கிப்பிடி சுரண்டல் வாதம் 2010ல் இன்னும் கொலை வெறியேறிப் பாய்ந்தது. முன்பு ஒரு ஈரான் - ஈராக் யுத்தம் போல இன்று ஒரு வடகொரிய தென்கொரிய யுத்தத்தை தொடங்கி தனது ஆயுத- சந்தைக்கு ரத்தம் நாக்கில் ஊறவழிதேடும் அமெரிக்கா அங்கே தக்கபாடம் படிக்க போவதை ஏற்கனவே பார்க்கிறோம். எப்போதும் கிரிக்கெட் தான் என்ற நிலையை மாற்றி காமன்வெல்த் போட்டிகளிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வென்ற பதக்கங்கள் மூலம் கொஞ்சம் சூதாட்ட கிரிக்கெட்டை விரட்டி அடித்தால் உலக ஒலிம்பிக்கில் நட்சத்திரமாய் ஜொலிக்க நாங்கள் தயார் என்று இந்தியத் தடகள வீரர்கள் சொல்லாமல் சொன்னதும் இதே 2010ல் தான்.

தமிழகத்தில் மாவட்டத்திற்கு மாவட்டம் புத்தக கண்காட்சி முயற்சிகள் நடைபெற்றதும் 2010ல் தான். ஆனால் நமது நூலகத்துறை மட்டும் 2010-ம் ஆண்டை ஏறக்குறைய ஒரு இருண்ட ஆண்டாக ஆக்கி விட்டதை வருத்தத்தோடு குறிப்பிடவேண்டியுள்ளது. ஆசியாவின் பிரம்மாண்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பெரிய நூலகத்தை அரசு சென்னையில் நிறுவிய அதே சாதனை ஆண்டில்தான் நமது நூலகத்துறையும் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. 2008-க்கு பிறகு புத்தகமே வாங்காத இந்தியாவின் ஒரே மாநிலமாக இது இருக்கிறது என ஆங்கில பதிப்பாளர்கள் சொல்லித்தான் நமக்கே புரிகிறது. தமிழ்நாட்டில் மாதம் 1000 நூல்கள் சராசரியாக வெளிவருவதாக சமீபத்தில் ராஜாராம் மோகன் ராய் அறக்கட்டளை வெளியிட்டுள்ள புள்ளி விவரம் கூறுகிறது. நமது தமிழ் மாநிலத்தில் புத்தக வெளியீட்டில் இது பொற்காலம் அல்லவா? 2010-ம் ஆண்டு புத்தகத்தினை அதே ஆண்டில் வாங்கிட அரசால் முடியாதா? நூல்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் மாதா மாதம் அரசு தனது நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க வேண்டும் அல்லது இப்படியாவது செய்யலாம். வருடத்திற்கு இரண்டு முறை நூல்கள் வாங்கலாம். ஆறுமாதத்திற்கு ஒரு முறை புத்தகங்கள் வாங்கும் ஒரு புதிய முறையை 2011 -ல் இருந்தேனும் நமது நூலகத்துறை அறிமுகம் செய்யும் என்ற நம்பிக்கையோடு..

அனைவருக்கும் 2011 ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழ் தை புத்தாண்டு வாழ்த்துகள்.

- ஆசிரியர் குழு

Pin It