இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த பல நூல்கள் ஆங்கிலத்திலும் பல்வேறு இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன என்ற போதிலும் தோழர் இ.எம்.எஸ். அவர்களால் முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் தனிச்சிறப்புகள் பலவற்றைப் பெற்ற ஒரு நூலாகும். கல்லூரி மாணவராக இருந்த ஒருவர் விடுதலைப் போராட்ட அலையினால் ஈர்க்கப் பட்டு தனது கல்லூரிப்படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஒரு காங்கிரஸ் தலைவராகவும் காங்கிரஸ் சோஷலிஸ்டாகவும் பின்னர் ஒரு கம்யூனிஸ்ட் தலைவராகவும் பரிணாம வளர்ச்சி பெற்று நாட்டு விடுதலைக்குப்பிறகும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலில் கம்பீரமாக நடைபோட்டு தனது முத்திரையை ஆழமாகப்பதித்து விட்டுச் சென்றுள்ள ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க மாமனிதரின் படைப்பாக இந்த வரலாற்றுநூல் திகழ்கிறது.

மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது என்பதை நூலை அறிமுகப்படுத்தும்போதே இ.எம்.எஸ் தெரிவித்து விடுகிறார். மார்க்சிய மெய்ஞ்ஞானத்தைக் கரைத்துக் குடித்த ஒரு களப்போராளியான இ.எம்.எஸ் அந்த அடிப்படையில் இந்நூலை எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவரே.அவரது படைப்புகளை 100 தொகுதிகளாக வெளியிடுவதற்கு திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏ.கே.ஜி மையம் திட்டமிட்டுள்ளது. அவர் எழுதிக்குவித்த 35000 பக்கங்களுக்கு மேற்பட்டவை இந்த நூல் தொகுதிகளுக்குள் கொண்டுவரப்படும். இ.எம்.எஸ் சின் படைப்புகளில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த இந்நூலே ஆகச்சிறந்த படைப்பு என்ற தமது கருத்தை மார்க்சிய இலக்கிய விமர்சகரும் சகபோராளியுமான பி.கோவிந்தபிள்ளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னிய ஆதிக்கத்துக்கு முந்தையகால இந்தியாவில் நிலவி வந்த சமூக அமைப்பின் தன்மை, அந்த அமைப்பு முறையில் அன்னிய ஆட்சியாளர்கள் புகுத்திய மாற்றங்கள், ஆகியவை குறித்த ஆய்வின் அடிப்படையில் விடுதலைப்போராட்டம் முழுவதையும் ஆய்வு செய்வதற்கு வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை ஒருவர் பயன்படுத்தினால் தேசிய வரலாற்றாளர்களால் அளிக்க முடியாத விடைகளைத் தன்னால் அளிக்கமுடியும் என்று குறிப்பிட்டுள்ள இ.எம்.எஸ். அதுதான் இந்த நூலில் முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிசார் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு முன்னர் இந்தியாவில் வருண சாதி அடிப்படையில் அமைந்த கிராம சமூகம் வழக்கில் இருந்தது.இந்த சாதி சமய நிறுவனங்களிலிருந்து தோன்றிய சமூக உறவுகளின் அடிப்படையில் அமைந்த தன்னிறைவு பெற்ற கிராம சமூகங்களைக்கொண்ட ஒரு அமைப்பு முறை நீண்டகாலமாக நிலவிவந்தது.இந்த சமுதாயத்தை மார்க்ஸின் சொற்களில் விளக்கினால் - நூற்போரையும் நெசவாளர்களையும் லட்சக்கணக்கில் தோற்றுவித்த கைத்தறியும் கைராட்டினமும் அவர்களுடைய சமுதாயத்தின் சுழல் அச்சுக்களாக இருந்தன. நினைவுக்கு எட்டாத காலம் முதல் இந்திய உழைப்பாளிகள் தயாரித்துவந்த போற்றத்தக்க நயமிக்க இழைகளைக் கொண்ட ஆடைகளை ஐரோப்பா பெற்று வந்தது. கல்வி, கலைகள், இலக்கியங்கள் உள்ளிட்ட பண்பாட்டுத் துறையிலும் இந்தியா முனனணியில் இருந்தது.

இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிய பிரிட்டிசார் நாட்டின் பல பகுதிகளில் ஜமீந்தாரி.ரயத்துவாரி, மகல்வாரி மற்றும் பல்வேறு முறைகளைப் புகுத்தியதன் மூலம் நிலவுடைமை முறைகளை முறைப்படுத்தியிருந்தனர். இந்த நிலவுடைமை முறைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாக இருந்த போதிலும் அவை அனைத்தையும் இணைக்கக்கூடிய ஒரு பொது அம்சமும் இருந்தது. அது யாதெனில் இந்தியாவில் இதுவரை இல்லாத தனியார் நிலவுடைமை இப்போது புகுத்தப்பட்டிருந்தது. இந்த மாற்றங்களின் விளைவாக பல்வேறுஉரிமைகளையும் தனிச்சலுகைகளையும் வைத்திருந்த கணிசமான பகுதி மக்கள் இவை அனைத்தையும் பறி கொடுத்தனர். தங்களின் வாழ்வாதாரமாக இருந்த நிலங்களை இழந்த கோடிக்கணக்கான மக்கள் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற ஆரம்பகாலப் போராட்டங்களை ஆய்வு செய்யும் போது முதல் சுதந்திரப்போராட்டம் என்று அழைக்கப்பட்ட 1857-59 மக்கள் எழுச்சிக்கு முன்னர் 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தென்னிந்தியாவின் பாளையக்காரர்களும் குறு நிலமன்னர்களும் பிரிட்டிசாருக்கு எதிராக நடத்திய போராட்டங்களைப்பற்றி இ.எம்.எஸ் குறிப்பிட்டுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜய்யன் அவர்களால் எழுதப்பட்டதென்னிந்திய எழுச்சி-1800-1801-முதல் விடுதலைப்போர் என்ற நூலிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார்.

தென்னிந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் தொடங்கி தெற்கு மகாராஷ்டிராவின் தொண்டோஜிவாக் வரையிலான பல...

குறுநிலமன்னர்கள் 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிசாருக்கு எதிராக வீரத்துடன் போராடினர். இந்த தேசபக்தர்களின் புகழ்வாய்ந்த வீரச்செயல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்ற தனித்தனியான வீரசாகசங்களாகவே கருதப்பட்டுவந்தன.இதுஒரு சரியான சித்தரிப்பு அல்ல என்கிறார் இ.எம்.எஸ். தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு கேரளா, ஆந்திரா,கர்நாடகா ஆகியவற்றுடன் மகாராஷ்டிரத்தையும் உள்ளடக்கிய பகுதி முழுவதும் பரவியிருந்த ஒரு விரிவான இயக்கத்தின் பகுதியாக இப்போராட்டங்கள் நடைபெற்றன. இந்த தலைவர்களில் எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் வியூகங்களை வகுத்தவராகவும் சிவகங்கையைச்சேர்ந்த மருது பாண்டியரை ராஜய்யன் குறிப்பிட்டுள்ளதை இ.எம்.எஸ் மேற்கோள் காட்டியுள்ளார். மதுரைக்குத் தெற்கேயிருந்த திருநெல்வேலி கட்டபொம்மன் உள்ளிட்ட பாளையக்காரர்களை மட்டுமின்றி அப்பகுதிமக்களையும் மருதுபாண்டியர் திரட்டினர் என்பதையும் திண்டுக்கல்,கோயம்புத்தூர், மலபார், மைவர், மகாராஷ்டிரா,ஆகிய பகுதிகளைச் சேர்ந்தபிரிட்டிஷ் எதிர்ப்பு கலகக்காரர்களையும் அணிதிரட்டி பிரிட்டிஷ் கோட்டைகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான நோக்கத்துடன் மருது பாண்டியர் செயல்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1800-1801-ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவில் நடை பெற்ற போராட்டங்களையும் 1857-59 -ம் ஆண்டுகளில் வடஇந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களையும் ஒப்பிட்டுப்பேசும் இ.எம்.எஸ் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமை களையும் குறிப்பிடுகிறார்.வடஇந்தியாவைச் சேர்ந்த உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த மாபெரும் எழுச்சியை சிப்பாய்களின் கலகமாக மட்டும் சித்தரிப்பது சரியா என்பதுடன் அதனை முதல் விடுதலைப்போர் என்று வருணிப்பது சரியா என்ற கேள்வியை எழுப்பி பன்முகப்பட்ட வகையில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் அதனுடன் இணக்கமான முறையிலேயே செயல்பட்டு வந்தனர். காங்கிரஸ் கட்சி ஆண்டு தோறும் நடத்தும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் கவர்னர் ஜெனரல் மற்றும் மாகாண கவர்னரை சந்திப்பதும் அந்த பிரதிநிதிகளுக்கு அவர்கள் விருந்தளிப்பதும் வழக்கமாக இருந்துவந்தது. படித்த மத்தியதர வர்க்கத்தினரின் பிரச்சனைகளை மட்டுமின்றி சாமானிய மக்களின் பிரச்சனை களையும் எடுத்துக்கொண்டு அரசாங்கக்கொள்கைகளுக்கு எதிரான கடுமையான விமரிசனங்களை காங்கிரஸ் கட்சி செய்ய ஆரம்பித்தவுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அμகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்கு பல தடைகளை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தத் தொடங்கினர்.

காந்திய அரசியலின் நுழைவுக்கு முன்னர் தீவிரவாத அரசியலே மக்களுக்கு நெருக்கமானதாக இருந்துவந்தது. கீழ் நிலையிலேயே மிகவும் கீழ்மட்டத்தில் இருந்தவர்களும் தொழிலாளர்கள்,விவசாயிகள், கைவினைஞர்கள், வேலைவாய்ப்புகளைப் பெறாதவர்கள், மற்றும் மாணவர்கள் போன்ற சமூகத்தின் நடுஅடுக்குகளில் இருந்த பிரிவினர் முனைப்புடன் பங்கேற்ற இயக்கமாக தீவிரவாத அரசியல் இயக்கம் இருந்து வந்தது. இந்த அம்சம் தான் மிதவாத அரசியலிலிருந்து ஒரு புறத்திலும் தனி நபர் புரட்சிகர அரசியலிலிருந்து மறுபுறத்திலும் தீவிரவாத அரசியலை வேறுபடுத்திக்காட்டியது.

அன்னிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் துவங்கிய காலத்திலிருந்தே காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய அரசியலுக்கு இணையாக மத அடிப்படையிலான அரசியலும் சாதி அடிப்படையிலான அரசியலும் இந்தியாவில் வளர்ந்துவந்தன.1857-59 ஆண்டுகளின் போராட்டத்திலும் அதற்கு முன்னர் நடைபெற்ற பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஒரு சமூகம் என்ற முறையில் இஸ்லாமிய சமூகம் இந்து சமூகத்தினரைவிடக் கூடுதலான முனைப்புடன் பங்கேற்றது. சில நூற்றாண்டுகளுக்கு மேலாக டெல்லியிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆட்சிபுரிந்து வந்த முஸ்லிம் மன்னர்களைக்கீழிறக்கி விட்டுத்தான் பிரிட்டிசார் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்தனர். இந்த உணர்வு சமூக அந்தஸ்துக்கு அப்பாற்பட்டு அனைத்து முஸ்லிம்களின் மத்தியிலும் பரவியிருந்தது. இஸ்லாமிய உலகின் தலைவராக மதிக்கப்பட்ட துருக்கியின் கலீபாவின் அதிகாரத்தைப் பறித்தும் பல முஸ்லிம் நாடுகளைக் கைப்பற்றியும் இருந்த பிரிட்டிசாரின் மீது முஸ்லிம் மக்களுக்கு கடுமையான சீற்றம் ஏற்பட்டிருந்தது. இது தான் பிரிட்டிஷ் எதிர்ப்புக்கிளர்ச்சிகளிலும் 1857-59 எழுச்சியிலும் முஸ்லிம்கள் தீவிரமாகப்பங்கேற்பதற்கான தூண்டுதலாக இருந்தது. இதன்காரணமாகவே முஸ்லிம் மேல்தட்டுவர்க்கத்தினர் தங்களுடைய குழந்தைகளை பிரிட்டிசார் துவக்கியிருந்த கல்வி நிலையங்களுக்கு அனுப்பாமல் தவிர்த்து வந்தனர். அந்தப் பிள்ளைகள் மரபுவழியில் அமைந்த மதரசாக்களிலேயே தொடர்ந்து கல்வி கற்று வந்தனர். முஸ்லிம் சமூகம் நவீன கல்வியில் தொடர்ந்து பின் தங்கிய நிலையில் இருந்ததற்கு இதுவே காரணம்.

முஸ்லிம்களைப்போலவே தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களும் 1909க்குப்பிந்தைய ஆண்டுகளில் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் போராட்டங்களை வளர்த்திருந்தனர். மக்கட் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஒரு அரசாங்கம் அமைக்கப் படுமானால் அது பிராமண ஆதிக்கம் ஏற்பட வழிவகுக்கும் என்ற அச்சமே இப்போராட்டங்களின் பின்னணியாக இருந்தது.சென்னையில் துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியும் பம்பாய் மாகாணத்தில் துவக்கப்பட்ட பிராமணர் அல்லாதார் அமைப்புகளும் பிராமண ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தின. இந்தப் போராட்டங் களிலிருந்துதான் சாதீய எதிர்ப்பு மற்றும் நாத்திக இயக்கங்களின் தலைவரான ஈ.வெ.ரா. பெரியார் போன்றவர்கள் தோன்றினர். (காங்கிரஸ் அமைச்சரவை பதவியில் இருந்த மதராஸ் மாகாணத்தில் 1930களின் பிற்பகுதியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் உருவாவதற்கு இட்டுச் சென்றதையும் இ.எம்.எஸ். பதிவு செய்துள்ளார்.)

அவருடைய சொற்களில் கூறினால்-காங்கிரஸ் அமைச்சரவை பதவியில் இருந்த மதராஸ் மாகாணத்தில் இதேகாலத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப்போராட்டம் குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்வாக இருந்தது. இந்தி மொழியை இந்திய தேசீயத்தின் அடையாளமாகக்கருதிய காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை பள்ளிகளில் இந்தி மொழியைக்கட்டாயப்பாடமாகக் கற்றுத்தரவேண்டும் என்று முடிவு எடுத்தது. இம்முடிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்துது.1937 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சி மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வினைத் தூண்டிவிட்டதுடன் அதனைக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் திருப்பி விட முயற்சித்தது. விலக்கை அமல் படுத்தி அதனால் ஏற்பட்ட நிதிப்பற்றாக் குறையை ஈடு செய்வதற்காக விற்பனை வரியை அம்மாகாண அரசு முதல்முதலாகப் புகுத்தியிருந்தது. இதனால் ஏற்கனவே கோபமடைந்திருந்த மக்களிடம் இந்தி எதிர்ப்புப் போராட்டச் செய்தியும் கொண்டு செல்லப்பட்டது. பிற்காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் எழுப்பிய வடஇந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தின் துவக்கமாக இது இருந்தது.முஸ்லிம்லீக் ஒரு அகில இந்திய சக்தியாக உருவானதும் மதராஸில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கமும் இந்தியஅரசியலில் புதிய சக்திகள் வளர்ந்து வருவதற்கான துவக்கமாக இருந்தது.

முஸ்லிம்களுக்காகவே முஸ்லிம் லீக் அமைக்கப் பட்டதைப் போலவே இந்துக்களின் பிரச்சனைகளுக்குப் போராடுவதற்காக இந்து மகா சபா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மதன் மோகன் மாளவியா,லாலா லஜபதிராய் போன்ற புகழ்மிக்க காங்கிரஸ் தலைவர்கள் இந்த அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டனர். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த போது இந்துமகா சபா அதனைக் கடுமையாக எதிர்த்தது. தயானந்த சரஸ்வதியின் தலைமையில் தோன்றிய ஆரிய சமாஜம் இஸ்லாம் மற்றும் கிறித்துவமதத்துடன் நேரடியாக மோதக்கூடிய அμகுமுறையைப் பின்பற்றியது.

ஆரிய சமாஜத்தின் சார்பாக ஆற்றப்பட்ட பேருரைகளிலும் வெளியிடப்பட்ட பிரசுரங்களிலும் இஸ்லாம் மற்றும் கிறித்துவ சமயங்களைப்பற்றிய வெளிப்படையான விமர்சனங்களும் கண்டனங்களும் இடம் பெற்றிருந்தன. பசுவதை தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஆரிய சமாஜம் தான் எழுப்பியது. இது பின்னர் இந்து முஸ்லிம் கலவரங்களுக்கு இட்டுச்சென்றது. தயானந்த சரஸ்வதியால் எழுதப்பட்ட சத்தியார்த்த பிரகாஷ் போன்ற நூல்கள் மத விரோத உணர்வுகளைத் தோற்றுவித்ததுடன் வகுப்பு மோதல்களுக்கும் இட்டுச்சென்றன. இவ்வாறு விடுதலைப் போராட்ட இயக்கத்துடன் கூடவே உருவான இந்து சமய புத்துயிர்ப்பு இயக்கமும் வளர்ச்சி அடைந்தது.இதன் காரணமாக இந்துக்களின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படும் புராதன இந்தியாவை வென்றெடுப்பதற்காகவே விடுதலைப்போராட்டம் நடத்தப்படுவதாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியை முளையிலேயே கிள்ளி எறியும் நோக்கத்தோடு பெஷாவர் சதிவழக்கு, கான்பூர் சதிவழக்கு, மீரட் சதிவழக்கு போன்ற வழக்குகள் அடுக்கடுக்காகத் தொடரப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மீரட் சதிவழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் 1933ல் புனரமைக்கப்பட்ட ஒரு மத்திய குழுவின் கீழ் கம்யூனிஸ்டுகள் முறையாக செயல்படத் தொடங்கினர். ஆனால் 1934ல் கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. 1942வரை தடை நீடித்த நிலையில் கம்யூனிஸ்ட்டுக்கட்சி என்ற பெயரில் அவர்களால் இயங்கமுடியவில்லை. எனினும் தொழிலாளிவர்க்கத் தினரையும் விவசாயிகளையும் தங்களுடைய வர்க்க அமைப்புகளின் கீழ் அணிதிரட்டு வதிலும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டங்களில் அவர்களைப் பங்கேற்கச் செய்வதிலும் கம்யூனிஸ்டுகள் முன்னணிப்பாத்திரம் வகித்தனர். மாணவர், மாதர் அமைப்புகள் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான முயற்சிகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சனைகளுக்காகவும் அரசாங்கத்தின் மக்கள் விரோதப்போக்கிற்கு எதிராகவும் பஞ்சங்கள் ஏற்பட்டபோது பஞ்ச நிவாரண நடவடிக்கைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டனர்.

சமஸ்தான மக்களின் ஜனநாயகப் போராட்டங்களிலும் அவர்கள் முனைப்புடன் பங்கேற்றனர். கடற்படை மாலுமிகளின் கலகத்தின்போது நடைபெற்ற வெகுமக்கள் போராட்டங்களில் தொழிலாளர்களைப் பங்கேற்கச் செய்வதில் கம்யூனிஸ்டுகள் முன்னணிபாத்திரம் வகித்தனர். நேருவின் தலைமையில் இயங்கிய ஏகாதி பத்திய எதிர்ப்பு முன்னணியின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க முறையில் முதலாளிவர்க்கத் தலைமைக்கு சவால்விடக்கூடிய ஒரு சுயேச்சையான தொழிலாளிவர்க்கப் புரட்சிக் கட்சியாவும் திகழ முடிந்தது. ஆனால் ஹிட்லரின் பாசிசயுத்தத்தின் போது காங்கிரஸ்கட்சி அறிவித்திருந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கட்யூனிஸ்ட்டுகள் பங்கேற்கவில்லை. பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிகளுக்கும் ஆதரவளித்து வந்தனர். அதற்காக அன்று தொடங்கி இன்று வரை கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவதூறுப்பிரச்சாரத்தில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 1942-1945-ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் எடுத்த நிலைப்பாட்டின் பின்னணியை இ.எம்.எஸ் விரிவாக ஆய்வு செய்து கம்யூனிஸ்டுகள் கடைப்பிடித்த அμகுமுறை சரியானதே என்பதை நிலை நாட்டியுள்ளார். அவருடைய சொற்களில் கூறினால் - காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கம்யூனிஸ்டுகள் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மையே.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முதல் கட்ட போராட்டத்தின் முடிவில் ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஒரு பிரிவினர் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அவர்கள் கடைப் பிடித்து வரும் கொள்கை தற்கொலைக்கொப்பானது என்று மக்கள் மத்தியில் கருத்து நிலவியது என்பதும் உண்மையே. அத்துடன் ஜப்பானின் உதவியுடன் இந்தியாவை விடுதலை செய்வது என்ற சுபாஷ் சந்திர போசின் அμகுமுறைக்கு கட்சி தெரிவித்த எதிர்ப்பும் நாட்டின் பிற ஏகாதிபத்திய எதிர்ப்புசக்திகளின் மத்தியில் கசப்புணர்வைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளால் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியினால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த பாசிச அμகுமுறையைக் கடைப்பிடித்தது என்பதுதான் உண்மை.

உண்மையுத்தம் முடிவடைந்தவுடன் கட்சிக்கு எதிரான அவதூறுப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டவர்களில் முதன்மையானவராக ஜவஹர்லால் நேருவே இருந்தார். உலகின் முன்னே இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று கம்யூனிசப் பாதை. மற்றது பாசிசப்பாதை.அதில் கம்யூனிசப்பாதையை நான் தேர்ந்தெடுத்தேன் என்று 1930 களில் பிரகடனப்படுத்திய அதே ஜவஹர்லால் நேரு கம்யூனிச சோவியத் யூனியனை ஒழித்துக்கட்டுவதற்காக பாசிச இட்லர் நடத்திய யுத்தத்திற்கு எதிரான கூட்டணியில் பங்கேற்ற பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிகளுக்கு கம்யூனிஸ்ட்கட்சி ஆதரவு தெரிவித்ததற்காக கம்யூனிஸ்டுகள் வேற்று முகாமில் இருந்ததாகக் குற்றம் சாட்டினார். ஆனால் மக்கள் பிரச்சனைகள் அனைத்தையும் கையில் எடுத்துக்கொண்டு போராடிய கம்யூனிஸ்ட்டுக் கட்சி தனது வரலாற்றிலேயே மிகச்சிறந்த வளர்ச்சியினை அக்காலத்தில் தான் பதிவு செய்தது.

காந்தி மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக காங்கிரஸ் கட்சி தன்னை உருமாற்றம் செய்து கொண்டால் இந்தியாவின் அரசியல் சூழலே முழுமையாக மாறிவிடும் என்று நினைத்தார். காங்கிரஸ் கட்சியை லோக் சேவக் சங்காக மாற்றுவதற்கான அமைப்புச்சட்ட வரைவைக்கூட காந்தி தயாரித்து விட்டார். ஆனால் அதனைத் தயாரித்து முடித்து விட்டு சிலமணி நேரங்கழித்து அவர் பங்கேற்பதற்காகச் சென்ற பிரார்த்தனைக் கூட்டத்திலேயே இந்து மத வெறியன் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறு 1948ம் ஆண்டு ஜனவரி 30ந்தேதியன்று இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய சகாப்தமான காந்திய சகாப்தம் முடிவுக்கு வந்தது.

இந்தியாவில் அன்னியர் நுழைவுக்கு முன்னர் நிலவிய சமுதாயத்தின் தன்மையிலிருந்து தொடங்கி நாட்டுவிடுதலை மற்றும் காந்திய சகாப்தத்தின் முடிவு வரையிலான நீண்ட காலத்தின் வரலாற்றை வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் இ.எம்.எஸ் ஆய்வு செய்து தமக்கே உரித்தான தெளிவான முறையில் ஒரு வரலாற்றுப் பொக்கிஷத்தை நமக்கு வழங்கியுள்ளார். இ.எம்.எஸ்-ன் படைப்புகளிலேயே ஆகச்சிறந்த படைப்பாகக்கருதப்படும் இந்த ஆங்கில வரலாற்று நூலை தமிழில் மொழியாக்கம் செய்வதற்கான நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

Pin It