முகவரி: பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, சென்னை ‍- 18
தொடர்பு எண்: 044-24332424, ஆண்டு சந்தா: ரூ.120

நூல் அறிமுகம்

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழில் : மனோகர் பக்: -88 ரூ.50 | மாற்று, சென்னை \ -106.

சிந்து சமவெளி காலந்தொடங்கி இன்று வரை தமிழ்க்கல்வி குறித்து ஒரு உரையாடல் தேவைப்படுகின்ற காலம் இது. இந்தச் சூழலில் பேரா. தனிநாயகம் அடிகள் tணீனீவீறீ நீuறீtuக்ஷீமீ இதழில் எழுதிய சில கட்டுரைகள் தமிழாக்கமாக வந்திருக்கும் இந்நூல் இந்தத் தேவையை நிறைவு செய்கிறது. இந் நூலில் பழந்தமிழ் இலக்கியமும், பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ், புலவர் மற்றும் கல்வியாளர்கள், பழந்தமிழகத்தில் சமண பௌத்த கல்வி ஆகிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

துரத்தப்படும் மனிதர்கள் | ம. இராதாகிருஷ்ணன், மக்கள் கண்காணிப்பகம், மதுரை \ -2 | பக்: -210 | ரூ.175-

சகல பகுதியினராலும் புறக்கணிக்கப்பட்ட கல் ஒட்டர்கள், குறவர்கள், மலைக்குறவர்கள் ஆகியோர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல். இவர்கள் சமூக பலமோ, பொருளாதாரபலமோ, எண்ணிக்கையின் பலமோ இல்லாதவர்கள். இவர்களை தமிழ் நாடு மற்றும் அண்டை மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் தம்மால் குற்றவாளிகளைப் பிடிக்கா முடியாத வழக்குகளில் இவர்களைச் சிக்க வைப்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என்று எல்லாத் தரப்பினரும் அனுபவிக்கும் சித்திரவதைகளை எழுத்தில் வடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இவர்களோடு சேர்ந்து போராடிய ம. இராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் நமக்கு புது உலகத்தையும், புதிய பிரச்சனைகளையும் அறிமுகப்படுத்துகிறது.

கோவில் நுழைவு உரிமை: | பி. சிதம்பரம்பிள்ளை | சாளரம், சென்னை - 41 | பக்: 144 | ரூ.70

மதத்தை நிறுவன மயமாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது கோவில்கள்தான். இந்தக் கோவில்களின் நடவடிக்கைகளை வரலாற்றின் ஆதாரங்களோடு சொல்லுகின்ற முதல் தமிழ் நூலாக இந்த நூல் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கோவில்களை இந்து அறநிலையத் துறையிடம் ஆங்கிலேய ஆட்சி ஒப்படைத்தது பற்றி சுவையான வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். மேலும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் 1929-ஆம் ஆண்டில் பெரியார் நடத்தி வந்த ஸிமீஸ்ஷீறீt இதழில் வெளிவந்துள்ளன. இந்நூலுக்கு பெரியார் எழுதிய முன்னுரை மிக முக்கியமானது. இந்நூல் வரலாற்று ரீதியாகவும் சட்டரீதியாகவும் விரிவாக ஆலயப்பிரவேச உரிமையைப் பற்றிப் பேசுகிறது.

வேதமும் விஞ்ஞானமும் -எஸ்.டி.விவேகி, அங்குசம், சென்னை- 19, பக்: 224, ரூ.110

எஸ்.டி.விவேகி என்ற புனைப் பெயர் கொண்ட இவர் இந்நூல் ஆசிரியர் தந்தை பெரியாரின் சமகாலத்தவர். தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழக மேடைகளில் அதிகமாகப் பேசியவர், பிறப்பால் இஸ்லாமிய ராக இருந்தாலும், மசூதிக்குப் போகாமல் வெளிப்படையாக நாத்திகம் பேசியவர். மேலும் குரான், பைபிள், இந்து புராணங்கள் ஆகியவைகளை ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். 1978-ல் அங்கப்பா அறிவகம் வெளியிட்ட இந்நூலை மறுபதிப்பாக அங்குசம் வெளியிட்டுள்ளது.

பிறந்தியாள் -பானுபாரதி, கருப்புப் பிரதிகள், சென்னை- 5. பக்: - 80 , ரூ.50

இலங்கையில் போர் உக்கிரம் பெறத் தொடங்கிய சூழலில் எழுதத் தொடங்கிய இந்நூல் ஆசிரியர் இருபது ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இவரின் பாடு பொருள்கள் அரச வன்முறை, ராμவ வன்முறை ஆகியவைகள் இருந்தாலும், சில கவிதைகள் பெண் என்ற ஒர்மையில் எழுதப்பட்டுள்ளன. கவிதை என்பது சூட்சமும், மாயத்தன்மை கொண்ட வார்த்தைகளால் புனையப்பட்டிருந்தாலும் அல்லது வெளித்தன்மையாகப் புனையப்பட்டிருந்தாலும் கவிஞனும், வாசகனும் ஒரு நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை என்பதை மறுபடியும் உணர்த்தும் நூல்.

தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு, ஹொரேஸ் பி. டேவிஸ் - தமிழில்: மு. வசந்தகுமார்,

பக்: 368 | ரூ.200

பி. டேவிஸ் அவர்களால் எழுதப்பட்ட ‘Towards a marxist theory of Nationalism’ என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் இதில் ஆய்வு செய்யப்பட்ட செய்திகள் இன்றும் விவாதிக்கும் தருவாயில் உள்ளன. இந்நூலில் தேசியம் பற்றிம், சோவியத் ஒன்றியத்தில் தேசியப் பிரச்சனை, யூகோஸ்லேவியாவில் தேசிய இனப்பிரச்சனை, தேசியமும் சீனப்புரட்சியும், இலத்தீன் அமெரிக்கா - தேசியமா அல்லது புரட்சியா, ஆப்ரிக்க விடுதலைப் போராட்டம் ஆகியவை உள்ளன.

தானம் தாராளம், மரு. நா. மோகன்தாஸ் பண்புநூல் வெளியீட்டகம், தஞ்சாவூர், பக்:-96 , ரூ.50

சமய நம்பிக்கைகளோடு வாழ்க்கையை வாழ்ந்து வரும் மனிதர்கள் இறப்புக்கு பின்பும் சமய சடங்குகளால் அவர்களின் உடல்களும் அழிக்கப்படுகின்றன. இந்த மூட நம்பிக்கையை அகற்றி, மனித உறுப்புகளைத் தானம் செய்ய வலியுறுத்துகிறது இந்நூல். இந்த உடல் உறுப்பு தானங்களை சட்ட ரீதியாக எப்படிச் செய்ய வேண்டும் என்பதை எளிமை யாகவும், உடல் தானம் பற்றிய வரலாறு, அறுவைச் சிகிச்சைகள் பற்றிய செய்திகள், உடல் உறுப்பு தானம் செய்வது பற்றிய செய்திகள் ஆகியவைகளை எளிமையாக, அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ள நூல்.

அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை, ச. செந்தில்நாதன் வெளியீடு: புதுமைப்பித்தன் பதிப்பகம் சென்னை - 83 | பக்: 152 | ரூ.80

சமயவாதிகளுக்கும், அவர்கள் சார்ந்த பக்தி இயக்கத்திற்கும் வேறு ஒரு பக்கம் உண்டு. வேறு ஒரு பக்கம் என்பது தமிழ்ச் சமுதாயத்தின் சமூக வரலாற்றையும், பண்பாடு விடயங்களையும், எந்த மக்கள் சார்ந்து இயங்கியதையும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் வள்ளலாரின் தொடக்கப் புள்ளியான அருணகிரிநாதர் என்ற முடிவோடும், திருமுறைகள் போற்றித் துதித்த சிவன் வணக்கததை மீறி முருகன் வணக்கம் ஏன் வந்தது, சைவத்தின் சரிவுக்கு காரணம் போன்ற பல சமூக வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்கிற நூல்.

என் வாழ்க்கையின் கதை: | டாக்டர் எஸ்.பி. கோபிக்கர் | தமிழில் கீதாகிருஷ்ணா | பதிப்பு : பி.வி. வெங்கட்ராமன் | வெளியீடு: டாக்டர் கோபிக்கர்ஸ் ஃபௌன்டேஷன் ஃபர் ஹோமியோபதி | விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம் | பக்:176 | ரூ.120

ஹோமியோபதி மருத்துவத்தின் மூத்த வல்லுநர்களில் ஒருவர் இந்நூல் ஆசிரியர். தமது மருத்துவத்துறை அனுபவங்களை இந்நூலில் விவரித்துச் செல்கிறார். அவரின் அனுபவங்கள் சில இனிமை யாகவும், சில கசப்பானவையாகவும், சில வேடிக்கையானவைகளாவும் இருக்கிறன. இவர், சிரமங்களையும் பகிர்ந்து கொள்பவராகவும், செல்வத்தைத் தேடாமல் மனிதர் களை நேசித்தவரின் வாழ்க்கையை வாசிக்கும் போது ஒரு முன் மாதிரியான மனிதரைச் சந்தித்த நிறைவு ஏற்படுகிறது.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதன் நன்மைகள், என். ராமகிருஷ்ணன் | வெளியீடு: சித்திரைப்பதிப்பகம், சென்னை | பக்-: 32 | ரூ.10

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பவரின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று ஆரம்பிக்கும் இந்நூலில் கம்யூனிஸ்ட் மூலவர்களைப் பற்றிய செய்திகளும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் லண்டனில் படிக்கச் சென்றவர்கள் கம்யூனிச சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு, திரும்பி இந்தியா வந்து கம்யூனிஸ்ட் கட்சி மூலம் மக்களுக்குப் பணி செய்த விதம், உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் ஆளுமைகள் பற்றிய சிறிய அறிமுகம் என்று கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல் இது.

சிலப்பதிகாரம் | பதிப்பும் உரையும் -| - டாக்டர் ப.சரவணன், சந்தியா பதிப்பகம் | பக்:-575 | ரூ. 250

தமிழ்க் காப்பி’யங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் 1872 முதல் 1999 வரை பல்வேறு காலக்கட்டத்தில் முழுவதுமாகவும் சில பகுதிகளாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலப்பதிகாரம் பிரஞ்சு, மலையாளம், ஆங்கிலம், மராட்டி, செக், தெலுங்கு, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. இந்நூலில் அரும்பதவுரை தொடங்கி, அண்மையில் வந்த உரை ஈறாக அனைத்து உரைகளையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

Pin It

(ந. செல்வனின் ஒரு சிற்பத்தின் கதை வழியாக...)

இன்றையக் காலக்கட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டம் முழுமையுமே சிலைகள் வைப்பதில் பெரும் போட்டியே, அரசியலில் நிலவி வருகிறது. சிலைகள் வடிக்கப்படுவது வெறும் கல்லோ, உலோகமோ மட்டுமே கொண்டதல்ல. அதன் உள்ளீடாக சுய விளம்பரம், சுயநலம், போலிமைகள், அதிகாரச்சின்னம் என எல்லாம் கலந்தே இருக்கின்றன. சிலைகள் தங்கள் கருத்தியலை ஒதுக்கி வைத்து விட்டு, வெறும் கற்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கும் தேசம் இது. சாமன்யர்களின் மாற்று மதிப்பீடுகளோ, இடர்ப்பாடுகளோ, வலிகளோ நமது வெளியில் சிலைகளாக ஒருபோதும் அமைக்கப்படுவதில்லை சென்னையிலுள்ள ‘‘ராய் சௌத்ரியின் உழைப்பாளர் சிலை’’ போன்ற ஒரு சிலவே இதில் விதிவிலக்கு. ந.செல்வனின் ‘ஒரு சிற்பத்தின் கதை’ எனும் ஆவணப்படம், இத்தகைய மாற்று முயற்சியை நோக்கிய ஒரு பதிவு.

16-சூலை 2004. கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா எனும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க நியாயம் இல்லை. அன்றைய தினத்தில் இந்தியா ஒரு நிமிடம் ஆடிப்போன மாபெரும் துயரச் சம்பவம் அது. ஒரு குற்றமும் செய்யாத, ஏதுமறியாத 94 பள்ளிக் குழந்தைகளின் உயிரை அக்கினிக்குத் தாரை வார்த்து விட்டு, நெஞ்சம் பதறித் துடித்துப்போன பெற்றோர்களின் வேதனையில் நாமும் பங்கு பெற்றோம். ஆனால் அந்த நேரத்துக் குற்றச்சாட்டுகள், புலம்பல்கள், பள்ளிகளின் சீர்திருத்தம் எனக் கிளம்பிய பல குரல்களும் ‘மறதி’ எனும் மௌனக் கிடங்கிற்குள் விழுந்து விட்டன. நமது சமூகத்தின் மிகப் பெரும் சாபமே இந்த ‘அதீத மறதி நிலை’ தான். சமூக அவலங்களின் போது கூப்பாடு போடுவதும், பின்னர் ஊடகங்கள் வழங்கும் பிம்ப சுகத்தில் மூழ்கி விடுவதுமே நமக்கு வழமையாகிப் போய் விட்டது. எனவே இந்த மறதிக்கு எதிரான செயல்பாடாக ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டி இருக்கிறது. இதற்கு தொடர் சிந்தனை அல்லது அதனைக் கிளரும் குறியீட்டு அடையாளங்கள் தேவையாகின்றன.

கும்பகோணம் தீ விபத்தின் நினைவாக 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வெண்கலச் சிற்பமும், அதன் உருவாக்கம் மற்றும் பின்னணி பற்றிய ந. செல்வனின் ஆவணப்படமும் மேற்குறித்த செயல்பாடுகளின் நீட்சி எனலாம். இந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் நினைவுச் சிற்பத்தை உருவாக்கியிருப்பவர்கள் க்ஷி.ஷி.ஞி அருளரசன், ஙி.ஸி. ரவி, றி. சிவராம கிருஷ்ணன் ஆகியோர். இவர்களும் படத்தின் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். ‘ஒரு சிற்பத்தின் கதை’ எனும் இந்த ஆவணப்படம் சென்ற ஆண்டே எடுக்கப்பட்ட படமாயிருந்தாலும், கும்பகோணம் பள்ளி விபத்தின் ஆறாம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற இவ்வேளையில், இது பற்றிய உரையாடல் சற்று அவசியமானது.

ஆவணப்படத்தின் துவக்கமே நம் குற்ற உணர்வைத் தூண்டுகிற வகையில் உள்ளது. இந்தச் சிற்பம் தொடக்கத்தில் களிமண் சிற்பமாக இருப்பது, அதன்மேல் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கலவை பூசப்படுவது, ஃபைர் இழைகளால் ஒட்டப்படுவது, பினனர் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு, உருக வைக்கப்பட்ட அலுமினியக் குழம்பு ஊற்றப்பட்டு வெண்கலச் சிலையாக மாற்றப்படுவது என சிலை உருவாக்கத்தின் சகல நுட்பங்களும் நமக்குக் காட்டப்படுகின்றன. பல தரப்பட்ட வினைஞர்களின் கூட்டு முயற்சியையும், உழைப்பையும் சேர்த்தே படத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டிற்குரியது. சிற்பம் படிப்படியாக உருவாகும் தருணங்கள் நம்மை காட்சிகளாகக் கடந்து செல்கின்றன. சிற்பம் முழுமைபெறும் காட்சியின் பின்பாக, சிற்ப உருவாக்கத்தின் பின்னணிக் காட்சித் துμக்குகளாக ஒடிக்கடக் கின்றன. மனதைக் கனக்கச் செய்யும் கும்ப கோணம் பள்ளி விபத்தின் புகைப்படங்களும், இத்துயர சம்பவம் நடைபெற்றதைக் காட்டப்படுகின்றன. சிறிது நேரமே இடம்பெறும் இந்தத் துμக்குகள்தான் மேற்கண்ட சிற்பத்தின் உருவாக்கத்திற்கான நியாயத்தைச் சொல்கின்றன. ஆவணப்படத்தின் காட்சி மொழி இந்த இடத்தில் பின்னோக்கு உத்தியைக் கொண்டிருக்கிறது.

படத்தில் எங்கேயும் உரையாடல்கள் இல்லை. முழுவதும் காட்சிகளாகவே நகர்கின்றன இதற்கு அர. பிரசன்னாவின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் உதவியிருக் கின்றன. நெய்வேலி - என்.டி.சந்தோஷின் பின்னணி இசை இயல்புடன் இருந்து காட்சிகளை நிறைத்திருக்கின்றது. படத்தின் காட்சி ஓட்டத்தில் சிறு தொய்வு தெரிந்தாலும், ந. செல்வனின் நெறியாள்கை அதனைச் சீரமைத்திருக்கின்றது.

ந. செல்வனின் தேடல் பல கருப்பொருட் களையும் அளாவுகின்றது என்பதற்கு இந்தப்படம் ஓர் எடுத்துக்காட்டு. ஒரு நினைவுச் சிற்பம் உருவாகத் தொடங்கும் முன்னரே உடனிருந்து, இடைப்பட்ட காலம் வரையிலும் காத்திருந்து, மிகப் பொறுமையுடன் இவ்ஆவணப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. இரண்டு விதமான அனுபவங்களை இந்த ஆவணப் படத்தின் வழி வழங்குகிறார். ந. செல்வன். ஒன்று அனுபவங்கள்; மற்றொன்று, இதற்குப் பின்னணியாகும் சமூகக் கொடுமை குறித்த பதிவு. சிற்பங்களில் உள்ள மக்களின் துயர் கவியும் வெளிப்பாடாக வெண்கலச்சிலை கருப்பு வர்ணம் பூசப்பட்டும், நடுவில் எழும்பும் நெருப்பின் கரங்கள் பொன்னிற மாகவும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது அவர்களின் கலைத்திறனுக்குச் சான்று.

நம் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகள் என்பது கிள்ளுக்கீரைக்குச் சமானம். உரிமைகள் மறுக்கப்படும் சூழலில் வளரவேண்டிய நிர்பந்தமே பெரும்பான்மை இந்தியக் குழந்தைகளின் சாபக்கேடு எனில் இது மிகையல்ல. அடிப்படையில் அவர்கள் மழலைப் பருவம் முதல் புத்தக மூட்டையையும், பெற்றோரின் ‘டாக்டர், என்ஜினியர் கனவுகளை நனவாக்கும் கடமையையும் சுமப்பவர்கள். சிந்தனைச் சுதந்திரமும், எளிய உரிமைகளும் அற்று கடும் ஓடுக்குமுறை களுடனே அவர்கள் வளர்கின்றனர். ஆபத்தான பள்ளிக் கட்டமைப்புடன், ஆட்டோ, வேன்களில் திணிக்கப்பட்டு தினமும் மரண வாசலை மிதித்துத்தான், எளிய நடுத்தர, அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் தினங்களைக் கடத்துகின்றனர். பெற்றோரின் பேராசை, கல்வித்துறையின் கையாலாகாத்தனமான ஏற்றத்தாழ்வை உருவாக்கும் அரசின் மதிப்பீடுகள் இவற்றுக்கெல்லாம் நமது மழலைகளே பலியாடுகள். இப்படியாக உள்ள இவ்விஷச் சூழலில் கடந்த காலத் துயரத்தை ஞாபகமூட்டும் வண்ணம் ஒரு சிற்பத்தின் கதை வந்திருப்பது பொருத்தமானதுதான்.

நமது உணர்வுகள் மரத்துப்போகாமல் இருக்கவும், குழந்தைகளின் எதிர்காலம் மீண்டும் இத்தகையதொரு ஆபத்தை நேர் கொள்ளாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஆயினும் ஒன்று, மீண்டும் இவ்வாறான சிற்பங்களைத் தோற்றுவிக்கும் அவலச் சூழலோ, தேவைகளோ மீண்டும் நமக்கு ஏற்படக்கூடாது என்பதாகவே இப்படத்தின் செய்தியை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய சமூக உணர்வுடன் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பமும், இது பற்றிய ந.செல்வனின் ‘ஒரு சிற்பத்தின் கதை’யும் கலை வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பன எனலாம்.

 

Pin It

இந்தக் கதையைப் பலமுறை சொல்லியாகிவிட்டது. ஆனால் அதற்குள் சொல்லத்தெரியாத ஏதோ ஒன்று எஞ்சி நின்றுவிடுகிறது. முதல் காதலை எப்படி ஒருவரால் சரியாக புரிந்துகொள்ளவோ பின்னர் அதைத் துல்லியமாக நினைவுகூரவோ முடியாமல்போகிறதோ அப்படித்தான் இதுவும் என்று தோன்றுகிறது. எல்லா முதல் காதலையும்போல எனது முதல் புத்தகமும் எனக்கு எதிர்பாராமல் வந்து சேர்ந்தது.

manushyaputhiran_351எழுத்தாளனாவது இளம்பருவத்துக் கனவு என்பதைவிட குழந்தைப்பருவக் கனவு என்று சொல்லலாம். வறட்சியான சுமை மிகுந்த பாடப்புத்தகங்களால் மனம் கசந்து பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறிய ஒரு நாளில் கதைகளின் உலகத்திற்கு, சொற்களின் வசீகரத்திற்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தேன். காமிக்ஸ்கள், பேய்க் கதைகள், மாயாஜாலக் கதைகள், வாரப்பத்திரிகைகளின் தொடர்கதைகள் என்று விதிவிலக்கில்லாமல் படித்தேன். ஒரு நாள் ’மூக்குத்தி’ இதழ் எப்படியோ கைக்குக் கிடைத்தது. அது ஏற்படுத்திய பதட்டம் இப்போதும் நினைவில் இருக்கிறது. வாண்டுமாமாவிலிருந்து லஷ்மி என்ற பெயரில் எழுதிய திரிபுர சுந்தரிக்கும் அங்கிருந்து 13 வது வதிலேயே சுஜாதாவுக்கும் நகர்ந்து விட்டேன்.

மு.மேத்தா வெகுசன கவிதை இலக்கியத்தில் கோலோச்சிய காலம் அது. ’கண்ணீர்ப் பூக்கள்’ இளைஞர்களின் கையில் ஒரு அடையாளமாக இருந்தது என்பதை இன்றைய ஒரு இளைஞனால் நம்பவோ புரிந்துகொள்ளவோ முடியுமா? காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அப்போது வைரமுத்து ஒரு புயல்போல உள்ளே நுழைந்தார். அவரது திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசிய கீதம், கவிராஜன் கதை முதலான தொகுப்புகளில் வெளிப்பட்ட அவரது மொழி ஆளுமை எனது இளம் மனதில் பெரும் வசீகரத்தை உருவாக்கியது. அவையே நான் கவிதைகள் எழுதவிரும்பியதன் முதல் முன்மாதிரிகள். இப்படித்தான் இன்னும் எத்தனையோ பேர் அப்போது உள்ளே வந்து காணாமல் போனார்கள் அல்லது அங்கேயே நின்றுவிட்டிருந்தார்கள்.

நான் ஆரம்பத்தில் புனைகதைகள் எழுதவே முயற்சித்தேன். அப்போது ’ அரசி’ என்ற ஒரு தனிச்சுற்று இதழ் எப்படியோ எனக்கு வந்தது. அது பேனா நண்பர்களுக்கான ஒரு பத்திரிகை. அதில் நட்பு நாடும் பலருடைய முகவரிகள் அவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கும். ஒரு நாள் அதில் என்னுடைய பெயரும் வந்தது. யார் யாரோ பேனா நண்பராக இருக்க விரும்பி கடிதங்கள் எழுதினார்கள். அது எப்படி என்று எனக்குப் புரியவே இல்லை. கட்டுக் கட்டாக எனக்குக் கடிதங்கள் வருவதைப் பார்த்து என் வீட்டில் குழம்ப ஆரம்பித்தார்கள். இப்போதைய இணைய குழுமங்களின் முன்னோடி இத்தகைய பேனா நண்பர்கள் வலைப்பின்னலே என்று தோன்றுகிறது. அந்தப் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் நான் அனுப்பிய கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகை 25 ரூபாய். ஆனால் கதை எழுதுவது எனக்கு ஒத்துவரவில்லை. அதற்குத் தேவையான புற உலக கச்சாப் பொருட்கள் போதுமான அளவில் என்னிடம் இருக்கவில்லை. அப்போதுதான் வைரமுத்து, மு. மேத்தாவின் தாக்கத்தில் கவிதைகள் எழுத முயற்சித்தேன்.

1983 ல் ஒரு நாள் கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘ நீங்கள் எழுதும் வாசகர் கடிதங்கள் மிகவும் கவித்துவமாக இருக்கின்றன. நீங்கள் கவிதைகள் எழுதுவீர்களா? என்று கேட்டு. அப்போது அந்தக் கடிதம் தந்த மனக் கிளர்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் பெயரே இல்லை. முதல் அங்கீகாரம். அப்போது ஒன்றிரண்டு வரிகளைத் தவிர நான் கவிதை என்று குறிப்பிடும்படி எதையும் எழுதியிருக்கவிலை. அதையே அவருக்கும் பதிலாக எழுதினேன். அவர் மீண்டும் எழுதினார். ‘உங்களால் கவிதைகள் எழுத முடியும்..தொடர்ந்து எழுதுங்கள்’ என்று. அந்த வார கல்கண்டில் ஜூனியர் பதில்களில் ‘உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்’ என்ற ஒரு கேள்விக்கு ‘ சுஜாதா , வைரமுத்து என்று பதிலளிப்பேன் என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள்.. இப்போது எனக்குப் பிடித்த எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயர் கொண்ட எஸ். அப்துல் ஹமீது என்ற வாசகர்தான்’ என்று எழுதினார். ஒருவர் அந்தக் காலத்தைய என் வாழ்வின் தனிமை, இயலாமை, ஏக்கங்களின் ஊடாகத்தான் இந்த வார்த்தையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நோட்டுப் புத்த்கத்தை எடுத்து என் இளம் மனதை அப்போது ஆக்ரமித்துக்கொண்டிருந்த எண்ணங்களை எழுத ஆரம்பித்தேன்.

ஒரு மாதத்தில் சொற்களின் போதவெளியில் கரைந்து நான் எழுதிய கவிதைகளை அவருக்கு அனுப்பினேன். உடனே அதை மணிமேகலை பிரசுரத்தில் புத்தகமாக்க ஏற்று கடிதம் அனுப்பினார். அடுத்த சில நாட்களில் லேனா தமிழ்வாணன் என்னைத் தேடி துவரங்குறிச்சி வந்தார். அப்போது அவர் ஒரு நட்சத்திர எழுத்தாளர் அல்லவா? வீட்டில் அவரைப் பார்க்க கூட்டம் கூடிவிட்டது. லேனா நான் எப்போதும் அமர்ந்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து எனது முதல் புத்தகத்தின் அட்டைப்படத்தின் டிசைனை எடுத்துக் காட்டினார். நீலக் கடலில் சூரியோதயம் நிகழும் காட்சி. ’மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்’ என அதில் எழுதப்பட்டிருந்தது. அந்தக் கணம என் வாழ்வில் வேறொரு காலத்தைத் துவக்கி வைத்தது. அப்போது எனக்கு 16 வயது பூர்த்தியாகியிருக்கவில்லை.

முதல் புத்தம் வந்த நாளில் என் அம்மாவின் கண்ணீரைப் பார்த்தேன். அவள் அதைப் புரிந்துகொண்டாள். புத்தகம் வெளிவந்தபிறகு கிட்டத்தட்ட 300 கடிதங்களுக்கு மேல் எனக்கு வந்தன. எத்தனை விதமான மனிதர்கள் கவிதைகள் படிக்கிறார்கள் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அதில் சிலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் அமைந்து நான் இப்போது வந்து சேர்ந்திருக்கும் இடத்திற்கான திறவு கோல்களைத் தந்தார்கள்.

இனி ஒரு முறை எனது முதல் புத்தகத்தை எழுதவே முடியாது; அந்த கனவை, நம்பிக்கையை, பரவசத்தை அடையவே முடியாது என்று தோன்றுகிறது.

 

Pin It

புதிய உலகின் ஒரு புதிய சூழலில் உலக கவனத்தைக் கவர்ந்து வரும் நாடு ஈரான்.அறிவியலும், தொழில் நுட்பமும் பழைய வாழ்க்கையைத் தகர்த்துவருகின்ற ஒரு சூழலில் நிலைப்படுத்தப்பட்ட தன்னுடைய செறிவான வாழ்க்கை முறையைத் தகர்ந்து விடாமல் அது பாதுகாத்து வருகிறது. மதவெறி, மத அடிப்படை வாதம், பயங்கரவாதம் போன்ற போக்குகளை விடாப்பிடியாக நிலைநிறுத்துவதில் தீவிரமாக இருந்து வருகிறது அது. அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட அரசியல் அதிகார வலிமையுடன் மக்களை அது அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. மனித இனத்தின் வாழ்க்கை வளர்ச்சிப் போக்கில் பல வகையான பின்னடைவு களுக்குக் காரணமாக உள்ள இந்த நிலைமையை எதிர்த்து இளைய தலைமுறை யினர் தங்களது படைப்புக்களின் ஊடாக எதிர்க்குரல் எழுப்புகிறார்கள்.

இதைத்தான் ஈரானிய இலக்கியங்கள் இப்போது துணிச்சலாக வெளிப்படுத்தி வருகின்றன. ஈரானியத் திரைப்படங்களும் கூட மிகுந்த தனித்தன்மையுடன் இறுக்கமான நெருக்கடி மிகுந்த வாழ்க்கை முறையைச் சித்தரித்துக் காட்டுகின்றன. கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் இன்றைய ஈரானின் உள்முகப் போராட்டத்தைக் காண முடிகிறது. கலைஞர்களும், சிந்தனையாளர்களும் அந்த வகையான பண்பாட்டுப் போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்கள்.

வழக்கமாகவே, மாறுபட்ட தனித்துவமான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் விடியல் பதிப்பகம் ஈரானிய வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதத்தில் இரண்டு நூல்களைச் சித்திரக்கதை வடிவத்திலேயே வெளியிட்டிருக்கிறது. இவை சித்திரக்கதை வடிவத்திலுள்ள சீர் அசலான தன் வரலாறு என்று குறிப்பிடுவதுதான் மிகவும் பொருத்தம். இவற்றை எழுதியுள்ள மர்ஜானே சத்ரபி ஒரு வரைபடக் கலைஞர். குழந்தைகளுக் கான கதைகள் பலவற்றை வரைபட வடிவங்களில் எழுதியுள்ளவர். ‘தி நியூ யார்க்கர்’, ‘நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பத்திரிகைகளில் அவை வெளியாகி உள்ளன. அதன் காரணமாகவே அவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ஒரு முழுக் கதையை வரைபடங்களின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதை, அப்படியே மொழி மாற்றம் செய்து தமிழுக்குக் கொண்டு வந்து சாதனை படைத்திருக்கிறது விடியல் பதிப்பகம்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் செய்திகளைத் தெரிந்து கொள்வதிலேயே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மனதிற்குள் அவற்றைக் காட்சிப்படுத்தி உள்வாங்கிக் கொள்ள முயற்சிப்பதில்லை. ஆழ்ந்த வாசிப்புக்கு அவர்கள் தங்களைப் பயிற்சி செய்து கொள்வதில்லை. அந்த வகையான பயிற்சியை உருவாக்குவதற்காகவே குழந்தைப் பருவத்தில் சித்திரக் கதை வடிவத்தில் பாடம் கற்பிக்கும் முறை இருந்து வருகிறது. இது, வாசிப்பில் ஏற்படும் புரிதலை ஆழப்படுத்துகிறது. அழுத்தமான பதிவுகளை மனதில் இருத்துகிறது. இந்த உத்தி முறையைப் பின்பற்றியே ஒரு வாழ்க்கைக் கதையை வடிவப் படுத்தியிருக்கிறார் மர்ஜானே சத்ரபி.

வார்த்தைகளில் கதை சொல்லுவதை விடவும், வரைபடங்களின் வாயிலாகக் கதை சொல்லுவது மிகுந்த அளவுக்குக் குழந்தைமையை மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல். அதைச் சாதித்திருக்கிறார் மர்ஜானே சத்ரபி. அதைச் சிறப்பாக மொழிபெயர்த்துத் தமிழ்வரிவடிவில் கொண்டுவந்திருப்பது இன்னொரு தனிச்சிறப்பு. குழந்தைகள் முதல் பெரியவர் உட்பட எவரும் எளிதில் வாசிக்கலாம். அந்த அளவிற்குக் காட்சி வடிவத்தில் ஒவ்வொரு நிகழ்வும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நிகழ்வின் பின்னணி அசைவுகள், முகபாவங்கள், தோற்றங்கள், சாதனங்கள் என்பவை எல்லாமே சரியான விகிதாச்சாரங்களோடு துல்லியமாக உள்ளன. குழப்பம் சிறிதும் இல்லாத தெளிவான மொழி பெயர்ப்பில் உரையாடல்களும், விளக்கங்களும் உள்ளன.

மர்ஜானே சத்ரபியின் பத்தாவது வயதில் தொடங்கும் அனுபவங்கள் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொகுப்புக்களிலும் காணப்படுகின்றன. ஒன்று ‘ஒரு குழந்தைப் பருவத்தின் கதை’ என்ற அளவில் உள்ளது. இரண்டாவது ‘திரும்பும் காலம்’ என்ற வகையில் உள்ளது.

கருப்பொருளையும் அதற்குரிய வாழ்க்கைச் சூழல்களையும் மொழிபெயர்ப்பாளர் சுருக்கமாகச் சொல்லுகிறார்: “ஒரு சோசலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் மரபில் வந்த முற்போக்கான குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமியப்புரட்சி நடைபெற்ற காலத்தில் அங்கு தனது குழந்தைப் பருவத்தைக் கழித்த ஒரு பெண் என்ற முறையில் சத்ரபியின் அனுபவங்களைச் சித்தரிக்கின்றது இந்நூல்’’

கல்விச் சூழல், குடும்பச் சூழல், சமூகச் சூழல் போன்றவற்றிற்கு இடையில் மகிழ்ச்சியான, சுதந்திரமான ஒரு தார்மிக வாழ்க்கை அனுபவங்களே இந்த இரண்டு புத்தகங்களிலும் சித்திரிக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் தனித்தன்மைகளும், மனப்போக்குகளும், உறவுகளும் மர்ஜானே சத்ரபியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் வடிவமைக்கின்றன என்பதைத் துல்லியமாகச் சித்திரித்திருக்கிறார் சத்ரபி. இதன் பின்னணியில் ஈரானியச் சமுதாயத்தின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் ஒரு பெண்ணின் இயல்பான விருப்பங்களும் தார்மீகமான பார்வைகளும், நேர்மையான நடைமுறைகளும் எப்படி மறுக்கப்பட்டு அவளை மனத் துயரங்களுக்கும், தவிப்புகளுக்கும் இடையில் சிதைவடையச் செய்கின்றன என்ற உண்மையை இவை புலப்படுத்துகின்றன. தாய் நாட்டையே வெறுத்து வெளியேறும் ஒரு நிலைமைக்கு ஈரான் நாட்டுச் சூழல்கள் அமைந்திருக்கும் ஓர் அபத்த நிலையை அடையாளம் காட்டுகின்றது இந்தத் தன் வரலாறு. வசதிகள் இருந்தும் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழல் இல்லாமல் நாட்டைத் துறந்து அகதியாக வெளியேறுகிறார் மர்ஜானே சத்ரபி.

டெஹ்ரான், வியன்னா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கல்வி கற்ற மர்ஜானே சத்ரபி தன்னுடைய தாய்நாடான ஈரானுக்கு வெளியே சுதந்திரமாக மூச்சுவிட விசாலமான உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறார். அவருடைய பெற்றோர்களும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த அவருடைய பாட்டியும் சுதந்திரத்திற்கான அவருடைய விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவர் நாட்டை விட்டு வெளியேறப் பல வகைகளிலும் அவருக்கு உதவுகிறார்கள்.

நாட்டைவிட்டு முதல்முறையாக வெளியேற விருக்கும் மர்ஜானே சத்ரபியிடம் அவருடைய பாட்டி இப்படிச் சொல்கிறார்! ‘‘வாழ்க்கையில் பல ஏற்ற இறக்க வரிசைகளைச் சந்திக்கப் போகிறாய். அவற்றால் வருந்த நேரிட்டால் அவை முட்டாள் தனமானவை என்று உனக்கு நீயே சொல்லிக் கொள்! அவற்றின் குரூரத்தை எதிர் கொள்ள அது உதவும். ஏனென்றால், வெறுப்பையும், பழிவாங்கும் வெறியையும் விட மோசானது எதுவுமில்லை சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே. உனக்கு நீ உண்மையாக இரு!’’

மர்ஜானே சத்ரபி ஆஸ்திரியாவில் கண்ட அனுபவங்கள் அவருடைய பாட்டியின் கருத்துகளை நிருபிக்கக் கூடியவையாகவே இருந்தன. அடக்கு முறையும், ஒடுக்கு முறையும் நிறைந்த ஈரானுக்கு வெளியேயும் வாழ்க்கை அவருடைய மனத்தை அவலப்படுத்தியது.

வியன்னாவில் நான்கு ஆண்டுகாலம் வாழ்க்கையைக் கழித்த மர்ஜானே சத்ரபி ஐரோப்பியக் கலாச்சாரத்தின் ஆரவாரத்தையும், அவலத்தையும் கண்டு மனம் வெதும்புகிறார். மீண்டும் டெஹ்ரானுக்குத் திரும்புகிறார். அடிப்படை வாதத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் ஈரானிய மக்கள் ஐரோப்பாவைக் குறித்தும், அதனுடைய நவீன வாழ்கையைக் குறித்தும் கண்டு வரும் கனவுகளைக் கண்டு வருத்தமடைகிறரர். மதவாத நாட்டு வாழ்க்கைக்கும் நவீனமான கட்டுப்பாடில்லாத வாழ்க்கைக்கும் இடையில் மர்ஜானே சத்ரபி அகப்பட்டுத் தவிக்கிறார்.

அமைதியிழந்த அவர் மீண்டும் நாட்டைவிட்டு வெளியேற விரும்புகிறார். அவருக்கான ஒர் உலகத்தைக் கண்டடைவதற்கான பயணத்தை அவர் மேற்கொள்கிறார். ‘‘என் நாட்டில் ஆக்கபூர்வமாக எதுவும் செய்ய முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேற மீண்டும் தயாரானேன். ஸ்ட்ரால் போர்க்கிலுள்ள கலைக்கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதுவதற்காக 1994 ஜூனில் நான் முதன் முதலில் பிரான்சுக்கும் சென்றேன்.’’

ஈரான் - ஒரு குழந்தைப் பருவத்தின் கதை பக்: 154 | ரூ.100

ஈரான் - திரும்பும் காலம்

பக்: 188 | ரூ.100

- மர்ஜானே சத்ரபி

தமிழில்: எஸ். பாலச்சந்திரன்

விடியல் பதிப்பகம்

கோவை - 15

Pin It

கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற புத்தகம் 2006ல் வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்து, தொடர்ந்து அறிஞர்கள் பலராலும் விவாதிக்கப்படுகின்ற புத்தகமாக உள்ளது.

ஒரு “கருத்தை’’ பிழையானது என்று மீண்டும் மீண்டும் மெய்ப்பித்த பிறகும், மீண்டும் அதன்மீது நம்பிக்கை வைப்பதையே “பொய் நம்பிக்கை’’ (DELUTION) என்று அழைக்கின்றார் ஆசிரியர். “ஒரு நபருக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மன பேதலிப்பு, பல மக்களுக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மதம்’’ என்று வாதாடுகின்றார்.

இப்புத்தகம், மதவேஷங்களையும் , கடவுள் என்னும் கருதுகோளையும் தோலுரித்துத் தொங்கவிடுவது. மட்டுமல்ல மதத்திற்குமேல் இயற்கை சக்தி, அதுவும் இல்லை, அதற்கு மேல் ஏதோ ஒரு சக்தி என்று தப்பித்து ஓடுபவர்களை இழுத்துப்பிடித்து நிற்கவைத்து அந்த மாயக்கருத்தைத் தவிடுபொடியாக்குகிறது.

நாத்திகத்தை முரட்டுத்தனமாகவும், கடுப்பூட்டும் வகையிலும் பேசாமல், அறிவுப்பூர்வமாகவும், வரலாற்றின் ஆதாரங்களிலிருந்தும்,உளவியல் ரீதியிலும், டார்வினின் உயிரியியல் கோட்பாடுகளிலிருந்தும் நளினமாகவும், ஏற்கும் வகையிலும் பேசப்படுகிறது. “பரிணாம வளர்ச்சிக்கும், படைப்பியத்திற்கு மட்டுமல்ல முரண்பாடு, உண்மையான முரண்பாடு பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடைப்பட்டது. பகுத்தறிவின் ஒருவடிவம்தான் அறிவியல். மூடநம்பிக்கையின் பொதுவடிவமாக மதம் இருக்கிறது. படைப்பியம் இல்லாமல் மதம் இருக்கமுடியும். ஆனால் மதம் இல்லாமல் படைப்பியம் இருக்கமுடியாது” என்கிறார்.

படைப்பியம் பழையதாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கடவுளுக்கான இடத்தை சுருக்கிவிட்டது. எனவே படைப்பியத்தை நிலைநிறுத்த கூரறிவு வடிவமைப்பை படைப்பியல் வாதிகள் கொண்டுவருகின்றனர். அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் பரிணாம வளர்ச்சித் தத்துவத்துடன், படைப்புக்கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை ஆளுகிறவர்களும், படைப்பியல்வாதிகளும் கொடுத்துவருகிறார்கள். இப்போரின் மையப்பிரச்சனைகளை இப்புத்தகம் அலசுகிறது.

மதச்சார்பற்ற அரசு என அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் மதஉணர்வுகள் அதிகமாகவும், மதம்சார்ந்த நாடு என அறிவித்த இங்கிலாந்தில் மதஉணர்வு குறைவாகவும் இருப்பதற்கான காரணத்தை விளக்கி விடைகாணப்படுகின்றது.

ஏசுநாதர், தனது தெய்வீக நிலைக்காக உரிமை கொண்டாடியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய ‘தொலைக்காட்சி மதபோதகர்கள்’ அமெரிக்காவில் மக்களிடம் பணம் வசூலித்து சொத்து சேர்க்க, அரசிடம் வரிவிலக்குப்பெற்றுள்ளனர். இந்த பிரச்சாரகர்களுக்கு “சோப்புக்கட்டிகளை விற்க எது உதவுகின்றதோ, அதுவே கடவுளுக்கும் உதவுகிறது’’.

கூரறிவு வடிவமைப்புக் கோட்பாட்டாளர்கள் டார்வினிய பரிணாம வளர்ச்சிக்குச் சவால் விடுகின்றனர். கண், இறக்கை, வீசல் என்கிற தவளையின் முட்டி என்ற உயிரினங்களை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இதேபோன்று கடற்பஞ்சுவின் வடிவமைப்பு பரிணாமத்தால் சாத்தியமா என்று சவால்விடுகின்றனர். இவை அனைத்தும் வெற்றுச்சவால்கள் என ஆசிரியர் புட்டுப்புட்டு வைக்கின்றார்.

மதம் பற்றிய, உலகின் பிரபலமான தலைவர்கள் தாமஸ்ஜெபர்சன் முதல் காந்தி, நேருவரை பலரின் கருத்துகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறார். வின்சன்ட் சர்ச்சிலின் மகன் யுத்தகளத்தில் பைபிள் பழைய ஏற்பாட்டை படித்துவிட்டு சொல்லும் கருத்துகள் புதியவை.இதுபோன்ற பல புதிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளது.

“கிட்டத்தட்ட எப்பொழுதும் குருட்டு நம்பிக்கை, பிற்போக்குத்தன்மை, வறட்டுக்கொள்கை, மதவெறி, மூடநம்பிக்கை, சுரண்டல் நிலைத்துவிட்ட தன்னலத்தைக் காத்துக்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு சார்பாகவே மதம் இருப்பதாகத் தோன்றுகிறது’’, என்று நேரு மதத்தை பற்றிய கருத்தைக் கொண்டிருந்தார். ’’ பல நம்பிக்கை களையும், மதங்களையும் கொண்ட ஒருநாட்டில் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் இல்லாமல் உண்மையான தேசியத்தைக் கட்டி அமைக்கமுடியாது’’ என்று கருதியதை புத்தகத்தில் பதியவைத்துள்ளார் டாகின்ஸ்.

மறுபுறத்தில் ஹிட்லர் போன்றவர்களின் (ஸ்டாலினையும் சேர்த்துள்ளார்) கொடூர நடவடிக்கை களுக்கு அவர்களின் நாத்திகக் கொள்கைதான் காரணம் என்று கூறப்படுவதை வலுவான வரலாற்று ஆதாரங் களுடன் மறுத்துள்ளார்.“பொதுமக்களை அமைதியாக வைத்திருக்க மதம் அருமையாக உதவுகிறது“என்று நெப்போலியன் கூறினான்.“மக்களுக்கு மதநம்பிக்கை தேவைப்படுகிறது.எனவே நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டோம் “ என்று ஹிட்லர் கூறினான். யேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களை ஒழிப்பேன் என்ற ஹிட்லர், யேசுவை யூதராகப் பார்க்காத ஹிட்லர் கிறிஸ்துவத்தை நிறுவிய புனித பால் மற்றும் காரல் மார்க்சையும் யூதர்களாக முத்திரை குத்தினான். மதத்தைத்தான் தனது கொடூரத்தன்மைக்கு பயன்படுத்தினான்) ஹிட்லர் நெப்போலியன் மட்டுமல்ல 21ம் நூற்றாண்டு ஜார்ஜ்புஷ் ஈராக்மீது படையெடுக்க வேண்டும் என்று கடவுள் தன்னிடம் கூறியதாக அறிவித்துதான் படையெடுத்தான்.

விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் களா?நாத்திகர்களா?என்ற கேள்விக்கு படைப்பியல் வாதிகள் அவர்களை மதநம்பிக்கையாளர் களாக முன்னிறுத்துகின்றனர். ஆனால் இப்புத்தகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட விஞ்ஞானிகள் உட்பட ஆய்வு செய்து 7 சதம் மட்டுமே மத நம்பிக்கையாளர் என்று நிருபித்துள்ளார்.

மற்றொரு அற்புதமான ஆனால் வேடிக்கையான ஆய்வுத்தகவல் பிரார்த்தனை பரிசோதனை பற்றியது. நோயாளிகளுக்காக செய்யும் பிரார்த்தனைகளில் என்ன பயன் என்பது பரிசோதனை மூலம் விளக்கப்படுகிறது, எந்த மதப்பிரிவை (கிறிஸ்துவப் பிரிவுகள்) சேர்ந்தவர்கள் அதிகமாக சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நடக்கிற ஆய்வு முடிவுகள் தொழில்போட்டியைத் துரிதப்படுத்தியுள்ளதை அம்பலப்படுத்துகின்றார்.

ஒழுக்கம் என்பது மதம்சார்ந்து இருப்பதால்தான் இருக்கிறதா? அமைதி என்பது மதம்சார்ந்து மக்கள் இருப்பதால் இருக்கிறதா? என்ற கேள்விக்கு உளவியல் பூர்வமான விளக்கமளிப்பதுடன், வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இங்கே மதமற்ற ஒரு உலகை கற்பனை செய்தால் என்ற கேள்வியுடன் மதத்தின் பெயரால் நடந்த , நடந்துவருகிற போர், குண்டு வெடிப்பு படுகொலைகள் என்ற பட்டியல் படிக்கப்படிக்க, மதமற்ற உலகம் தோன்றாதா என்ற ஏக்கம் பிறக்கிறது.

இப்புத்தகம் மதமின்றி, கடவுள் நம்பிக்கையின்றி வாழமுடியும் என்கிறது. குழந்தைகளுக்கு மதஉணர்வு இல்லை, அது உருவாக்கப்படுகிறது என்கிறது. டார்வினியத்தை இன்று உலக உதாரணத்துடன் நிலைநிறுத்துகின்றது. கூரறிவு வடிவமைப்பை மழுங்கடித்து மண்டியிடச்செய்கிறது.

இப்புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் டாகின்ஸ் இதற்கு முன் எட்டுக்கும் மேற்பட்ட விஞ்ஞானப் புத்தகங்களை எழுதிப் புகழ் பெற்றவர். இந்த நூலிற்குப் பிறகு 2009ல் பரிணாம வளர்ச்சியின் ஆதாரங்களை மையப்படுத்தி ஒரு புத்தகத்தை(Greatest show of earth) வெளியிட்டுள்ளார்.

சிறந்த இந்தப் புத்தகத்தைத் திராவிடர் கழகம் தமிழில் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வாசிப்பு தடையின்றிச் செல்லவும், அதே நேரத்தில் அதன் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும், தேவையான இடங்களில் விளக்கமளித்தும் இப்புத்தகத்தை மொழியாக்கம் செய்துள்ள பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Pin It