பேராசிரியர் இராம.சுந்தரம் அவர்கள் 1938 ஆம் ஆண்டு இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அலவாக்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ் பயின்று முனைவர் வ.அய். சுப்ரமணியத்திடம் ஆய்வு மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றவர். வார்சா பல்கலைக் கழகத்தில் முதல் தமிழ் விரிவுரையாளராக ஏழாண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும்; தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்திலும் பணியாற்றினார். இலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் புலமை கொண்ட பேராசிரியர். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையில் பணி நிறைவு வரை பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலகட்டம் அறிவியல் தமிழ் எனும் பதத்தின் மிக முக்கிய காலகட்டமாக கணிக்கப்படுகிறது. தற்போது ஒய்வு பெற்றிருப்பினும் மொழியியல் துறையில் இளைஞனின் உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறார். இதுவரை 16 நூல்களும் 160 கட்டுரைகளும் எழுதி தற்போது ‘‘எல்லீசின் மொழி இலக்கியப் பணி’’ என்ற பொருளில் ஆய்வு செய்து வரும் பேராசிரியருடன் நிகழ்த்திய உரையாடலின் ஒரு பகுதி.

சந்திப்பு: ஸ்டாலின் ராஜாங்கம், அ.ஜெகநாதன்.

rama_sundaram_340கே.: உங்களுடைய பிறப்பு, கல்வி, பணித்தளம் குறித்தான சுருக்க விவரம் தாருங்கள்.

இன்றைய சிவகங்கை மாவட்டம் அலவாக்கோட்டை ஊரில் பிறந்தேன். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள நாட்டரசன் கோட்டையில் பதினோராம் வகுப்பு வரை படித்தேன். நாட்டரசன் கோட்டையில் வருடம் தோறும் கம்பன் விழா நடத்துயவார்கள். அவ்விழாவில் ஜீவானந்தம் கலந்து கொண்டு பேசியதை நான் கேட்டுள்ளேன். எங்களுக்கு கம்பனை அப்போது பிடிக்காது ஏன்னா நான் அப்ப திராவிட இயக்கத்தில் இருந்தேன். அப்போது அங்கு நடக்கும் கம்பன் விழாப் பேச்சுக்களைக் கேட்டு வருவோம். லேனா சிதம்பரம் எனும் தமிழாசிரியரை தமிழகம் எனச் சொல்வார்கள். அவர்தான் எனக்குத் தமிழ் படிப்பித்தார். அப்போது தலைமையாசிரியராய் இருந்தவர் மலையாளி. அவர் நான் தமிழில் பேசுவதற்கு உற்சாகம் கொடுத்தார். திரு.வி.க. பற்றியெல்லாம் பேசுவதற்கு அவர் கொடுத்த உற்சாகத்தில்தான் எனக்குத் தமிழ் ஆர்வம் மேலெழுந்து வந்ததது. அதன்பின் நான் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன்.

தியாகராசர் கல்லூரியில் அவ்வை துரைசாமி பிள்ளை, ராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார், சுப. அண்ணாமலை ஆகியோர்களைக் கண்டேன். அதன்பின்தான் தமிழை மட்டுமே படிப்பது என்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

தியாகராஜர் கல்லூரியில் படித்த பின்பு நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கச் சென்றேன். அங்கு அ.சி. செட்டியார் இருந்தார். அவருடனான தொடர்பு எனக்கு அப்போதுதான் ஏற்பட்டது. அங்கு பி.ஏ. ஆனர்ஸ் படிப்பில் சேர்ந்தேன்.

பி.ஏ. ஆனர்ஸ் படித்தபோது அ.சி.செட்டியார் கலித்தொகை எடுத்தார். க.மீனாட்சி சுந்தரம் பதிற்றுப்பத்து நடத்தினார். இவர்கள் நல்ல ஆசிரியர்கள். இது எனக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நல்ல நூலகம் அங்கு இருந்தது. அப்போது திராவிட இயக்கத்தோடு கூடுதல் தொடர்பு இருந்ததால் தெ.பொ.மீ., வையாபுரிப்பிள்ளை ஆகியோர்களது எழுத்துக்களைக் கண்டு கொள்வதில்லை. அதற்குப் பின்னர் அங்கிருந்த ஒரு ஆசிரியரின் தூண்டுதலால் நான் தெ.பொ.மீ., வையாபுரிப்பிள்ளை ஆகியோர்களைப் படிக்க ஆரம்பித்தேன். படித்த பின்புதான் பெரிய சிந்தனையாளர்களை, அறிஞர்களைத் தவறவிடப்பார்த்தோமே என நினைத்து ஏங்கினேன்.

பி.ஏ. ஆனர்சை முடித்தபின் தியாகராசர் கல்லூரியில் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்த தருணத்தில் தியாகராசர் கல்லூரி நூலகர் திருமலை முத்துசாமி என்பவரின் வழிகாட்டுதலில் அவருக்கு நண்பராக இருந்த வ.அய். சுப்ரமணியத்திடம் பி.எச்டி. ஆய்வுக்காகச் சேர்ந்தேன். அவரிடம் தான் மொழியியல் பயின்றேன். வ. அய். சுப்ரமணியத்தை நான் எனது ஞானத்தந்தையாக ஏற்றுள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர். நல்ல அறிவாளி. நான் ஏதாவது தேவையென்று சென்றுவிட்டால் கடல்மடை திறந்தவாறு செய்திகளைக் கூறுவார். மிகவும் கறாரான மனிதர்.

திருவனந்தபுரத்தில் நான் பி.எச்.டி. முடித்த பின்னர் புனா டெக்கான் கல்லூரிக்கு முது முனைவர் ஆய்வு மேற்கொள்ளச் சென்றேன். காட்கே கத்ரே ஆகியோர் இந்தோ ஆரியன் மொழியியலில் முக்கியமானவர்கள் அவர்களிடம் சென்று இரண்டு ஆண்டுகள் இருந்தேன். திராவிடமொழிகளின் வகைப்பாட்டில் என்பது ஆய்வுத்தலைப்பு. அதாவது திராவிட மொழிகளில் உள்ள அமைப்புகள் குறித்து கால்டுவெல் செய்ததின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக இது அமையலாம். அதனை அனைத்துலக அளவிலும் பார்க்கலாம்.

பிறகு போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. 1972ல் முதன் முதலாக நான் போலந்து சென்றேன். அதற்கு காரணம் Dr.பிரிஸ்கிஸ் என்பவர். அவர் பெனாரஸ் பல்கலைக்கழகத்தில் நாட்டிய சாஸ்திரத்தில் முனைவர் பட்டம் முடித்தவர் போலந்து வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை உண்டு. அங்கு சமஸ்கிருதம், இந்தி, வங்கம் முதலான மொழித்துறைகள் இருந்தது. அத்தருவாயில் Dr.பிரிஸ்கிஸ் ‘‘இந்திய கலாசாரத்தை முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தென்னிந்திய மொழிகளை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அதனில் முக்கியமானது தமிழ்மொழி’’ என வாதாடி, தமிழ் இருக்கை வருவதற்கான தோற்றுவாயை விதைத்தவர். அதன் வழியாக உருவான தமிழ் இருக்கைக்கு முதன் முதலில் நான் தேர்வானேன். அப்பொழுது எனக்கு மலையாளமும் தெரியும். அங்கு சென்ற பின் நான் போலிஷ் மொழியைக் கற்றுக் கொண்டேன். அங்கு உள்ள மாணவர்களும் தமிழ் கற்க ஆர்வமாக இருந்தனர். அம்மாணவர்களுக்குப் பயிற்றுமொழி போலிஷ் தான்.

ஒருசிலருக்கு ஆங்கிலமும், இன்னும் சிலருக்கு ருஷ்யனும் தெரியும். நான் மாணவர்களிடமிருந்து போலிஷ் மொழியையும், அவர்கள் என்னிடமிருந்து தமிழ் மொழியையும் கற்றுக்கொள்ளும் சூழல் அது. அங்கு நான் இருந்த பொழுதுதான் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. கெம்பார்ஸ்கி என்பவர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதருடைய திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துள்ளார். அதைப் படித்து மகிழ்ந்து தமது மொழிகளில் மொழியாக்கம் செய்து கொண்டிருந்தார். அந்ததகவல் எனக்குக் கிடைத்து, நான் அவரைத் தொடர்பு கொண்டேன். எனக்கு போலிஷ் மொழி தெரிந்ததால் நான் சில மாற்றங்களைக் கூறினேன். அதனை அவர் ஏற்றதும் உண்டு. ஏற்காததும் உண்டு. ஏற்காத பகுதிகளை மாணவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். மாணவர்கள் சில திருத்தம் கூறினர். இப்படியாக திருக்குறள் போலிஷ் மொழியில் 1977ல் வெளிவந்தது. அவர் அந்நூலுக்கு ‘திருக்குறள் தென்னிந்தியாவின் புனிதநூல்’ எனத் துணைத் தலைப்பிட்டார். போலந்து காரர்களுக்கு புனித நூல் பைபிள். எனவே திருக்குறளும் ஏராளமாக விற்பனை ஆனது. ஏராளமானவர் படிக்கவும் செய்தனர்.

ஏழாண்டுகள் நான் வார்சாவில் பணியாற்றினேன். திருமுருகாற்றுப்படை, திருவாசகம் முதலானவற்றை மொழிபெயர்த்தார்கள். அதன்பின் நன்னூலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை தமிழ் அங்கு பாடமாக உள்ளது. பல நாடுகளில் ஏற்பட்ட சிரமங்கள் இங்கு ஏற்படவில்லை. அப்போது எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். ஏராளமான தமிழ் புத்தகங்கள் அனுப்ப நாங்கள் கோரினோம். அவரும் அனுப்பினார். திருக்குறள் மொழிபெயர்ப்பை நாங்கள் அன்றைய தமிழக முதல்வருக்கு அனுப்பினோம். அங்கிருந்து நான் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்றேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நாட்டுடைமை ஆக்குவதா வேண்டாமா என்ற பிரச்சனையில் நான் அங்கிருந்து வெளியேறும் நிலை வந்தது.

அத்தருவாயில்தான் தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங் கப்பட்டது. வ.அய். சுப்ரமணியன் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அழைத்தார். எனக்கு இலக்கியம், இலக்கணம் மொழியியல் தெரியும் என்பது அவருக்குத் தெரியும். நான் அவருடைய மாணவர். ஆனால் அவர் என்னிடம் இந்தப் பல்கலைக் கழகத்தின் நோக்கங்களில் ஒன்று பொறியியல், மருத்துவத்தை தமிழில் படிக்க வைப்பதாகும். இந்தப் பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பொறியியல், மருத்துவத்தை படித்து முன்னுக்கு வரவேண்டும் என எம்.ஜி.ராமச்சந்திரன் என்னிடம் கூறியுள்ளார். எனவே இந்தப் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என என்னிடம் கூறி தமிழ் வளர்ச்சி இயக்கம் திட்டம் என்பதை 1981ல் ஆரம்பித்து இயக்குநர் பொறுப்பை என்னிடம் கொடுத்தார். இதன் அடிப்படையில்தான் அறிவியல் நூல்கள் தமிழில் கொணரப்பட்டன. 81 தொடங்கி 1998 வரை பதினோரு ஆண்டுகள் அங்கு பணியாற்றினேன். பொறியியலில் 13, மருத்துவத்தில் 14 என இருபத்தி ஏழு புத்தகங்கள் கொண்டுவந்தோம். அகத்தியலிங்கம் துணைவேந்தராக வந்தபின்னர் ‘அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம்’ என்பதைத் தொடங்கி அதற்கு என்னைச் செயலாளராக நியமித்தார். அதன் மூலமாக நாங்கள் 17 கருத்தரங்குகள் நடத்தினோம். கருத்தரங்கக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. இதுதான் நான் கடந்து வந்த தடங்களின் நினைவுகளாகும்.

கே.: தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கத்தின் அரசியல் பின்னணி என்ன? ஒரு மொழியியலாளராக இருந்த நீங்கள் அறிவியல் தமிழ்ப் புலத்தில் நிகழ்ந்த பின்னர் அப்பணி உங்களுக்கு திருப்தியளித்ததா?

தமிழ் பல்கலைக்கழகம் துவக்கத்தின் அரசியல் பின்னணி என்ன என்பதை பார்ப்பதற்கு முன்னர் அது துவங்கப்பட்டதன் வரலாற்றைக் கூறிவிடுகிறேன். ஒரு காலகட்டத்தில் கரந்தை தமிழ்ச் சங்கம்; திருச்சி முதலான இடங்களில் தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்த பின்னர் அது தமிழ் பல்கலைக்கழகமாக மாறும் என நினைத்தனர். அதைவிட முக்கியமான செய்தி யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு ஒன்றை நடத்தி, தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என தீர்மானம் இயற்றியுள்ளனர். இவை 1920 மற்றும் 1930களில் தீவிரமான கோரிக்கைகளாக எடுக்கப்பட்டன. அவை நடக்கவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அடையாளப் படுத்தப்பட்டது. ஆனாலும் அங்கு பிற துறைகள் உருவாக்கப்பட்டதால் முழுமையடையவில்லை.

இச்சூழலில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அத்தருவாயில் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பதற்குப் பதிலாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் துவங்கப்பட்டது. அந்நிறுவனமும் வளர்ந்து வந்தது. அதன் பின்னர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை தமிழ்ப் பல்கலைக்கழகமாக மாற்றலாமா? வேண்டாமா? என்பது போன்ற சிக்கல் எழுந்திருக்கலாம். வெளிப்படையாகச் சொல்வதென்றால் நாம் மொழியை அறிவியல் பூர்வமாக நோக்காமல் உணர்ச்சிப் பூர்வமாகவே பாரத்திருக்கிறோம். இப்போது உயிர் தமிழுக்கு உடல் மண்μக்கு எனச் சொல்கிறோமே தவிர தமிழுக்கு உயிர் ஊட்டவில்லை. எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவானது. எப்போதோ நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்போதாவது செயலாக்கப்பட்டிருக்கிறதே என நாங்கள் மகிழ்வுற்றோம்.

அதன்பின்னர் எம்.ஜி.ராமசந்திரன் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வ.அய். சுப்ரமணியத்தை தேர்ந்தெடுத்தது நல்ல செய்தி. ஏனெனில் வ.அய். சுப்ரமணியம் நேர்மையானவர். அவர் மொழியை அறிவியல் பூர்வமாக அμகக் கூடியவர். அதனால் எது நல்லது? எது கெட்டது? என்பது அவருக்குத் தெரியும். அவர் கேரளவில் இருந்ததால் அவரிடம் அரசியல் சாயம் என்பது கிடையாது.

அதைவிட முக்கியமான செய்தியை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழக துவக்கவிழாவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் துணைவேந்தரை அறிவிப்பு செய்யப் போகிறார். அப்போது வ.அய். சுப்ரமணியத்தின் அருகில் இருந்த செயலர் வ.அய். சுப்ரமணியத்திடம் உங்களை முதல்வர் அறிவிப்பு செய்வார். அறிவிப்பு செய்தவுடன் நீங்கள் முதல்வர் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். முதல்வர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அறிவித்தவுடன் வ.அய். சுப்ரமணியம் எம்.ஜி.ஆர் அருகில் சென்றவுடன் எம்.ஜி.ஆர் பணிநியமனத்தை கொடுத்தவுடன் அதைப் பெற்றுக் கொண்டு தனது இருக்கைக்கு வந்துவிட்டார். வந்தவுடன் தமிழகச் செயளர் வ.அய். சுப்ரமணியத்திடம் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்? முதல்வரிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லையா என்றதற்கு எனக்கு அப்படி ஒரு பழக்கம் கிடையாது என வ.அய். சுப்ரமணியம் பதிலளித்திருக்கிறார். நாமாக இருந்திருந்தால் அன்று என்ன நடந்திருக்கும்?

இதைவிட முக்கியமான செய்தி ஒன்று உண்டு. அவர் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து வேலையை விட்டு வெளிவந்த நாள் வரையில் ஒரு ராஜினாமா கடிதத்தை மட்டும் எழுதி தேதி போடாமல் வைத்திருந்தார். என் பணியின் மீது விருப்பம் இல்லாதவர்கள் என் மீது தவறு காண்பவர்கள் இதனை அனுப்பி விடலாம் எனக் கூறுவார். வ.அய். சுப்ரமணியத்தைக் கதாநாயகனாகக் கொண்டு பிரபஞ்சன் காகித மனிதர்கள் எனும் நாவலை எழுதினார். அதைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

வ.அய். சுப்ரமணியனை எம்.ஜி.ஆர் அறிவித்தவுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை எப்படி நடத்துவது என்பதில் இவருக்கு ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் ம.பொ.சியை சந்தித்துள்ளார். அதற்கு ம.பொ.சி. கேரளாவிலிருந்தவர், இவர் தமிழுக்கு என்ன செய்திட முடியும் என நினைத்து உங்களால் வெற்றிகரமாக நடத்திட முடியுமா? என வ.அய். சுப்ரமணியத்திடம் வினவியிருக்கிறார். வ.அய். சுப்ரமணியம் அதற்கு முடியும் என்ற பதிலை சொல்லிவிட்டு ஒவ்வொரு துறை சார்பாக நான் ஒன்பது மாதங்களில் புத்தகம் கொண்டு வந்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியே வந்தவுடன் சங்க இலக்கியப் பொருள் அடைவு ஒன்றைக் கொண்டுவர நினைத்தேன். Vethic Index of names and subjects என்பதைப் போன்று தமிழில் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டேன். அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட வ.அய். சுப்ரமணியம் ‘சங்க இலக்கியக் களஞ்சியம்’ செய்யலாம் நான் திருவனந்தபுரத்திற்கு உன்னை கூட்டிப் போகிறேன் என்றார். இது நடந்த பின்னர்தான் அவர் துணை வேந்தராக பதவியேற்றார். என்னை வரச் சொல்லி கடிதம் அனுப்பினார். நான் சென்று ‘சங்க இலக்கியக் களஞ்சியம்’ எனும் ஆய்வு திட்டத்தை இங்கு தொடங்கலாமா? என அவரிடம் வினவினேன்.

அதற்கு அவர் ‘நான் இங்கு மூன்று ஆண்டுகள் இருப்பேன். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் சென்று விடுவேன். நீ அங்கு வந்து சங்க இலக்கியக் களஞ்சியத்தைத் தொடங்கலாம். இங்கு முக்கியமான பொறுப்பை உன்னிடம் தரப் போகிறேன். முதல்வர் என்னிடம் இதை ஒப்படைத்திருக்கிறார். ம.பொ.சி.யிடம் நான் கூறிவிட்டேன். அதை நீ தான் செய்தாக வேண்டும். ஏன் இதை உன்னிடம் கொடுக்கிறேன் என்றால் நீ அனைவரிடமும் நன்றாகப் பழகுவாய். உனது பலம் என்ன என்பது எனக்குத் தெரியும். நீ அதைச் செய்யவேண்டும்’ எனக் கூறிவிட்டு ‘‘நீ பொறியியல், மருத்துவம் முதலானவற்றைப் படிக்க வேண்டும் என நினைக்காதே உனது வேலை நீ அடுத்தவரிடம் வேலை வாங்குவதுதான். அந்த வேலையை செய்யக் கூடியவர் யார்? யரர்? என்பதைத் தேர்ந்தெடு. அவர்களுக்கான பாடத்திட்டம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். அதேப் போன்று தஞ்சாவூரில் மருந்துவக் கல்லூரி ஒன்று உண்டு. உனக்குத் தெரிந்த மருத்துவர்கள் இருப்பார்கள் அவர்களைச் சென்று பார். திருச்சியில் பொறியியல் கல்லூரி ஒன்று உண்டு. அங்கு உள்ளவர்களிடம் பேசிவிட்டு வா’’ என்றார்.

இதன் பின்னர் நான் மருத்துவர் நரேந்திரனிடம் மருத்துவப் பாடத்திட்டத்தை வாங்கினேன். திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய சம்பத்திடம் பொறியியல் பாடத்திட்டம் வாங்கினேன். அதன் பின்னர் அண்ணா பல்கலைக்கழகம் சென்றேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ்நாடு முழுக்கச் சுற்றினேன். பாண்டிச்சேரியும் சென்றேன். நான் தேர்ந் தெடுத்தவர்களிடம் பாடத்திட்டத்தைக் கொடுத்தேன். இதேநேரத்தில் துணைவேந்தர் அவர்கள் என்னிடம் கருத்தரங்கம் ஒன்றை கூட்டக் கூறினார். அவர் கேட்டுக் கொண்டதால் முதல் கருத்தரங்கம் மொழியியலுக்கும் அடுத்த கருத்தரங்கம் மருத்துவத்திற்கும் என்பதாக ஒழுங்கு செய்தோம். இவை முடிந்த பின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான பாடத்திட்டத்தைக் கொடுத்தோம். இவை நடந்தது 1982ல். மருத்துவம் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தை தமிழில் எழுத முன்வந்தவர்களில் சிலர் ஏற்கனவே ஆங்கிலத்தில் பாடநூல்கள் எழுதியவர்கள்தான். அவர்கள் தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிகளில் பாடம் நடத்துபவர்கள். எனவே அவர்கள் தமிழில் எழுதுவதற்கு ஒத்துக் கொண்டார்கள்.

அவர்கள் கலைச் சொல்லாக்கத்தில்தான் சிரமப்பட்டனர். ‘‘தமிழில் எழுதிவிடுவோம். சில கலைச் சொல்லிற்கு நாங்கள் என்ன செய்வோம்?’’ என என்னிடம் வினவினர். ‘‘அதைப் பற்றியான கவலை உங்களுக்கு வேண்டாம். இதுவரை தமிழில் வெளி வந்துள்ள பொறியியல் மற்றும் மருத்துவக் கலைச் சொல்லை உங்களுக்கு தொகுத்துத் தருகிறோம். நீங்கள் அவற்றிலிருந்து தகுதி உள்ளதை எடுத்துக்கொள்ளுங்கள் தகுதி இல்லாததை நீக்கிவிடுங்கள். ஒன்றும் தேறாவிட்டால் ஆங்கிலச் சொற்களையே போட்டு விடுங்கள். பிறகு பாரத்துக்கொள்ளலாம்’’ எனக் கூறினேன். இப்படித்தான் நீங்கள் பொறியியலுக்கு பதிமூன்றாயிரம் சொற்கள் மருத்துவத்திற்கு பண்ணிரெண்டாயிரம் சொற்கள் எடுத்தோம். இவற்றில் சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்தன. Anatomy எனும் சொல்லிற்கு ஒருவர் ‘மனுச அங்காதி பாதம்’ என்றார். இன்னொருவர் ‘‘சரீர இயல்’’ எனப் போட்டிருந்தார். இன்னொருவர் உடலியல் என போட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தகம் எழுதியவர்கள் வேறு வேறு பதங்களை பயன்படுத்தினர்.

‘மனுஷ அங்காதி பாதம்’ எனும் கலைச்சொல்லை 1850களில் அமெரிக்காவைச் சார்ந்த சாமுவேல் ஃபிஷ்கிறின் என்பவர் பயன்படுத்தினார். அவர் எழுதிய புத்தகத்தில் Human Anatomy என்பதற்கு ‘மனுஷ அங்காதி பாதம்’ எனப் பெயரிட்டார். மனிதனுடைய எல்லா அங்கத்தையும் குறிப்பதால் இவ்வாறு பெயரிட்டார். அதன் பின்னர் ஜெகநாத நாயுடு என்பவர் மைசூர் மன்னரிடம் இருந்தார். அவர் ‘‘சரீர இயல்: வினா விடை’’ என்பதான நூல் ஒன்றை வெளியிட்டார். பிறகு உடலியல் எனும் கலைச்சொல் புழக்கத்திற்கு வந்தது. அதன் பின்னர்தான் உடல் அமைப்பியல் உடற்கூறு என அழைக்கப்பட்டது. இதைக் கண்டவுடன் புதுப்புது கலைச்சொல்லை உருவாக்கிக் கொண்டு வந்தனர். தமிழில் எழுதவேண்டும் என நினைத்தால் முடியும் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. அதன் பின்னர் பல சொற்கள் வெளிவந்தன.

நிகண்டுகளில் உடல் உறுப்பு குறித்து சொற்கள் உண்டு. தாவரங்கள் குறித்து சொல் உண்டு. இவை நமக்குத் தெரியாது. இப்போது ரத்தம் என்று நாம் சொல்வதை நிகண்டு குருதி என அழைக்கும். எலும்பு என்பதை என்பு என நிகண்டு குறிக்கும். கிறின் தமது ‘மனுச அங்காதி பாதம்’ நூலில் Bone என்பதை அஸ்தி, எனச் சொல்வார். ஆக இம்மாதிரியான தொடர்புகள் வந்த பின்பு; வாய்ப்புகள் வந்த பின்பு அனைவரும் எழுத ஆரம்பித்தார்கள். எளிமையாகவும் எழுதினார்கள். அதாவது அறுவை மருத்துவம், உடற்கூறி, உடலியங்கியல், நுண்μயிரியல் முதலான பாட நூல்களை மருத்துவர்கள் எழுதினார்கள். நாங்கள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதியை வாங்கினோம். இதனை தமிழாசிரியரிடம் கொடுத்தோம். அவரது வேலை தமிழை ஒழுங்குபடுத்துவதுதான். அதன் பின்னர் அத்துறைகளின் வல்லுநர்களை அழைத்து அவர்களிடம் அதனைக் கொடுத்தோம். அவர்கள் பாடம் சம்மந்தமான திருத்தங்களைக் கூறுவார். இரண்டு திருத்தங்களும் எழுதிய ஆசிரியரிடம் கொடுக்கப்படும். அவர்கள் ஏற்பதை ஏற்றுக் கொண்டு எங்களிடம் தருவார்கள். இறுதியாக நான் அதனை மேற்பார்வையிடுவேன். அதனால்தான் எனக்கு மருத்துவம், பொறியியல் சம்மந்தமான செய்திகளை அறிய முடிந்தது.

இத்தருணத்தில்தான் வ.அய்.சுப்ரமணியம் கூறினார் ‘நான் ஏன் சுந்தரத்திடம் இப்பொறுப்பைக் கொடுத்தேன் என்றால் அவருக்கு அறிவியல் தெரியாது. அவருக்கு அறிவியல் தெரிந்திருந்தால் உங்களிடம் வாக்குவாதம் செய்து உங்களை எழுதவிடாமல் செய்திருப்பார். இப்ப நீங்க என்ன எழுதியிருக்கீங்களோ அதை அவன் படித்துக் கொள்கிறான். அவன் அதை படிச்சு வளர்ந்துட்டான்னா இந்த ஊர்ல உள்ள எல்லாருக்கும் அறிவியல் படிக்கத் தெரிந்துவிடும்’. பெரியார் அதைத்தான் சொன்னார். இந்த நாட்டு மக்களுக்கு அறிவியல் தெரிய வேண்டும். அதைப் போன்று இவனை பொதுமக்களில் ஒருவனாகத்தான் வைத்திருக்கிறேன்.’ எனக்கூறினார். அதற்குப் பின்னர்தான் அவரின் தூண்டுதலில் நான் மொழிபெயர்ப்பாளன் ஆகினேன். ‘உடல் நலம்,’ ‘பாலுட்டிகள்’ மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட்க்காக ‘மூலிகைகள்’ என்பதான நூல்களை எளிமையாக மொழிபெயர்த்தேன்.

எந்த ஒரு செய்தியையும் ஒரு மொழியினால் சொல்ல முடியும். அது பயன்பாட்டைப் பொறுத்துள்ளது. இந்த மொழியில் முடியும் அந்த மொழியில் முடியாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. அது தோடா மொழியாக இருக்கட்டும் குடகு மொழியாகட்டும். அவனுக்கு உள்ளதை அவன் சொல்கிறான். இப்போது தற்கால நவீன அறிவியல் வந்தால் அவன் சேர்த்துக் கொள்ளப் போறான். எனவே எந்த ஒரு மொழியிலும் அறிவியலைச் சொல்ல முடியாது என்றெல்லாம் கூற முடியாது. ஆக இதுதான் நான் அறிவியல் தமிழுக்கு வந்த பின்னணியாகும்.

இந்தப் புலத்திற்கு வந்த பின்னர் தமிழில் அறிவியலின் வரலாற்றைத் தேடினேன். நிறையப் பேர் இருப்பதைக் கண்டுபிடித்தேன். தமிழ் இலக்கியத்தில் வேளாண்மை, கட்டடம் முதலானவைகள் எழுதப் பட்டுள்ளன. நான் ‘தமிழக அறிவியல் வரலாறு’ என்று சிறு நூல் ஒன்றை எழுதினேன். நாம் அறிவியலை அனுபவப் பூர்வமாகப் பார்ப்பது. மற்றொன்று சோதனைப் பூர்வமாகப் பார்ப்பது. அனுபவம்தான் பாட்டி வைத்தியம். அதே வேளையில் நாம் மருத்தவரிடம் சென்றால் அதனை அறிவியல் மொழியில் நமக்கு விளக்கமளிப்பார். சித்தர் பாடல் ஒன்று நெருஞ்சி சிறுநீர் கோளாற்றைச் சரி செய்யும் எனக் கூறுகிறது. இதைப்படித்த சிறுநீர் சிறப்பு மருத்துவர் நெருஞ்சியில் இலையா; பூவா; வேரா என்னவென்பது அவருக்குத் தெரியவில்லை. அந்த விளக்கமும் அந்தப் பாடலில் இல்லை. அப்போது அந்த மருத்துவர் ஒவ்வொன்றையும் சோதனை செய்து கண்டு பிடிக்கிறார். சித்தர்கள் அன்று நெருஞ்சியில் இருந்து கசாயம் எடுத்தார்கள். கொடுத்தார்கள். நோய் குணமாகிவிட்டது. அது எதனில் இருந்து வந்தது என்பதை இன்றுள்ள சோதனை மூலம் நாம் நிரூபிக்கிறோம். அப்போது நாம் வரலாற்று ரீதியாகப் பார்த்து வந்தால் சிலவற்றிற்கு தெளிவு இருக்கும். சிலது தெளிவற்று இருக்கும். அதை நாம் தெளிவுபடுத்துவது இன்றைய அறிவியலின் நோக்கம்.

கட்டடக்கலை, இயற்பியல், வேதியியல் என்பவற்றின் செயல்பாடாக இருக்கும். வேதியியல் எனச் சொல்கி றோமே அதில் வேது என்ற சொல் கலித்தொகையில் இருக்கிறது. தலைவன் தலைவியிடம் உனக்கு புண்பட்டுள்ளது. நான் வேது செய்கிறேன் எனச் சொல்வான். அதன் பின்னர் சித்தர்கள் பண்ணிய கசாயம் என்பது என்ன? இப்பக்கூட நீங்க நாட்டு வைத்தியரிடம் சென்றால் நமது கண்முன்னரே செய்து காண்பிப்பார். அவருக்கே அது என்ன என்று தெரியாது. ஆனால் அவர் தருகிற லேகியமோ அல்லது பொடியோ நம்மை குணப்படுத்தி விடுகிறதே! அது மாதிரியான சூழல் நம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. அதைப் போன்று படகு கட்டும் தொழிலும். படகைப் பற்றி மட்டும் 25, 30 சொற்கள் நம்மிடம் உண்டு. ஓடம், நாவய், பஃறி என்பதாக உண்டு. ஆக, ஒரு காலகட்டத்தில் பயணத்திற்கு செல்ல பயன்படுத்துதல்; சரக்குகளை ஏற்றிச்செல்ல; வெளிநாடுகளுக்கு பலர் பயணிக்க என்பதாக ஒவ்வொன்றிற்கும் ஒன்று வைத்திருந்தார்கள். இப்ப தெப்பம் வந்து மிதவை. ஓடம் என்பதை அகநூனூறில் அங்கிருந்து மிளகைக் கொண்டு வந்து இங்கிருந்து பொன்னும் மணியும் கொண்டு சென்றார்கள் எனச் சொல்லப்படுகிறது. இம் மாதிரியான தொழில் நுட்பம் அப்போது இருந்தது. ஆக இதையெல்லாம் பார்க்கும் போது நம்மிடமும் ஒரு அறிவியல் தொழில் நுட்பம் இருந்தது என்பதை அறிய முடிகிறது.

rama_sundaram_350இதைப் போன்றுதான் கட்டடக்கலையும். இன்று சிற்பிகள் கட்டடக்கலை பற்றி நிறைய எழுதுகிறரர்கள். நெடுநெல்வாடையில் தச்சுத் தொழில் எப்படி இருந்தது? கொத்துத் தொழில் எப்படி இருந்தது? அதனை எப்படி பண்ணியிருக்காங்க; அரண்மனை எப்படி பண்ணினாங்க. இப்ப தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி ஆயிரம் வருடம் ஆகிவிட்டது. அங்கு இன்று வரை ஒழுவதில்லை. நேற்று நீங்க பத்திரிகையில் பார்த்தீங்கன்னா பாராளுமன்ற கட்டிடத்தில் ஒழுகிறதாம். அதைக் கட்டி 80 வருஷம்தான் ஆச்சாம். ஆயிரம் வருஷம் ஆனதில் ஒழுகவில்லை. 80 வருஷத்துல ஒழுகிறது. அப்ப அன்று இருந்தது தொழில்நுட்பம் ஈடுபாட்டால் விளைந்ததாகும். இன்று அப்படி இல்லை. ஆக தமிழ்நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வரலாறு அப்படி ஒன்றும் சாதாரணமான ஒன்றல்ல.

கே.: நீங்கள் அறிவியல் தொழில் நுட்ப கலைச் சொல்லை உருவாக்கும போது பழைய மரபில் இருந்து உருவாக்கினீர்களா அல்லது இன்றைய மரபில் இருந்து உருவாக்கினீர்களா?

இரண்டும் உண்டு. இந்த நேரத்தில் நான் ராஜாஜியை நினைத்துப் பார்க்கிறேன். ராஜாஜி அப்போது ‘தமிழில் முடியும்’ என்று எழுதினார். அது ஒரு இயற்பியல் புத்தகம். ஒரு பாடப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தார். அதன் முன்னுரையில் எழுதுவார். ‘கலைச் சொல் இல்லை’ என்று கூறுகிறார்கள். தமிழில் தேடு கிடைக்கும். இல்லை என்றால் புதிதாக சொல்லை உருவாக்கு என எழுதினார். இன்னொரு இடத்தில் எழுதினார் என்னிடம் எல்லோரும் கேட்கிறரர்கள் ஏன் தமிழில் சொல்ல வேண்டும்? சர்வதேசிய சொற்களை பயன்படுத்த வேண்டியதுதானே? என்று கேட்கிறரர்கள். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. எனக்கு வேண்டியவர் களுக்கு தமிழில் கடிதம் எழுதினால்தான் மகிழ்ச்சி. உள்ளத்தின் உவப்பே பிரதானம். எனவே என்னுடைய மொழிகளிலேயே நான் சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். இல்லை என்றால்தான் வேறு மொழிக்குப் போக வேண்டும் எனச் சொன்னார். இதைத்தான் கிறின் கூறினார். முதன் முதலாக கலைச்சொல் அகராதியைத் தந்தவர் அந்த அமெரிக்கர்.

அவர் சொற்கள் சிறிதாக இருக்க வேண்டும். தனிச் சொல் இல்லையெனில் கூட்டுச் சொல் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சொல் தமிழில் இருக்க வேண்டும். தமிழில் இல்லை என்றால் சமஸ்கிருதத்தில் எடுத்துக் கொள். சமஸ்கிருத்திலும் இல்லை என்றால் ஆங்கிலம், இலத்தீன் ஆகியவற்றில் இருந்து எடுத்துக்கொள் என்றார். பாரதியார் அற்புதமான கலைச்சொல் விளக்கம் கொடுத்தார். குடுக்குறி, சங்கேதம், பரிபாஷை இது எல்லாம் ஒரே பொருளைக் குறிக்கும். இதற்கெல்லாம் விசேஷ அர்த்தம் உண்டு. எவ்வளவு அற்புதமாக அந்தக் காலத்திலேயே பாரதி சொல்லியிருக்கிறான். விசேஷசார்த்தம் சிறப்புப் பொருள் உண்டு. அந்த சாஸ்திரக்காரர்கள் தம்முள் ஒன்று கூடி முடிவுக்கு வந்த சொல்லாக இருக்க வேண்டும். இது பொது வழக்கு இல்லாத சொல்லாக இருக்க வேண்டும் என்று சொன்னார். எல்லோருக்கும் தெரிந்த பொது சொல் அல்ல கலைச்சொல்லில் இப்போது மின்னாக்கி என்றால் எத்தனை பேருக்குத் தெரியும்?

மின்னாக்கி என்றால் ஜெனரேட்டர், சரி, கணிப் பொறி, எல்லோருக்கும் தெரியும். computer. கணிப் பொறிக்கு இன்னொரு வார்த்தை கணனி. இந்த கணனி என்ற வார்த்தையை முதலில் கண்டு பிடித்தவன் சிங்கப்பூர் தமிழன். இதனை தமிழில் முதலில் அறிமுகப் படுத்தியவர் ஐராவதம் மகாதேவன் என நினைக்கிறேன். தினமணிக்கு ஆசிரியராக இருந்த போது கணனி என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். அப்போது Computer வந்தபோது அனைவரும் Computer என்றனர். பின்னர் இது என்ன கணிப்பு கணிக்கிறது. சொல்கிறது. இதை மாதிரிதான் மின்சாரத் தடை. முதலில் மின்சாரத்தடை என்றான். இப்பொழுது மின்தடை என்கிறோம். அப்போது கிறின் சொன்னதுதான் தனிச்சொல்லாக, எளிய சொல்லாக இருக்கனும். ஆரம்பத்தில் விரிவாகத் தருகிறோம். அதற்குப் பிறகு பழக்கத்தில் வரும்போது சுருக்கமாகிவிடும்.

இப்போது பழைய சொற்கள் இருக்கா? இல்லையா? என்றால் இருக்கிறது. Unit என்பதற்கு அலகு என்று இருக்கிறது. அந்தக் காலத்திலேயே அலகு உண்டு. ஆக ஏற்கனெவே உள்ள சொற்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்வது. செய், நன்செய், என்று வேளாண்மையில் அன்று இருந்தது. இன்றும் எடுத்துக்கொள்கிறோம். இடையில் விவசாயம், கிருஷி என்றெல்லாம் வந்தது. கணனி வந்தாச்சு, வேதி என்று சொன்னேன். வேதியியல் வந்திடுச்சு. அடுத்தக் கட்டமாக அந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு அதனை விரிவு படுத்திக் கொள்கிறேன். சாதரணமாக இருக்கும் போது கலைச்சொல் வருவதில்லை. நிகண்டைப் பார்த்தால் எக்கச்சக்கமான சொல் நமக்குக் கிடைக்கும். நாம் புரிந்து கொள்ள முடியாத பல சொற்களை அவன் கூறியிருக்கிறான். Embryo என்பதற்கு கரு, கிளை சூல், என்பதான மூன்று சொல் இருக்கிறது. இதனில் மூன்று சொல் இருக்கிறது. இதனில் எது சரியான சொல் என்பதை நாம் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது. ரத்தம் என்பதை குருதி; நெத்துரு என இருக்கிறது. இந்த ‘நெத்துரு’ பதிற்றுப்பதத்தில் வரும். இதே ‘நெத்துரு’ என்ற சொல் ராசர் கோவிலில் வட்டார வழக்கில் இருப்பதாக ஒரு நண்பர் கூறினார். அப்போது எங்கேயோ வட்டாரத்தில் புழங்கிய சொல் நிகண்டில் வந்து கலைச் சொல்லாக மாறுகிறது. Drilling Machine என்பதை ‘துளையிடும் கருவி’ என மொழி பெயர்த்து வெளிவந்து விட்டது. அப்ப நாங்கள் கருத்தரங்கு ஒன்றை நடத்தும் போது ஒருத்தர் சொன்னார். நாங்கள் ‘துரப்பான்’ என எங்க வழக்கில் அழைப்போம் என்றார். தென்பகுதியில் இருந்து வந்தவர் இல்லங்க இது ‘தமரு’ என்று சொன்னார். அப்போ Drilling Machine-னுக்கு அந்தக் காலத்திலே ‘தமரு’ என்றுதான் பெயர் கொடுத்தார்கள்.

இன்னொரு செய்தியை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும். அறிவியல் என்ற சொல் முன்னர் சாஸ்திரம் என்றனர். இதுதான் வழக்கில் இருந்தது. முதன் முதலில் அறிவியல் என்ற சொல்லை கண்டு பிடித்தவர் பா.வே. மாணிக்க நாயகர். செந்தமிழ் செல்வியில் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது சுத்தானந்த பாரதி தனது புத்தகம் ஒன்றை மாணிக்க நாயகருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்துவிட்டு ‘தாங்கள் எழுதிய அறிவியல் நூல் எனக்குக் கிடைத்தது’ என எழுதினார். முதன் முதலாக அறிவியல் என்ற சொல் அப்பொழுதுதான் பயன்படுத்தப்பட்டது. 32

அதே மாதிரிதான் பரிபாஷை, சங்ககேதம் ஆகிய சொற்கள் வந்த பின்னர்தான் கலைச்சொல் வந்தது. வையாபுரிப்பிள்ளை கலைச்சொல்லைக் கையாள்வார். coining tearm என்பதற்கு சேனாவரையார் கட்டிய வழக்கு என்றார். இதையெல்லாம் நினைக்கும் போது நம்மைவிட நமது முன்னோர் தெளிவாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

1957ல் நமது உடல் என்ற புத்தகம் வெளிவந்தது அதில் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழ்ச் சொற்களை பயன்படுத்தினர். உதாரணமாக Heel bone என்பதை குதிகால் எலும்பு. Lower jaw bone கீழ்தாடை எலும்பு cheek bone கண்ண எலும்பு. என்றெல்லாம் எழுதினார். இம்மாதிரியான சொற்கள் நிறைய சேர்க்கப்பட்டன.

Anatomy என்பதை உடற்கூறு என்றேன். இச்சொல்லைக் கண்டுபிடித்த ஆண்டு 1982. மருத்துவர்களை வைத்து இச்சொல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன் மனுச அங்காதி, உடலியல்; சரீர இயல் என்று இருந்தது. Anatomy குறித்தான புத்தகம் வருவதற்கு முன்னர் பெப்ரியன் அகராதி ஒன்று உண்டு. அது தமிழ் ஆங்கில அகராதி. அந்நூல் 1980 ல் வெளிவந்தது. அந்த அகராதியில் ணீஸீணீtஷீஸீஹ்; உடற்கூறு தத்துவம் என்று உள்ளது. அப்போது 1890ல் பெப்ரியியலுக்கு கிடைத்த வார்த்தை நமக்கு 1982 வரை கிடைக்கவில்லை. அதைத் தேடிப்பார்த்த பின்தான் உடற்கூறு என்ற சொல் உருவானது. ஆக இதற்கு என்ன காரணம் இருக்க முடியும். அகராதியைத் தொகுத்தவர்கள் மக்களோடு தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் மக்களிடம் இருந்து தரவுகளைத் தேர்ந்தெடுத்தனர். நாம் ஒர் அறையில் அமர்ந்து கொண்டு இரண்டு அகராதிகளை வைத்துக் கொண்டு மொழிபெயர்க்கிறோம்.

இந்த கிரந்த எழுத்துக்கள் நமது கண்டுபிடிப்புதான். 5 ம் நூற்றாண்டில் ப்ராகிருதம், சமஸ்கிருதம் இவற்றில் உள்ள சொற்களை தமிழில் கொண்டு வருவதற்கு கருத்து வேறுபாடு வந்துவிடக் கூடாது என்பதற்காக கிரந்த எழுத்து உருவானது. நமக்கு மூன்று ‘ல’ இருக்கிறது. மாற்றி எழுதினால் பொருள் மாறிவிடும். அதே மாதிரி அவர்களுக்கு நான்கு ‘க’ உண்டு. நான்கு ‘ச’ உண்டு. மாறிவிடக் கூடாது. நமக்கு ஹ, ஜ இல்லை. ஆனால் தேவநகரியில் இல்லை. நம் ஆட்கள் இதனை வடஎழுத்து சமஸ்கிருத எழுத்து என்பார்கள். ஆனால் இது சமஸ்கிருத எழுத்து இல்லை. நாம் உபயோகிக்கும் ஷ, ஹ என்பது கிரந்த எழுத்து. இந்தக் கிரந்த எழுத்து பல்லவர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மணிப்பிரவாள நடையில், துக்கம் என்பதை வைஷ்ணவ பாரம்பாரிய துக்கம் என்றனர். ‘க’ வை எழுதி: புள்ளி வைத்தால் kh. இந்த முறையில் இந்த எழுத்து நமக்கு வந்தது. நான் கலைச்சொல்லை அமுலாக்கும் போது பெயரை மொழிபெயர்க்க முடியாது. சிலர் ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்றார்கள். ஆக்ஸ்போர்டை எழுதும் துறை என்றாங்க. இப்ப அந்த மாதிரி வரும் போது; ஆக்ஸ்போர்ட் என்பதை ஆக்சுபோர்டுன்னு எழுத முடியாது. ஆகஸ்ட்டை ஆகசுடு என்று எழுத முடியாது. இந்த இடத்தில் கிரந்த எழுத்தை நாம் பயன்படுத்தலாம்.

இங்கே இன்னொரு செய்தி. ஆங்கில எழுத்தான F, ph என்பதற்கு ‘ப’ முன் ஆயுத எழுத்தைப் போடலாம் என்று சொன்னவர் பா.வே. மாணிக்க நாயகர்தான். அவர்தான் முதலில் ஃப்= F என்று சொன்னார். ஃபேன்; பேன் என்பதில் வேறுபாட்டை இங்கு அறியலாம். ஆக ஆயுத எழுத்தைப் பயன்படுத்துதல்; ஷ, ஜ-வை பயன்படுத்துதல் முதலியவைகள் கலைச்சொல்லில் முக்கியமாகும்.

கே.: நீங்கள் அடிப்படையில் திராவிட இயக்கத்தில் இருந்தவர். திராவிட இயக்கம் தமிழை எவ்வாறு பார்த்தது என்பது தெரியும். தமிழை உணர்சி பூர்வமாக μகியதில் இருந்து நீங்கள் வையாபுரிப்பிள்ளை தெ.பொ.மீ நோக்கி நகர்கிறீர்கள். இதனை வெறுமனே நகர்தல் என்று சொல்லிட முடியாது. இதை விளக்குங்களேன்?

நான் அண்ணாமலைக்குச் சென்ற போது அங்கிருந்த ஆசிரியர்களான அ.மு. செட்டியர்; மு. அண்ணாமலை ஆகியோருடன் தொடர்பு கண்ட பின்பு தான் மொழியை எப்படிப் பார்ப்பது அல்லது அμகுவது என்பதில் தெளிவு ஏற்பட்டது. ஒரு ஆசிரியர் என்னை அழைத்து மொழியை இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பார்க்க வேண்டாம். அறிவுப்பூர்வமாக பாரு. நீ வையாபுரிப் பிள்ளையை திட்டிக்கிட்டு இருக்கே வையாபுரிப் பிள்ளையைப் படி என்று அறிமுகப்படுத்தினார்.

வையாபுரிப்பிள்ளையின் காலக்கணிப்பால் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரது முறையியல் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்குப் பிறகு தெ.பொ.மீ நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். மொழியைப் பார்ப்பது என்கிற மொழியியல் உணர்வு பிறகுதான் வந்தது.

மொழியியல் உணர்வு வந்தபின் தான் மொழியை நாம் நினைத்தபடி பார்க்க முடியாது எனத் தோன்றியது. மொழிக்கென ஒரு கட்டமைப்பு உள்ளது. அது எழுவாய், பயனிலை. ‘நான் வந்தேன்’ என்பதை ‘வந்தேன் நான்’ எனச் சொல்லிவிடலாம். அதில் ஒன்றும் பெரிய தவறில்லை. ஆனால் பெயரெச்சம், பெயர் என வரும் போது மாற்ற முடியாது. எனவே ஒரு மொழியின் கட்டமைப்பை நமது நோக்கத்திற்கு மாற்ற முடியாது. அதனில் வேண்டுமானால் சில முன் பின் வரலாம். அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது. மொழியை அறிவியல் பூர்வமாக பார்ப்பதற்கு மொழியியல் படித்ததுதான் அடிப்படைக் காரணம்.

இரண்டாவது நான் அப்பொழுது மெல்ல மெல்ல மார்க்சியம் படிக்க ஆரம்பித்தேன். ஸ்டாலின் மொழியைப் பற்றி பேசியுள்ளார். ‘சொற்களை வைத்துக் கொண்டு மொழியைப் பார்க்க முடியாது. சொற்கள் அவ்வப்போது மாறும். ஆனால் மொழியின் கட்டமைப்பு அவ்வளவு சீச்கிரம் மாறாது’ என்பார் ஸ்டாலின். ஸ்டாலின் மொழியியலாளர் அல்ல. ஆக மொழியின் இலக்கணம் அத்தனை சீக்கிரம் மாறாது. ஆனால் மொழியின் சொற்கள் மாறும். செட்டி நாட்டுப் பகுதியில் பந்தல் என்பது இறந்தவர் வீட்டுக்குப் போடுவது. பிற இடங்களில் பந்தல் என்ற சொல் விழாக்களைக் குறிக்கும். ஆக ஒரே சொல்தான் வட்டாரத்திற்கு வட்டாரம் பொருள் மாறுகிறது. 33

மார்க்சிய சிந்தனை வந்தபோது எதையும் அறிவியல் பூர்வமாகப் பார்க்க வேண்டும் எனும் சிந்தனை எழும். வரலாற்றுப் பொருள் முதல் வாதம், இயக்கவியல் பொருள் முதல்வாதம், சமூகம் எப்படி ஒரு போக்கை மாற்றுகிறது. மக்களது நிகழ்வுகளுக்கு சமூகம் எவ்வாறு உருமாறுகிறது? அந்த சமூக நிகழ்வோடு சம்மந்தப் பட்டதுதான் மொழி. சமூகமாற்றம் என்பது மொழிக்கு காரணமேயழிய இங்கு உணர்ச்சி என்பது வரக்கூடாது.

மொழியை பொதுவுடமை இயக்கங்கள் சிறப்பாக பயன்படுத்தினார்கள். அவர்களது மொழிபெயர்ப்பு, கவிதை, கதை இவையனைத்தும் சமூகம் சார்ந்தது. திராவிட இயக்கம் அப்படி அல்ல. அது உணர்ச்சியோடு சம்மந்தப்பட்டதாகும்.

கே: மொழியின் பண்பாட்டு அம்சத்தை இடதுசாரிகள் உணரத் தவறிவிட்டார்கள் என்ற விமர்சனம் இருக்கிறதே?

பொதுவுடமை இயக்கத்தவர்கள் மொழியை மக்களோடு சம்மந்தப்படுத்தி, மொழிக்கும் மக்களுக்கும் உள்ள உறவை மக்களுக்கு அழுத்திச் சொல்லவில்லை. திராவிட இயக்கத்தவர்கள் அதனை அழுத்திச் சொன்னார்கள். ‘மொழி இருந்தாத்தான் நீங்க’ என திராவிட இயக்கம் கூறியது. இடதுசாரிகளுக்கு மொழி என்பது நமது வாழ்க்கையில் ஒன்று. மொழியே அடிப்படையல்ல. நமக்கு அடிப்படை வர்க்கம் என்றனர். வர்க்கஅடிப்படை பொருளாதார அடிப்படையால் உருவானது. பொருளாதார மாற்றம் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்றனர். திராவிட இயக்கத்தினர் மொழியை முதன்மைப்படுத்தி உணர்ச்சிப்பூர்வமாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். முதலாளித்துவம் ஒரு சொல்லை சொல்கிறது. பாட்டாளி வர்க்கம் வேறு ஒரு சொல்லை சொல்கிறது. சொல்லில் புதிது இருக்கலாம். இப்போது இயங்கியல் பொருள் முதல்வாதம், பாட்டாளி வர்க்கம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் முதலான சொற்கள் பொது உடமையால்தான் இங்கு புழக்கத்திற்கு வந்தன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் தொடர் தமிழோடு தொடர்புடையது. இச்சொல்லாடலில் உணர்ச்சி இல்லை. அதாவது மொழிக்கும் மக்களுக்குமான உறவை இடதுசாரிகள் அழுத்தமாகக் கூறவில்லை. ஜீவானந்தம், வானமாமலை ஆகியோர் பேசினார்கள். ஆனால் திராவிட இயக்கத்தவர்கள் மொழியை மக்கள் தொடர்புக்கு மட்டுமே முக்கியப்படுத்தினார்கள்.

அதனால் திராவிட இயக்கம் ‘உயிர் தமிழுக்கு’ என்று சொல்கின்றனர். இடதுசாரிகள் அப்படிச் சொல்லவில்லை. உங்க வர்க்கம், உங்க பொருளாதாரம், உங்க பண்பாடு, உங்க அரசியல் ஆகியவை அமைந்தால்தான் மொழி வாழும் எனக்கூறி மொழியை வளர்த்தார்கள். பாரதியார் தான் பொதுவுடமை என்ற சொல்லை நமக்குத் தந்தார். புரட்சி என்ற சொல்லையும் அவர்தான் தந்தார். பாரதி பரந்த அளவில் பார்த்தார். அதற்கு முன்னர் பொதுவுடமை என்ற சொல்லை பயன்படுத்தியதாக சொல்ல முடியாது. மொழி சார்ந்து அரசியல் இருக்கலாம். சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து இருக்கலாம். இம்மாதிரியான பார்வை திராவிட இயக்கத்தில் இல்லை.

கே: மொழியை மட்டும் உணர்வாக்கி திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடித்த தருவாயில் நீங்கள் மொழியின் மயக்கத்தில் இருந்து விடுபட்டீர்களா? அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மொழியை அறிவியல் வழியில் நோக்க ஆரம்பித்த நீங்கள் என்ன மனநிலையில் இருந்தீர்கள்?

மொழியியலை அப்போது நான் படித்து விட்டேன். முனைவர் பட்டம் பெற்று விட்டேன். நாங்கள் அடிக்கடி பேசுவது என்பது அறிவியல், இலக்கியம் ஆகியவைகள் வளரவேண்டுமெனில் உணர்ச்சி மட்டும் போதாது. நீங்கள் சமூகம் சார்ந்து, நடப்பியல் பார்வையில் பாரத்தால்தான் மொழி வளரும். அது இல்லாமல் நான் நினைத்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் மொழி வளராது. அதாவது பொதுவுடமை இயக்கத்தின் தமிழ்த்தொண்டு, திராவிட இயக்கத்தின் தமிழ்த்தொண்டு என்று பார்க்கும் போது பொதுவுடமை, தேசிய இயக்கத்தை ஒப்பிட்டு நோக்கும் போது திராவிட இயக்கத்தின் தமிழ்த்தொண்டு குறைவுதான். உணர்ச்சிப் பூர்வமாக ஆட்சி அதிகாரம் என்பது வேறு. அவினாசிலிங்கம் இல்லை என்றால் கலைக்களஞ்சியம் இல்லை. சி. சுப்ரமணியம் இல்லை எனில் தமிழ் ஆட்சி மொழி ஆகியிருக்க முடியாது. தமிழ் கல்வி மொழியாகி இருக்காது. இது 60களில் வந்து விட்டது. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பின்பு மொழிக்கு எதைச் செய்தார்கள்? எனப் பார்த்தால் ஆக்கப்பூர்வ பங்களிப்பு என்பது குறைவுதான்.

கர்நாடகாவில் கன்னடம் கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அந்நிலை இல்லையே. ஒரு உதாரணம் சொல்கிறேன். 1997ல் தமிழ்க்குடிமகன் அமைச்சர். அந்த நேரத்தில் தமிழ் வழியில் பொறியியல் எனும் அறிவிப்பு வருகிறது. நாங்கள் அதற்கு புத்தகம் தயாரித்துள்ளோம். 700 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பமும் வந்து விட்டது. 350 மாணவர்களையும், 5 நிறுவனங்களையும் தேர்ந்தெடுத்தாகி விட்டது. அவை தியாகராசர் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களுக்கு நாங்கள் பயிற்சி வகுப்பு நடத்தினோம். அப்போது 97 லேயே தமிழ் வழியில் பொறியியல் கல்வி வந்துவிடும் என நின¬த்தோம். அப்போது தி.மு.க. ஆட்சிதான். தி.மு.க. அரசின் அமைச்சர் களில் சிலர் பொறியியல் படிப்பைத் தமிழ் வழியில் கொடுக்கக் கூடாது. அதைப் படித்தால் காட்டு மிராண்டி ஆகிவிடுவோம் என்று சொன்னார்கள். இன்னொரு பக்கம் அமைச்சர்கள் வேண்டும் என்கிறார்கள். கடைசியில் அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் இதற்கு அனுமதி தரவில்லை என்ற காரணம் அரசால் சொல்லப்பட்டது.அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் அனுமதி பெறாமல் ஏன் விளம்பரம்  34

செய்தீர்கள்? ஏன் விண்ணப்பம் வினியோகித்தீர்கள்? இந்த மாணவர்கள் கதி என்ன? பிறகுதான் தெரிகிறது. அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் மொழி சம்மந்தமாக ஒன்றும் சொல்லவில்லை. வட இந்தியாவில் ஹிந்தி வழியில் பொறியியல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் சொன்னது என்ன வென்றால், கட்டமைப்பு வசதிகள் சரியாக இருக்க வேண்டும்; பாடத்திட்டம் ஒன்றாக இருக்க வேண்டும்; எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லித் தாருங்கள் என்றனர். இப்போது தி.மு.க. மீண்டும் இதைக் கொண்டு வருகிறது.

ஏன் 97ல் தோல்வியுற்றதை 2010ல் கொண்டு வருகிறீர்கள்? அன்றே கொண்டு வந்திருந்தால் ஆயிரம், இரண்டாயிரம் மாணவர்கள் படித்திருப்பார்களல்லவா? எனக்கு என்றைக்கு தேவைப்படுகிறதோ அன்று நான் மொழியை எடுத்துக் கொள்வேன் என்பதுதான் தி.மு.க.வின் மொழிக் கொள்கை. Hindi Never English Ever என்றுதானே சொன்னார்கள். தமிழ் குறித்து ஒன்றும் சொல்லவில்லையே. தி.மு.க. தேர்தலில் மொழியை பயன்படுத்தியது போன்று பிற இயக்கங்கள் பயன்படுத்தவில்லை. தேசிய இயக்கமோ பொது உடமை இயக்கமோ மொழியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினார்கள்.

சோவித்யூனியனோடு தொடர்பிருந்த காலகட்டத்தில் சோவியத் நூல்களில் ஏராளமான அறிவியல் நூல்கள் தமிழ்ப்படுத்தப்பட்டன. இயற்பியல் நூல்கள், வேதியியல் நூல்கள், விலங்கியல் நூல்கள், செவிலியர் பாட நூல்கள் இவையனைத்தும் வெளிவந்தன. இத்தகைய மொழிபெயர்ப்பில் நிறையப்பேர் ஈடுபாட்டோடு வேலை செய்தனர். தாமரையில் நிறைய அறிவியல் கட்டுரைகள் வெளிவந்தன.

கே. : எம்.ஜி.ஆர். எவ்வாறு தமிழ் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்? அது மிகவும் ஆச்சர்யமாக உள்ளதே!

தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாக்க காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., எழுத்துச் சீர்திருத்தத்துக்கும் முதன்மை கொடுத்தார். பெரியார் எழுத்துச் சீர்த்திருத்தம் குறித்து நீண்ட வருடங்கள் கூறிவந்தார். ஏன் நடைமுறைக்கு வரவில்லை என்றால் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக குமாரசாமியோ அல்லது ஓமந்தூரார் ஆகிய இருவரில் ஒருவர் இருக்கவேண்டும். எழுத்து சீர்திருத்தம் பற்றிய கோப்பு சென்ற தருவாயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இராஜாஜி ஆட்சிக்கு வந்தார். ராஜாஜி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தக் கோப்பை பார்த்துவிட்டு செயல்படுத்துவதா? வேண்டாமா? என்பதான அரசியல் நிலைப்பாடு வந்துவிட்டது. இதனை செயல்படுத்தினால் பெரியாருக்கு முக்கியத்துவம் வந்துவிடுமோ! என்ற நிலை. அதனால் எழுத்துச்சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. பிறகு தெ.பொ.மீ பெரியார் பிறந்த நாள் மலரில் விடுதலையில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் “இப்பொழுது பெரியாரின் தம்பிகள் பதவியில் இருக்கிறீர்கள். எனவே எழுத்துச் சீர்த்திருத்தத்தைக் கொண்டு வாருங்கள்’’ என 72 அல்லது 73 ல் எழுதினார்.

அப்பொழுதும் எழுத்துச்சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவில்லை. 92ல்தான் எழுத்துச் சீர்த்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. அதற்குக் காரணம் மலையாளத்தில் எழுத்து சீர்த்திருத்தம் வந்தாச்சு. அவர்கள் இதற்கு கருத்தரங்கோ, நடைப்பயணமோ, கோஷங்களோ போடவில்லை. எழுத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது மலையாளப் பத்திரிகையின் தலைப்பு எழுத்துக்கள் புதிய எழுத்தில் இருக்கும். உள்ளே வருகின்ற செய்திகள் பழைய எழுத்தில் இருக்கும். மனதில் புதிய எழுத்துக்கள் பதிய வேண்டும் என்பதால் இச்செயல்பாட்டை மேற்கொண்டனர். இதனுடைய பாதிப்பு எம்.ஜி.ஆருக்கு இருந்திருக்கலாம். பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறியுள்ளார். இப்போது கணிப்பொறி எல்லாம் வந்துவிட்டது. அதனால் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்தலாம் என யாராவது அறிவுரை கூறியிருக்கலாம். அதனால் இதனை நிறைவேற்றினால் அரசியல் ரீதியாக தமக்குப் பேர் வரும் என எம்.ஜி.ஆர். நினைத்திருக்கலாம். ஆக இத்தகைய மூன்று நாலுவிதமான காரணங்கள் தென்படுகின்றன.

(புத்தகம் பேசுது செப்டம்பர் 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It