விலங்குகளின் விநோத நடத்தைகள்
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 102
விலை: ரூ. 40/-
நந்தியின் முதுகில் உள்ள திமில் விலங்கியல் குறித்த தமிழ் நூல்கள் மிகவும் அரிது. அதிலும் இத்தாலஜி (Ethology) எனும் விலங்கு நடத்தை இயல் பற்றிய புத்தகம் என்றால் ரொம்ப அபூர்வமானது தான். சாதாரண வாசகர்கள் படித்துணரும்படி கதை சுவாரசியம் குன்றாமல் எழுதுவது ரொம்ப சிரமம். முனைவர் பா. ராம் மனோகர் முயற்சி செய்திருக்கிறார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். நிறைய கனமான விஷயங்கள்...ஆச்சரியங்கள் என்று புத்தகம் முழுவதுமே நிரம்பிக் காணப்படுகின்றன.
ஒரே மாதிரி நடத்தை மரபு மாற்றதாங்கு திறன் ((Resistence to phylogenetic change) முதல் குறியீடு அல்லது தூண்டுதல் கொள்கை வரை பல கனமான அறிவியில் விஷயங்களை அடுத்தடுத்து புத்தகம் எடுத்து வீசுகிறது. ஆய்வு விலங்குகளை இனம் கண்டு அழிவிலிருந்து காக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை விவரிப்பது புத்தகத்தின் மிகவும் பயனுள்ள பகுதி. நடத்தையை நடத்தும் ஹார்மோன்கள் பற்றிய விளக்கம்..தேனீக்களின் நாட்டிய மொழி....பல மைல் சென்று திரும்பும் பறவைகள் என பல ஆச்சரியங்கள் இந்நூலில் உண்டு.
தாமோதர் தர்மானந்த கோசாம்பி
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 22
விலை: ரூ. 15/-
ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம். இது டி.டி. கோசாம்பி கணிதவியல் பேராசிரியர். அரசியல் பொருளாதாரம், சமூகவியல் குறித்த பல நூல்களையும் அவர் எழுதியுள்ளார். சிறுவர்களுக்கு அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரே நூல் இதுதான். கிராமத் தலைவரின் மகனான ராமன் கால்நடைத் திருவிழாவில் தனது காளை மாட்டை ஊர்வலத்தில் முதலில் அழைத்துச் செல்ல அதற்கு முதுகில் திமில் ஏன் என்று கேட்குமிடத்தில் தொடங்கி, நாய், பூனை, எருமை என பல வனவிலங்குகள் அரச மரம் பேசும் எளிய சித்திரமாய் விரிந்து செல்கிறது இக்குட்டிக்கதை.
மனித குரங்காக இருந்த மனிதன் நாகரிக மனிதனாக மாறியதை அவர்கள் பேசித் தீர்க்கிறார்கள்...சுவாரசியமான விஷயம்.
இயற்பியல் உலகம்
முனைவர் தினேஷ் சந்திர கோஸ்வாமி
தமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன்
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 103 விலை: ரூ. 40/-
நமது அன்றாட வாழ்க்கை இயற்பியலால் ஆனது. இன்று நாம் அனுபவிக்கும் நவீன மனிதன் தவிர வேறு உயிரினங்களிடம் கைக்கடிகாரம் கிடையாது. ஆனால் அவை துல்லியமாக காலையில் சூரியன் வரும்முன் எழுந்து இருட்டும் முன் படுத்து.......வேளைக்கு உணவருந்தி.....வாழ்வது எப்படி. காலையில் காகம் கரைவது ஏன்? சேவல் கூவுவது எதனால்? இரவில் வெளவால், ஆந்தையும் பகலில் கழுகும் சுற்றுவது எதை வைத்து? இவற்றை சரியாக வழி நடத்த உயிரினங்களுக்குள் ஒரு நேரங்காட்டி இருக்கிறது என்கிறது இந்தப் புத்தகம்.
குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்றார்போல செடி கொடிகள், மலர் மலர்வது முதல், விடிந்ததும் எலிகள் தங்கள் வலையில் மறைவது வரை அனைத்தின் கால நேர ரகசியத்தையும் புட்டு வைக்கும் அழகான முயற்சி இது. ஆஸ்துமா அதிகாலையில் உக்கிரமாக இருப்பதும்..கல்லீரல் இரவில் வேகமாக வேலை செய்வதும், சில அறுவை சிகிச்சைகள் அதிகாலையில் செய்யப்படுவது பற்றிய காரணத்தையும்கூட நூலாசிரியர் ஆய்ந்துறைத்திருக்கிறார்.
ஜுவின் கதை
பால் சக்காரியா
தமிழில் சங்கரராமசுப்பரமணியன்
ரூ. 135/-
சிறுமி ஜுவைப் பொறுத்தவரை பழைய பொருட்கள் தான் புதியவை. அவள் அம்மா வேலை பார்க்கும் வீடுகளில் குறிப்பாக பழைய பாடப்புத்தகங்களை சில நேரங்களில் மறைந்திருக்கும் புதையல்கள் அவள் மனதை கவர்ந்தவை என்று பல விஷயங்களை பற்றி ஒரு சிறுமியின் கதையைச் சொல்கிறது.
உயிர் தோன்றியது எப்படி?
டாக்டர் ஏ.என். நம்பூதிரி
தமிழில்: அம்பிகா நடராஜன்
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 51 விலை: ரூ. 25/-
கோழி முதலில் தோன்றியதா......முட்டை முதலில் தோன்றியதா சர்ச்சை இன்றும் கூட பள்ளிக்கூடங்களின் வராண்டாவிலும் மைதானத்திலும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்தின் முனைவர் ஏ.என். நம்பூதிரி எழுதி அம்பிகா நடராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ள இந்தப் புத்தகம் அப்படி ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாது. மேலும் அறிவியலின் ஆதார கேள்விகளை கதை ஆழப்படுத்தி ஆர்வப்படுத்த பெரிதும் உதவும்.
‘சுவாசிக்காத வைரஸ் உயிருள்ளதா?’ எனத் தொடங்கும் இந்த நூலில் சுஜாதா எனும் சிறுமியின் தேடல் வழியே நாம் குரோமோசோம், நியூக்ளிஸ், புவித்தோற்றம் பிற்போக்கு முற்போக்குவாதிகளின் வாதங்கள், டார்வினின் பயணம் என போய், நுண்ணோக்கியை லியு வென் ஹாக் வழி நின்று கண்டுபிடித்து லூயிஸ் பாஸ்டர் வழியே உயிரிகளை கண்ணாடிக் குடுவையில் உற்பத்தி செய்து....யூரி மில்லர் ஆய்வு வரை சென்று அற்புதமான ஒரு தேடலை நிகழ்த்துகிறது.
மனிதருக்கு தோழமை
ஆதி வள்ளியப்பன்
அறிவியல் வெளியீடு, சென்னை _ 86.
பக்: 64
விலை: ரூ. 25/-
விலங்குகளோடு இயைந்து மனிதன் வாழ்ந்த ஒரு காலம் உண்டு. இன்று காடுகளின் ராஜா ஆகிவிட்ட அவன் தனது பழைய கால உற்ற தோழர்களான விலங்குகளை மதிப்பது இல்லை. பல உயிரிகள் அழிவின் விளிம்பில் உள்ளன......பல, இனிதோன்றப் போவதே கிடையாது. காக்கை குருவிகள் கூட பலவகை மாற்றங்களுடன் மனிதனை சகித்தபடி வாழ்வதை காண்கிறோம்...மண்புழு விவசாயிகளிடமிருந்து விடைபெற்று நாளாகிறது.
மனிதனால் பழக்கப்படாத, வளர்க்கப்படாத ஆனால் மனிதனோடு தோழமை கொண்ட, பல்லி, தவளை, பாம்பு, அணில், வண்ணத்துப்பூச்சி, தேனீ, எறும்பு, நத்தை எனத் தொடங்கி துளிர் இதழில் வெளிவந்த ஆறு கட்டுரைகள் மூலம் விலங்கு உலகம் இல்லையேல் மனித உயிரே அழிந்து போகும் என்பதை குழந்தைகளுக்கு அழகான எளிய நடையில் விளக்கிச் சொல்கிறார் ஆதி. வள்ளியப்பன். முட்டையிட கரைக்கு வரும் பங்குனி ஆமை குறித்தும், உணவு முறைப்படி விலங்குகளை வரிசைபடுத்துவது குறித்தும், தனது குடலை வெளியே துப்பி உயிர் தப்பும் கடல் வெள்ளரி ஆகியவைகள் குறித்த செய்திகள் தமிழுக்கே புதிது.
தமிழ்ப் பதிப்புலகம் ஓர்அறிமுகம்
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்,
சென்னை_17.
விலை: 60/_ பக்: 176
தொடக்ககால தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளான வையாபுரிப்பிள்ளை, உ.வே.சா., தாமோதரன் பிள்ளை தொடங்கி சில வருடங்களுக்கு முன் வந்த கிழக்குப் பதிப்பகம் வரை பதிப்புலகத்துடன் நூலாசிரியர் கொண்டுள்ள தொடர்பை சுவாரசியமாக இந்நூலில் கூறுகிறார். பழைய நல்ல அரிய புத்தகங்களை தூக்கியெறியாமல் நூலகங்களுக்கு அனுப்புங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறார். கணினி காலத்தில் சுவடியிலிருந்து சி.டிக்கு வந்துவிட்ட காலத்தில் பதிப்பகங்கள் பிழையின்றி புத்தகங்களை வெளியிட வேண்டுமென விரும்புகிறார். தமிழ் பதிப்புலக வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு அறிமுக நூலாக அமையும். காலப் பெட்டகம்.
மரக்காணமும் உப்பளங்களும்
பதிப்பு: தேவ. பேரின்பன்
தொகுப்பு: தேவ. பேரின்பன்
தென்னக ஆய்வு மையம்,
சென்னை - 14.
பக்: 147 ரூ. 75/-
மனிதன் கவிதையும், காவியமும் படைப்பதற்கு முன்னால் - தத்துவங்களையும் கொள்கைகளையும் வகுத்துக் கொள்வதற்கு முன்னால் - கலைகளையும் அரசியலையும் பயில்வதற்கு முன்னால் முதலில் உண்ணவேண்டும்; உடுக்கவேண்டும்; குடியிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வாழ்ந்த தமிழர்களின் வாணிப, பொருளாதார செய்திகளை ஆய்வு செய்கிறது இந்நூல்.
விளையாடுவோம் சிந்திப்போம்
சி.எஸ். வெங்கடேஸ்வரன், எம்.ஏ. தேவதாஸ்
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 131 விலை: ரூ. 60/-
‘கொர்’ என்று சுற்றினால் சத்தமிடும் கொக்கரட்டை, காகித காற்றடி, சீப்பு, மவுத் ஆர்கன், தீப்பெட்டி டெலிபோன் இப்படி குழந்தைகள் வீட்டில் கிடைக்கும் பழைய பொருட்களை கொண்டு விளையாட்டுப்பொருட்கள் செய்வது இப்போது குறைந்து விட்டது என்பது ரொம்ப துயரமான விஷயம். ஆனால் விளையாடுவோம், சிந்திப்போம் என்று புத்தகம் நமக்கு உதவிக்கு வருகிறது.
நூறு விளையாட்டுக்கருவிகள் செய்ய குழந்தைகளுக்கு சத்தமின்றி சொல்லித்தரும் அருமையான புத்தகம். தாள வாத்தியம், பேப்பர் கிடார், கை ஜால்ரா என இசை கருவிகள் பூமராங், பலூன் ராக்கெட், ஆகாயபம்பரம் என அறிவியல் விளையாட்டு, நீர்மின் நிலையம், பாட்டில் பவுண்டேன், அதிர்வு காற்றாடி, பாராசூட் என்று விஞ்ஞானிகளுக்கு வேலை.....இப்படி பக்கத்திற்கு பக்கம் அசத்தல் இந்தப் புத்தகம். ஒரு கோடை விடுமுறையில் கொல்லை வேலைகளை இந்த ஒரு புத்தகம் செய்ய வைக்கும்......குழந்தைகளோடு பெற்றோர்களையும்....
டார்வினுக்கு மீண்டும் வெற்றி
பொ. இராஜமாணிக்கம்
அறிவியல் வெளியீடு, சென்னை 86.
பக்: 32
விலை: ரூ. 10/-
‘பூமித் தாய்க்கு என்ன வெல்லாம் நிகழ்கிறதோ... அதுவெல்லாம் அவளது குழந்தைகளுக்கும் நிகழும்‘ டார்வினின் பரிணாம தத்துவம் இப்பூவுலகின் மீது புதிய புரிதலை போர்த்துவதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அது என்றாலும்....இன்று மனிதன் ஒரே இனம்..... ஹோமோ காப்பியன், ஹோமோ எரக்டஸ் எனும் பொது உபரியிலிருந்து வந்தவன்.
நமது சமீபகால வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் டார்வின் மீண்டும் மீண்டும் எப்படி வெற்றிப் பெறுகிறார் என்பதை இந்தப் புத்தகம் ஆழமாக பேசுகிறது. மரபணு ஆராய்ச்சியில் தன்னை இந்த மண்ணின் மைந்தனாய் பொய்யுரைத்த சூரியன், தோற்று....திராவிட மரபணுவின் பழமை வென்றதை அறிவியல் ரீதியில் சொல்லிச் செல்கிறது. அறிவுக் கூர்மை என்பது இனம் சார்ந்ததா....மரபணுக்கள் சார்ந்ததா எனும் பகுதி குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய பகுதி ஆகும்.
‘குடி’யின்றி அமையா உலகு
தொகுப்பு: முத்தையா வெள்ளையன்
வெளியீடு: புலம், சென்னை 5.
விலை:120/- பக்: 240
மனிதர்கள் குடிப்பது பற்றி பல முரண்பட்டக் கருத்துகள் உள்ளன. இன்று தமிழக அரசே டாஸ்மார்க்கை நடத்தும் இந்தச் சூழலில் குடிப்பது பற்றி தந்தை பெரியார் முதல் பத்து எழுத்தாளர்களின் எண்ணங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது. இந்தியர்களிடம் எப்படி மது பழக்கம் ஏற்பட்டது. பலவகையான மதுபானங்களை எப்படிச் செய்தார்கள் போன்ற பல கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. உலகம் தோன்றியது முதல் மனித சமுதாயம் இருக்கும் வரை மதுவை அழிக்க முடியாது. அரசே மதுக்கடைகளை நடத்துகிறதே என்று முரண்பாடு ஏற்படலாம். ஆனால் குடிப்பது, குடிக்காமல் இருப்பது போன்றவற்றை தனிமனித சுதந்திரத்திற்கே விட்டுவிடுவதே நல்லது என இந்நூல் கூறுகிறது.
சிகரங்களில் உறைகிறது காலம்
கனிமொழி
வெளியீடு: வ.உ.சி. நூலகம், சென்னை - 14.
பக்: 94 ரூ. 100/-
சிகரங்களில் உறைகிறது காலம் என்கிற இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு கவித்துவ ஆளுமையை உறுதி செய்கிறது. இந்தக் கவிதைகள் வெளிப்பாட்டுக்குப் பொருத்தமான வடிவத்தை அமைத்துக் கொள்கிறது. இசை நிகழ்ச்சிகள் முடிந்தும் எழுந்து போகாத ரசிகனின் மனநிலையை கொடுக்கிறது இத்தலைப்பு.
யார் அந்த பஞ்சமர்?
ஒரு தொலைந்த உலகு
கே. கங்காதரன்
வெளியீடு: கலைவாணி பதிப்பகம், சென்னை- 24.
விலை: 60/- | பக்: 160
தலித் மக்களின் கடந்த காலம் குறித்த வரலாறாக மட்டுமின்றி நிகழ்காலப் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் நூல் இது. பண்பாட்டுத் தளத்தில் நின்று மட்டும் பிரச்சனைகளை நோக்காமல் அரசியல், பொருளாதார தளத்தில் நின்றும் பார்த்துள்ளமை இந்நூலின் சிறப்பாகும். தக்கச் சான்றுகளுடன் மட்டுமின்றி திறனாய்வுத் தன்மையுடன் கூறப்பட்ட கருத்துகள் வாசகனின் கவனத்தை ஈர்க்கும்.
அறிந்து கொள்வோம் பாலியலை
மரு. நா. மோகன்தாஸ்
வெளியீடு: பண்பு நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர் 9.
விலை: 80/- | பக்: 128
பாலியல் என்பது உடலின் மொழி. ஆணின் உடல், பெண்ணில் உடல், சம்பந்தமான பல சந்தேகங்களை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது. 22 தலைப்புகளில் ஆண், பெண் உடல் உறுப்புகள், தாய்மைப்பேறு, குடும்பக்கட்டுப்பாடு, பால்வினை நோய்கள் என பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, பாலியலை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என இந்நூல் கோரிக்கை விடுக்கிறது.