தமிழகம் என்பது பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்னும் முப்பிரிவுகளாகவே கருதப்பட்டது. அவற்றை சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று மரபு வழிப்பட்ட அரசர்கள் நெடுங்காலமாக ஆண்டுவந்தனர். அந்தக் காலத்தைச் சார்ந்த தமிழ் நூல்களை ஆய்வு செய்யும்போது அந்தக் காலத் தமிழகம், பல்லவர் ஆட்சி தோன்றிய கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு நிலவிவந்தது என்பது புலனாகும்.
அதைத் தொடர்ந்¢து, பல்லவர் தொடர்பான தொண்டை நாடு பற்றிய செய¢திகளை ஆய்வுசெய்ய முடிகிறது. நெடுங்காலத்திற்கு முன்பு தொண்டை நாடு, ‘குறும்பர் நிலம்’ என்று பெயர் பெற்றிருந்தது. குறும்பர்கள் தங்களது ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு அங்கு வாழ்ந்தனர். காலப்போக்கில் அவர்களே தங்களது நாட்டை 24 கோட்டங்களாகப் பிரித்து, காவிரிப்பூம்பட்டினத்து வணிகருடன் கடல் வணிகம் நடத்தினர். பிற்காலத்தில் ஆதொண்ட சக்கரவர்த்தி என்பவன் இக்குறும்பரை வென்று குறும்பர் நாட்டைக் கைப்பற்றி, அதற்குத் தொண்டை மண்டலம் எனப் பெயரிட்டனர். இது, செவிவழிச் செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், கரிகாற் சோழன் அந்நாட்டைக் கைப்பற்றினான் என்றும், பின்னர் தொண்டைக் கொடியால் சுற்றப்பட்டு, கடல்வழி வந்த நாகர் மகள் மகனான இளந்திரையன் ஆண்டதால் தொண்டை மண்டலம் எனப் பெயர் பெற்றது என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. கரிகாற் சோழன் காலத்தில் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் (கி.பி.60-கி.பி.250) வரை சோழப் பேரரசுக்கு உட்பட்டிருந்த தொண்டை மண்டலம் கி.பி.3ஆம் நூற்றாண்டின் இடையில் பல்லவர் ஆட்சிக்கு மாறிவிட்டது.
கோவைக்கிழார் திரு.சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் இதற்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. அவர், ‘பல்லவர் வரலாறு’ என்ற இந்நூல் மிகத் திறம்பட எழுதப்பட்டுள்ளது. இந்நாள் வரை, வெளிவந்துள்ள பல நூல்களை ஆராய்ந்து, நாட்டின் கண் மறைந்துகிடக்கும் பல சான்றுகளைக் கண்டுப¤டித்து, பல இலக்கியங்களில் கண்ட குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஒழுங்குபடத் தொகுத்துத் தமிழ்நாட்டிற்கு ஓர் அரிய பெரிய ஆராய்ச்சி நூலாக இதன் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். படிப்பு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு, பல ஏடுகளைப் பிரித்து வைத்துக்கொண்டு ஒரு கட்டுரை நூல் எழுதி வெளியிடுவோர் போலல்லாமல் உண்மைச் சான்றுகளை அறிய வேண்டிப் பல இடங்களுக்கும் நேரிற் சென்று ஆராய்ந்த பொருள்களை விடாது ஒழுங்குபடுத்தியிருப்பதே இந்நூலுக்கு ஓர் அரிய மதிப்பு ஆகும்” என்று மனம் திறந்து டாக்டர்.மா. இராசமாணிக்கனாரை நினைவு கூர்கிறார்.
தொடர்ந்து, அவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “பல்லவர்கள், ஏழு நூற்றாண்டுகள் தமிழ்நாட்டின் மன்னர் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றும் அவர்களுடைய பண்டைக் குலம் இதுவென்று கூறுவார் இல்லை. வடமேற்கு நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும், தென்னாட்டிலேயே இருந்தவர்கள் என்றும் பல வழியாக ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் மூளையில் ஒருவிதக் கோட்பாடு முளைத்து நிலை நின்றுகொண்டிருந்தது, அந்தக் கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக்கொண்டு வருகிறது.
“இப்போதும் தொண்டை நாட்டிலும், அதனைச் சுற்றிலும் போத்தராசா கோயில்கள் உண்டு. இவை பல்லவர் காலத்து வழக்கு என்று அறியக்கூடும். அக்கோயில்களை, அரச பரம்பரையினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர் ‘தமிழ் நாட்டினரே’ என்று கொள்வதே தகுதி எனலாம்.”
வரலாற்று ஆய்வாளரும் தமிழறிஞருமான கோவைக்கிழார் குறிப்பிடும் அடிப்படைகள் இந்த ஆய்வு நூலுக்குப் பொருந்துவனவாக உள்ளன.
தன்னுடைய ஆய்வு முயற்சிக்குத் தூண்டுதலாக அமைந்தவை குறித்து ஆய்வாளர் தனது கருத்துக்களை முன் மொழிகிறார். அவை, இந்த ஆய்வு குறித்த ஒரு தெளிவான பார்வையை வாசிப்பவருக்கு அளிக்கிறது. “பல்லவர் காலத்து இலக்கியங்களும், ஏறத்தாழ பல்லவர் காலத்தை நன்முறையிற் படம் பிடித்துக் காட்டும் பெரிய புராணமும் தமிழ்க் கல்வி நூற்களாகக் கொள்ளப் பெற்றன. இந்நூலின்கண் புதிய வரலாற்று முடிவுகள் பல குறிக்கப்பெற்றுள. அவை ஆராய்ச்சியாளர் நடுவு நிலைமை வழாத ஆராய்ச்சிக்கு உரியவாகும். அவற்றுள் இடைக்காலப் பல்லவர் போர்கள், நெடுமாறன் முதல் விக்கிரமாதித்தன் போர் (நெல்வேலிப் போர்) கந்த சிஷ்யன் மீட்ட கடிகை, இராசசிம்மன் காலத்துப் போர்கள் என்பன குறிக்கத்தக்கன.”
இந்த ஆய்வுநூல், ‘பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்’ முதலாகத் தொடங்கி, ‘அரசர் பட்டியல்’ வரை பகுப்பாய்வு முறையில் வடிவமைக்கப்பட்டு வரலாற்றின் வியக்கத்தக்க நிகழ்வுகளையும் மாற்றங்களையும், வளர்ச்சி நிலைகளையும் தகுந்த அடிப்படை ஆதாரங்களை முன்வைத்து, உண்மைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் விளக்குகின்றது. தகுந்த வரைபடத்துடன் அன்றைய பாண்டிய நாடு, சோழ நாடு, சேர நாடு, தொண்டை நாடு போன்றவற்றைத் தெளிவாக விளக்குகின்றது.
அன்றைய வடநாட்டு நிலைமைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் ஆய்வாளர், கரிகாற் சோழன் காலம், செங்குட்டுவன் காலம் போன்றவற்றை விளக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வட நாட்டின் மீது போர் தொடுத்த நிகழ்வுகளையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
தொடர்ந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த நகரங்களைப் பற்றிய புராணம், தொன்மம் போன்றவற்றை அடிப்படைகளாகக் கொண்டு சில வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். “வடமொழிப் புராணங்களின் கூற்றுப்படி காஞ்சி மாநகரம் இந்தியாவில் உள்ள புண்ணிய பதிகள் ஏழனில் ஒன்றாகும். இயூன்-கிங் கூற்றுப்படி, புத்தர் கி.மு.5ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வந்து சமய உண்மைகளை உரைத்தார். அசோகன் பல தூபிகளை நாட்டிப் பௌத்த சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தான். நாலந்தா பல்கலைக்கழகத்தில் சிறந்த பேராசிரியராக இருந்த தர்மபாலர், காஞ்சிபுரத்தினர் என்று கூறப்பட்டுள்ளனர். அசோகன் கட்டிய தூபிகளில் ஒன்று ‘இயூன்-கங்’ காலத்தில் 100 அடி உயரத்தில் காஞ்சியில் இருந்ததாகத் தெரிகிறது.”
இவை போன்ற கண்டுபிடிப்புகளை கலை, இலக்கியங்களிலிருந்து கண்டறிந்து, வரலாற்றுச் சிறப்புக்களை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர்.
அடுத்து, ‘லோக விவாகம்’ ‘அவந்தி சுந்தரி கதை' மத்தவிலாசப் பிரகசனம்’, ‘சைவத் திருமுறைகள்’ நாலாயிரதிவ்யப் பிரபந்தம், நத்திக் கலம்பகம், பாரத வெண்பா நூல்களின் தனித் தன்மைகளைக் குறிப்பதோடு, அவற்றில் காணப்படும் வரலாற்று உண்மைகளை இனம் காட்டுகிறார்.
அதைப் போலவே, ஊர்களின் பெயர்கள், குகைக் கோயில்கள், கற்கோயில்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள், பிற நாட்டினர் குறிப்புகள், ஆராய்ச்சியாளர்களின் உழைப்பு, நூலாசிரியர்குறிப்புகள் போன்ற விவரங்களும் உண்மைகளும் இந்த ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன.
அடுத்து, களப்பிரர்களைப் பற்றி விரிவான விளக்கங்களைச் சுருக்கமான முறையில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்து, முதற்காலப் பல்லவர் (கி.பி.250-340), இடைக்காலப் பல்லவர் (கி.பி.340-575) பிற்காலப் பல்லவர் (கி.பி,575-900) என்று அவர்களின் வரலாற்றுக் காலத்தை மூன்றாகப் பகுத்து, அவை ஒவ்வொன்றின் தனித்தன்மைகளையும், பொதுப் பண்புகளையும் முக்கியமான தகவல்களுடனும், ஆதாரங்களுடனும், தரவுகளுடனும் விளக்கி, அவர்களுடைய தனிச்சிறப்புகளை அடையாளப் படுத்துகிறார்.
அவற்றில் பிற்காலப் பல்லவர்களின் காலம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருந்ததை ஆய்வாளர் பல வகையான எடுத்துக் காட்டுக்களுடன் தெளிவுபடுத்துகிறார். சமண மதத்தின் பின்னடைவு, சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சி, பல்லவ அரசின் விரிவாக்கம், மலைக்கோயில்கள், குகைக் கோயில்கள், கற்கோயில்கள் போன்றவைகளின் தோற்றமும் வளர்¢ச்சியும் மற்றும் விரிவாக்கம், வடமொழிக் கல்லூரிகளின் தோற்றம் போன்ற வளர்ச்சி நிலைகளுடன் தமிழ்மொழி வளர்ச்சியடைந்ததையும் ஆய்வாளர் இனம் காட்டுகிறார். தமிழில் தேவாரத் திருமுறைகள், நாலாயிரம் பாடல்கள், நந்திக் கலம்பகம், பாரத வெண்பா போன்றவை இந்தக் காலகட்டத்தில்தான் தோன்றி வளர்ந்தன.
பல்லவர்¢ வரலாற்றில், குறிப்பாக, பிற்காலப் பல்லவரான சிம்மவிஷ்ணு, மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், பரமேசுவர வர்மன், இராச சிம்மன் வரை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாட்டை ஆட்சி செய்தனர். அதற்குப் பின் புதிய பல்லவர் மரபு வடிவம் பெற்று ஆட்சி தொடர்ந்து நிலைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் நந்திவர்மன், தந¢திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் போன்றவர்கள் பல்லவர் ஆட்சியைத் தொடர்ந்தனர்.
ஒவ்வொரு பல்லவ அரசரின் தனித்தன்மையையும், அவர்கள் நாட்டுக்கு அளித்த தமது தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பையும் ஆய்வாளர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். அவர்கள், பல்லவர் வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றங்களைச் செறிவாகவும், தெளிவாகவும் அடையாளப்படுத்துகிறார்.
காட்டாக, சிம்ம விஷ்ணுவைப் பற்றி ஆய்வாளர் தெரிவிக்கும் ஆய்வு முடிவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். “அவனைத் தொடர்ந்து வந்த அவனுடைய மகனான மகேந்திரவர்மன் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ அரியணை ஏறினான்.(1) இவனது அரசியலின் முதற் பகுதியில் சமணம் உச்ச நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உச்ச நிலைக்கு வந்தது. இவனே சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினான். (2) குகைகளைக் கோயில்களாகக் குடைந்தவன் இவனே; பாறைகளைக் கோயில்களாக மாற்றியவனும் இவனே. (3) இவன் காலத்தில்தான் பல்லவர் - சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது. அப்போராட்டம் இவனுக்குப் பின் 150 ஆண்டுகள் வரை ஓய்ந்திலது. (4) சிற்பம், ஓவியம், இசை, நாடகம் முதலிய நாகரிகக் கலைகள் இவனது ஆட்சியில் வளர்ச்சியுற்றன. வரலாற்றினூடாக வளர்ந்து வந்த பல்லவர் சமுதாயம் அவ்வப்போது இயற்கைச் சீற்றங்களையும், சிறிய, பெரிய போர்களையும் எதிர்கொண்டு சமாளிக்கவேண்டிய நிலைமை தொடர்ந்து இருந்துவந்தது. அவைகளைப் பற்றிய விவரங்களையெல்லாம் ஆய்வாளர் சேகரித்து ஒருங்கிணைத்து, ‘பல்லவ வரலாறு’ என்ற தனது ஆய்வு நூலை வடிவமைத்திருக்கிறார் என்பதை வாசிப்பு அனுபவம் நம்மை உணரச் செய்கிறது.
கலை, கலாச்சாரம், பண்பாடு நிறைந்த ஆன்மிக வாழ்க்கையில், பல்லவர்களின் ஆக்கரீதியான சாதனைகளை எப்படியெல்லாம் தொடர்ந்து நிகழ்த்திவந்தார்கள் என்பதை இந்த ஆய்வு நூல் அழுத்தமாக உணரச் செய்கிறது. அவைகள் வரலாற்றின் அடையாளங்களாக இன்றும் நின்று நிலைபெற்றுள்ளன.
ஓவிய-சிற்பக் கலைக்கூடங்கள் குறித்து ஆய்வாளர் தன் அனுபவங்களையும், புரிதல்களையும், அறிதல்களையும் வெளிப்படையாகத் தெரிவ¤க்கிறார்: “பல்லவரை உலகம் புகழ வைத்த பெருமை ஓவிய-சிற்பப் புலவர்க்கே உரித்தானது. உயிருள்ள சித்தன்ன வாசல் ஓவியங்கள், மாமல்லபுரம், வைகுந்தப் பெருமாள் கோயில், கயிலாச நாதர் கோயில் இவற்றில் உள்ள வியப்பூட்டும் சிற்பங்கள், ¢இன்ன பிறவும் இயற்றிய பெருமக்களின் கலை அறிவை நாம் என்னவெனப் புகழ்வது!”
“ஓவியம் வரைதலும், சிற்பம் பொறித்தலும் எளிய செயல்கள் அல்ல. பல்லவர் கால ஓவிய சிற்பங்கள் இன்றைக்கு 1300 ஆண்டுகட்கு முற்பட்டவை; ஆயினும் இன்று செய்தாற்போல காட்சி அளிப்பவை எனின் இவற்றில் அமைந்துள்ள வேலைத்திறனை என்னென்பது.”
“உலகில், அறம் பொருள் இன்பம் நுகரவும், வீடுபேற்றுக்குரிய நெறிகளைப் பயிலவுமே பண்டைக் காலத்தார் கல்வி கற்றனர். அவர்கள் உயிருக்கு உறுதிபயக்கும் கல்வியையும் சிறப்பாகக் கொண்டனர்.”
அந்தக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக அங்கு காஞ்சிக் கல்லூரி, கடிகை, பாகூர், வடமொழிக் கல்லூரி போன்றவை நிறுவப்பட்டுக் கல்வியறிவு வழங்கப்பட்டன.
“பல்லவர் காலத்தில் கயிலாய நாதர் கோயில் போன்றவை பல்கலைப் பள்ளிகளாகவும், இருந்து வந்தன. அங்கு சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம், சமயக் கல்வி, சாத்திரக் கல்வி, இன்ன பிறவும் கற்பிக்கப்பட்டு வந்தன.”
மேலும், கல்வியறிவு வழங்க நாட்டில் பல இடங்களில் சமயம் சார்ந்த சைவ மடங்கள், பௌத்த கலை இடங்கள், சமண கலை இடங்கள் போன்றவை வழங்கப்பட்டன.
“இதுகாறும் கூறியவற்றால் பல்லவர் ஆட்சியில் இருந்த மக்கள் பொதுக் கல்வி அறிவும் சமயக் கல்வி அறிவும், பிற கலைகளில் அறிவும் பண்படப் பெற்றிருந்தனர் என்பதைப் பாங்குற உணரலாம்”என்று பெருமிதம் அடைகிறார் ஆய்வாளர்.
அதற்கு அப்பாலும் இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற கலைகளைப் பயிலவும், கற்பிக்கவும் தனித்தனியாகக் கலைக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
‘கோ நகரம்’ என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் நகரங்கள் நிறுவப்பட்ட செய்தியும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
‘பல்லவர் வரலாறு' என்ற இந்த ஆய்வு நூலில் டாக்டர்.மா. இராசமாணிக்கனார், தனது முடிவுரையில் தன் கருத்தை வெளிப்படையாக மனம் நெகிழ்ந்து வெளிப்படுத்துகிறார்.
“காஞ்சி மாநகரம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகச் சிறப்புற்று விளங்கும் மாநகரம் எனலாம். இது, நகர அமைப்பில் இணையற்று இலங்குவது; சமயத்துறையில் சிறப்புற்று விளங்குவது; வரலாற்றுத் துறையில் வளம் பெற்று இருப்பது. இப்பெருநகரம் பல மரபுகளைச் சேர்ந்த முடி மன்னர்களைக் கண்டது. பல படையெடுப்புகளைக் கண்டது. இதனை ஆண்ட அரசர்கள் மறைந்தனர், இதன் மீது படையெடுத்த பார் மன்னரும் மறைந்தனர்; ஆயின் காஞ்சி இன்றும் நின்று நிலவுகிறது!”
“தனது பண்டை வரலாற்றைச் சிதைவுகள் வாயிலாகவும், கோயில்கள் வாயிலாகவும் தன்னடியில் மறைப்புண்டு வெளிப்படும் பொருள்கள் வாயிலாகவும் நமக்குப் புன்முறுவலோடு அறிவித்து நிற்கும் காட்சி, வரலாற்று உணர்ச்சி உடையாருடைய கண்கட்கும், உள்ளத்திற்கும் பெருவிருந்தளிப்பதாகும்.”
இது போன்ற ஓர் உணர்வை ‘பல்லவர் வரலாறு’ தவறாமல் தோற்றுவிக்கும்!
இதுவரை முறையாகவும், விரிவாகவும், ஆழமாகவும் அறியப்படாத பல்லவர் வாழ்க்கையையும் வரலாற்றையும் தமிழ்ச்சூழலுக்கு இந்த ஆய்வு நூல் அடையாளம் காட்டுகிறது.
பல்லவர் வரலாறு | டாக்டர். மா.இராசமாணிக்கனார்
பாவை பப்ளிகேஷன்ஸ்
16 (142), ஜானி ஜான் கான் சாலை
இராயப்பேட்டை, சென்னை 600 014
தொ:044-28482441, 42155309
- சி.ஆர்.ரவீந்திரன்