இலங்கைத் தமிழர் பிரச்சனைகளைப் பற்றி தற்போது வரும் படைப்புகள் எதையும் வாசிக்க மனம் ஒப்பவில்லை. காரணம், நிம்மதியிழந்து அகதிகளாய் தவிக்கும் அந்தத் தமிழர்களின் கதி தான் என்ன? என்ற வெறுமை நிலையும், இங்கு வரும் படைப்புகள் ஏதோ ஒரு சார்பில் நின்று உணர்ச்சிக்கு தீனி போடுகின்றனவே அன்றி, அறிவுப்பூர்வமாக அணுகவில்லை என்ற நினைப்பும் தான். 

இப்படியான நிலையில்தான் ஒரு நாள் கண்ணில் பட்டது 'இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு' புத்தகம். எழுதியவர்கள் பெயரில் என்.மருத்துவமணி என்ற பெயரைப் பார்த்ததும் கை தானாக அந்தப் புத்தகத்தை எடுத்தது. தீக்கதிர் நாளிதழில் அவ்வப்போது அந்தப் பெயர் தாங்கி வந்த கட்டுரைகள், பெட்டிச் செய்திகள் ஏற்படுத்திய தாக்கம் தான் இதற்குக் காரணம். அவரோடு, ராமசாமியும் கடுமையாக உழைத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளனர். உழைப்பாளர் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 

எந்தவொரு சிக்கலான சமூக வரலாற்றையும் மார்க்சிய ஒளியில் நின்று கற்றால் அதை உள்ளபடியே புரிந்து கொள்ள முடிவதோடு, அந்தச் சிக்கலையும், அதற்கானத் தீர்வையும் கூட துல்லியமாக மதிப்பிட்டறிய முடியும் என்று நம்புவோரில் நானும் ஒருவன். அதன்படி இப்புத்தகம் இலங்கை இனச் சிக்கலைத் தீர்க்கத் தெளிவான வழி காட்டக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே மனதில் துளிர்த்தது. அவ்வாறே, இலங்கையின் பண்டைய வரலாறு தொடங்கி கடந்த சில நூற்றாண்டுகள் ஈறாக அங்கு ஏற்பட்ட மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டைய இலங்கையில் தமிழ் மன்னர்கள் கோலேச்சியது, பூர்விகத் தமிழர்கள் வளமாக வாழ்ந்தது, சிங்களர்கள் நிலை, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வருகை, காபி, தேயிலைத் தோட்டங்கள் அமைத்தது, இந்தியாவில் இருந்து உழைப்பாளர்களை குறிப்பாகத் தென்னகத் தமிழர்களை கொண்டு சென்றது, உழைக்கும் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டது என ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கால் பதித்த இடங்களில் எல்லாம் என்ன நடந்ததோ, அதுவே தான் இலங்கையிலும் நடந்தது. அங்கேயே வாழ்ந்த பூர்வீக மக்களையும், அடிமைகளைப் போல் கொண்டு வரப்பட்ட உழைக்கும் மக்களையும் ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல் சுரண்டிக் கொழுத்தனர். அதே சமயம் அவர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சி பெறாமல் தடுப்பதற்கு வழக்கமான "பிரித்தாளும் சூழ்ச்சி"யை பயன்படுத்தி மேலாண்மை செலுத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் ஒரே வித்தியாசம். இந்தியாவில் மதத்தைச் சொல்லி மக்களைப் பிரித்தனர். இலங்கையில் இனத்தைச் சொல்லி மக்களைப் பிரித்தனர். அது தான் இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இனப் பிரச்சனைக்கு பிரிட்டிஷ் பற்ற வைத்த முதல் தீப்பொறி! அத்தோடு இந்தியாவின் சாபக் கேடாக திகழும் சாதித் தீயும் இலங்கைத் தமிழரைச் சுட்டெரிக்கக் காரணமாகியிருக்கிறது.  

துரதிருஷ்டம் என்னவென்றால் இந்தியாவில் நடந்தது போல் இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தேசிய விடுதலைப் பேரெழுச்சி எதுவும் நடக்கவில்லை என்பதுதான். அத்தகைய போராட்டம் நடைபெற்றிருந்தால் அடிநிலையில் மக்கள் ஒற்றுமைக்கு தளம் அமைந்திருக்கும். ஆனால் அது நடக்காதது வரலாற்றுத் துயரமே. அதன் தொடர்ச்சியாகத் தான் அதிகாரம் கைமாற்றப்பட்ட நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் சிங்களப் பேரினவாத நிலை எடுக்கக் காரணமாகி இருக்கிறது. சிறுபான்மைத் தமிழ் மக்கள் குடியிருப்புகளில் பெரும்பான்மை இனத்தினரைத் திட்டமிட்டு குடியேற்றிய அராஜகம் அரங்கேறியது. 

அத்தகைய இன அடையாளத்தை முன்னிறுத்தி சிங்கள ஆட்சியாளர்கள் செயல்பட்ட போது தமிழர்களுக்குள் இனரீதியான ஒற்றுமை ஏதும் ஏற்படவில்லை. காரணம் வர்க்க வேறுபாடு! சாதி வேறுபாடு!! உயர் சாதி வசதி படைத்த தமிழர்கள் கீழ் சாதி, ஏழை மலையகத் தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அந்த நாட்டில் இனரீதியாக ஜனநாயகப் பூர்வமாக ஒற்றுமை ஏற்படவில்லை, ஏற்பட ஆதிக்க மனோபாவம் கொண்ட தமிழர்கள் அனுமதிக்கவில்லை.  

மாட்டு வண்டி பந்தயத்தில் தலித் ஒருவர் வெற்றி பெற்றபோது, அவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய தமிழ் எம்.பி., வெற்றி பெற்றவருக்கு பதிலாக அவர் ஓட்டி வந்த மாட்டுக்கு மாலை அணிவித்திருக்கிறார்! இதற்குச் சொன்ன காரணம், அந்த மாடு வேகமாக ஓடியதால் தானே இவர் முதலிடம் வந்தார் என்பது. சொல்லாமல் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காரணம், உயர் சாதி தமிழ் எம்.பி., தாழ்ந்த சாதிக் காரருக்கு மாலை போடுவதா? என்ற சாதித் திமிர்! 

சிங்களப் பேரினவாதிகள் இதை தங்கள் சுயநல அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதன் ஒட்டுமொத்த விளைவு பெரும்பான்மை சிங்கள மக்கள் இனவெறி நஞ்சேற்றப்பட்டனர். இத்தகைய சூழலில் இலங்கையில் செயல்பட்ட இடதுசாரிகள் ஒருகட்டத்தில் சரியான நிலைபாட்டை எடுத்தாலும், அவர்கள் அதில் உறுதியாக நிற்கவில்லை. வர்க்கக் கண்ணோட்டத்திலிருந்து இனவாதத்துக்குச் சறுக்கினார்கள். அப்புறம் வேறென்ன நடக்கும்? சிக்கல் இடியாப்பச் சிக்கலாக மாறியது. 

ஒடுக்குமுறைக்குள்ளான தமிழ் மக்கள் விடிவு காண போராட்டப் பாதைக்குத் தள்ளப்பட்டனர். அந்தப் போராட்டம் ஒன்றுபட்ட, வலிமையான மக்கள் இயக்கமாக வளர்வதற்கு மாறாக வரலாற்றுரீதியாகவும், அவ்வப்போது ஏற்பட்ட நிலைமைகளாலும் பல்வேறு திருப்பங்களுக்கு உள்ளானது. அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. ஆனால் சகோதர யுத்தத்தில் போராட்டத்தின் நோக்கம் திசைமாறியது. சரியான அரசியல் நோக்கமற்றுப் போனபோது ஆயுதப் போராட்டம் பாசிச வெறியாக மாறியது தான் எல்.டி.டி.இ.யின் பிந்தைய கால வரலாறு. 

இலங்கைக்கு உள்ளே நிகழ்வுகளைச் சர்வதேச நிலைமையுடனும் இணைத்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என அமெரிக்கா, மற்ற நாடுகளுக்கு எதிராக சண்டப் பிரசண்டம் செய்யும் சூழ்நிலையில் ஒரு இன மக்களின் நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, ஒடுக்குவது இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு அப்படி ஒன்றும் சிரமமானதாக இருக்கவில்லை. எல்டிடிஇயின் செயல்பாடு அதற்குப் பிரதானக் காரணமாக இருந்தது கசப்பான உண்மை. 

சுமார் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் வெட்ட வெளிச் சிறைச்சாலையில் வாடி வதைபடுவதில் வந்து நிற்கிறது இன்றைய துயரம்! 

அமெரிக்காவின் தாசர்களாக இந்திய ஆளும் வர்க்கம் மாறி நிற்கும் நிலையில் கதியற்றத் தமிழர்களுக்கு கை கொடுப்பார் யார் இருக்கின்றனர்? தேர்தல் சமயத்தில் பல்வேறு சாகச நாடகமாடிய தமிழக அரசியல் வாதிகள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் இதயம் பாறைகளால் வார்க்கப்பட்டதாக இருக்குமோ? இல்லாத இதயம் என்னவாக இருந்தால் யாருக்குத் தான் என்ன?  

பயங்கரவாதத்தை ஒழித்தவுடன் துயர்படும் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று முழங்கிய ராஜபட்சே அதை நிறைவேற்ற மாட்டார் என்பதைத் தான் இந்த ஐந்து மாத நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றியதில்லை என்பதே கடந்த கால வரலாறு. ஒப்பந்தத்திற்கே இந்தக் கதி என்றால் வாக்குறுதிக்கு வருத்தப்படவா போகிறார்கள்? 

இவை தான் 'இலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு' புத்தகத்தைப் படித்தபோது ஏற்பட்ட மனவோட்டங்கள். எந்தவொரு பொருள் குறித்தும் அதன் வரலாற்றுரீதியாக அனைத்து அம்சங்களோடும், திட்டவட்டமாக ஆய்வு செய்து தான் உண்மையைத் தேட வேண்டும் என்ற மார்க்சிய பார்வையில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. 

இன்றைய உச்சபட்சத் துயரத்தைச் சொல்ல வேண்டும் என்ற தவிப்போ, என்னவோ, புத்தகத்தின் நடையிலும், சொல்லும் தன்மையிலும் ஆங்காங்கே சிற்சில இடர்பாடுகளைக் கொண்டுள்ளது. சில இடங்களில் கூறியது கூறல் தென்படுகிறது. இருப்பினும் மைய நோக்கத்தில் நழுவவில்லை. 

அடுத்து, இனியொரு பதிப்பு வரும்போது புத்தகத்தில் விசயத்தைச் சொல்லும் விதத்தில் இன்னும் ஒழுங்கு செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என நம்பலாம். 

எல்லாவற்றுக்கும் பிறகு இன்னும் எஞ்சி நிற்கிறது இலங்கைத் தமிழர்களின் விடை கிடைக்காத வாழ்க்கை, கேள்விக் குறியாக.மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான வே.மீனாட்சிசுந்தரம் சொன்னதாக இந்த நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். அந்த வாசகம் இன்னும் பொருந்தி நிற்கிறது.  

"விதியே, விதியே, என் தமிழ்ச் சாதியை என்ன செய்ய நினைத்தாயோ?"

Pin It