பொதிகைத் தொலைக்காட்சியில் “தமிழ் விருந்து" என்ற பகுதியில் 66 நாட்கள் பேசிய உரைகளின் கட்டுரை வடிவம் இந்நூல். அரசியல், அறிவியல், அறவியல், வரலாறு, கல்வி குறித்தவையும், முக்கிய ஆளுமைகள் பற்றியும் உள்ள இக்கட்டுரைகள் கவிஞர்கள், வெளிநாட்டு அறிஞர்கள், நாடகச் சிற்பிகள், புத்தகங்கள் பற்றிய தலைப்புகளில் அமைந்துள்ளன. எட்டு நிமிட உரைகள் நாலு பக்கக் கட்டுரைகளாகியிருக்கின்றன.
தொலைக்காட்சியில் பேசுவது ஒருவகை சாகசம். குறிப்பிட்ட நேரத்துள் பேச வேண்டியதைப் பேசி விடவேண்டும். மேடைப் பேச்சில் இருக்கும் விஸ்தாரம் இதில் அகப்படாது. தமிழ் சின்னத்திரை தொடர்கள் ஒவ்வொரு பாகத்தை இழுத்தடிப்பது போல் பேச்சை இழுத்தடிப்பவர்கள் பலர் உண்டு. இப்படி இழுத்தடித்து நீட்டிப் பேசுவதில் வல்லவர் த. ஸ்டாலின் குணசேகரன். வரவேற்புரை ஆனாலும், நன்றியுரை ஆனாலும், சொற்பொழிவென்றாலும் ஒரே கால அளவுதான் அவருக்கு. அவரின் நேரம் காட்டிப் பேசியதை இறுக்கமான அளவில் கட்டுரையாக்கியிருப்பது சாதனைதான்.
வெகுசன சிந்தனைக்கு விருது போடும் விசயங்கள் அவருக்கு அத்துப்படி. ஆனால் தேடிக் கண்டுபிடிக்கும் முத்துக்களை தீவிரமாக மூழ்கிக் கொண்டெடுத்துக் கோர்த்திருப்பதில் சாதனை அம்சங்கள் உள்ளன. அதில் நதி நீர் இணைப்பின் முன்னோடியான காளிங்கராயன், ஆங்கிலியர் அந்தாதி எழுதிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மீன் மார்க்கெட்டில் திருமணம் செய்த அம்பேத்கர், பதுங்கு குழியில் எழுத்து வேள்வி வெ.சாமிநாத சர்மா, இங்கிலாந்து இளவரசியும் இசைப்பேரரசி சுந்தரம்பாளும் போன்ற கட்டுரைகள் அவ்வகையிலானவை. விபுலானந்த அடிகள், ஆர்.கே. சண்முகம் செட்டியார், அப்துல் கலாம், ம.பொ.சி போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட ஆளுமைகளின் சிறப்பம்சங்களை விளக்கும் கட்டுரைகள் பொது வாசகனுக்குத் தீனி போடுபவை. தொ.மு.சி. ரகுநாதன் "பஞ்சும் பசியும்" நாவலை எழுதுகையில் கைலாசமுதலியார் என்ற பாத்திரம் இறந்ததால் தேம்பித்தேம்பி அழுததை வாசிக்கிறவர்கள் அழுகிற அளவில் விவரித்திருக்கிறார்.
அவர் நவீன இலக்கியத்தில் கண்ணீர் வரவழைக்கும் நூல்களையும் இது போல் அறிமுகப்படுத்தலாம். ஜெயகாந்தனுக்குப் பின்னால் நகராமல் இருப்பது நியாயமல்லவே. தமிழ்ச் சமூகத்தின் பெருமைகளைப் பறைசாற்றுபவை இக் கட்டுரைகள். நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதைக் காட்டுபவையும் கூட.
மனிதனுக்கு மரணமில்லை
த.ஸ்டாலின் குணசேகரன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசி எண் : 044-26359906
` 230/-