முன்குறிப்பு: (1) ராக்கெட் மனிதர்கள் (The Rocket Men) - டேவிட். ஜெ மற்றும் மானிஸ் பிரண்ட் எழுதிய ‘பென்குயின்’ புத்தகம் (2) இரவை ஆள்வதற்கு (To Rule the Night) சந்திரனில் கால்பதித்த ஜிம் இர்வின் சுயசரிதை - டிஸ்கவரி வெளியீடு (3) Moon - man’s greatest adventure - தாமஸ்டேவிஸ் - அபிரஹாம் புக்ஸ் (4) நிலாவுக்கு ஒரு - பயணகைடு - மென்சல், ஹாட்டன் வெளியீடு ஆகிய நான்கு புத்தகங்களை அடுத்தடுத்து வாசித்தாலும் கீழ்கண்ட கட்டுரை அவற்றை மட்டுமே சார்ந்தது அல்ல என்பதை இதை வாசிப்பவர்கள் உணர்வார்கள்.

Rocket Man

காசி, மக்கா, மதினா, வேளாங்கண்ணி, சபரிமலை பலரும் போவதைப் போல நீங்கள் மூனுக்கு அதாவது நிலாவுக்கு போவதென்று முடிவெடுப்பதாக இருந்தால் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நான்கு புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் உதவக்கூடும். நீங்கள் இவற்றை வாசிக்குமளவு வெட்டிப்பொழுது கிடைக்காத பிசியான ஆள் என்றால் இக்கட்டுரையை கவனத்தில் கொள்வது நல்லது.

(லேட்டஸ்ட் பேஷன் நிலாவில் சென்று தண்ணீர் குடித்தல்) முதல் மனிதன் நிலாவில் கால்பதித்து கிட்டத் தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அதாவது 1969 ஜூலை 21ஆம் நாள் அந்த சாதனை நிகழ்ந்து இப்போது நாற்பது வருடங்கள் ஆகி உள்ளன. நீங்கள் பாடப்புத்தகத்தில், தினசரிகளில், வார மாத காலாண்டு காலரை ஆண்டு அரையாண்டு மற்றும் ஆண்டு இதழ்கள், எண்வரிசைபடி வரும் இதழ்கள்.......எல்லாவற்றிலும் படித்து கொரித்து... பேசி...தொலைக்காட்சி.....இணையதளம்.......முதல், வீட்டில் குழந்தைகள் இருந்தால் (நீங்கள் எழுதிய) அவர்களது வீட்டுப்பாடம்வரை யாவற்றின் வழியாகவும் அறிந்து வைத்துள்ள விஷயம்.....

நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோர் நிலாவுக்கு போனார்கள். ஆம்ஸ்ட்ராங் முதலில் கால்பதித்தார். அடுத்தது ஆல்ட்ரின்....ஆனால் மைக்கேல் கொலின்ஸ் கால்பதிக்கவில்லை. அவர் நிலாவை சுற்றிய விண்வெளி கப்பலிலேயே இருந்தபடி உதவினார்.

ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம்; அறியாமலும் இருக்கலாம். அங்கே கால் பதித்தபோது ஆம்ஸ்ட்ராங் முதலில் கூறிய வாசகம் ‘one small step for a man; a giant leap for mankind’ (ஒரு சிறு காலடி ஆனால் மனிதகுலத்தின் ஒற்றை பெரும்படி நிலை) அங்கே ‘மனித குலம் அனைத்திற்குமாக அமைதி தேடி இங்கே வந்தோம்’ (we came in peace for all mankind) எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஒரு எவர்சில்வர் அறிவிப்பு பலகையை வைத்தார்கள். அவர்கள் சென்ற விண்வெளி கப்பல் ஈகிள், கொலம்பியா நிலாவில் சென்று இறங்கிய அந்தப் பயணம் அப்போலோ 11 (பதினொன்று) என்றழைக்கப்பட்டது.

நீங்கள் மூனுக்கு போவதில் ஆர்வமாக இருப்பதால் நீங்கள் இதுவரை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போன விஷயங்களை படிக்க ஆர்வம் கொள்ளலாம். அங்கே நிலாவில் அவர்கள் 2:52:36 மணிநேரம் இருந்தார்கள். ஐ.நா. கொடியை எடுத்து சென்றவர்கள் அமெரிக்க கொடியை பறக்கவிட்டு வந்தார்கள். EASEP (Early Apollo Science Equipment Package) எனும் ஒரு மூட்டையை விண்கலம் ஏற்றிச் சென்றது. அந்த மூட்டையில் ஒரு டி.வி, காமிரா, பாலிதீன் கவரில் அடைக்கப்பட்ட துரித உணவு.......நாலு லிட்டர் குடிநீர் மற்றும் இதர விஞ்ஞானக் கருவிகள் (அதில் அங்கேயிருந்து கல்லு மண்ணு அள்ளிவரும் மண்வெட்டியும் அடக்கம்) ஆகியன இருந்தன. அவர்கள் புறப்பட்ட நாள் ஜூலை 16, 1969, இடம் கென்னடி விண்வெளி மையம் அமெரிக்கா.

இதுவரை நீல்ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிறகு ‘மனிதகுல’ அமைதிக்காக 16 (அனைவரும் ஆண்கள் அமெரிக்கர்கள்) பேர் நிலாவில் இறங்கி நடந்து, குனிந்து, குழி பறித்து, அங்கே தூங்க முயன்று, உடற்பயிற்சி, தோத்திரம், கொட்டாவி விட்டுப் பார்ப்பது, கத்தி பார்ப்பது, ப்ளையிங் கிஸ் என நமது ‘மேம்பாட்டிற்காக’ ஆய்வுகள் பல நடத்தி திரும்பியுள்ளார்கள். 16 பேருமே அமெரிக்கா நாட்டவர்கள் தான். அதற்காக நீங்கள் வருத்தப்பட

வேண்டாம்.. 2020ல் அமெரிக்கா மனிதர்களுக்கான நிலாபயணத்தை தயார்செய்து வருகிறது. அதற்குள் ஒரு ஜப்பானியரும் ஒரு சீனநாட்டு பிரஜையும் அந்த வரிசையில் முந்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது... அதுவும் ஓர் இந்தியர் உட்பட.

இந்த 2009ல் ஜனவரி இருபதாம் நாள் அன்று ஆறு சக்கர விண்வெளி ஊர்தி ஒன்று வாஷிங்டன் வீதிகள் வழியே மெல்ல மெல்ல சென்று மக்களை ஆச்சரியப்படவைத்தபடி ‘முதல் கருப்பின’ அமெரிக்க அதிபர் இருப்பிடம் முன் வந்து நின்று அதிலிருந்து முழு விண்வெளி ‘மேக்கப்’ பில் இருவர் இறங்கி அமெரிக்க கொடியோடு அன்றைய பதவியேற்பு பேரணியில் கலந்து கொண்டு அசத்தினார்கள் ஏற்பாடு NASA.. உபயம் அமெரிக்க விண்வெளியியல் மையம் செலவு 358கோடி டாலர்.! இன்னும் பதினோறு வருடங்கள் கழித்து (அதாவது 2020) புதிய Lunar Electric Rover எனும் ஊர்தி நில விண்வெளியில் ஓடப்போகிறது. அதற்கான வெள்ளோட்டம்தான் மேலே நிகழ்ந்த நிகழ்வு. Departure to the Moon Part II - The Return - இது ஆலிவுட் படத்தின் பெயரல்ல..... 2020 நிலா பயணத்திற்காக அமெரிக்கா வைத்திருக்கும் பெயர்.

கடைசியாக நிலாவுக்கு போவதை அமெரிக்கா 1972ல் நிறுத்தியபோது (அப்போலோ 16 என்பதோடு அது முடிந்ததாக அறிவிக்கப்பட்டது) ஆம்ஸ்ட்ராங் எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பவர் என்பது மாதிரி விஷயம் அல்ல இது.. (ராகேஷ் சர்மா இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யாக போட்டியிட அழைக்கப்பட்டார்! அவர் மறுத்தது வேறு விஷயம்!)

1961ல் அமெரிக்கா அதிபரான ஜான் கென்னடி ‘இந்த பத்தாண்டுகளுக்குள் நாம் நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பி உயிரோடு திரும்ப அழைத்து வந்துவிட வேண்டும்.. அமெரிக்கா சாதித்து காட்டும்’ என்று சூளுரைத்தார். இது ஓர் அரசியல் வாசகம் என்பதில் சந்தேகமே கிடையாது. பன்றிகள் வளைகுடாவை ‘கம்யூனிச’ கியூபாவிடம் (செமத்தியாக உதை வாங்கி) அமெரிக்கா தோற்ற தருணம் அது. சோவியத் யூனியன் தனது யூரிகாகரீன் பயணத்தின் மூலம் விண்ணில் மனிதனை முதலில் அனுப்பிய நாடாகி பிறகு ஒரே ஆண்டில் வாலண்டினா டெரஷ்கோவாவை விண்ணில் அனுப்பி முதல் விண்வெளி வீராங்கனையை விண்ணிற்கு அனுப்பிய நாடாகவும் ஆகி விண்வெளியியலில் தனது ஆளுமையை ஆழமாக பதித்திருந்தது. 1961 மே 25 அன்று அதிபர் கென்னடியின் அறிவிப்பு நிகழ்ந்த சூழல் இதுதான்.

அந்தக்கூட்டத்தில் அவரது உரையை கேட்டு.. ‘மை காட்..இஸ் ஹீ க்ரேஸி?’ என்று கத்தியவர்களில் ஒருவர் கிரிஸ் கிராஃப்ட். அவர்தான் நிலா பயண அப்போலோ திட்டத்தின் தலைவர் ஆக்கப்பட்டார். அப்போது கம்ப்யூட்டர் துறை இந்த அளவிற்கு வளர்ந்திருக்கவில்லை. ராக்கெட் விண்வெளியில் புவியை வட்டமிடுவதை காட்டிலும் ஏழு மடங்கு தொலைவு வரை பறக்கும் படி வடிவமைக்கப்பட வேண்டும். அப்போது அதற்கெல்லாம் அமெரிக்கர்களிடம் வசதி கிடையாது.. என்கிற உண்மையை இன்று நீங்கள் நம்புவது கஷ்டம். அமெரிக்காவாலயே முடியாததா? என்று உங்களுக்கு தோன்றுகிறதல்லவா. ‘அவன் அமெரிக்கன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்’ என்று மனசில் ஒரு ஓரமாக

துளிர்விடும் அந்தச் சிந்தனை ஒரு மனநோய் மாதிரி.. அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வந்துவிடும்..போதும் என்று இதை வாசிப்பதை நிறுத்தி விடுவீர்கள். இன்று அப்படி ஒரு மனநிலை உருவாவதே அன்றைய அந்த நிலா பயணத்தின் நோக்கம்.

நீங்கள் நிலாவுக்கு போவதென்று அதாவது மூனுக்கு போவதென்று முடிவெடுத்திருப்பதால் நாம் அது சார்ந்த விஷயங்களுக்குள் போய் விடுவது நல்லது. நீங்கள் உங்கள் மூன் முயற்சியை குறைந்த பட்சம் ஒரு விமானம் ஓட்டியாவது தொடங்க வேண்டியுள்ளது. ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் மற்றும் கொலின்ஸ் மூவரில் ஆம்ஸ்ட்ராங் கப்பல்படையைச் சேர்ந்தவராக இருந்தார். ஏனைய இருவரும் அமெரிக்க விமானப் படையில் இருந்தார்கள். இந்த மூவரை தேர்வு செய்ய ஏழு அடுக்கு பரிட்சைகள் இருந்தன. மிச்சிகன் பல்கலைகழகத்தில் இருந்த கப்பல் படை பயிற்சியகம் தேர்வுகளை மேற்கொண்டது.

மூனுக்குபோக கடும் போட்டியெல்லாம் ஒன்றுமில்லை. பாதி அமெரிக்கர்கள் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றே நம்பினார் கள். ஆனால் பெரிய அளவில் எந்த விளம்பரமும் இன்றி சத்தமில்லாமல் தேர்வு செய்வார்கள். ஒரு இருபது இருபத்தைந்து கிலோ எடைகொண்ட விண்வெளி ஆடையை சுமந்து ஓடக்கூடியவரா... கைகால் முட்டி மடக்காமல் நடந்து குனியாமல் இருந்து.. விரலை மடக்காமல் எந்த வேலையும் செய்ய முடிந்தவரா.. நின்றுகொண்டே தூங்குவீர்களா.. குறைந்த பட்சம் நானூறு மின் சுவிட்சுகள் தலை முதல் கால்வரை திரும்பிய இடமெல்லாம் இருக்க 13 அடி உயர 2 1\2 அடி அகலமே கொண்ட இடத்தில் ஏழெட்டு வாரம் வாழ முடிந்தவரா.. பறக்கும் வேகத்தில் சதை பிய்ந்து வீங்கி தொங்கி திடீரென்று சுருங்கி பின் பழைய இயல்பு நிலைக்கு வந்தாலும் உடல் வலியை தாக்கு பிடிப்பீர்களா... (இதெல்லாம் நம்ம ரேஷனில் மண்ணெண்ணெய் போடும்போது அனுபவிப்பது தானே சார் என்பவர்கள் தொடர்ந்து வாசிக்கவும். மற்றவர்கள் இரண்டு பாரா தாண்டி போகலாம்)...

அதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

விண்கலத்தில் ஏறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னிருந்து ஏழெட்டு நாள் மலஜலம் கழிக்காமல் இருக்க பயிற்சி.. அதிவெப்பம் அதிகுளிர்.... அப்புறம் தூய ஆக்ஸிஜன் சுவாசிக்க பயிற்சி... புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் மிதக்கும்போது செய்யவேண்டியவை வேண்டாதவை. இந்தச் சூழல்தான் கொஞ்சம் கடினம். நம்ம சென்னையில் இருபது மாடி உயர அப்பார்ட்மெண்டில் பாதி (19ஆம் அடுக்கிலிருந்து) இருந்து கொண்டு லிஃப்ட் அறுந்து விழும்போது எப்படி இருக்குமோ அந்த உணர்வு எப்போதும் இருக்குமாம்.. மண்டை வீங்கிவிடுவது.. இருதயம் தக்கையாக இரத்த குழாய்களில் குத்து வலி.. ஸ்வைஸ் என்று தலைகீழாகி நம்மையும் அறியாமல் ஏதாவது ஒரு மின்கம்பியை அறுத்துவிடுவது 400 சுவிட்சில் எதன் மீதாவது பட்டு ஆன்செய்யக் கூடாத எதையாவது ஆன் செய்து மாட்டிக் கொள்வதென ஆபத்துகளும் அதிகம். நிலாவுக்கு போன ஆறாவது ஆளான ஆல்பர்ட் ரெஜி என்பவருக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பால் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டு.. பூமிக்கு திரும்பியதும் ஒரு காலை எடுத்து விட்டார்கள்.

அப்புறம் சாப்பாட்டு பிரியர்கள் நிலாப்பயணத்தை தவிர்ப்பது நல்லது. உணவு எனும் பெயரில் நம்ம வாட்டர் பாக்கெட் அளவு பாலிதீன் பையில் கூழாக சோளம் கோதுமை தரப்படுகிறது. அல்லது நீங்கள் பீசா பிரியர் என்றால் அதை நினைத்தபடியே உப்பு சப்பு இல்லாத அந்த பத்தியக் கூழை முழுங்க முயற்சி செய்யலாம். எல்லாமே மேல்நோக்கியே எப்போதும் போய்க் கொண்டே இருக்கும். உணவு உட்பட.. நீங்கள் நிலாவுக்கு செல்ல ஒரு செலோடேப் மற்றும் ஒரு கத்தரிக்கோல் இதை மறக்காமல் பயணப்பையில் போட்டுக் கொள்ளவேண்டும். பாலிதீனை வெட்டியதும் உணவுக்கூழ் மேல் நோக்கி வந்து உங்கள் மூக்கு உட்பட யாவற்றின் மீதும் பொத்தென்று படியும்..இதை தவிர்க்க..சாப்பிடுவதையே தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். ஆறுதலான விஷயம் என்னவென்றால் விண்வெளியில் ரொம்ப பசிக்காது. அப்புறம் இன்னொரு விஷயம் உங்கள் உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவு பெரிய பிரச்சனை. அதை ஏறவிடாமல் பாதுகாக்க ஒரே வழிதான் உள்ளது. நோ. வாட்டர்!

To rule the nightமுதலில் நிலாவில் இறங்க வேண்டியது யார் என்பதில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ஆல்ட்ரீனுக்கும் இடையே ஒருவித போட்டி இருந்தது. உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆம்ஸ்ட்ராங் கப்பல் படையில் கமாண்டராக இருந்தார். ஆல்ட்ரின் விமானப் படையில் துணைகமாண்டர். ஆனால் அந்தக் காலத்தில் அமெரிக்க கப்பல் படையில் ஒரு விதி இருந்தது. மனிதன் கால் பதிக்காத எந்த இடத்திலும் ஒரு கப்பல்படை கமாண்டர் கால்பதிக்க கூடாது! அதன்படி முதலில் ஆல்ட்ரின் பிறகு ஆம்ஸ்ட்ராங் இறங்குவார் என்றிருந்தது.

கடைசி நேரத்தில் அப்போலோ அதிகாரியான ஜார்ஜ்லோவும் தலைவர் இரிஸ்க்ராப்டும் ஆம்ஸ்ட்ராங்கை சிபாரிசு செய்தார்கள். காரணம் அதிபர் டிக்சனுக்கு வேண்டியவரான டெக் ஸ்லேடன் எனும் ராக்கெட் விஞ்ஞானி தந்த ஆம்ஸ்ட்ராங் ஆதரவு வாய்ஸ்!

மூன்று பிரச்சனைகளை மூனில் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஒன்று நீங்கள் இறங்கப் போகும் இடம் எது என்று கடைசிவரை குழப்பமாகவே இருக்கும். டிராங்குவிலிட்டி பிராந்தியத்தில் இறங்குவதாக திட்டமிட்டு வேறெங்கோ போய் விழுந்தது, அப்பொலோ 11 குழு. அதே மாதிரி ஏழெட்டு முறை நடந்தது. துல்லியமாக நிலா சுழற்சியை திட்டமிட முடியவில்லை. அப்புறம் உங்கள் விண்கலம் சென்று இறங்கும்போது எழும் நிலா புழுதி. அது அடங்காமல் நாள் கணக்கில் மிதந்தபடியே இருக்கும். மூன்றாவதாக சப்தமற்ற தன்மை. உங்களுக்கு எதுவுமே கேட்காது. ஒரு பொருளை தொடுவது அடிப்பது உங்கள் மீது அது மோதுவது எதுவும் கேட்காது. துப்பாக்கி ரவை அல்லது பாலிதீன் பை எறிந்தால் வரும் ஒரு வகை நெடி அடித்துக் கொண்டே இருக்கும்....எதையுமே தொட்டு உணர வாய்ப்பே இல்லை.

மூனுக்கு சென்று திரும்பிய உடன் உடல் பரிசோதனை முக்கியம். நிலாப் பயணிகளான ஆரிசன் ஸ்மிச், மைக் கெர்ன் ஹார்ட் போன்றவர்களுக்கு உடனடி விளைவாக தோலில் படை...தாங்க முடியாத இருமல்....கழுத்துக்கு மேலே தேமல் என பல உபாதைகள் வந்தன. 1969ல் நிலாப்பயணம் தொடங்கிய அதிபர் டிக்சனின் கால அரசியலை வைத்துப் பார்த்தால் இதுமாதிரி பல விஷயங்கள் அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் முடக்கிவிட்டன. ‘அமெரிக்காவால் தான் முடியும்’ எனும் ஒன்றை ஆளுமைக்காக. அந்த 1969 காலகட்டம் வியட்நாம் யுத்த கொலை வரலாற்றுக் காலம் என்பதை கணக்கில் கொண்டால் உங்களுக்கு புரியும்.

நிலா மனிதர்களான மூவரும் உலகின் 116 நாடுகளுக்கு சென்று அங்கே கௌரவிக்கப்பட்டார்கள். திட்டமிட்ட அமெரிக்க ஆளுமை பிரசாரம் அது. இந்தியாவில் இந்திரா காந்தி விரும்பிய புதுடில்லியில் இறங்காமல் மும்பையில் இறங்கினார்கள். டாட்டா கனெக்ஷன்தான் காரணம். இத்தனைக்கும் உலக அளவில் அப்பயணத்தை வாழ்த்திய 76 தலைவர்களில் இந்திராவும் ஒருவர். அந்த விஷயத்தில் கொஞ்சம் கடுப்பாகி பாரதப் பிரதமர் செய்த முதல்வேலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்து.....இந்தியாவாலும் முடியும் எனும் அத்தியாயத்தை தொடங்கியதுதான்.

நிலாப் பயணத்தை உலகே வரவேற்றாலும் எல்லாருமே ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லமுடியாது. பாலி நாட்டு அரசாங்கம் உடனடியாக அமெரிக்க உறவை துண்டித்தது. அங்கே கலாசார முறைபடி சந்திரன் கடவுள்.

கடவுள் மீது நடப்பது சட்டபடி குற்றம். கென்யாவில் லாமு மாகாணத்தில் நிலாவில் மனிதன் யாராவது சென்றால் உலகம் அழியும் எனும் நம்பிக்கை கொண்ட குழுக்கள் (ஆதிமனிதர்கள்) உள்ளனர். ‘உலகம் அழியவில்லை....எனவே அமெரிக்கர்கள் விடுவது டூப்பு.....அவர்கள் நிலாவுக்கே போகவில்லை’ என்று அவர்கள் சொன்னார்கள். அமெரிக்காவிலேயே ஒரு ‘நிபுணர் குழு’ ஆம்ஸ்ட்ராங் டீம் இறங்கியது நிலா அல்ல.. அரிசோனாவில்தான் . வெறும் டி.வி. காமிரா வைத்து நடந்த மோசடி என்று அரிசோனா மாகாணத்தில் நிலா மாதிரியே.. (ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போட்டோவில் வருவது போலவே) படம் வெளியிட்டு கலக்கியது.. இதுவரை நிலாவில் அமெரிக்கர்கள் மட்டுமே இறங்கியுள்ளதால், நீங்கள் (அமெரிக்கரல்லாதவர் அல்லவா) மூனுக்கு போனால் அது.. அதுதான என உலகிற்கே அறிவிக்க முடியும்.

அய்யய்யோ.. வேண்டாம்பா என்று மூனுக்குப் போவதை கைவிடுபவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் நம்பஆள். நேரடியாக கடைசி பின்குறிப்பை வாசிக்கவும்.

சம்பளகமிஷன் விவகாரத்தால் ஈர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்படும் அரசு /அரசு சார்ந்த/ தனியார் ஊழியர்கள் நிலாப் பயண ஆதாயங்கள் பற்றி உடனடியாக அறிய பின்குறிப்பு மூன்றை வாசிக்கலாம். அதெல்லாம் எப்படியானாலும் பரவாயில்லை.. நான் நிலாவில் கால் பதித்தே தீருவேன்..(ஏழுமலையானுக்கு வேண்டுதல்... ஏழரை நாட்டு பரிகாரம் (?!)...) என்பவர்கள் இரண்டாம் பின்குறிப்புக்கு செல்லலாம்.

சந்திரனில் 2020ஆம் ஆண்டு மனிதர்களை இறக்கி குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள் தங்கவைக்க.. ஒரு சமையலறை, தூங்கும் பர்த் மற்றும் ஒரு கழிப்பறையோடு கூடிய இருவர் தங்கும் விண்கலத்தை அமெரிக்கா தயாரித்து வருகிறது. சீனாவின் சேஞ்ய் மி, ஜப்பானின் செலன் மி மற்றும் இந்தியாவின் சந்திராயன் மி எல்லாம் 2008 எனும் ஒரே ஆண்டில் நிகழ்ந்தவை!

பின்குறிப்புகள்

(1) நிலாபயணம் குறித்த நான்கு புத்தகங்களுமே விறுவிறுப்பானவை. வாசிக்க விரும்புகிறவர்களுக்கு முதல் புத்தகம் சிந்தாதிரிபேட்டையில் ஒரு பழைய புத்தக கடையில் வாங்கியது. ஏனைய மூன்றும் புதுவை ரோமன் ரோலண்ட் நூலகத்தில் எடுத்துப் படித்தது.

(2) நீங்கள் நிலாவுக்கு போக விரும்பினால் www.seleno.visit.com இணையதளத்தில் முழு விபரங்களோடு பெயரை பதிவு செய்யலாம். எப்படியும் நமது வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து கார்டு வருவதற்குள் நிலா வாய்ப்பு உங்கள் வீடுதேடி வரும்.

(3) மூனுக்கு போனவர்களுக்கு 40% சம்பள உயர்வு உடனடியாக வழங்கப்பட்டது. உலக அளவில் வழங்கப்பட்ட பரிசுகள் 70 கோடி அமெரிக்க டாலர். ஆம்ஸ்ட்ராங் (இப்போது 78 வயது ஓஹியோவில் வசிக்கிறார்) ஆல்ட்ரின் (79 வயது கலிபோர்னியாவில் வசிக்கிறார்) மைக்கேல் கொலின்ஸ் (78 வயது புளோரிடாவில் வசிக்கிறார்) மூவருக்கும் தலா மாதம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பென்ஷன் வருகிறது. ஏனைய (உயிரோடு இருக்கும்) 17 நிலா பயணிகளுக்கும் தலா 60,000 டாலர் மாத பென்ஷன் பொருளாதார நெருக்கடியிலும் தொடர்கிறது.

(4) நடிகவேள் எம்.ஆர். ராதா கூறியதாக சமீபத்திய வார இதழ் ஒன்றில் வாசித்தது; ‘இவன் ஒன்னுக்கு போவான், ரெண்டுக்கு போவான்..... மூனுக்கு போகமாட்டான். இவன் நம்ப ஆளு’. 

Pin It