அயல்மொழி அலமாரி \ 1

கணையாழிகளின் கடவுள் நாவலை முன்வைத்து 

ஒன்பதாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு முடிந்திருந்தது. கடைசி நாள் தேர்வின்போது பள்ளி நூலகத்தில் புத்தகம் தருவார்கள். எல்லோருக்கும் அல்ல. அப்புத்தகங்கள் பெற தமிழாசிரியர்கள், ஆங்கிலப்பாட ஆசிரியர்களின் தயவு தாட்சண்யம் இரண்டும் தேவை. மூன்று தனித்தனி புத்தகங்களாக எழுதப்பட்ட தி லார்டு ஆஃப் தி ரிங்ஸ் நூலின் முதல் பாகம். அது வெளிவந்து இருபதாண்டு கழித்து இந்தியாவின் தென்கோடி ஊர்களில் ஒன்றான கரூரில் ஒரு துக்குனூண்டு நகராட்சிப் பள்ளி நுலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. அந்தப்புத்தகத்தை நோக்கி நான் அந்த வயதில் கவரப்பட்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது.... அப்போது அந்த நாலு கப்போர்டு அடங்கிய நூலகத்திலேயே அது ஒன்றுதான் புது புத்தகம்!

என்னைப் போலவே கவரப்பட்ட மற்ற நண்பர்களை சரிக்கட்டி விளையாடிய நேரம் போக மீதிநேரம் அந்தப் புத்தகத்தோடு விடுமுறையைக் கழித்தேன். முதல் பாகத்தை படித்து முடிப்பதற்குள் ஒன்பதாம் வகுப்பே முடிந்துபோனது. கோடைவிடுமுறையிலும் நான் ஃப்ரோடோ பாகின்சுடன் இருள் ஆட்சி குறித்த அச்சத்தோடு கணையாழியும் கையுமாக ரகசியப் பயணத்தில் தவிக்க நேர்ந்தது.... ஒரு வழியாக படித்து முடித்தபோது அடுத்த பாகங்களைத் தேடிப் பரிதவித்தபடி கல்லூரிவரை போனேன். மற்ற ஏனைய பாகங்களை நூலாசிரியர் ஜெ.ஆர்.ஆர். டோல்கீன் இறந்து பத்தாண்டு கழித்து திருச்சி கல்லூரியில் நான் வாசித்து முடித்து ‘பிறவிப்பயனை’ அடைந்தேன். இங்கே ஒரு விஷயம். இப்போது திரும்ப அதை வாசிக்கும்போதும் ஒரு குழந்தையாக என்னை உணர முடிகிறது என்பதே டொல்கீன் பற்றிய வெற்றிச் செய்தி ஆகும்.

கணையாழிகளின் கடவுள் (The Lord of Rings) எனும் பொதுத் தலைப்பின் கீழ் ஒரு ஆயிரத்து இருநூறு பக்கங்களுக்கு ஒரே (பெரிய்ய!) புத்தகமாக தொகுக்கப்பட்டிருந்தாலும், அது கணையாழியுடனான உறவாடல் (The fellowship of Ring), இரண்டு கோபுரங்கள் (The Two Towers) மற்றும் மன்னர் திரும்புதல் (The Return of the King) எனும் மூன்று புத்தகங்களாகவே முதலில் வெளிவந்தது. 1954ல் ஜூலை 19 அன்று இங்கிலாந்தில் தி பெல்லோஷிப் ஆஃப் தி ரிங் முதலில் வெளிவந்தது ஆனால் அனைத்து பாகங்களும் 1949லேயே எழுதி டோல்கீனால் முடிக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. ஆங்கிலத்தில் மட்டுமல்ல, உலகிலேயே குழந்தைகளுக்காக எழுதப்பட்ட மிக நீண்ட நாவல் The Lord of the Rings தான்.

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தத்துவமும் மொழியியலும் நடத்தும் ஒரு பேராசிரியராக வாழ்வைக் கழித்த ஜெ.ஆர்.ஆர்.டோல்கீன் இப்படி ஒரு அற்புதத்தைப் படைத்திருக்க முடியுமென்று நம்பமுடியாமல் நானும் மற்றவர்களைப் போலவே அவரது வாழ்வை சற்றே அருகே சென்று புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறேன். இந்த பிரம்மாண்ட நாவல் முழுவதையும் ஜெ.ஆர்.ஆர்.டோல்கீன் 1936 தொடங்கி இரண்டாம் உலகயுத்தம் நடந்த அந்தக் காலக்கட்டம் முழுமையும் கிட்டத்தட்ட 1949 வரை தனது முன்றாவது மகன் கிரிஸ்டோபர் டோல்கீனுக்கு ஒரு தொடர் கடிதக்கதையாக ஆக்ஸ்போர்டிலிருந்து தென்ஆப்பிரிக் காவுக்கு எழுதி அனுப்பியிருந்ததை அறிந்தபோது ‘ஓஹோ!’ நாவல் முழுமையும் அவரால் பென்சிலில் எழுதப்பட்டது என்றறிந்து ‘அடடே...’ என்று வாய்பிளக்க வைத்தது! அச்சில் ஏறத்தாழ ஆயிரத்தி முன்னூறு பக்கம் வரும். இப்படி ஒரு பிரம்மாண்ட நாவலை ஒருவர் பென்சிலில் எழுதுவதா? மார்க்ட்வைன் உலகின் முதல் தட்டச்சு நாவல் எனப்படும் ‘டாம் சாயர்’ சாகசங்களை வெளியிட்டு பல பத்தாண்டுகள் கழிந்துவிட்டிருந்த நிலையில், காகிதத்தில் முதுகொடியக் கையால் அதுவும் பென்சிலில் ஏன் எழுதவேண்டும்? டோல்கீன் தனது மகனை வாசிக்கவைக்கச் செய்த உத்திகளில் அதுவும் ஒன்று. சிறுவர் நாவலைப் பென்சிலால் எழுதுவதைவிடப் பொருத்தமான வேறு வழிகளை அவரால் யோசிக்க முடியவில்லை. ஜெ.ஆர்.ஆர் டோல்கீன் கடிதங்கள் (The Letters of J.R.R.Tolkein) தொகுதியில் தனது பதிப்பாசிரியர் ஸ்டான்லி அன்வின் (Stanly Anvin) னுக்கு அவர் எழுதுகிறார். (கடிதம் 1963 ஜூலை தேதியிட்டது) ‘பென்சில் முனை உடைதல் - தோள்பட்டை வலி - இவைகளின் போது, ஒருவர் அலகு உடைந்த கோழிபோல உணரவேண்டியதாக உள்ளது’ என்று. முழுவதும் கற்பனைவாதமாக ஒரு புனைவு உலகம். அதனை மத்தியப் புவி (The Middly Earth) என்று நாவல் அழைக்கிறது. நம்முடைய களங்கள், காலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்ட ஒரு புனைவு உலகம் Fantacy அது .

அந்தப் புனைவுலகில் ஹாபிட் எனும் இனம் வாழ்ந்து வருகிறது. மிகவும் குட்டையான சித்திரக்குள்ளர்கள் அவர்கள். காலம்-ஷயர் எனப்படும் அவர்களது ராஜ்யம் தோன்றியது மூன்றாம் காலம் (The Third Age). என்ற ஒன்று இந்த நாவலில் வருகிறது. அது எஸ். ஆர் 1147 என்பது ஒரு வருடம். அது என்ன எஸ்.ஆர்.? நமது கி.பி. போல        Shire Reckoning. அதாவது ஹாபிட் ராஜ்யம் வாழிடமான-ஷயர் தோன்றியது முதலில் என்று அர்த்தம். இதுபோல ஒரு ஆயிரம் புனைவுச் சங்கதிகள் வரிக்கு வரி விரிந்து வகுப்பறை, வீடு, வீட்டுப்பாடம் என அனைத்துவகை அன்றாட இயந்திர நெருக்கத்திலிருந்தும் எட்டாவது, ஒன்பதாவது வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனை சிறுமியை எங்கோ இருக்கும் ஒரு கனவான உலகில் சஞ்சரிக்க வைப்பதை யோசித்துப் பார்க்கிறேன்.

ஹாபிட்வாதிகளிலேயே மிகவும் பிரபலமாக அறியப்பட்டவன், பில்போ பாகின்ஸ் எனும் கேளிக்கை செல்வந்தன். உலகின் மத்தியப் புவியையும் தாண்டி பல நாடுகள் நகரங்கள் கடந்து பயணித்த அனுபவம்மிக்க ஒரே ஹாபிட். அகஸ்மாத்தாக கோலும் எனும் மாயப்பிசாசிடம் சிக்கும் பில்போபாகின்ஸ் அங்கே தொலைதூர இருள்குகையில் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு கணையாழியை அபகரித்தோ அல்லது புதிர் போட்டியில் வென்றோ எடுத்து வருகிறான். அந்தக் கணையாழி வித்தியாசமான அம்சங்கள் கொண்டது. அதை அணியும் போதெல்லாம் மற்றவர் கண்களிலிருந்து பில்போ மறைந்து விடுகிறது. நாவலின் தொடக்கத்தில் என் மாதிரி லட்சக்கணக்கான சிறுவர்களின் சாகசத் தேடலுக்கு பெரிய தீனி போட்டிருக்கவேண்டும். பில்போவுக்கு ஒரே வளர்ப்பு மகன் அவன் பெயர் ஃப்ரோடோ பாகின்ஸ், பில்போ பிறந்த அதே நாளில் பல்லாண்டு கழித்துப் பிறந்தவன். ஹாபிட்கள் 37 வயதில் வயதுக்கு வரும் கேளிக்கையும் 110 (Eleventy!) வயதில் முதியவயதைத் தொடும் கேளிக்கையும் கொண்டாடுகிறார்கள். பில்போவுக்கு 110 வயதாகும் அரிய நாளில் பெரியவிருந்தோடு நாவல் தொடங்குகிறது. சிறுவன் ஃப்ரோடோவின் சாகசங்களை அவனோடு சேர்ந்து நடத்த நாம் தயாராகிறோம்.

நாவல் என்றால் ஒரு நாயகன் (அல்லது நாயகி) இருக்க வேண்டும். ஒரு வில்லன் (அல்லது ஒரு வில்லி) இருக்க வேண்டும் என்பதன் புனித அர்த்தங்களை விருந்தின்போது வானவேடிக்கைகள் நடத்திக்காட்டும், கிராண்டால்ப் கிழவன் உடைத்து எரிகிறான். இந்த பிரம்மாண்ட புனைவு உலகின் கதாநாயகன் கணையாழிதான். வில்லன்? அதுவும் கணையாழிதான் என்பதை விரைவில் நமக்கு உணர்த்தியபடியே கற்பனை செய்யமுடியாத அற்புதங்கள் வழியே சம்பவங்களை டோல்கீன் அடுக்கிச்செல்கிறார்.

1829ல் ஜனவரி மூன்றாம் நாள் தென் ஆப்பிரிக்காவின் புளயம்டான்டீன் மாகாணத்தில் டோல்கின் பிறந்தார். ஆங்கில மொழி வல்லுனராக அவர் வருவதை பிரித்தானிய கிளார்க்கான தந்தை விரும்பி இருக்க வேண்டும். டோல்கீன் தனது சகோதரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டார். ஆங்கிலத்தில் இனியகவிதைகள் சந்தப் பாடல்கள் புனைவதில் சிறுவயதிலிருந்தே திறன் படைத்திருந்தார் அவர். கணையாழிகளின் கடவுள் எனும் மாய உலக மனிதர்களில் பாடல்புனைந்து பாடாத பாத்திரமே இல்லை என்னுமளவுக்கு ஏராளமான மனதிற்கினிய பாடல்கள் இருப்பதைப் பார்க்கிறோம். வாழ்நாள் முழுவதையும் குதிரைச்சவாரியில் பாடல்கள் புனைந்து பாடிக்கொண்டே கழித்திடப் பெரும்பிரயத்தனம் செய்த டோல்கீன் போன்றவர்களை வாழ்க்கை வஞ்சிக்கும் விதமே தனி. சிறுவயதிலேயே தாயை இழந்த அவரை முதல் உலகயுத்தம் 1914ல் இழுத்துக்கொண்டது. பலமுறை மிகமோசமாக காயம்பட்டும் போரிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. நாவல் முழுவதும் வரும் பல்வேறு விசித்திரப் போர்த்தந்திரங்கள் அவரது மனதில் முதல் உலகப்போர் அனுபவத்தின் வாயிலாகவே விதைக்கப்பட்டிருந்ததை உணரமுடியும். யுத்தத்தின் முடிவில் பல்கலைக்கழகத்திற்கு ஒரு விரிவுரையாளர் பதவிதேடி அவர் போனதற்கும் அங்கே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நூலகத்திலேயே தன்வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்ததற்கும் வேறு ஒரு காரணம் இருந்தது. சிறுவயதிலிருந்தே டோல்கீன் புத்தகங்களின் நேசராக இருந்தார். வாசிப்பின் எல்லைகள் மிகக் குறுகிய வட்டமாயிருந்த அந்தநாளில் ஒரு தீவிர வாசிப்புத்தளத்தின் போதாமை அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது. 1930ல் சிறுவர்களுக்கான மாயஉலகமான ‘ஹாபிட்’ நாவல் ஏறத்தாழ எழுதி முடிக்கப்பட்டது. ஆனால் அது வெளிவர ஏழாண்டுகள் ஆகின. பிரமாண்டமான மாயப் புனைவு, நாடுகள், நகரங்கள் என ஒரு அதிசய சுரங்கத்தின் வாயில் திறக்கப்படுவதை நாவலிலேயே நாம் உணரலாம்.

அன்று பள்ளிப்பிராயத்தில் வெற்று வாசிப்பு மோகத்தோடும் சாகசத்தேடலோடும் வாசித்த அதே பிரதியை இன்று மறுவாசிப்பு செய்யும்போது படைப்பின் உக்கிரமும் உள்ளார்ந்த பாத்திரங்களும் வெறும் புனைவு உலக அம்சங்களாகப் படவில்லை. இரண்டு விஷயங்களில் டோல்கீன் திட்டமிட்டு இயங்கிஇருப்பதாக என்னால் உணர முடிகிறது. கணையாழிகளின் கடவுள் (The Lord of the Rings) நாவல், இன்று ஆங்கிலேய இலக்கிய விமர்சகர்கள் மற்றும் ஆதரவாளர்களால் ஹாரிப்பாட்டர் வரிசையோடு ஒப்பிட்டுப் பேசப்படுவதைப் பார்க்கிறேன். இரண்டுமே புனைவுகள்தான். உலகப் பிரதிகள் (Fantasy) என்கிற ரீதியில் ஒப்பீடுகள் அமைக்கப்படுகின்றன. (கவனிக்கவும்: ஹாரிப்பாட்டர் வாசிப்போர் வாசகர்கள் (Readers) அல்ல, ரசிகர்கள் (Fans), ரௌலிங் அம்மையார் நேர்காணலில் கூட டோல்கீன் பற்றிக் குறிப்பிட்டு தனது ஆளுமைகளில் ஒருவர் எனப் பேசியுள்ளார். ஹாரிப்பாட்டர் சாகசங்கள் குறித்து வேறு ஒரு சமயத்தில் நாம் விரிவாக விவாதிக்கலாம். இங்கே கணையாழிகளின் கடவுள் (The Lord of the Rings) நாவலை ஹாரிப்பாட்டரோடு ஒப்பிடுவது சாத்தியம் இல்லாதது என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். டோல்கீன் திட்டமிட்டு இயங்கி தனது புனைவுலகில் பதிவு செய்யும் முதல் விஷயம் இரண்டாம் உலகயுத்த களம். 1936 தொடங்கி 1949 வரை ஒரு பதிமூன்று ஆண்டுகள் இந்த நாவலிற்காக தனது உழைப்பைச் செலுத்தியுள்ளார். உலகம் முழுவதையும் தனது (இருள்) ஆட்சிக்கு உட்படுத்தத் துடிக்கும் ஹிட்லரையும், யூதர்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை முற்றிலும் அழித்தொழிக்க அவன் நடத்திய கொடிய மரண முகாம்களையும் பல இடங்களில் கணையாழிகளின் கடவுள் (The Lord of the Rings) புனைவு உலக நிகழ்வுகளாகப் பதிவு செய்வதை இன்று உணர முடிகிறது.

உலகம் முழுவதையும் அடிமை செய்தல் என்பதும் சர்வ அதிகாரத்தையும் தன்னை நோக்கி மையப்படுத்துதல் என்பதையும் நாவல் மிகக்கடுமையாகச் சாடுகிறது. கொடியவன் சாவ்ரானின் மாயவலைக்குள் விழுந்து தனது ஆதரவைத் தெரிவித்து தனது நாட்டுப் பிரஜைகளை அடகு வைக்கும் சாருமான் நேசப்படைகளின் முதல் எதிரியாக பார்க்கப்படுவதும் இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஜப்பான் எடுத்த நிலைப்பாடுகளை நமக்கு ஞாபகமூட்டுகிறது.

அறிவியல் வளர்ச்சி, தொழில் புரட்சி எனும் பெயரில் நடக்கும் பேரழிவை டோல்கீன் முன் அனுமானித்து இருக்கிறார். தொழில் மயத்தை ஆலைகள் பெருக்கத்தை இயந்திரமாவதை, மிகக்கடுமையாக அவர் எதிர்க்கிறார். அவரது காலத்தின் தொழில் நகரங்களான லண்டனும், ஸ்காட்லாந்தும் புகை மண்டிய மாலைப் பொழுதுகளோடு நோய்பிடித்த சீர்கேடுகளை தொழிற்புரட்சியின் பின் விளைவாக அனுபவித்தன. நாவலின் இருள் உலகும், கரும்புகை அழிவும் அதன் பிரதிநிதித்துவமாய் பார்க்கப்படவேண்டும்.

பிரித்தானிய தொழில்துறை தனது ஆலைகளின் கச்சாப் பொருட்களுக்காக காடுகளை இரக்கமின்றி வேட்டையாடியகாலம் அது. மரங்கள் செழித்த வனப் பிரதேசங்கள் மிகப்பெரிய பேரழிவுக்கு உட்படுத்தப் பட்டன. தனது நாடுமட்டுமல்ல பிரிட்டன் காலனித்துவப்படுத்திய இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இதே வேலையைத்தான் செய்தது. இதன் பின் விளைவுகளைப்பற்றிய எச்சரிக்கை நாவல் முழுவதும் இருப்பதைக் காணலாம். மரங்களின் பேரழிவை இந்த நாவலில் வரும் இருள் சர்வாதிகாரி ஆதரிப்பான், மரமனிதர்களின் பிரதிநிதிகள் அழிவுக்கு உதவிட புயல், பூகம்பம் என்று ஏற்படுத்தி அழிந்து போக வைப்பதும், தொழில் பெருக்கத்திற்கு எதிரான விளைவு, புகை சூழ்ந்து உலகையே இருளாக்கி வெப்பம் தகிக்க வைத்துவிடும் என்று (இன்று நாம் புவிவெப்பமடைதலைப் பற்றிப் பேசுவது எளிது) அன்றே 1930களில் பதிவு செய்தது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு விஷயம்,

குழந்தைகளுக்கான புனைவு உலகம்தான் என்றாலும் அவர்களிடம் இப்புவிபற்றிய மேற்கண்ட இரண்டு முக்கியப்பதிவுகளை ஏற்படுத்திய டோல்கீன், நாவல் எங்கும் பல புதிய சொற்களை மிகவும் விளையாட்டாகப் பயன்படுத்துகிறார். ஒரு பதிமூன்று வருடங்களின் கடுமையான உழைப்பு இது. இன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி டோல்கீனியன் என பல சொற்களை வரிசைப் படுத்துவதைப் பார்க்கிறோம். 2004ல் கணையாழிகளின் கடவுள் (The Lord of the Rings) திரைப்படமாக எடுக்கப்பட்டு பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் வெளிவந்து ஏழு ஆஸ்கார் விருதுகளைத் தட்டிச்சென்றபோது பல ஆண்டுகள் கழித்து ஒரு திரையரங்கம் சென்று நான் பார்த்த போது எனக்குப் பிடித்த சாம் பாத்திரத்தில் சீன் ஆஸ்டினும், கிராண்டால்ப் பாத்திரத்தில் பிரபல நடிகர் இயான் மெக்லெனும் நடித்திருந்தார்கள் என்றாலும் ஒரு வாசிப்புப் பிரதியாக நாவல் ஏற்படுத்திய பாதிப்பை விட அந்நியோனிய உறவைவிட ஒருவித பிரமிப்பையே படம் ஏற்படுத்தியது. பல ஆண்டுகள் தொடர்ந்த வாசிப்பை ஒரு மூன்று மணி நேரம் காட்சியாகப் பார்த்தபோது ஏதோ ஒன்றைப் பறிகொடுத்த ஒரு மரணவீட்டு அவலமே என்மனதைத் தொற்றிக்கொண்டது.

சீகோல் என்ற உயிரியோடு மோர்டாரின் இருள்கோபுரத் தீயில் கணையாழியை இறுதியாகப் போட்டு எரித்து இருளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும், ஃப்ரோடோவும் சாமும் வீடு திரும்பும் காட்சிகளும் அங்கே ஹாபிட் வாழிடத்தின் மக்கள் பிரச்சனைகளை ‘நீங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என கிராண்டால்ப் கட்டனை இடுவதுமாக இறுதி அத்தியாயம் முடியும். அந்த நொடி ஏற்படுத்தும் நிறைவு, ரால்ப் பாக்ஷி பின்நாட்களில் வாசிப்பை எடுத்துச் செல்ல வேண்டிய தன் அவசியத்தை எனக்கு உணர்த்தும் செய்தியாக இதைப் பார்க்கிறேன். பலமுறை திருத்தப்பட்ட பிறகு இந்த நாவல் 1973ல் ஜெ.ஆர்.ஆர்.டோல்கீன் இறந்தபோது உலகெங்கும் 40 மொழிகளில் பெயர்க்கப்பட்டிருந்தது.

பேரழிவுக்கு வித்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரூமென்னும் பிரித்தானிய பிரதமர் கிளமெண்ட் ஆட்லியும் புத்தகம் படிப்பவர்களாக இருந்து, இந்த நாவலில் மாய அழிவு கணையாழியை நாமே பயன்படுத்தி எதிரி நாடான மோர்டாரை ஏன் முற்றிலும் அழிக்கக் கூடாது என்று கேட்கும் போராமி என்னும் பாத்திரத்திற்கு சிறுவன் ப்ரோடோ அளிக்கும் அப்பாவி மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பதிலை, வாசித்திருந்தால் ஒருவேளை ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் நிகழ்த்தப்பட்ட கொடிய மரணதாண்டவத்தை நடக்காமல் தடுத்திருக்காலம் என் இந்த நாவலை சரியான அர்த்தத்தில் வாசிப்பவர்கள் கட்டாயம் உணர்வார்கள். ஆனால் இது குறித்து கேட்கப்பட்டபோது நூலாசிரியர் டோல்கீன் நாவல் ஒரு அரசியல் அங்கதமாக (Satire) எழுதப்படவில்லை என பதிலளிக்க நிர்பந்திக்கப்பட்டதையும் இறுதிவரை ஆங்கிலேயர்களிடம் அவருக்கு கிடைத்ததெல்லாம் வசவும், துரோகி பட்டமும்தான் என்பதையும் இங்கே பதிவு செய்யவேண்டும். இன்று ஏழுமலைகளை கடல்களை தாண்டிச் சென்று சொப்பன இளவரசிகளிலிருந்து, அயல் நட்சத்திரவாதிகள் வரை பலரை காப்பாற்றும் டிஜிட்டல் கதாநாயகர்களை 24 மணிநேர கார்டூன் சேனல்கள் பேன்டசி (Fantasy) எனும் பெயரில் காட்டித்தள்ளுகின்றன. வீடியோ விளையாட்டுகளில் விசித்திர பிறவிகள் வீரவிளையாட்டு நடத்துகிறார்கள். இவை அனைத்தும் குழந்தைகளின் கேளிக்கை அம்சத்தை மட்டுமே மையப்படுத்தும் கொடிய வன்முறையை இலக்காக கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். டோல்கீன் போன்றவர்களின் நோக்கம் அதுவல்ல. தங்களைச் சுற்றியுள்ள உலகின் நடப்புகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி விமர்சிக்கும் பழக்கத்தை சிறுவர்களுக்கு அவரது எழுத்துக்கள் ஊட்டுகின்றன. குழந்தைகளின் எதிர்கால வாழ்வை குறித்த நிஜமான அக்கறை கொண்டவர்கள் அப்படித்தான் சிந்திக்கமுடியும்.

ஹாரிபாட்டர் மூலம் ரௌலிங் அம்மையார் பிரிட்டிஷ் மகாராணியை விட பெரிய செல்வந்தர் ஆனதும் டோல்கீன் கிட்டத்தட்ட மாற்றுத்துணிக்கும் கஷ்டப்பட்டு வறுமையில் வதங்கி வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு உயிர் விடுவதும் உலக இலக்கியத்தின் கொடிய அரசியல் முரண்நகைகளில் ஒன்றாகும். 

பட்டுப்புழு பட்டை உற்பத்திசெய்வதுபோலவும், சிப்பி எனும் உயிரி முத்தை தருவதுபோலவும் நோக்கமின்றி எழுத்தாளன் ஒருவன் தனது படைப்பை உருவாக்க முடியாது.

-மார்க் ட்வைன்

To Create something, you should be some thing. -Goethe

 

Pin It