ஆவணப்பட அறிமுகம்

ஒரு ஆவணப்படம் எதை மையப்படுத்தி இருக்க வேண்டும்? அசாதாரணமான மனிதர்களின் வெளிக்கொணரப்படாத வாழ்வை அல்லது ஒரு நிகழ்வைப் பதிவு செய்வதாகவோ அல்லது ஒரு பிரச்சனையை முன்வைத்து விருப்பு, வெறுப்பற்ற பலதரப்பு நியாயங்களைப் பதிவு செய்வதாகவோ இருக்க வேண்டும்.

சேலம் ஆண்ட்டோ இயக்கி சமிபத்தில் வந்திருக்கும் ‘புலி யாருக்கு’ என்கிற ஆவணப்படம். ‘புலிகள் பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்துவதனால் வனங்களில் வாழும் ஆதிவாசிகள் வெளியேற்றப்படும்’ அபாயம் இருப்பதை முன்னிறுத்துகிறது. இதன்படி ‘புலிகள் சரணாலயம்’ என அறிவிக்கப்படும் வனங்களில் Buffer Zone என்ற பெயரில் புலிகளுக்கான பிரதேசம் என வரையறுக்கப்படுகிறது. அந்தப் பகுதிகளில் எந்தக் குடியிருப்புகளும் இருக்கக்கூடாது என்பதுதான் இப்பொழுது வனங்களில் வாழும் பழங்குடியினருக்குப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத் தலங்களாகவோ அல்லது சாதாரண வனவிலங்கு சரணாலயமாகவே இருந்த பகுதிகள் இப்பொழுது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. ஒரு பக்கம் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை சுருங்கி வருவதை பல்வேறு புள்ளி விவரங்களுடன் நிறுவும் வனவிலங்குப் பிரியர்கள் மறுபுறம் மனித உரிமை ஆர்வலர்கள் பழங்குடி மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையான கவலை... இரண்டையும் பதிவு செய்கிற போது, இயக்குனராக இடையீடு செய்யாமல் உள்ளது உள்ளபடி இப்படத்தில் பதிவு செய்துள்ளார் ஆண்ட்டோ .

வனவிலங்கு ஆர்வலர் முகமது அலி புலிகளின் எண்ணிக்கை 2500 தான். அதுவும் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளதா என்று குறிப்பிடும்போது அவரது கவலையைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஆனால் அதேசமயம் வனங்கள் அழிவதற்கு ஆதிவாசிகள் குடியிருப்புகள் இருப்பது ஒரு காரணம் என்றும் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறுவதை ஏற்க முடியவில்லை. ஒருவரது பூர்வ பிரதேசத்திலிருந்து வேரோடு பிடுங்கி, மற்றொரு இடத்திற்கு எறிவது என்பதை தர்க்கரீதியாக மட்டுமல்ல உணர்வு ரீதியாகவும் ஒப்புக்கொள்ள இயலாது.

ஆதிவாசிகளிடையே புள்ளி விபரங்கள் ஏதும் இல்லை. அவர்கள் மெத்தப் படித்தவர்களும் இல்லை. அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும் அந்த ஜீவன்கள் உணர்வுகளின் பிரதிநிதிகள், அவர்களின் வாக்குமூலங்கள் உள்ளார்ந்து வருபவை.

குறிப்பாக இந்தப் படத்தின் ஓரிடத்தில் ஆதிவாசிகளின் தலைவராக இருக்கும் சந்திரன் பேசும்போது, ‘ஆதிவாசிகள் மரங்களை வெட்டி வனங்களைச் சிதைப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் எந்த ஆதிவாசியாவது மரம் வெட்டி கோடீஸ்வரனாக, லட்சாதிபதியாக ஆனதாக நீங்கள் காட்டமுடியுமா?’ என்று கேட்பது நம்மைச் சுடுகிறது.

தனித்தீவுகளாக மனிதர்கள் வாழும் நகரங்கள் மிகுதியாக ஆக சக மனிதர்களோடு இணக்கமான உறவு கிட்டத்தட்ட ‘இல்லை’ என்று சொல்கிற அளவு குறைந்து வருகிறது. பழங்குடி மக்களின் கொண்டாட்டங்களை உற்று நோக்கினோமானால், அதில் அவர்களுக்கு சக மனிதர்களோடு ஒரு பிணைப்பு இருப்பதைக் காணலாம். இந்த ஆவணப்படத்தின் இடையிடையே காட்டப்படும் அவர்களின் பண்பாடு சார்ந்த காட்சிகள் உண்மையில் நாம் எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்று உணர்த்துகிறது.புலிகள் பாதுகாப்புச் சட்டத்திலுள்ள வற்றை ஆதரித்துப் பேசும் முகமதுஅலி இன்னொரு இடத்தில்

‘இந்தியாவில் அந்தமானைத் தவிர வேறு எங்கும் உண்மையான பழங்குடி இன மக்கள் இல்லை’ என்று கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. எந்தப் புள்ளி விபரத்தின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்று புரியவில்லை.

இந்தியாவில் மொத்தம் 461 வெவ்வேறு பழங்குடி இனக் குழுக்கள் இருக்கின்றன. இதில் ‘கோண்ட்’ இனமக்கள் மட்டுமே கிட்டத்தட்ட 5.8 மில்லியன் பேர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில வனப்பகுதிகளில் வாழ்கின்றனர். அடுத்ததாக பிரிலர், சந்தால், ஓராவன், மினா ஆகிய இனக்குழுவினர் முறையே 5.2, 3.6, 1.7, 1.5 மில்லியன் பேர் இருக்கின்றனர் (ஆதாரம் ஆய்வாளர் பக்தவச்சல பாரதியின் தமிழகப் பழங்குடிகள் நூல்)தமிழகத்தில் நீலகிரி மலைப்பகுதிகளில் இருளர், காட்டு நாயக்கன், குறும்பர், தொழவர், பனியா, காடன் என்று பல்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள் ஏறக்குறைய 1 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

இதுவல்லாமல் மலையாளிகள் எனப்படும் ஆதிவாசிகள் கொல்லிமலை, பச்சைமலை சேர்வராயன் மலை, ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை, சித்தேரிமலை போன்ற பகுதிகளில் சுமார் மூன்று லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் பழங்குடியினர் கணக்கில் இல்லையா அல்லது முன்னேறிய சமூகத்தினரா?

முகமதுஅலி முன்வைக்கும் பல கருத்துகள் விவாதத்துக்குரியவை. அதே சமயம் மனித உரிமை ஆர்வலர் ‘பிஜோய்’ தெரிவிக்கும் கருத்துகள் வெகு யதார்த்தமான, நியாயப்பார்வை என்றே தோன்றுகின்றன. அமெரிக்காவில் இதுபோன்ற மனித நடமாட்டமற்ற பகுதி வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்ட வனப்பகுதிகள் மிகத் தவறான முன்னுதாரணமாகக் கருதப்படுவதாக குறிப்பிடுகிறார்.

வனங்களில் வாழும் பழங்குடிகள் வைக்கும் கருத்து மிக முக்கியமானது அது ‘நாங்கள் புலிகளை எதிர்க்கவில்லை. சட்டத்தைத்தான் எதிர்க்கிறோம்’

அமித்குமார் நாக் என்பவர் கிழக்கு இந்தியாவில் வாழும் காசாரி. லக்கர், மிஜோ, ரபா போன்ற அஸ்ஸாமிய பழங்குடியினரிடையேயும், நாகர்களிடையேயும் ஒரு நம்பிக்கை இருந்து வருவதாகக் குறிப்பிடுகிறார். அவர்களில் ஒரு சிலருக்குத் தாங்களே புலிகளாகவும், சிறுத்தைகளாகவும் நடமாடுவதாக ஒரு பிரம்மை உண்டாம். புலிகள் இறந்தால், தாங்களும் இறந்துவிடுவோம் என்றும் நம்புகிறவர்களாம்.

இதேபோல தமிழகப் பழங்குடியினர் பளியர்கள், மன்னான், புலையர்கள், முதுவர்கள் ஆகியோரில் ஒரு சிலரிடம் புலிகள் நடமாட்டத்தை மோப்பம் பிடிக்கும் சக்தியும், புலிகளைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இருப்பதாக நம்புகின்றனர்.

இப்படி நம்பிக்கையின்பால் வாழ்பவர்கள் எப்படி புலிகளுக்கு கெடுதல் செய்துவிட முடியும்?

ஆண்ட்டோ அவர்களின் பார்வை எந்த சார்பையும் முன்னிலைப்படுத்தாமல், நேர்மையான ஒரு கலைஞனின் பார்வையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரது முந்தையப் படங்களான ‘தும்பலில் இன்று குடியரசுதினம்’ மற்றும் ‘கனவுப்பாலம்’ ஆகியவற்றில் கூட எதையும் வலிந்து திணிக்க அவர் முயற்சிக்கவே இல்லை. தீர்வுகளைத் தீர்மானிப்பவராக அவர் தன்னை ஒருபோதும் காட்டிக்கொண்டதே இல்லை. ஒளிந்து கிடக்கும் பிரச்சனைகளின் ஒளிப்பட சாட்சியாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

வாழ்வியல் சார்ந்த, கடினமான உண்மைகளை ஆவணப்படுத்துவதற்கு பலமான தரவுகளையும், அவற்றைப் படமாக்கும்போது பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் எதிர் கொள்ளவேண்டும். ஆண்ட்டோ மற்றும் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு எத்தனை சவால்களை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது. வனப்பகுதிகளில் பெரிய பொருளாதாரப் பின்னணி, நிறுவனங்கள் துணையின்றி இப்படத்தை அவர்கள் எடுத்திருப்பது அசாத்தியமான செயல் என்றே சொல்லலாம். அவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளோடு அவர்களது கலாச்சாரம் துயர நிகழ்வுகள் ஆகியவற்றையும் நேர்த்தியாக திரு. ஆனந்த் தொகுத்திருக்கிறார். இடையிடையே தேவைப்படும் காட்சிகளில் வரைகலைப் படங்களை இணைத்திருப்பதும் பாராட்டுதலுக்குரியது. திரு. செந்தில்குமாரின் அந்தப் படங்கள் காட்சிக்கு வலுச்சேர்க்கின்றன. ஒலிப்பதிவு சில இடங்களில் ஏற்ற இறக்கங்களோடு பல சமயம் காதில் ஒலிக்காத அளவு பதிவாகி இருக்கிறது. குறிப்பாக தியோடர் பாஸ்கரன் பேசும் இடங்கள்.

எல்லாச் சட்டங்களும், விதிமுறைகளும் மனித வாழ்வை இன்றும் செம்மைப்படுத்த, இன்னும் நெறிப்படுத்தவே என்பதை சட்டத்தை வடிவமைப்பவர்கள் உணரவேண்டும்.

‘புலி யாருக்கு?’ என்ற கேள்வியின் அர்த்தமுள்ள பதிலை அமைதியாக நிறுவுகிறது இந்த ஆவணப்படம்.

Pin It