சன் தொலைக்காட்சியில் காஞ்சனா படக்குழுவினருடன் ஒரு கலந்துடையாடலின் கலகலப்புக்கு மத்தியில் தொகுப்பாளினி ஒரு கேள்வி கேட்டார், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம்.

"பேய் இருக்கிறதா? பேய் இருப்பதை நம்பலாமா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பேயை உணர்ந்திருக்கிறீர்களா?"

பதில் சொல்லாமல், கேள்வியை கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிற கலைஞர்களிடம் தள்ளிவிட்டார். லட்சுமி ராய் "பாத்ததுல்லே... உணர்ந்ததுமில்லே" என்கிறார். தேவதர்ஷினி "பாக்கவே வேண்டாமப்பா" என்று விளையாட்டாக கதறுகிறார். ஸ்ரீமன் "பாத்ததுல்லே" என்று தலையாட்டுகிறார். சரத்குமார் எம்எல்ஏ "அப்படி ஒண்ணுஇல்லே. நா பாத்ததுல்லே. நாம மனசாலே உருவாக்கிடுறதுதான் பேய். என்னையே வேறொரு கோணத்துலே நெனைச்சுக்கிட்டுப் பாத்தா.... நா ஒரு பேய் மாதிரி தோணுவேன்"

கடைசியில் இயக்குநர் ராகவா லாரன்ஸ் சொல்கிறார். "பேயை பாத்ததுல்லே. உணர்ந்ததுமில்லே. இல்லவும் இல்லே. ஆனா.. அந்தப் பேய் வாழ்க! எனக்கு வெற்றியையும் லாபத்தையும் அள்ளிக்குடுத்துருக்கு.."

முனி என்ற பேய் படம் இயக்கியவர் ராகவா லாரன்ஸ். பயங்கரமான வெற்றி. நல்ல கொள்ளை லாபம். "முனி 2 காஞ்சனா" என்றொரு மற்றொரு பேய்ப்படம். மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். "இருபது வருடங்களுக்குப் பிறகு அதிகப் பெண்களை தியேட்டருக்கு ஈர்த்த படம்" என்று நிர்ணயிக்கிறார்கள்.

பேயை பார்த்ததில்லை. உணர்ந்ததில்லை. ஆனால் பேய் மீது, பேயோட்டுகிற மந்திரத்தின் மீது-பேயை நெருங்க விடாத நரசிங்க தெய்வம் பற்றியும் அழுத்தமான நம்பிக்கை வருகிற மாதிரி படம் இயக்கியிருக்கிறார். ராகவாலாரன்ஸ். இது என்ன பொய்மை வியாபாரம்? அவர் நம்பாத மூட நம்பிக்கையை -பேய் பற்றிய பயபீதியை-நாடு பூராவும் கலையின் மூலமாக பரப்புவது என்ன நியாயம்? என்ன விதமான சமூக அக்கறை?

சமூகத்தில் பல மூட நம்பிக்கைகளையும், பயபீதியூட்டுகிற எண்ணங்களையும் அறிந்தே பரப்புவதற்கு விஞ்ஞானச் சாதனமான திரைச் சாதனத்தையே பயன்படுத்தலாமா?

தொற்று நோய்களை பரப்புவதைவிடவும் கூடுதலான சமூகக் கெடுதலல்லவா! மனித மனங்களை ஊனப்படுத்தலாமா? அச்சமூட்டி, பீதியூட்டி மனிதமனசின் நம்பிக்கை கால்களை ஒடிக்கலாமா?

இது என்ன வியாபாரம்? சமுதாயப் பொறுப்பும் விஞ்ஞானச் சிந்தனையும் கொண்டிருக்க வேண்டிய தணிக்கைக் குழு, பேய் மீது நம்பிக்கை ஊட்டுகிற-அமானுஷ்ய ஆற்றல் மீது நம்பிக்கை ஊட்டுகிற திரைப்படங்களை அனுமதிக்கலாமா?

இந்தக் கேள்வியும் கவலையும் எழுப்பாமல், கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். சொல்ல முடியாத அளவுக்கு இந்தப் படத்தில் நல்ல அம்சங்கள் நிறைய உள்ளன. இந்த அமானுஷ்யம், பேய் நம்பிக்கை, பேயோட்டுகிற மந்திரம் மீது நம்பிக்கை போன்றவற்றை ஒதுக்கி விட்டுப் பார்த்தால்,இந்த 'காஞ்சனா' திரைப்படம் வரவேற்கத்தக்க பல நல்ல அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

கால் கை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பும் மரியாதையும் தரத்தக்க மிகச் சிறந்த காட்சிகள் இருக்கின்றன. முழுமை மனிதர்கள் கூட சாதிக்க முடியாத சாகசங்களை, மனசில் நம்பிக்கை இருந்தால் மாற்றுத் திறனாளிகள் மிகச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டலாம் என்பதை கண்முன்னால் விரிகிற காட்சிப்படுத்தல் மூலம் படம் நிரூபிக்கிறது.

படத்தின் பிரதானமே திருநங்கைகள் பற்றியது தான். திருநங்கைகள் மனவலிகளையும், போர்க் குணத்தையும், போராடுகிற வைராக்கிய மனவலிமையையும் நெஞ்சில் ஏற்றியனுப்புகிற திரைப்படம்.

ராகவா லாரன்ஸை பேயாக பிடித்தாட்டுவதே இறந்து போன திருநங்கைதான். திருநங்கையாக நடிப்பது சரத்குமார். அற்புதமாக நடித்திருக்கிறார்.

குடும்பத்தாரால், தெரு மனிதர்களால், சமூக மனிதர்களால் அவமானப்படுத்தப்பட்டு கொடுமைக்காளான திருநங்கைச் சிறுமிக்கு அடைக்கலம் தருகிற ஒரு இஸ்லாமிய மாமனிதர். அவரது ஆதரவுடன் வளர்ந்து, உழைத்து, போராடி, அரும்பாடுபட்டு பணம் சம்பாதிக்கிறார். அவரது படிப்பு பறிக்கப்பட்ட ரணத்திற்கு மருந்திட இன்னொரு திருநங்கைச் சிறுமியை எடுத்து வளர்த்து படிக்க வைக்கிறார். டாக்டருக்கு படிக்க வைக்கிற பெருங்கனவு அரும்பாடுகளுக்குப் பிறகு நிறைவேறுகிறது. மருத்துவமனை கட்ட வாங்கிப் போட்ட நிலத்தை வஞ்சகமாக நில அபகரிப்பு செய்து கொள்கிற எம்எல்ஏ நீதிகேட்டுப் போன திருநங்கை காஞ்சனாவையும், இஸ்லாமியக் குடும்பத்தையும் கொன்று புதைக்கிற கொடூரம்.

நிறைவேறாத கனவுகள். காஞ்சனா பேயாக லாரன்ஸை பிடிக்கிறது. கொன்றவர்களை பழி வாங்க நடத்துகிற போராட்டத்தில் வென்று முடிப்பதே காஞ்சனா திரைப்படம்.

அண்டா நிறைய பாயாசம் காய்ச்சி வைத்து விட்டு, அதில் ஐம்பது மில்லி பாலிடாலை ஊற்றிய மாதிரி... திருநங்கை பிரச்சனையையும் இஸ்லாமியர்களையும் மதித்து, மரியாதை செய்கிற விதமாக தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த படத்தில்... பேய் என்ற அமானுஷ்யத்தை தவிர்த்திருக்கலாமே! உடல் ஊனத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மனசுகளை ஊனப்படுத்தலாமா? ராகவா லாரன்ஸை விமர்சனத்துடன் கைகுலுக்கிப் பாராட்டலாமா?

- மேலாண்மை பொன்னுச்சாமி

Pin It