நாட்டுப்புறக் கதை

அடா அடா அடா .... சேச்சேச்சே.... இந்தப் பிள்ளைகளோட பெரிய்ய இம்சாவில்ளே இருக்கு. உலகம் கிடக்கிற கிடப்புல பிழைக்கிற வழியைப் பாக்காம ஒண்ணை ஒண்ணு வீம்பு பண்ணிக்கிட்டு உனக்காச்சா எனக்காச்சான்னுள்லே திரியுதுக...”

சக்திதேவி வந்து சிவனார்ட்டே புகாராச் சொன்னா.

“யாரு என்ன பண்ணுனா, மூத்தவனா இளையவனா சொல்லு கூப்புட்டு தலையில நாலு தட்டு தட்டுறேன்”னார் சிவன்.

“அட இவங்க இல்லீங்க. பூலோகத்துல என் சன்னிதிக்கு வர்ற பக்த கோடிகளைத்தான் சொல்றேன். இன்னைக்கி நடந்த ஒரு விபரங் கேளுங்க. ரெண்டு பேரு தினமும் என் கோயிலுக்கு வந்து போறாங்க. வந்தா வந்த இடத்துல என்னை நெனைச்சு எவனும் கும்பிடறதில்லே. ஒருத்தன் காலையில ஆறுமணிக்கு வந்தா, மறுநாள் இன்னொருத்தன் அஞ்சு மணிக்கே வந்திருவான். பிறகு இவன் மூணு மணி, மறுநாள் அவன் ரெண்டு மணி. அவன் முந்தி வந்திரப்படாதுன்னு இவன் தூக்கச்சடவோட குளிக்காம கொள்ளாம இவனுக்கு முந்தி ஓடியார்றது. மக்கா நாள் அவன் முழிப்பு தட்டுனதும் பல்லு விளக்காம இவனை முந்தி ஓடியார்றது. கடைசியில ரெண்டு பேரும் நடை சாத்துனாக்கூட வீட்டுக்குப் போறதில்லே. கோயிலே கதின்னு ஓருத்தனை ஒருத்தன் மொறச்ச மட்டுல உட்கார்ந்திருக்கான்.

இச்சலாத்தி தாங்காம நானே ஒரு நாள் நேர்ல பிரசன்னமாகி ‘ இந்தாங்கடா ஒங்க வேண்டு தலதான் என்ன’ன்னு கேட்டேன். கும்புட்ட கையை எடுக்காம ஒருத்தனை யொருத்தன் மிழங்குற மாதிரி எதுத்தெதுத்து பல்லைக் கடிச்சுக்கிட்டு நிக்கிறானேயொழிய என்னைத் திரும்பியே பாக்கலை.

கடைசியில நான்தான் சொன்னேன் ‘அடேங் கப்பா! டேய்! போதும் நீங்க ரெண்டு பேரும் என்னை தியானிச்சது இன்னைக்குத்தான் உங் களுக்கு கடைசி. வேணும்ங்கிறதை இன்னைக்கி ராத்திரி பன்னிரெண்டு மணிக்குள்ள வாங்கிக்கிட்டு இடத்தை காலி பண்ணுங்க. இன்னையோட ஒங்க அலப்பறை ஓயணும். இப்பொ மணி பத்து, ரெண்டு மணி நேரந்தான் உங்களுக்கு அவகாசம். யோசனை பண்ணிக்கோங்க’.

 ஆத்தா பக்கம் முகத்தை திருப்பாமலேயே ஒருத்தன் ஆத்தாகிட்டே அடுத்தவன் பேர்ல பிராது சொன்னான்: “ஆத்தா இந்தா நிக்கிறவனை நம்பாதேத்தா. விருதா மொள்ளைமாறிப்பய ராத்திரியோட ராத்திரியா புஞ்சையில போயி பொலிக்கல்லை நகட்டி வச்சிருவான். அயோக் கியப்பய. இவனுக்கு பத்துப்பைசா கொடுத் துராதே”

உடனே அடுத்தவன் இருப்புல இருந்த மட்டுல சொன்னான்: “தாயி இவன் லேசுப் பட்டவன் கிடையாது. முழிச்சிருக்க முழியைத் தோண்டுற பய நிறை புஞ்சையில விளைஞ்சு நிக்ற கருதை நெலக் கசக்கா கசக்கி வீடு நிறைய மூடைகளை அடுக்கி வச்சிருக்கான். விதைச்சவன் விரலைச் சூம்பிக்கிட்டு திரிய இவன் மஞ்சக் குளிக்கிறான். இவனை செருப்பாலயே அடிச்சு முடுக்காத்தா”. ஆத்தாளுக்கு கோபம் கொப் பளிச்சிட்டு வந்தது.

“அடேய் சக்திகிட்ட உங்களுக்கு என்ன வேணும்ன்னு மட்டும் கேளுங்கடா. ஏண்டா ஒருத்தனுக்கு ஒருத்தன் இப்படி பொச்சரிப்பு பிடிச்சு அலையுறீங்க. சரி இப்பொ சொல்றதை கேட்டுக் கோங்க. நீங்க ஒவ்வொருத்தனும் என்ன வரம் கேட்கிறீகளோ அதே போல ரெண்டு மடங்கு அடுத்தவனுக்கு கொடுப்பேன். நீ கேட்டது அவனுக்கு ரெண்டு மடங்கு, அவன் கேட்டது உனக்கு ரெண்டு மடங்கு. மணி பன்னிரெண்டுக்கு வாரேன். நல்ல யோசனையா பண்ணுங்க”. சக்தி மறைஞ்சிட்டாள்.

நல்ல வேளையாப் போச்சி. பன்னிரெண்டு மணிக்கு ஆத்தா வரவும் மடையடியில அஞ்சு ஏக்கர் நஞ்சை வேணும்ன்னு கேட்டு நிம்மதியா இருக்கணும். அதுக்குப் பிறகு எதுக்கு இப்படி பயக மூஞ்சியிலெ முழிக்கணும். உனக்கு அஞ்சுன்னா எனக்கு பத்து கிடைக்கும். சூசுவான்னு பொழுதை போக்கிட்டு ஒன்னை மாதரி ஈனப்புத்திக்காரங்க சாவகாசமில்லாம நிம்மதியா இருப்பேன்”.

“ஐயையோ ஒண்ணுக்கு ரெண்டாக் கொடுப்பாளோ. இந்த ஊரே எனக்கு கொடுத்திருன்னுட்டா? பிறகு என்னம்பானாம்?”

“எனக்கு கீழூரு மேலூரு ரெண்டும் கிடைக்கும்”.

 இப்படியே ரெண்டு பேரும் மாறி மாறி யோசிச்சதில் நேரம் போய்க்கிட்டே இருந்தது. மணி பன்னிரெண்டை நெருக்கிக் கிட்டிருந்தது. எந்த வரம் கேட்டாலும் அடுத்தவனுக்கு ரெண்டு மடங்குங்கும்போது பதட்டம் கூடிக்கிட்டே வந்தது. “அதுக்குத்தான் ஒரே வரம். சக்தியம்மா கிட்டெ நான் கேக்கப் போறேன். அதுக்குப் பிறகு பொட்டியாரால ஒண்ணும் பண்ண முடியாது”

அடுத்தவன் பக்கர பக்கர முழிச்சான். மணி பன்னிரெண்டாக ஒரு நிமிசந்தான் இருந்தது. ஐயோ என்ன கேட்கப் போறானோ.

“இந்தக் கோயில் உச்சியில நின்னுக்கிட்டு வானமும் பூமியும் சேர்ற அடி வானத்துலயிருந்து நாலா திசையிலும் சுத்தி நான் பாக்கிறது பூராவும் எனக்கு சொந்தமாகணும்னு கேட்டா நீ என்னாம்பே?”

“ஐயையோ ஐயையோ அதுக்குமேல நான் என்ன கேட்க முடியும்? பிறகு சக்திக்கு கொடுக்க ஒண்ணுமே இருக்காதே, பிறகு நான் வெறும் பயதானா? ஆத்தா... மணி சரியா பன்னிரெண்டு ஆச்சு. சக்தியும் தச்சுரூபமா வந்துட்டா. அம்மா தாயி மொதல்ல என்ன வரம் வேணும்ன்னு எங்கிட்ட கேளு தாயி, அவன் கேட்க நெனச்சதை நான் மொதல்லயே கேட்டுர்றேன். மனசுக்குள்ள வேண்டுனான். சக்தி மொதல்ல இவன் வேண்டுனபடியே கேட்டாள். “மகனே உ னக்கு என்ன வரம் வேணும்?”

“ஆத்தா நான் கோயில் உச்சிக்குப் போயி அந்த வரம் கேக்கணும்.” அடுத்தவன் ஆடிப் போனான் ‘ஆஹா. நாம கேட்டதையே இவனும் கேட்க நெனைச்சிட்டானே, ஐயோ சொன்னது தப்பாப்போச்சே’. அவன் சந்தோசமா கோயில் உச்சியைப் பார்த்து ஏறிக்கிட்டிருந்தான். ‘அடி வானத்திலிருந்து அவன் கண்ணுக சுத்துற இடம் பூராவும் தனக்குத்தான்ம்பானே’.

“பக்தா என்ன யோசனை? நீ சொல் உனக்கு என்ன வரம் வேணும்?”

“அம்மா! தாயி! பராசக்தி நான் கேட்கிறது அவனுக்கு ரெண்டு மடங்குதானே?” பரபரப்பாய் கேட்டான்.

“ஆம் மகனே அதிலென்ன சந்தேகம்?”

“அப்படீன்னா எனக்கு ஒரு கண்ணு அவிஞ்சு போகட்டும் ஆத்தா!”

மேலே போய்க்கிட்டிருந்தவனுக்கு இந்த சம்பாஷணை தெளிவாகக் கேட்டது. அவனுக்கு ஒரு கண்ணு போனா நமக்கு ரெண்டு கண்ணும் போயிரும். பிறகு அடிவானத்துலயிருந்து கண் கொண்டு பாக்குறது எப்படி? ஆனா அவனுக்கு ஒரு கண்ணு இருக்குமே! அதை வச்சி வானத்தையும் பூமியையும் பார்த்து அந்த வரத்தை வாங்கிட்டான்னா? கோயில் உச்சியிலிருந்து அவனும் இப்படிக் கூவி வரம் கேட்டான். “ஆத்தா! எனக்கும் ஒரு கண்ணு அவிஞ்சு போயிறணும் தாயி!”

“இப்பொ ரெண்டு கண்ணும் தெரியாம கோயில் உச்சியிலிருந்து ஒருத்தன் இறங்க மாட்டாம கிடக்கான். இன்னொருத்தன் வாசக்கதவு நெலப்படி தெரியாம கோயிலுக்குள்ளேயே துழாவிக்கிட்டு கிடக்கான். எனக்கு வயித் தெரிச்சல்ன்னா வயித்தெரிச்ச இப்பொ அங்கெ போகிறதையே நிறுத்திக்கிட்டேன்”. இதைக் கேட்டுக்கிட்டிருந்த சிவன் சொன்னார் சக்தியைப் பார்த்து :

 “அடப் போத்தா போ! உனக்காச்சும் கிராமத்து ஜனங்க. பாவம் அவங்களைத்தான் வருத்திக்கிடுவான். உனக்கு எந்த வித சேதாரமும் கிடையாது. அப்படியே டவுனுப்பக்கம் வந்து எங்கோயிலு ஆளுக பண்ற கேவலத்தை வந்து பாருன்னு சக்தியை கைப்பிடியா இழுத்துட்டு வந்து ஒரு சிவன் கோயில் மூலஸ்தானத்துல வந்து நின்னார்.

வெளியே போயிருந்த பட்டர் கர்ப்பக் கிரகத்திலே யாரோ ரெண்டு பேர் இருக்கிறதைப் பார்த்து பருத்த தொந்தியை இழுக்க மாட்டாமல் இழுத்து வந்து கொண்டிருந்தார். முன்பாரத்தில் ஆள் குப்புற விழுந்துவிடாமல் பின்பக்க பிருஷ்ட பாகம் சமன் செய்து வைத்திருந்தது.

“ஓய்! உங்களை யார் உள்ளே போகச் சொன்னது. சீ ! தரித்திரம். வெளியே வா!” பட்டர் கத்தினார்.

“யோவ் நல்லா பாருய்யா நான்தான் சிவன். இவள் என் ஒரு பாகம் உமையாள்”

“ஆஹா நல்லா டபாய்க்கிறேளே. ஆஹா.. நான் அள்ளி முடிஞ்சி கொண்டையில பூ வச்சி ருந்தா கேனயனா... நேக்குத் தெரியாதா சிவனை யும் சக்தியையும் திருவிளையாடலை இருபது தரம் பாத்தவனாக்கும்!”

“கிழிஞ்சது போ. விளங்குமா கோயிலு. இவருக்கு சிவாஜிகணேசனும் சாவித்திரியும்தான் சிவன் சக்தி” என்று சக்தியை பார்த்து சொன்ன சிவன் பட்டரைப் பார்த்து “யோவ் அது சினிமாய்யா. நிழல். இது நெஜம். இங்கே பாரும்.” சிவன் பக்கத்திலிருந்த கருங்கல் சிற்ப லிங்கத்தை தொட்டார். அது அப்படியே பொன் லிங்கமா மாறிடுச்சி. பட்டருக்கு ஆனந்தம் தாங்க முடியல. கீழே நெடுஞ்சாயலா விழுந்து கையிரண்டையும் தலைக்கு மேல கூப்பி “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே . அம்மையே அப்பா ஒப்பில்லா மணியே”ன்னு பொழுதனைக்கும் கூவினார். அதுக்கு மேல வரிகள் ஞாபகத்துக்கு வரலை. பட்டர் அவயம் கேட்டு கோயில் வளாகத்துல இருந்தவங்க அவருக்கு ஹார்ட் அட்டாக்தான் வந்திருச்சோன்னு ஓடியாந்தாங்கா.

அவரோட கூப்பாடு “யம்மா யப்பா ஒத்தாசைக்கு யாருமில்லையா”ன்னு கேட்டது. அப்படிக் கிடந்து உருண்டாரு.

“என்ன சாமி..... என்ன சாமி”

“நேக்கு ஒண்ணுமில்லைங்கிறேன். தோ நிக்கிறா பாருங்கோ தம்பதி சமேதராய் பகவான்! சந்தேகமா இருக்கான்னோ சித்தெ லிங்கத்தை எட்டிப் பாருங்கோ பொன்னா ஜொலிக்கிறதை அவா கை பட்டதும் கல்லெல்லாம் பொன்னா யிடுத்து” அவ்வளதான். கூட்டமல்லாம் ஒரே களேபரமா ஓடியாடுனதுக. ஒருத்தரை யொருத்தர் கேட்டும் கேளாம காயகல்பம் தர்றவராம். ரசவாத வித்தை தெரிஞ்சவராம். சித்தராம் தொட்டது துலங்குதாம் கொஞ்ச நேரத்துல மறைஞ்சிரு வாராம்ன்னு அவங்கவங்க கைக்கு கிடைச்ச சட்டி பொட்டி, செருப்பு விளக்கமாறெல்லாம் கொண்டு வந்து ஒண்ணுக்கு மேல ஒண்ணு குதிரையேறி,

“இதைத் தடவுயா”

“யோவ் இதைத் தடவுயா”

ஓரே தள்ளுமுள்ளு நெரிசல் அடிபிடி.

“ஏ பெரிய மனுசா! ரொம்ப நேரமா ஒரு மனுஷி இங்கே கூவிக்கிட்டு கிடக்கனே குமரிகளா பாத்து பாத்து தடவுறியே கண்ணு என்ன பொடதியிலா வச்சிருக்கே”

“இப்பொ வந்த ஆளுகளுக்கெல்லாம் தடவுறான். ஏன்யா முன்ன வந்த ஆளு பின்னெ வந்த ஆளு தெரியலையான்னா எரிச்சிர்ற மாதிரி பாக்கான். என்னம்மோ நெத்தியில முளைச்சவன் கணக்கா”

கோயிலே வீங்கிப் போன மாதிரி கூட்டம்ன்னா கூட்டம். ஒரே சண்டை புகாரு திடீர்ன்னு ஒரு டாடா சுமோ வண்டி வந்தது. அவருதான் கோயிலு தக்கார். மெட்ராஸ் சிவசக்தி ஸ்டோர் மொதலாளி. அவர் கடையில தாய் தகப்பனைத் தவிர எல்லாம் வாங்கலாம். பெரிய்ய பாத்திரக்கடை வேற வச்சிருக்காரு.

“யோவ் வழிவிடு வழிவிடு.. ம். ம். அந்த ஆளை கூட்டத்தை விட்டு வெளியே கொண்டு வந்து நம்ம வண்டியில ஏத்து ...ம். சீக்கிரம்..”, பரமசிவரை முன்னாடி ரெண்டு பேர் இழுக்க, பின்னாடி ரெண்டு பேர் தள்ள, மல்லுக்கட்டி இழுத்த மாதிரி இழுத்துட்டுப் போனாங்க. மொதலாளி கையாள்கள்ட்ட சொன்னார், “டேய் பாத்திரக் கடையில உக்காந்து முழுவதும் தடவச் சொல்லு. பாத்திரங்கள் லோடு வரவர தடவிக்கிட்டே இருக்கட்டும்.”

சிவனை ஏத்திக்கிட்டு டாடா சுமோ பறந்தது. பின்னாடியிருந்த புத்தம் புது கார்ல மொதலாளி ஏறிப் புறப்பட்டார்.

சக்தி பின்னடியே ஓடியாந்தா “என்னங்க என்னங்க...”

,மொதலாளி சொன்னார், “இந்தா பாரும்மா நல்ல சம்பளம் போட்டுத் தருவேன். பயப்படாதே”

“இல்லீங்க. ஒவ்வொரு நாளும் விடிஞ்சதும் அவரு படி அளக்கணும்”.

 “எது? படியா? அட, பேட்டாவா? அதெல்லாம் கை நிறைய கொடுப்போம்.”

“இல்லீங்க சீவராசிகளுக்கெல்லாம் அன்ன ஆகாரத்துக்கு வழி செய்றவரு”

“இப்பொ என்ன அவருக்கு மூணுதேறமும் சாப்பாடு போட்டுருவோம் அது போகத்தான் சம்பளம் படி... நாங்க பாத்துக்கிடுறோம்”

மொதலாளி, சக்தியை மேல கீழ ஏறிட்டுப் பார்த்துட்டு டிரைவர் கிட்டெ சொன்னார்:

“ஆமாண்டா... டேய்... இவகூட நல்லாத் தான் இருக்கா... இவளை ரிசப்சன்ல உக்கார வச்சிட்டா என்ன..?”

Pin It