ரஷ்யச் சிறுகதை

இலையுதிர் காலத்தில் ஒரு நாள் இரவு; லேவாதேவி செய்து கொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர் காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில், ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார்.

அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித் தவர்களும், பத்திரிகைக்காரர்களும் ஆகியவர்களில் சிலர் மரண தண்டனையைப் பெரும்பாலும் ஒப்புக் கொள்ளவில்லை. மரண தண்டனை மிக அநாகரிக மானது என்றும், கிறிஸ்தவ அரசாட்சிக்குப் பொருந்தாது என்றும் அவர்கள் கருதினர். மரண தண்டனைக்குப் பதிலாக, அகில உலகத்திலும் ஆயுள் தண்டனையை அமல் செய்ய வேண்டும் என்பதாகச் சிலர் அபிப்பிராயப்பட்டனர்.

“நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்ள வில்லை” என்று வீட்டுக்காரர் ஆரம்பித்தார். “மரண தண்டனையையோ, அல்லது ஆயுள் தண்டனை யையோ நான் அனுபவித்ததில்லை; ஆனால், சிந்தித்துப் பார்த்தால் சிறை தண்டனையைவிட மரண தண்டனை முறையானது, மனிதத் தன்மை யுள்ளது என்பது என் அபிப்பிராயம். மேலும், மரண தண்டனை அடைந்தவன் உடனே சாகடிக்கப் படுகிறான். ஆனால், சிறை தண்டனை பெற்றவன் சிறையில் கிடந்து சிறுகச் சிறுகச் சாகிறான். இதில் யார் மனிதத் தன்மையுள்ளவன்? சில விநாடிகளில் உயிரை மாய்த்து விடுகின்றானே அவனா? அல்லது அணுஅணுவாக ஆண்டுக்கணக்கில் உயிரை வாங்குகிறானே அவனா?”

“அவர்கள் இருவருமே நெறியற்றவர் கள்தான். ஏனெனில், இருவரின் குறிக்கோளும் உயிரை மாய்ப்பதுதான். அரசாங்கம் கடவு ளல்லவே! எதைக் கொடுக்கக் சத்தியில்லையோ, அதை எடுக்க மட்டும் அதற்கு என்ன உரிமை யிருக்கிறது?” என்றார் விருந்தினர்களில் ஒருவர்.

அந்தக் கூட்டத்தில் ஒரு வக்கீலும் இருந்தார். அவர் இருபத்தி ஐந்து வயது இளைஞர். அவரது அபிப்பிராயத்தைக் கேட்டபொழுது அவர் கூறினார்.

“மரண தண்டனை, ஆயுள் தண்டனை ஆகிய இரண்டுமே நெறியற்றதுதான்! ஆனால், இரண்டி லொன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை என்னி டம் அளித்தால், நிச்சயமாக நான் ஆயுள் தண்டனை யைத் தேர்ந்தெடுப்பேன். சாவதைவிட எப்படியா வது வாழ்வது நல்லதுதான்” என்று பதில் அளித்தார்.

அதைத் தொடர்ந்து காரசாரமான விவாதம் நிகழ்ந்தது. லேவாதேவிக்காரர் அப்போது இளமையின் துடிப்போடு இருந்தார். திடீரென அவர் தன்னிலை இழந்தவராய் கையை மேஜையில் குத்தியவாறு, அந்த வக்கீலைப் பார்த்துச் சப்தமிட்டார்.

“அது பொய்! நான் இருபது லட்சம் பந்தயம் கட்டத் தயார். ஒரே அறையில் ஐந்து ஆண்டுகள் கூட உன்னால் இருக்க முடியாது!”

“நீங்கள் உண்மையாகவேதான் கூறுகிறீர்கள் என்றால், நானும் பந்தயம் கட்டுகிறேன்; ஐந்து ஆண்டுகள் அல்ல; பதினைந்து ஆண்டுகள் இருக்கத் தயார்!” என்று பதிலளித்தார் இளம்வக்கீல்.

“பதினைந்து ஆண்டுகளா? தொலைந்தாய்!” என்று இரைந்தார் லேவாதேவிக்காரர். அவர், “கனவான்களே, நான் இருபது லட்சத்தைப் பந்தயமாக வைக்கிறேன்” என்றார்.

“சம்மதம். நீங்கள் இருபது லட்சத்தைப் பந்தயம் வைக்கிறீர்கள்! நானோ எனது சுதந்திரத் தைப் பணயம் வைக்கிறேன்” என்றார் வக்கீல்.

எனவே, இந்த நகைக்கத்தக்க முரட்டுப் பந்தயம் நடைமுறைக்கு வந்தது. அந்த லேவாதேவிக்காரருக்கு அப்பொழுது ஏராளமான சொத்துக்கள் இருந்தன. காமவெறியால் கெட்டழிந்தவர்; சபல சித்தமுள்ளவர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது வக்கீலைப் பார்த்து கிண்டலாகக் கூறினார்.

“சற்று நிதானியுங்கள் இளைஞரே! காலம் கடந்துவிடுவதற்குள் முடிவு செய்யுங்கள். இருபது லட்சம் என்பது என்னைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய தொகை! ஆனால், நீயோ இளம் பருவத்தில் மூன்று நான்கு ஆண்டுகளை இழக்கப் போகிறாய். ஏன் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் என்கிறேன் தெரியுமா? அதற்குமேல் உன்னால் இருக்க முடியாது! துரதிருஷ்டம் பிடித்தவனே! தன்மீது சுமத்தப்படும் தண்டனையைவிட, தானாக ஏற்றுக் கொள்ளும் தண்டனை மிகவும் கடுமை யானது என்பதை மறந்துவிடவேண்டாம்! எப் பொழுது நீ நினைத்தாலும், அப்பொழுதே விடுதலை பெற்றுவிடலாம் என்ற எண்ணமே உன்னுடைய வாழ்க்கையை வெறுக்கச் செய்து விடும்! நான் உனக்காக அனுதாபப் படுகிறேன்”.

இப்பொழுது லேவாதேவிக்காரர் தனது அறையில் உலவிய வண்ணம், பழைய சம்பவங் களையெல்லாம் நினைவு கூர்ந்து தம்மையே கேட்டுக் கொண்டார்;

‘நான் ஏன் இந்தப் பந்தயத்துக்குச் சம்மதித் தேன்? அதனால் எனக்கு என்ன லாபம்? வக்கீலோ தனது வாழ்க்கையில் பதினைந்து ஆண்டு காலத்தை இழக்கிறார். நான் இருபது லட்சத்தை இழக் கிறேன். ஆயுள் தண்டனையைவிட, மரண தண்டனைதான் சிறந்தது என்றோ, கெட்டது என்றோ ஜனங்கள் ஒப்புக் கொள்வார்களா? இல்லை. இல்லை எல்லாமே அறிவீனம், என்னைப் பொறுத்தமட்டில் மனிதனின் சபல சித்தம். வக்கீலைப் பொறுத்தவரையோ பேராசை!’

அன்றைய மாலை விருந்தில் வேறு என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதை எண்ணிப்பார்த்தார். ‘அந்த லேவாதேவிக்காரரின் வீட்டின் தோட்டத்திலுள்ள அறையில், கடுமை யான கண்காணிப்பில் வக்கீல் இந்த சிறை வாசத்தை அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது; அந்தக் காலம் முடியும் வரை அவர் அறையின் வாசலைத் தாண்டக்கூடாது என்றும், மக்களைப் பார்க்கக்கூடாதென்றும், அவர்களுடைய குரல்களைக் கேட்கக்கூடா தென்றும், கடிதங்களும் பத்திரிகைகளும் தரப்பட மாட்டாதென்றும் நிபந்தனைகள் ஏற்படுத்தப் பட்டன. ஆனால், ஒரு இசைக்கருவி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார். புத்தகங்கள் படிக்கலாம்; கடிதங்கள் எழுதலாம்; ஒயின் குடிக்கலாம்; புகை பிடிக்கலாம். ஒப்பந்தத்தின்படி வக்கீல், வெளி உலகத்திற்கு செய்தியனுப்பலாம். ஆனால், மௌனமாகத்தான்! அதற்காகவே அமைக்கப் பட்டிருந்த சிறிய ஜன்னலின் மூலம் செய்திகளை அனுப்பலாம். அவருக்கு தேவை யானவற்றை - புத்தகங்கள், இசைக்கருவி, ஒயின், எவ்வளவு தேவையோ அவ்வளவையும், அந்த ஜன்னலின் வழியாக கடிதங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள லாம். சிறு விஷயங்கள் கூட அந்த ஒப்பந்தத்தில் தெளிவாகக் கண்டிருந்தது. அதன்படி தண்டனை கடுமையான தனிமைதான்! வக்கீல் சரியாக பதினைந்து ஆண்டுகள் அதாவது 1870ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினான்காம்தேதி இரவு பனிரெண்டு மணியிலிருந்து 1885ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினான்காம் தேதி இரவு பனிரெண்டு மணி வரை அங்கே தங்கியிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளிலிருந்து சிறிதேனும் மீறுவதற்கு முயன்றாலும் குறிப்பிட்ட காலம் முடிவடைவதற்கு இரண்டு நிமிஷங்களுக்கு முன்னே தப்பித்து வெளியேறிவிட்டாலும் சரி, லேவாதேவிக்காரர் கொடுக்க வேண்டிய இருபது லட்சத்தையும் கொடுக்க வேண்டியதில்லை’.

சிறை அனுபவத்தின் முதல் வருடத்தில், வக்கீல் அனுப்பிய கடிதங்களை வைத்துக் கொண்டு பார்த்தால், அவர் தனிமையிலும், வெறுப்பிலும் ரொம்பவும் அவதிப்பட்டிருக்கிறார் என்று தீர்மானிக்க முடிந்தது. இரவும் - பகலும் அவரிட மிருந்து பியானோவின் இசை வந்த வண்ண மிருக்கும். ஒயினும், புகையும் தமக்கு வேண்டா மென்று ஒதுக்கிவிட்டார். ‘ஒயின் ஆசைகளைக் கிளறிவிடும். ஆசைகளே கைதியின் பிரதான எதிரிகள். அதோடு நல்ல ஒயினைத் தனியாக சாப்பிடுவதைவிட பெரிய வேதனை வேறொன்று மில்லை. மேலும், புகையிலை அந்த அறையின் காற்றைக் கெடுத்து விடுகிறது’ எனக் குறிப்பிட் டிருந்தார்.

முதல் ஆண்டில் வக்கீலுக்கு சாதாரண புத்தகங்கள்தான் அனுப்பப்பட்டன. அதாவது சிக்கலான காதல் விவகாரங்களுள்ள நாவல்கள், கொலை, கொள்ளைக் கதைகள், வேடிக்கைக் கதைகள், நகைச்சுவைக் கதைகள் முதலியவை அனுப்பப்பட்டன.

இரண்டாவது ஆண்டில் பியானோவின் ஒலி கேட்கவே இல்லை. வக்கீல் இலக்கியப் புத்தகங் களைக் கேட்டனுப்பினார்.

ஐந்தாவது ஆண்டில் மீண்டும் சங்கீத ஒலி கேட்டது. கைதி ஒயின் கேட்டனுப்பினார். அந்த ஆண்டு பூராவும் அவர் சாப்பிட்டுக் கொண்டும், குடித்துக் கொண்டும், படுத்துக் கொண்டுமே இருந்ததாகக் கண்காணிப்பாளர்கள் கூறினார்கள். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டார். தானாகவே கோபத்தோடு பேசிக் கொண்டார்; புத்தகங்கள் எதையும் அவர் படிக்கவே இல்லை. இராக் காலங்களில் சில வேளைகளில் எழுத உட்காரு வார். வெகுநேரம், எழுதிக்கொண்டே இருப்பார். விடிந்ததும் எல்லாவற்றையும் கிழித்துப் போட்டு விடுவார். சில நேரங்களில் அவர் அழும்குரலும் கேட்டது.

ஆறாவது ஆண்டின் பிற்பகுதியில், வக்கீல் ஆர்வத்தோடு பல பாஷைகளையும், தத்துவத்தை யும், சரித்திரத்தையும் படிக்க ஆரம்பித்தார். அந்தப் புத்தகங்களை அவர் படித்த வேகம் இருக்கிறதே அது லேவாதேவிக்காரரையே திணற அடித்து விட்டது. வக்கீல் கேட்ட புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதே லேவாதேவிக்காரருக்குச் சிரமமாகி விட்டது. நான்கு ஆண்டுகளுக்குள் அவர் கோரிக் கைப்படி சுமார் அறுநூறு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. அந்தச் சமயத்தில்தன் லேவா தேவிக்காரருக்கு வக்கீலிடமிருந்து கீழ்க்கண்ட கடிதம் வந்தது.

“எனதன்புள்ள சிறை அதிகாரியே,

நான் இந்த வரிகளை ஆறு பாஷைகளில் எழுதியிருக்கின்றேன். இவற்றை மொழி வல்லுநர் களிடம் காட்டுங்கள். அவர்கள் அவற்றைப் படிக் கட்டும். அவர்கள் ஒரு குற்றம் கூட அவற்றில் கண்டுபிடிக்காவிட்டால், தோட்டத்தில் ஒரு துப்பாக்கி வேட்டை வெடிக்க உத்தரவிட வேண் டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அந்தச் சப்தத்தின் மூலம், எனது முயற்சிகளெல்லாம் வெற்றி அடைந் ததாக அறிந்து கொள்கிறேன். எல்லா சகாப்தங் களிலும், எல்லா தேசங்களிலுமுள்ள மேதைக ளெல்லாரும் பல மொழிகள் பேசுகிறார்கள். ஆனால், அவற்றில் எல்லாம் ஒரே கருத்துத்தான் தென்படுகிறது. ஆஹா! அவற்றை நான் புரிந்து அனுபவிக்கும் உன்னதமான இன்பத்தை மட்டும் நீங்களும் அறிவீர்களானால்....?”

கைதியின் எண்ணம் நிறைவேற்றப்பட்டது. லேவாதேவிக்காரரின் உத்தரவின்படி தோட்டத்தில் இரண்டு குண்டுகள் சுடப்பட்டன.

அதற்கப்பால், பத்து ஆண்டுகள் கழிந்தபிறகு, வக்கீல் ஆடாமல் அசையாமல் மேஜையின்முன் உட்கார்ந்து பரிசுத்த வேதாகமத்தின் ‘புதிய ஏற் பாட்டை’ மட்டும் படித்துக் கொண்டிருந்தார். நான்கு ஆண்டுகளில் மொத்தம் அறுநூறு புத்தகங் களை படித்துத் தேர்ந்து தெளிந்த ஒருவர் ஒரே புத்தகங்களை ஒரு ஆண்டு முழுவதும் அதிலும் சுலபமாக விளங்கக்கூடிய சிறு புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறார் என்றால், லேவா தேவிக்காரருக்கு மிகவும் அதிசயமாகவிருந்தது. அதன்பின்னர், மதங்களின் வரலாறு, சமய கோட் பாடுகள் போன்ற புத்தகங்கள் கேட்கப்பட்டன.

சிறை வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளில் கைதி நிறைய புத்தகங்கள் படித்தார். ஆனால், அவை பல வகைப்பட்ட புத்தகங்கள்! இயற்கை விஞ்ஞானப் புத்தகம் கேட்பார். அப்புறம் பைரனையும் ஷேக்ஸ்பியரையும் படிப் பார். அவரிடமிருந்து வரும் குறிப்புகளில் அவர் ஒரே சமயத்தில் ரசாயன சாஸ்திரப் புத்தகம், வைத்திய புத்தகம், ஒரு நாவல், வேதாந்த, சமய கோட்பாடுகள் பற்றிய சில விமர்சனங்கள் இவை அனைத்தும் கேட்டிருந்தார். உடைந்த பலகை களோடு கடலில் நீந்துபவரைப் போல அவர் படித்தார். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில் ஒவ்வொன்றாகப் பற்றிக் கொண்டே வந்தார்.

2

இவ்வளவையும் லேவாதேவிக்காரர் நினைவு கூர்ந்தார். பின்னர் சிந்தித்தார்.

‘நாளைக்கு மணி பனிரெண்டு அடித்ததும் வக்கீல் விடுதலையடைந்து விடுவார். ஒப்பந்தத் தின்படி நான் அவருக்கு இருபது லட்சங்கள் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்தே னென்றால் அவ்வளவுதான் நான் தொலைந் தேன்..!’

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் பல லட்சங்கள் இருந்தன. ஆனால், இப் பொழுதோ அவருக்கு அதிகமாக இருப்பது எது என்பதைத் தனக்குத்தானே யோசித்துக் கொள்ள அஞ்சினார். பணமா அல்லது கடனா? வர்த்தக மார்க்கெட்டில் பேரம், துணிச்சலான வியாபாரம் கிழவயதிலும் கூட விட்டொழிக்க முடியாத சபலம் இவைகளெல்லாம் சேர்ந்து அவரது செல்வத்தை க்ஷீணதசைக்குக் கொண்டுவந்துவிட்டன. அஞ்சா நெஞ்சமும், தன்னம்பிக்கையும் கொண்டு பெருமையுடன் விளங்கிய வியாபாரி, சாதாரண லேவா தேவிக்காரராக, வர்த்தக மார்க்கெட்டில் நடைபெறும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு பயப் படும் மிகச் சாதாரண வியாபாரியாக ஆகி விட்டார்.

‘சாபத்தீடான அந்தப் பந்தயம்!’ என்று ஏக்கத்தோடு தலையைப் பிடித்தவாறே கிழவர் முணுமுணுத்தார். ‘அந்த வக்கீல் ஏன் இன்னமும் சாகவில்லை? அவனுக்கு நாற்பது வயது தான் ஆகிறது. என்னிடமுள்ள கடைசிக் காசையும் இனி அவன் எடுத்துக் கொள்வான். கல்யாணம் செய்துகொண்டு, வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பான். வர்த்தகச் சந்தையில் பேரம் செய்வான். நானோ பொறாமைப்படும் பிச்சைக்காரனைப்போல அவனைப் பார்த்துக் கொண்டு திரிய வேண்டும். ‘நான் அனுபவிக்கும் இந்த நல்வாழ்வுக்காக உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்கிறேன்?’ என்ற வார்த்தைகள் தினசரி என் காதில் விழும். இல்லை. அதைச் சகிக்க முடியாது! நான் ஓட்டாண்டியாகி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது! அந்த மனிதன் சாக வேண்டும்!’

அப்பொழுது கடிகாரம் மணி மூன்று அடித்தது. லேவாதேவிக்காரர் உற்றுக்கவனித்தார். வீட்டிலுள்ள எல்லோரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். குளிரினால் உறைந்த மரங்கள் மாத்திரம் ஜன்னலுக்கு வெளியே சலசலத்துக் கொண்டிருந் தன. சப்தம் போடாமல், பதினைந்து ஆண்டு களாகத் திறக்கப்படாமலிருந்த அந்த அறையின் சாவியை அலமாரியிலிருந்து எடுத்து தனது கோட்டில் வைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றார். தோட்டத்தில் இருட்டாகவும் குளிராகவும் இருந்தது. அப்பொழுது மழை கொட்டிக் கொண்டிருந்தது.. காற்று வேகமாக ஊளையிட்டது. மரங்கள் ஓய்வின்றி அசைந்தாடிக் கொண்டிருந்தன. ரொம்பக் கஷ்டப்பட்டு உற்றுக் கவனித்த போதிலும் கூட அவருக்கு தரையும் தெரியவில்லை. வெள்ளைச் சிலைகளும் தெரிய வில்லை அல்லது தோட்டத்து வீடோ, மரங்களோ, எதுவுமே புலப்படவில்லை. தோட்டத்துப் பக்கம் சென்று இரண்டு முறை காவல்காரனைக் கூப் பிட்டார். பதிலே இல்லை. இந்த நேரத்தில் அடுப் பங்கரையிலோ அல்லது எங்காவது மூலையிலோ தூங்கிக் கொண்டிருப்பான் என்று நினைத்தார்.

‘எனது குறிக்கோளை நிறைவேற்ற எனக்கு தைரியம் மாத்திரம் இருந்துவிட்டால், ஆஹா! சந்தேகம் முதலாவது காவற்காரன் மீதுதானே விழும்!’ என்று நினைத்தார் கிழவர். அந்த இருட்டிலும், தட்டுதடுமாறி படிகளையும் கதவை யும் தாண்டி தோட்டத்து வீட்டுக் கூடத்தை அடைந்தார். அப்புறம் ஒரு குறுகலான வழியில் சென்று,ஒரு திக்கீகுச்சியைக் கிழித்தார். அங்கே ஒருவருமில்லை. யாருடைய படுக்கையோ, மேல் விரிப்புகூட இன்றி அங்கே கிடைந்தது. அந்த மூலையில் ஒரு இரும்பு அடுப்பு இருந்தது. கைதி இருக்கும் அந்த அறைக் கதவுகள் முத்திரை அப்படியே உடைக்கப்படாமல் இருந்தது.

தீக்குச்சி அணைந்ததும், கிழவர் கலக்கத்தால் நடுங்கி, சிறு ஜன்னல் வழியாகப் பார்வையைச் செலுத்தினார். கைதியின் அறையில் ஒரு மெழுகு வர்த்தி மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கைதி மேஜையருகேதான் உட்கார்ந்திருந்தார். அவரது பின்புறம், தலைமுடி, கைகள் மாத்திரமே தெரிந்தன. மேஜையின் மேலும், நாற்காலி களிலும், மேஜைக் கருகிலிருந்த கம்பளத்தின் மீதும் புத்தகங்கள் விரிந்து கிடந்தன.

ஐந்து நிமிஷங்கள் கழிந்தன. அந்தக் கைதி அசையக்கூடவில்லை. பதினைந்து வருட சிறை வாசம் அவருக்கு அசையாமல் உட்கார்ந்திருக்கக் கற்றுக்கொடுத்துவிட்டது போலும்! லேவாதேவிக் காரர் விரலினால் ஜன்னலைத் தட்டினார். கைதியிடமிருந்து எந்தவிதமான பதிலோ, அசைவோ காணப்படவில்லை. பின்னர், அவர் மிகவும் ஜாக்கிரதையாக கதவிலிருந்த முத்திரை களை உடைத்தார். சாவியைப் பூட்டில் வைத்தார். துருப்பிடித்த பூட்டு கரகரத்தது. கதவு கிரீச்சிட்டது. உடனே அங்கிருந்து ஒரு ஆச்சர்யமான சப்தமும், காலடியோசையும் கேட்கும் என்று கிழவர் எதிர்பார்த்து நின்றார். மூன்று நிமிஷங்கள் கழிந்தன. சிறிது நேரத்திற்கு முன் எவ்வளவு அமைதியாக இருந்ததோ அவ்வளவு அமைதியாக அப்பொழுது மிருந்தது. எனவே, உள்ளே போகலாம் என்று தீர்மானித்தார்.

மேஜையின்முன் ஒருவன் உட்கார்ந்திருந் தான். அவனைப் பார்க்க சாதாரண மனிதனைப் போல் தோன்றவில்லை. இறுகிப்போன சரும முள்ள ஒரு எலும்புக்கூடாக இருந்தது. பெண் களைப் போன்ற நீண்டசுருண்ட கேசம் - அடர்ந்த தாடியுடன் முகம் மஞ்சளாக மண்ணைப்போல இருந்தது. கன்னங்கள் குழிவிழுந்திருந்தன. முதுகு நிண்டும் குறுகலாகவுமிருந்தது. மயிரடர்ந்த தலையைத் தாங்கிக் கொண்டிருந்தானே அந்தக் கைகள் ரொம்ப மெல்லியதாக, எலும்பும் தோலுமாக விருந்தது. அந்தக் காட்சி பார்ப்பதற்குப் பரிதாபகரமாயிருந்தது. அவனது தலை முடியில் நரை காணத் தொடங்கியது. நொந்து, தளர்ச்சியுற்ற அந்த முகத்தைப் பார்க்கும் யாரும் அவனுக்கு வயது நாற்பது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். வளைந்திருந்த தலைக்கு முன்னால் மேஜையின்மீது ஒரு காகிதமிருந்தது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

‘பிசாசுப் பயல்’ - கிழவரின் முணுமுணுப்பு

‘அவன் தூங்குகின்றான். ஒருவேளை கனவில் இருபது லட்சங்களைப் பார்த்துப் பரவசம் அடைந்து கொண்டிருக்கிறானோ! அந்த அரைப் பிணத்தைத் தூக்கி படுக்கையின் மீது போட வேண்டியதுதான். தலையணையால் ஒரு கணம் அமுக்க வேண்டும். அவ்வளவுதான்...! ரொம்ப ஜாக்கிரதையாகச் செய்யும் பிரேத பரிசோதனை யில் கூட அவன் இயற்கைக்கு மாறாக இறந் திருக்கிறான் என்று கண்டுபிடித்துவிட முடியாது! ஆனால், முதலில் அந்தக் கடிதத்தில் அவன் என்ன எழுதியிருக்கிறான் என்று படித்துப் பார்க்கலாம்’

கிழவர், மேஜையிலிருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் படிக்கலானார்:

“நாளை இரவு பனிரெண்டு மணிக்கு நான் சுதந்திரமாக, ஜனங்களுடன் பழகும் உரிமையைப் பெறுவேன். ஆனால், இந்த அறையிலிருந்து வெளியேறி கதிரவனைக் காண்பதற்கு முன்னால் உங்களுக்குச் சில வார்த்தைகள் கூறவேண்டியது அவசியம் என எண்ணுகிறேன். எனது சுயமான தெளிவான மனசாட்சியோடும், நல்ல நினை வோடும் - எல்லாவற்றையும் பார்த்துக் கொண் டிருக்கும் கடவுளுக்கு முன்பாகவும் நான் இதை எழுதுகிறேன்.

சுதந்திரத்தையும், வாழ்க்கையையும், உடல் நலத்தையும் நான் வெறுக்கிறேன். நீங்கள் அளித்த புத்தகங்களுக்கு நன்றி.

பதினைந்து ஆண்டுகளாக, நான் சுறுசுறுப் பாக உலக வாழ்க்கையைப் பற்றிப் படித்து விட்டேன்; ஆனால், நான் உலகத்தையோ மக்களையோ பார்க்கவில்லை என்பது உண்மை தான் என்றபோதிலும், உங்களது புத்தகங்களில், ருசியுள்ள ஒயினைப் பருகினேன். பாட்டுகள் பாடினேன். காடுகளில் மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடினேன். பெண்களைக் காதலித்தேன்...! ஆஹா! அழகிய பெண்கள்! கவிஞர்களின் மேதைமையினால் புனையப்பட்ட தேவலோகப் பெண்கள்! இரவு நேரங்களில் என்னிடம் வந்து, அற்புதமான கதைகளை யெல்லாம் கூறினர். அவைகளைக் கேட்டு என்தலை சுற்றியது. உங்கள் புத்தகங்களில் நான், எவ்புரூஸ், மாண்ட் பிளாங்க் மலை உச்சிகளில் ஏறினேன். அங்கிருந்து சூரியன் காலை வேளைகளில் எங்ஙனம் உதயமாகிறது என்பதை யும், மாலைவேளைகளில் ஆகாயத்திலும், சமுத்திரத்திலும், மலை முகடுகளிலும் எப்படி தங்கநிறம் பரவிப் பிரகாசிக்கிறது என்பதையும் கண்டேன். அங்கிருந்தபடியே எனக்கும் மேலே, மேகங்களைக் கிழித்துக் கொண்டு மின்னல்கள் எவ்விதம் பளிச்சிடுகின்றன என்பதையும் பார்த் தேன். பசுமையான காடுகளையும் வயல்களையும், நதிகளையும், ஏரிகளையும் நகரங்களையும் கண்டேன். மோகினிகளின் பாடல்களையும் கேட்டேன். கடவுளைப் பற்றிப் பேசவந்த அழகு மிகுந்த பிசாசுகளின் இறக்கைகளைத் தொட்டுப் பார்த்தேன்... உங்கள் புத்தகங்களின் மூலம் நான் அதல பாதாளங்களுக்குச் சென்றேன்; அற்புதங் களைக் கண்டேன். நகரங்களைச் சுட்டெரித்தேன். புதிய மதங்களைப் போதித்தேன். சகல தேசங் களிலும் வெற்றிக்கொடி நாட்டினேன்...

உங்களது புத்தகங்கள் எனக்கு அறிவைக் கொடுத்தன. பல நூற்றாண்டுகளாக சிந்தனை யாளர்களின் அயராத உழைப்பின் மூலம் உண்டாக்கப்பட்ட கருத்துக்கள் அவ்வளவையும் என்னுடைய மண்டையினுள் அடைத்து வைத்திருக் கிறேன். நான் உங்களையெல்லாம்விட அறிவாளி என்பது எனக்குத் தெரியும்!

உங்கள் புத்தகங்களை நான் வெறுக்கிறேன். உலகத்திலுள்ள சகல செல்வங்களையும், அறிவை யும்கூட வெறுக்கிறேன். முடிவில் எல்லாமே சூனியம்தான்! தவறானவைதான்! மனோராஜ்யம் தான்! கானல்நீரைப் போன்ற அழிவுதான்! நீங்கள் என்னதான் பெருமையோடும் அறிவோடும் அழகோடும் இருந்தாலும்கூட வளையிலுள்ள சுண்டெலியைப்போல, சாவு உங்களையும்தான் பூமியிலிருந்து அழித்து ஒழித்துவிடும். அப்புறம், உங்கள் சந்ததியாருடைய சரித்திரம், அமரத்தன்மை யெல்லாம் பிரபஞ்சத்தோடு சேர்ந்து அவ்விதமே ஆகிவிடும்.

நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்! தவறான வழியில் சென்றுவிட்டீர்கள். பொய்யை மெய்யென்றும், அவலட்சணத்தை அழகென்றும், கருதியிருக்கிறீர்கள். ஆப்பிள், ஆரஞ்சு மரங்கள் திடீரென பழங்களுக்குப் பதிலாக, தேரைகளையும் ஓணான்களையும் உதிர்க்க ஆரம்பித்தால் நீங்கள் அதிசயப்படுவீர்கள். ரோஜாமலரில் குதிரை வியர்வை வாடை அடித்தால் வியப்படைவீர்கள். எனவே, பூமிக்காக மோட்சத்தைப் பரிவர்த்தனை செய்து கொண்ட உங்களைக் கண்டு நான் அதிசயப்படுகிறேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவே விரும்பவில்லை.

நீங்கள் அனுபவிக்கும் சுகபோகங்களை நான் வெறுக்கிறேன். ஒரு காலத்தில் இருபது லட்சத்தை சுவர்க்கபோகம் என்று எண்ணியிருந் தேன். அதே இருபது லட்சத்தை இப்பொழுது வெறுக்கிறேன். அந்த இருபது லட்சத்தை அடையும் உரிமை யிலிருந்தும் என்னை நான் விடுவித்துக் கொள்கி றேன். குறிப்பிட்ட காலத்திற்கு ஐந்து நிமிஷங்கள் முன்னதாகவே இந்த அறையிலிருந்து நான் வெளியேறி, அந்த ஒப்பந்தத்தை மீறுகின்றேன்”

கடிதத்தைப் படித்து முடித்தவுடன் லேவா தேவிக்காரர் அதை மேஜையின் மீது வைத்தார். அந்த விசித்திரமான மனிதனின் தலையை முத்தமிட்டார். பின்னர் அழுதார். அந்த இடத்தைவிட்டு உடனே வெளியேறினார். முன்னர் வர்த்தகச் சந்தையில் உண்டான பெரிய நஷ்டங்களில்கூட அவர் இப்பொழுதுபோல் அவ்வளவாக தம்மை நொந்துகொண்டதில்லை. வீட்டிற்கு வந்ததும் படுக்கையில் படுத்தார். ஆனால், கலக்கமும் கண்ணீரும் அவரை நீண்டநேரம் விழித்திருக்கச் செய்தன.

அடுத்த நாள் காலை காவற்காரன் ஓடிவந்து, தோட்டத்துவீட்டில் காவல் வைக்கப்பட்டிருந்த வக்கீல் ஜன்னல் மீதேறி தோட்டத்திற்குள் வந்ததைப் பார்த்ததாகவும், பின்னர், அவர் மறைந்து விட்டதாகவும் கூறினான். கிழவர் உடனே தமது வேலைக்காரர்களோடு அந்த இடத்திற்குச் சென்று கைதி தப்பிவிட்டான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டார். அநாவசியமான வதந்திகளைத் தடுப் பதற்காக, மேஜைமேலிருந்த அந்தக் கடிதத்தை எடுத்து பத்திரமாக தம் அலமாரியில் வைத்துப் பூட்டிக்கொண்டார்.

Pin It