கறைப் பொழுதின் மழலைப் பருவம். அங்கொன்றும் இங்கொன்றுமான காகத்தின் திகைப்பான கரைசல். மூன்றரை, நான்கு மணி யிருக்கும். அடர்த்தியான இருட்டின் கனம் உடையத் துவங்கியிருக்கிறது.

பால்சொஸைட்டியில் கேனின் மூடியால் கேனின் விளிம்பில் ஓங்கி ஓங்கி அறைகிற சத்தப் பேரலை. உறங்கும் கிராமத்தின் நிசப்தவெளியை அதிரச் செய்து, பரவுகிற சத்தம்.

பசுமாடு வைத்திருப்பவர்களை “பால்பீச்ச நேரமாச்சு, பால்பீச்ச நேரமாச்சு” என்று உசுப்புகிற கேனின் சத்தம்.

ஊரோரப் பனைமரங்களிலும், வாகை மரங்களிலும், வேப்ப மரங்களிலும் உறங்கிக் கொண்டிருந்த மயில்களுக்கு விழிப்பு தட்டியது. மயில்களுக்குள் பதற்றப்பதைப்பு. ‘ஐயோ... விடியுறதுக்குள்ளே எரை பாத்தாகணுமே’ என்ற அச்சப்பரபரப்பு. மயில்களின் சலனம். சிறகசைக்கிற - வாலையாட்டுகிற மயில்களின் நெட்டிமுறிப்பு. காய்ந்தபனை ஓலைகள் சலசலக்கின்றன.

ஒற்றை மயில் வீறிட்டலறுகிறது. எதையோ கேட்டு அரண்டது போலகத்துகிறது. “பீக்கா...க், பீ...க்காக், பீக்கா...க்”

மற்ற மயில்களை எச்சரித்து உசுப்புகிற மயிலின் வீறிடல், நீள் இழுப்பாக அதன் உரத்த கூவல்காடு. காட்டின் இருள் அதிர்கிறது.

“பொழுதாவுது... பெறப்படுங்க...” என்று சொல்லுகிற மயிலின் கூவல். மற்ற மயில்களும் பதிலுக்கு அதே தொனியில் கூவுகின்றன. நீள் முழக்கமாய் கத்துகின்றன. “இந்தா... வந்துட் டோம்” என்பது போல.

இரைதேடுகிற உயிர் மரணப் போராட் டத்துக்குரிய பயணத் தயாரிப்புகள். பரஸ்பரத் தூண்டல்கள். கூவல் உசுப்பல்கள்.

இப்போதெல்லாம்... வயிற்றுப்பாட்டுக்கு இரைதேடுவது என்பது ஒரு யுத்தம் போலாகி விட்டது. உயிரைப் பணயம் வைத்துத்தான் போயாக வேண்டும். இரைபொறுக்குவதற்கு பம்மிப்பதுங்கி, பயந்து பயந்து, நாலாதிசைகளின் அரவங்களையும் கவனித்து, உயிரின் நுனியில் எச்சரிக்கையை வைத்து மெல்லமெல்ல நகர வேண்டியிருக்கிறது.

இயல்பாக வருகிற தொண்டைச் செருமல் கள். “கேர், கேர், கேர்” என்கிற செருமல்களைக் கூட கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. வருகிற செருமல்களை, நீள்கழுத்தை வெறும் நெளிப்புகளாக வளைத்து, சமாளிக்க வேண்டி யிருக்கிறது.

சொந்த இடத்தில் இயல்பான சுவாசம் போலிருந்த இரைதேடல், இந்த வேற்றிடத்தில் திருட்டாக - ஒரு கொள்ளை போலாகிவிட்டது.

பம்மிப்பதுங்கி, பயந்து பயந்து முன்னேறு கிற மயில்கள். அகலவிரல் பாதங்களை, அடிமேல் அடி வைத்து... கம்பம் பயிர்ப்புஞ்சைகளை - மக்காச்சோளப் பயிர்ப் புஞ்சைகளை - நோக்கி நகர்கின்றன.

இரை பொறுக்கி நிரம்பிய வயிற்றுடன் பயப் பரபரப்புடன் எத்தனை திரும்புமோ... கல்லெறி பட்டு, நாய்கடிபட்டு, எத்தனை செத்துவிழுமோ... எல்லாம் யுத்தத்தின் நிலவரம்தான் தீர்மானிக்கும்.

ஊரின் விளிம்பாக ஓடுகிற ஆற்றுப் பிரேத எலும்புக்கூடு, ஆற்றின் அடையாளமான மணல், தண்ணீர் எல்லாம் கொள்ளை போய் எத்தனையோ வருஷங்களாகிவிட்டன.

ஆற்றின் வடகரையில் பனைமரங்கள், மணல்காடு என்கிற தரிசுகளில் வளர்ந்து நிற்கிற வேம்பு, வாகை மரங்கள். இருள் விலகாத வைகறை நேரம். கீழடிவானம், வெளுப்பும் சிவப்புமாக கன்றிக் கனிகிறது. மேகச் சிதறல்கள் செம்பஞ்சுநிறமாக மாறுகின்றன.

சீமைக்கருவேல மரங்கள் தவிர வேறு ஒரு செடி, செத்தை இல்லாமல் அருகிப்போயிற்று. கரிசல்காட்டுக்குரிய ஆதாளைச் செடிகள், ஆவாரஞ் செடிகள், நிலவாகை, துளசி, இண்டு, தூதுவளை, ஆத்திச்செடிகள் எல்லாம் ஆற்றின் உயிரைப்போல ஒரு காலத்து நினைவாக மாயமாயிற்று. அமெரிக்கக் கோதுமையுடன் வந்து பரவிய சீமைக் கருவேல மரங்களின் விளார்கள் தமது நீள் ஆக் கிரமிப்பில், எல்லாவற்றையும் விழுங்கித் தீர்த்தது.

மறைவதற்கும், ஒளிவதற்கும் எதுவுமில்லாத வெட்டவெளியில்தான் நடக்க வேண்டியிருக்கிறது. பாறை முடிச்சுகளாக, சீமைக்கருவேல வேர் முடிச்சு களாக கிடக்கிற ஆறு.

ஆளுயரத்துக்கு மேல் சமுத்திரமாக பரந்து கிடந்த மணல்பூராவும் மாயமாகி.... எறும்புகள் அரித்த வாளை மீன் எலும்பாகக் கிடக்கிறது.

மயில்களின் கழுத்து உயரமாக நிமிர்ந்து நிற்கின்றன. கொண்டையும் தலையும் மட்டும் அங்கும் இங்குமாக திரும்புகின்றன. ‘யாராச்சும் மனுசப்பயக வாரானா? மனுசப் பயக ஏவிவிட்ட நாய்க வருதா’ என்ற பயத்தேடல். திகில் பீடித்த மனத்துடிப்பு.

புஞ்சைப் பொழியில் கால் வைக்கிற போது, உயிரின் வேர்வரை அதிர்ந்து நடுங்குகிற அச்ச உணர்வு. எந்த நிமிஷத்திலும் தகரடின் சத்த மும், கூவல்காடும், கல்லெறிகளுமாய் எந்தத் திசை யிலிருந்தும் புஞ்சைக்காரன் வந்துவிடலாம்.

அவனுக்கு அவன் வெள்ளாமையும், வேர் வையும் நாசக்காடாகிறதே என்கிற மனக் கொதிப்பு. உயிரைப் போன்ற விளைச்சலைப் பாது காக்கிற வெறிவேகத்தில் பாய்கிற புஞ்சைக்காரன். கண்மூக்கு தெரியாத மூர்க்கத்துடன் ஓடிக் கல் லெறி கிற புஞ்சைக்காரன். “த்தோய்... தோத் தோய்....” என்று நாயை உசுப்பி துரத்துகிற உக்கிரம்.

விர்ர்ரென்று இரைச்சலுடன் சிறகு முளைத்து பறந்து வருகிற கற்களைக் கண்டால், மயில்களின் குலை பதறிப் பதைக்கும். உயிர் அறுந்துப் போகிற மாதிரி திடுக்கிடும்.

நின்று நிதானமாக இரைபொறுக்கத் தோன் றாது. ஓடித் தப்பித்துவிட முடியுமா என்றே நெஞ்சு கிடந்து துடிக்கும்.

மயில்சனியன்களை புஞ்சைக்காரன் வைகிற வசவுகள் இருக்கிறதே, அது நாறவசவுகள். புழுத்துப்போன கெட்ட வார்த்தைகள், உணர்ச்சித் தெறிப்புகளாக காற்றில் காறித்துப்பும்.

திகைப்பும் திகிலுமாக பதற்றமாய் முன்னே றுகிற மயில்கள், தோகை நீளமாக இழுபட நகர்கிற மயில்கள். உதிர்கிற ஒன்றிரண்டு மயிலிறகு களைக் கூட கவனிக்கிறதெம்பும் திராணியு மில்லை.

அயலவன் புஞ்சைக் காடுகளில் அத்துமீறி நுழைந்து, கள்ளத்தனமாய் வயிற்றுப்பாட்டுக்காக போராடுவதைப்போல, ஒரு கேவலமில்லை. உயிர்ச்சூட்டை காத்துக் கொள்வதற்காக, மானச் சூட்டை-ரோஷாக்னியை இழந்துபோகிற அவலம் போல ஒரு மரணமில்லை.

என்னசெய்ய...? சொந்த மண்ணை இழந்த வன், மற்றவர் மண்ணில் இரை பொறுக் குவதில் மானம்பார்க்க முடியுமா? உயிர் வளர்த் தாக ணுமே...

நீள்தோகை இழுபட பொழியில் கால் வைத்த அந்த மயில். கம்பம்புஞ்சையின் பொழி. சாம்பல் பசுமையாக வளர்ந்து நிற்கிற பயிர்கள். எட்டாத உச்சியில் நின்றாடுகிற கனத்த கதிர்கள். கதிர்கள் நிறைய கட்டியாக நிறைந்திருக்கிற கம்பு தான்ய மணிகள்.

அந்த மயில் பொழியை கடந்து வாய்க் காலுக்குள் நுழைந்தது. அண்ணாந்து பார்த்தாலும் ஆகாயம் தெரிகிறதே தவிர, கம்பங்கதிர்கள் தெரிய மறுக்கின்றன. பயிரின் உச்சந்தலையாக கதிர்.

நீள் கழுத்தை உயர்த்தி வாய்க்கு எட்டுகிற தோகையை கவ்வி, ரெண்டெட்டு பின்னால் வைத் தால்... பயிர் வளைந்து சாயும். சாயும் பயிரை காலுக்குள் அமுக்கினால், கதிர் தரையில் கிடக்கும்.

களவாணிக்குரிய பதற்றப் பதைப்பும், பயப்பரபரப்புமாக “கபக், கபக், கபக்”கென்று பருங்கொத்துகளாக நாலைஞ்சு கொத்துகள். வாய் நிறைய அடைத்துக் கொள்கிற கம்புத்தான்யம், தொண்டைக்குள் புடைக்கும்.

நாலைந்து பயிர்களை வளைத்தால் போதும்... வயிறு நிறைந்துவிடும். தோகை யில்லா மல் கட்டை குட்டையான வாலுடன் அவலட் சணமாக இருக்கிற பெண் மயில்கள் பாடு, கூடுதல் சிரமம். தானும் வயிறு நிரப்ப வேண்டும். தன்னைத் தொற்றிக் கொண்டு பின் தொடர்ந்து வருகிற மயில் குஞ்சுகளுக்கும் பயிர்களை வளைத்து, கம்பை கொத்த வைத்து, காத்திருக்க வேண்டும். அது வரைக்கும் புஞ்சைக்காரன் வராமலிருப்பானா?

வசவுகளும் கற்களும் பறந்துவரும், றெக்கை முளைத்து, ஆண்மயிலாவது மாரடிப்பதுபோல றெக்கையடித்து, ஓட்டமாய் ஓடிவிடலாம். குஞ்சு களைக் காப்பாற்ற வேண்டிய பெண்மயில் ஓட முடியுமா? ஓட முடியாத குஞ்சுகளை விட்டுவிட்டு, ஓட மனசு வருமா, தாய்க்கு?

கல்லெறிபட்டு ரத்தச் சிதறலாக தெறித்து விழுந்து செத்துமடிந்து வீழ்ந்த ஒன்றிரண்டு குஞ்சு கள். உணவுக்கான யுத்தத்தில் உயிரிழப்புகள்.

அந்த நீள்தோகை மயில், வாய்க்காலுக்குள் பயிர்களை வளைத்து கதிர்களை காலுக்குள் அமுக்கி கொத்தியது. மூன்றாவது கதிரை கொத்திக் கொண்டிருந்தது. பருங்கொத்தல். நாலாவது பயிரின் தோகையை கவ்வியபோது-

புஞ்சைக்காரரின் “ங்க்க்ஹோய்ய்ய்” என்ற பலத்த சத்தம் கேட்டது. தகரடின் சத்தமும், தொண்டைச் சத்தமும் பலமாகக் கேட்டது. பதற்ற மாக வந்தது.

இந்தப் புஞ்சைக்காரன், அருஞ்சுனை. பெயரைப்போலவே குளிர்ச்சியானவன். நல்ல மனுசன். கெட்டவார்த்தையோ, கல்லெறியோ வராது. வெறுங்கத்தல் கத்தியே துரத்துவான். தகர டின் சத்தம் விரட்டிவரும். மனசில் கலவரம் ஏற் படுத்தும். பயந்து வரும்.

குனிந்து ஒரு கல்லைக் கூட தொட மாட்டான். ‘மயில்கள் பாவம்... வாயில்லாச் சீவன் கள்’ என்று பரிதாபப்படுகிற கருணைச்சுனை.

இவன் ஒருத்தன்தான் இப்படி. நல்லமாதிரி, மற்றவன்களெல்லாம் கெட்டமாதிரி. கல்லும் வசவுமாக உயிரையும் மானத்தையும் வாங்கு வார்கள்.

நாலாவது பயிரின் தோகையை கவ்வி, காலுக்கடியில் கதிரை அழுத்தி, கொத்த முனைகிற போது-

ஆள் ஓடிவருகிற சத்தம். மனித மூச்சிரைப்பு. நாய் துரத்தி வருகிற பெரும்பாய்ச்சல்.

தெறித்தோடி தப்புகிற மயில்கள். உயிர்ப் பயத்தில் திகிலடித்து, பயந்தோடுகிற பரிதவிப்பு. அகலமான இறக்கைகளால் மாரடித்துக் கொண்டே குட்டோட்டம் ஓடுகிற மயில்கள். ஓடமுடியாமல் போய் உயிர்ப்பயம் மனசைக் கவ்வ... ஓர் எம்பு எம்பி... இறக்கைகளை விரித்து பறந்துவிடும்.

அரைவயிறும் குறைவயிறுமாக தப்பித் தோடியாக வேண்டிய அவலம். இந்த மயிலும் தப்பித்தோடுகிறது. தோகையின் நீளம் தரையை பரசுகிறது.

இம்புட்டுத்தான். அரை வயிறோ குறை வயிறோ இன்றைக்கு இம்புட்டுத்தான். வேலி மரப்புதர் மறைவில் பம்மிப்பதுங்க வேண்டி யதுதான்.

விடிந்து, வெளிச்சமும் வந்து, தங்க நிறப் பிஞ்சு வெயிலும் வந்துவிட்டபிறகு... இரைதேட முடியாது.

சீமைக்கருவேலம்புதர்களில் ஒளிய வேண் டும். வேறு வழியில்லை. மறுபாய்ச்சல் நடத்த முடியாது.

காடுகரைக்குப் போகிற மனிதர்கள்... ஓடைக்கரைக்கு ஒதுங்குகிற ஆட்கள்... கொழை ஒடிக்கப் போகிற ஆட்டுக்காரர்கள்... புல்லு, புளுச்சிக்குப் போகிற மாட்டுக்காரர்கள் என்று ஆள் நடமாட்டம் துவங்கிவிடும்.

ஆட்டுக்காரர்களுக்கும், சிறுவர்களுக்கும் மயிலைக் கண்டாலே கை சும்மாயிருக்காது. பய முறுத்தி, கதறடித்து, கலங்கடித்து விரட்டிப் பார்ப் பது, அவர்களுக்கு ஒருவிளையாட்டு. கல்லெறிந்து கைதட்டி சிரிப்பார்கள்.

எருதுக்குப்புண் வலிக்கும். கொத்துகிற காகத்துக்கு கொண்டாட்டம்.

அதிலும், ஆட்டுக்காரர்கள்... குனியாமல் நடந்துகொண்டே கல்லெடுப்பதில் கில்லாடிகள். நடை வேகம் குறையாமல், கால்விரல்கள் கல்லைக் கவ்விவிடும். பின்மடக்காக காலை மடக்கி, கவ்விய கல்லை, கை, கைப்பற்றிக் கொள்ளும். எதிர்பாராத தருணத்தில் கற்கள் சீறிப் பாய்ந்து வரும்.

சும்மா... சிவனே என்று வெயிலில் கூதல் காய்கிற மயில்களைக் கூட சும்மாவிடமாட்டார் கள். அவர்கள் குறி வைப்பதில் கைதேர்ந்தவர் கள். இரைச்சலாகக் கல் காற்றில் பறந்துவரும்.

பனைமர உச்சியிலிருக்கிற மயில்கள் கல்லைக் கவனித்து “பீ...க்காக், பீக்கா........க்” என்று கத்தும். அந்த எச்சரிக்கையை உணர்ந்து, பதறியடித்து பறந்து இடம் மாறினால் தான் தப்பிக்க முடியும். இல்லையென்றால், சாவுதான்.

புலம்பெயர்ந்துவந்த அகதிகளின் உயிருக்கு, யார் பாதுகாப்பு தருவது?

வெயில், மனிதர்களுக்கான வேர்வை நாளாக்கிவிடும். மயில்கள் பயந்து, பதறி, வேலித் தூர்ப் புதர்களுக்குள் பம்மிப் பதுங்கி, ஒளிந்து உயிர் தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான். உயிருக்கான போராட்டமும், வயிறுக்கான யுத்தமும் ஜீவமரணப் போராட்டம்தான்.

முந்தியெல்லாம்...

இரைதேடுவதற்கு இம்புட்டுப் போராட்ட மில்லை. பயமும் திகிலுமாக பீதியில் நடுங்கிச் சாகவேண்டியதில்லை. ஊர்மக்கள் முகங்களில் விழிக்க வேண்டியதில்லை. விளைந்த பயிர்கள் நிற் கிற அயலவர் புஞ்சைகளில் கால் வைக்கிற அவலம் இல்லை. ஊர்ப்பக்கமே அண்டவேண்டிய தில்லை.

இது, அந்நிய ஊர்... அகதிப்பிழைப்பு.

முந்தியெல்லாம்... பூர்விக வாழிடம் இருந்தது, மயில்களுக்கு. மனிதநடமாட்டமில்லாத வனாந்தரம். அவர்களுக்கான சொந்த இடமிருந்தது. சுதந்திரமாக நடந்து... கால்போன போக்கில் சுற்றியலைந்து, விருப்பம்போல... இரைபொறுக்க பூர்விக வாழிடம் இருந்தது.

வலையப்பட்டிக்கும் தள்ளி... வெகுதூரத்தில் பெரீய்ய்ய கண்மாய் இருந்தது. அதற்குப் பெயரே, பெரிய கம்மாய்தான். கரிசல் காட்டுக் கண்மாய். கண்மாய்க் கரையெல்லாம் அணிவகுத்து நின்ற பெரிய வேப்பமரங்கள். கண்மாயின் உள்வா யெல் லாம் (உட்பகுதி) சமுத்திரம் போல கருவேல மரங் கள். கன்னங்கரேலென்று தூர் நிமிர்ந்துநிற்கும். ராட்சஸக்குடையாக விரிந்திருக்கிற அகலமான முள்கொப்புகள். பெருங்கிளைகள். பொடிப் பொடி இலைகள். சாம்பல் நிறக் காய்கள் கொத்து, கொத்தாக தொங்கும்.

எல்லாம்... கண்மாயிக்குச் சொந்தமான அரசுக் கருவேல மரங்கள். மயில்களின் பூர்விகம். நரிகளுக்கு இரையாகிவிடாமல், கருவேல மரங் களில் பயமில்லாமல், சுதந்திரமாக அடைந்து கொள்ளலாம்.

பகலும், வெயிலும் மயில்களுக்கு உரியதாக இருக்கும். ஆற அமர பதற்றமில்லாமல் தரையில் நடமாடித் திரியும். பூச்சிகளை பொறுக்கித் தின்கும். வற்றிய கண்மாயின் நீர் விளிம்பில் படிந்து கிடக்கிற வண்டலில் விரல் பதிய நடக்கும். இரையாக நண்டு கள் கிடைக்கும். மீன்களை கொத்து விழுங்கலாம். புழுக்கள், பூச்சிகள் கிடைக்கும். சில சமயம், பாம்புக் குட்டிகளே கூட இரையாக கிடைக்கும். அது, பெருவிருந்து.

ராத்திரியாகிவிட்டால், கருவேல மரங்களின் கொப்புகள், மயில்களின் மடியாகிவிடும். தாய்மடி போல பாதுகாப்பு உணர்வு. பத்திரமாக இருக் கிறோம் என்கிற பேருவகை. நீள்தோகைகளை தொங்கவிட்டு சுதந்திரமாக... பயமற்று உட்கார்ந்து உறங்கும். மழைக்காலமோ... வறண்ட கோடை காலமோ... மயில்களுக்கு எல்லாக் காலமும் பொற் காலம்தான்.

இரைக்குப் பஞ்சமில்லை. தேடித் திரிய வேண்டியதில்லை. பயமில்லாமல் உலவலாம். கிடைத்ததை விருப்பம்போல உண்ணலாம். உறங்கப் பயமில்லை. ஓடி ஒளிய வேண்டிய தில்லை.

எப்போதாவது மாடுமேய்க்க ஒரு சிலர் வருவார்கள். அது ஒரு பெரிய இடைஞ்சலில்லை. சற்றே ஒதுங்கிப் போய்விடலாம்.

ஊரோர ஆற்றுமணலை டக்கர்காரர்களும், லாரிக்காரர்களும், கொள்ளையடித்துப் போன மாதிரி... சுயநலச்சூதாட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான கருவேல மரங்களை சூறையாடி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி, விறகாக்கி, லாரிகளில் லோடேற்றிவிட்டார்கள். வேம்பு, வாகை என்று மரங்கள் யாவும் சன்னம் சன்னமாய் மறைந்தன.

கருவேல மரங்களையாவும் வெட்டி விற காக்கிவிட... கண்மாயின் உள்பகுதி வெறும் மண்ணாயிற்று. ஆடையிழந்த அம்மணமாயிற்று, கண்மாய். மரங்களற்றுப் போன வெறுங் கண் மாய்... வெற்று வெயில்வெளியாயிற்று.

நரிக்குப் பயந்து மயில்கள் ஒதுங்க... ஒற்றை மரம்கூட கிடையாது.

பூர்விக பூமியை பிடுங்கிக் கொண்டார்கள். நரிகள் மட்டுமே நாட்டாண்மைத் தனம் பண்ணி யது. நரிக்குப் பயந்து நகர்ந்து, நகர்ந்து... மயில்கள் சொந்த இடமிழந்து, ஊரோரம் அண்டித் தீர வேண்டிய அகதிப் பிழைப்பு.

நண்டுகளும், குறவை மீன்களும், பூச்சி களும், புழுக்களும், பாம்புக்குட்டிகளுமாக இரை கிடைத்து, உண்டுமகிழ்ந்து, திளைத்த பொற்காலம் போயேபோய்விட்டது. பழங்கனவாய், பழங்கதை யாய்...

வாய்க்குருசியாக- மனசுக்கு ருசியாக - உண்டு மகிழ்ந்ததெல்லாம்... பழைய காலம்.

இப்போது.... இந்தக் கம்புதான். மக்காச் சோளம்தான்.

அதுவும், திருடித் தின்கிற - நத்திப்பிழைக்கிற - கேவலப்பிழைப்பு, அயலவன் புஞ்சைப் பயிரில் வாய்வைத்து, மனிதர்களோடு மல்லுக்கட்டி, அவமானப்பட்டுச்சீரழிகிற பிழைப்பு. சூடு சுரணையற்ற அகதிப்பிழைப்பு.

இதுவே கதியென்று நிரந்தரமாயிற்று. மரங்கள் மறைய மறைய... மயில்களும் மறைய வேண்டியதுதான். வேறுபுகல்?

சாயங்காலம். அந்திமஞ்சள் வெயில் மறைந்து, வெளிச்சம் மறையாத பொழுதில்... மயில்கள் மறுபடையெடுப்பு நடத்தும்.

அப்படித்தான், முந்தாநாள்-

ஆள்நடமாட்டம் இல்லாத அந்திப் பொழுது. இருள்பரவாத அந்த நேரத்தில் கம்பம் புஞ்சைக்கும் மயில்கள் பட்டாளமாய் இறங்கிற்று.

புஞ்சைக்காரர் வேலைமுடித்து, வீட்டுக்குப் போயிருப்பாரென்ற தெம்பு. தைர்யம். ஆனால், அவர் இருந்திருக்கிறார்.

படையென மயில்கள் வந்து, மந்தையாக வந்து விழுந்ததைப் பார்த்த ஆத்திரம், அவருக்கு. மௌனத்தில் முறுக்கேறிய மனரௌத்ரம். கையி லிருந்த மம்பட்டியை சுழற்றி ஓங்கி வீசினார்.

நாலாதிசைகளிலும் தெறித்தோடிய மயில் களின் பயக்கதறல்கள். திகைப்பான அலறல்கள்.

சுழன்றுகொண்டே பறந்துவந்த மம்பட்டி யில், இரண்டு ஆண்மயில்கள் அடிபட்டு, ரத்தச் சகதியாக தெறித்துவிழுந்தன. அந்த வட்டார வெளி முழுவதும் காற்று நிறைய மிதந்த மயிலிறகுகள். மயிலின் உள்ளிருக்கிற வெண்ணிற இறகுகள் பஞ்சுத்துகள்களாக மிதந்தன. ஒடிந்த இறக்கைகள் மடிந்து கிடக்க, அதன் மேல் விழுந்து கிடக்கிற மயில்களின் மரணம். அதிலிருந்து கசிகிற ரத்தம்.

மற்ற மயில்கள் எல்லாம் பீதியிலும் சோகத் திலும் மாரடித்து அழுவதைப் போல கத்திக் குவிந்தன. றெக்கைகளால் அடித்துக் கெண்டன.

‘கார்... கார்.... கார்.... கார்....’ என்று மயில் களின் சோகக்கூப்பாடு, அந்தக் காட்டு வெளியை அவலத்தால் நிரப்பியது. காடு, மூச்சுதிணறிற்று.

மயிலின் மரணத்தில் அதிர்ந்துபோன மம் பட்டிக்காரர். பயத்தில் வெளுத்துப்போன முகத்தில் குற்ற உணர்வின் அவஸ்தை.

அயலவர் புஞ்சையில் இரைதேடிய போராட்டத்தில் உயிர்விட்ட அந்த மயில்களின் ரத்தம். உணவுக்கான யுத்தகளத்து உயிரிழப்புகள்.

அன்றைய சாயங்கால இரைப் போராட்ட மும் முடிந்தது. நன்றாக இருட்டிவிட்டது. இனி... நரியோ... நாயோ இதுகளை வேட்டையாடலாம்.

கண்மாய் மரங்களில் சுதந்திரமாக வாழ்ந்த நாளில் நாயென்ற ஒரு பகைவனை அறிந்த தேயில்லை. ஊரோர பிழைப்பில் வந்து ஒட்டிக் கொண்ட அவலம், இந்த நாய்த்துரத்தல்.

நடையாய் நடந்து... ஒரு சிறிய குட்டோட் டம் ஓடி... பாதி வழியில் ஓர் எம்பு எம்பி... இறக்கைகளை விரித்து, விமானம் போல பறக்க ஆரம்பித்தால், மரக்கொப்பில்தான் கால்வைக்கும். குப்புறச் சாய்ந்து, தம்பிடித்து, தம்மைச் சமாளித்துக் கொள்ளும்.

இந்த மயில் எப்போதும் இந்தப் பனைமரத் தில்தான் உட்கார்ந்திருக்கும். நல்ல உறக்க நேரம். நீள்தோகையை கீழே தொங்கவிட்டு, பச்சைப் பனைமட்டையில் உட்கார்ந்து உறங்கியது. அதே பனையில் காய்ந்த ஓலைமட்டைகளும் அடர்த்தி யாக இருந்தது.

மயிலின் உறக்க சுகம். வட்டச்சிறு கண்கள் சொருகிச் சொருகி மறைய... கண்ணயர்ந்த உறக் கம்.

கண்கள் நிறைய கனவுக்காடு. கனவில், கண் மாய் நீர்க்காடு. கண்மாயின் உள்வாய் முழுக்க வரிசை வரிசையாக கருவேல மரங்கள். கரை யோரத்து வேம்புகள், வாகைகள். வாய்க்கு ருசியாக குறவை மீன்கள், நண்டுகள், புழுக்கள் என கொத்திக் பொறுக்க வற்றாத சமுத்திர இரைகள். அதைவிட முக்கியமான... சுதந்திர உணர்வு. காலார, ஆற அமர நடைபயின்ற சுதந்திரம். பூர்விக வாழிடத்தில் திகிலற்று, பீதியற்று உலவித் திரிகிற சுதந்திரக் காற்று. தோகை தரையில் இழுபட, பிரியப்பட்ட இடத்துக்கெல்லாம் நடந்து மகிழ்கிற களிப்பு, பூரிப்பு, மனப்பரவசம்.

காய்ந்த பனை ஓலையின் இலேசான சலசலப்பில், கனவும், உறக்கமும் கலைந்தன. என்ன ஓலைச்சலசலப்பு?

வட்டக் கண்ணை விரித்துப் பார்த்தால்-

ஒரு பெரிய சாரைப் பாம்பு நெளிகிறது.

மயிலின் விழிப்பை எதிர்பார்த்திராத சாரைப்பாம்பு, அதன் “கே...ர்” என்ற மிரட்டல் கத்தலில் பதறிப்போய்... உயிர் தப்பித்தால் போது மென... சரேலென நழுவி... தரையில் “பொத்” தென்று விழுந்தது.

மயில் பார்த்துவிட்டது. விருட்டென்று பாய்ந்து வந்தது. வந்த வேகத்தில், பாம்பின் புறங்கழுத்தில் கால்களை அழுந்தப் பதித்து, ஆக்ரோஷமாக அதன் மண்டையில் கொத்தியது. பகைமை நிறைந்த கோபக் கொத்தல்கள். நாலைந்து கொத்தல்களிலேயே செத்துவிட்ட பாம்பு...

பாம்பு செத்தபின்பு, ஒரு வெற்றிக் களிப் போடும், வீரப்பெருமிதத்தோடும்... காலை உயர் மடிப்பாக தூக்கி தூக்கி நடக்கிற மயில். அதன் “கே...ர், கே...ர், கே...ர்” என்ற கத்தலில் மனக் கெக்கலிப்பு.

அதன் கண்ணில் மகிழ்ச்சிமின்னல்.

அந்தப் பாம்பையே சுற்றி சுற்றி நடந்து வந்த அதன் வாய் நிறைய ரத்த ருசி. உயிரின் வெது வெதுப்பு. மனித உயிர்களைக் கொத்திச் சாகடிக்கிற ஒரு விஷப் பாம்பை கொன்று தீர்த்த வெற்றிருசி.

பூர்விக வாழிடத்தை இல்லாமலாக்கிய அந்த வனக்கொள்ளையையும்... இந்தப் பாம்பைப் போல... தீர்த்துக் கட்ட முடிந்திருந்தால்...?

அதன் கண்ணில் ஒரு கனவும் நம்பிக்கையும் துளிர்கின்றன.

Pin It