பெண்ணெழுத்து 3
ஒரு போராளியின் கடினமான வாழ்க்கையில் ஆணுக்கு இணையாகக் கடுமையாக உழைக்கக்கூடிய திறமையுடையவர்கள் பெண் தோழர்கள்; மேலும் தம்முடைய இனத்துக்கேயுரிய சில அéர்வ குணங்களையும் தம்முடன் கொண்டு வருகிறார்கள் - சேகுவேரா
பரபரப்புடன் இயங்கும் மனிதர்களுக்கு வாழ்க்கையில் ருசிêட்டக் கூடியதாக இளைப்பாறலாக இருப்பவை கலைகள். மொழியைக் கையாள அறிந்தவர்களுக்கு கவிதை இளைப்பாறலைத் தரக்கூடும். கவிஞர் பாலபாரதிக்கு கவிதை இளைப்பாறலைத் தருகிறதா? மூச்சுக்காற்றாக இருக்கிறதா? எனத்தெரியவில்லை. ஜனநாயக மாதர்சங்கத் தலைவராக, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக, தற்போது மார்க்சிஸ்ட் கம்êனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக இயங்கிக் கொண்டிருக்கும் பாலபாரதிக்கு கவிதை மற்றொரு பரிமாணம். இவரது கவிதைத் தொகுப்பு ‘ சில பொய்களும் சில உண்மைகளும் ’.
பாலபாரதியின் கவிதைகள் எளிய மொழியில் நேரடியாகப் பயணிக்க வாசல் திறந்து வரவேற்பவை. சமூகத்தின் மீதான இவரது அக்கறை கவிதைத் தூவானமாக நனைக்கிறது. பேய் மழையென அடித்துத் துவைக்கிறது. பாலபாரதியின் கவிதை உலகம் சுயம் குறித்த தேடலை சமூகத்தோடு பொருந்திப் பார்க்கும் புள்ளியை மையமாகக் கொண்டிருக்கிறது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கை சந்திக்கும் சவால்களைக் கண்முன் நிறுத்துகிறது. துயரத்தின் வேர்களில் பயணிக்கிறது. பலாபாரதியின் கவிதைகள் மதம், சாதி, தீண்டாமை குறித்து பேசுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
மதம், சாதி, கடவுள் அனைத்துமே அரசியலின் பாற்பட்டது. காலந்தோறும் இவை அரசியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருந்திருக்கின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலும் மதத்தையும் சாதியையும் ஒழிக்க மிகப் பெரிய மாற்றத்தை வேண்டி அவற்றிற்கெதிராகப் போராடும் நிலையே உள்ளது. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதிக்கட்சிகளாக மலினப்பட்டுக்கிடக்கின்றன. மதத்தை மையப்படுத்திய அரசியல் என்பது வேளாளர் எழுச்சிக்காலம் ஒளரங்கியசீப் ஆண்ட காலம் எனக் காலந்தோறும் புதுப்புது வடிவத்தை எடுத்து தன்னைப் பரப்பிக் கொள்ள புதுப்புது உத்;திகளைக் கையாளுகிறது. மதம் சர்வதேச அரசியலிலும் கிட்டிப்புள் விளையாடிக் களிக்கிறது. “பிள்ளையார் ஊர்நெடுக மரத்தடியிலும் குளக்கரையிலும் என எல்லா இடங்களிலும் வியாபித்திருக்க ஆயுதப்படை ழே கடலிலே கரைந்தவர் அரசியல் பிள்ளையார்” என்ற அங்கதத்தின் மூலம், சுயநல அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அரசியலுக்குத் துணைபோகும் கடவுளர்க்கும் ஆயுதப்படை பாதுகாப்புத் தேவைப்படுவதை நகையாடுகிறார்.
ஆளும்வர்க்கத்தால் மதத்தாலும் சாதியாலும் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட தீண்டாமை இன்றும் மக்கள் உள்ளத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புற பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இன்றும் சாதிகுறித்த கற்பிதம் உலவிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். மனிதனை மனிதன் கீழாக நடத்துவதற்கு தீண்டாமை துணைபோகிறது. இரட்டைக் குவளைமுறை காகிதக் குவளையாக கூடுவிட்டுக் கூடுமாறியிருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் கயர்லாஞ்சி எனும் பெயர் இந்திய அரசியல் சட்டத்தை, மனிதத் தன்மையைக் கேள்விகேட்டபடி மௌனசாட்சியாய் உலவிக்கொண்டிருக்கிறது.
பாலபாரதி தீட்டு கவிதையில், உங்களால் குவிக்கப்பட்ட குப்பைகள், உருவாக்கப்பட்ட கழிவுகள், மதுபாட்டில்கள், நாப்கின் துணிகள், செத்துப்போன நாயின் சதைத்துணுக்குகள் என வரிசைப்படுத்தி துப்புரவுத் தொழிலாளியின் வீட்டுக்குள் ஒருமுறையாவது குளித்துவிட்டு சென்றிருக்கிறாரா உங்கள் கடவுள் எனக் கேட்பதன்மூலம் கடவுளின் பெயரால் கட்டமைக்கப்படும் நியதிகளில் உள்ள முகப்éச்சை அம்பலப்படுத்துகிறார். மற்றொரு கவிதையில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்குக்கூட தெரியவில்லை கிழக்குப்புறமிருக்கும் எங்கள் காலணித் தெருவுக்குச் செல்லும் வழி என்று அடித்தட்டு மக்களின் தெய்வமாகக் கூறப்படும் அம்மன்களுக்கும் காலணித்தெருவுக்கு வரும் வழி தெரியாமல் போவது ஏன் என கற்பிக்கப்பட்ட நியதிகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டி விடுகிறார்.
புறக்காயங்களை சொல்ல முடிகிற பாலபாரதிக்கு மனுவின் பேரர்களால் ஏற்பட்ட மனக்காயங்களை சொல்லமுடியவில்லை. மதம் இருண்மை பொருந்தியதாக பாரபட்சங்களோடான நியதிகளைப் போதிப்பதன் மூலம், எந்த வர்க்கத்திடமிருந்து சாதியினரிடமிருந்து உடலுழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறதோ அவர்களை உளவியல் ரீதியாகத் தீட்டு என தீண்டாமையைக்கற்பித்து வலுவற்றவர்களாக மாற்றும் யுக்திகளை வகுத்துள்ளது.
வாழ்க்கைமுறையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்து விட்டதான கருத்து படித்தவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறியவர்களும்கூட தான் வந்த பாதையை நினைக்கத் தயங்குகின்றனர். அதனால்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னேற்றம் எட்டாக் கனியாக இருந்து வருகிறது. பாலபாரதி “பறைசத்தத்தில் உரக்க ஒலிக்கிறது நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள்” என ஆதங்கப்படுகிறார்.
மற்றொரு கவிதையில் ஒற்றையடிப்பாதை, கிளித்தட்டு, என்றநிலை மாறி தார்சாலை, கிரிக்கெட், பகலில் நைட்டி, இன்சார்ட் 2 என்று முன்னேறினாலும் “தாழ்ந்த சாதிப்பிணத்தைப் புதைக்கும் இடம் குறித்த சர்ச்சை ஓயாமல்” எனும் வரிகள்மூலம் சமூகமாற்றம் என்பது நாகரிகத்தின் மேல்நிகழ்ந்துள்ளதே தவிர பண்பாட்டின் அடிப்படையில் மனமாற்றம் நிகழ்ந்து விடாத சமூகம் முன்னிறுத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை குறித்து, கந்தர்வன், பொன்மனி வைரமுத்து எனப் பலர் எழுதியுள்ளனர். பாலபாரதியும் ஞாயிற்றுக்கிழமை குறித்து இரண்டு கவிதைகளை எழுதியிருக்கிறார். ஒரு கவிதையில் பெண் சமையலறைக்குள் ஒடுங்கிப் போவதைக் கூறுபவர். அதற்குப் புறநடையாக மற்றொரு கவிதையில் ஞாயிற்றுக்கிழமையில் இருபாலரின் வேலையையும் மாற்றிச் செய்ய வேண்டுமெனப் பேசுகிறார். வேலு நாச்சியாராக குதிரையில் வலம் வருவது மங்கம்மாளாக வாள் சுழற்றுவது ஜான்சிராணியாக எதிரிகளை ஒடுக்குவது என எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்தாலும் பெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய இடமாக சமையலறை இருப்பதை “குக்கர் சத்தம் கேட்டது சமையறைக்குள் ஓடினேன்” என குக்கர் விசில் சத்தத்திற்கு அடங்கிப்போவதில் வீரம் தொலைந்து போவதைக் கூறுகிறது.
குறிப்பாக இரத்த சோகை நோயால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள முன்னுரிமை அளிக்காதவர்கள் பெண்கள். இரத்தசோகை நோய்க்கு காரணம் போதிய சத்துணவு இன்மை. பெண்கள் வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறி பசிக்கு ஏதோ உண்பவர்கள். பசிருசியறியாது என்பதுமட்டுமல்ல இவர்கள் உணவைப் பொறுத்தவரை அதிலுள்ள சத்துகளைக்கூட அறியாது. இந்தியா விடுதலைபெற்ற காலத்திலேயே பெண்கள் இரத்தசோகையை சந்தித்திருக்கின்றனர். நீதிக்கட்சியை சேர்ந்த குஞ்சிதம் குருசாமி 1956 ஆம் ஆண்டு சரிவிகித உணவு குறித்து பேச வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருந்தது இந்த இரத்தசோகை. பாலபாரதி கவிதைகளில் கரிக்குழம்பு சமைத்த நாளில் அனைவருக்கும் பரிமாறியது போக கடிக்க முடியாமல் ஒதுக்கிவைக்கப்பட்ட “எச்சில் எலும்புகளே மிச்சமிருக்கும்” என்று பகிர்ந்துண்ணா பெண்டிர் நிலைக்கு வருந்துகிறார்.
தன் பெயரைத் தானே மறந்துவிடும் ழேலை ‘மறந்துவிடுவேனோ’ எனும் கவிதையில் காணமுடியும். தன் தொலைபேசி எண்ணைக் காட்டிலும் நெருங்கிய பிறருடைய எண் நினைவுக்கு வருவதுபோல பெண்ணுக்கும் அவளைச்சுற்றியுள்ளவர்களுக்கும் இடையே உள்ள உறவின் புரிதலோடு அழைக்கப்படுகிறாள். குழந்தையின் பெயர், பணியில் வகிக்கும் பதவியின் பெயர், கணவரின் பெயர், வகுப்பறையில் வரிசை எண் எனத் தொடர்ந்து ‘ஏய் … இந்தா … காதுல விழலியா, கழுத’ என பலப்பல பெயர்களில் அழைக்கப் பட்டாலும் அவளது பெயரில் அழைக்கப்படுவதில்லை
“ பெயரிலே என்ன இருக்கிறது
என பேசாமல்
விட்டுவிடலாம் தான்
ஆனால்
பெயர்கூட
பெயரளவில் பேசப்படாத
போது”
பெயரளவிலாவது தன் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் பெண்மனம் இக்கவிதையில் வெளிப்படுத்துகிறார்.
இவரது கவிதைகளில் பெண் புதிய பரிணாமத்தைப் பெற சதா துள்ளி மோதி விழுவதும் எழுவதுமாக இருக்கிறாள். இயலாமையைக் களைய விசையுறு பந்தாக மாறுகிறாள். சில மணி நேரமாவது நூலகத்தில் செலவழிக்கப் போவதாகக் கூறுகிறாள்.
“ஊருக்கு வெளியே உள்ள ஒற்றைப் பாலத்தின்
மீதமர்ந்து
என் இலக்கிய நண்பர்களோடு உரையாடிக்
கொண்டிருப்பேன்”
இலக்கிய நண்பர்களுக்கு இணையாக அமர்ந்து இலக்கியம் பேசக் கனவு காண்கிறாள்.
காதல் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பலனளிக்காது எதிர்மறையாகவே புரிந்து கொள்ளப்படுவதைச் சார்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை அமைப்பைக் குறித்துப் பேசும் இவரது கவிதை, பெண்களின் வாழ்க்கைமுறையைப் புரட்டிப்போட்டுப் பார்க்கிறது. பணிந்து செல்லும் பெண் வெகுண்டெழுந்து கிரிக்கெட் மட்டையை ஓங்கத் துணிகிறாள். துவக்கப்பள்ளி பாடத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறப்பட்ட அப்பா பேப்பர்படித்தார் என்பதை மாற்றி அப்பா சமைத்தார் அம்மா பேப்பர்படித்தார் என மாற்றுகிறார். அடுத்த தலைமுறை பெண்ணின் மாப்பிள்ளைத் தேர்வு, பெண்வாழ்வில் அடுக்களையிலிருந்து மீண்டு அறிவுத்தளத்திற்கு வர, சமூகப் பொறுப்புகளில் இணைத்துக்கொள்ள, தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டுமெனும் பாலபாரதியின் விருப்பம் கவிதையில் மட்டுமல்ல இவரது வாழ்க்கையிலும் சாத்தியப்பட்டிருக்கிறது.
சமூகப்பண்பாட்டால் ஒடுக்கப்பட்ட பெண்கள் உளவியல் சிக்கலுக்குள் சிதைந்து போகிறார்கள். குறிப்பாக பெண்களின் அடக்கப்பட்ட பாலுணர்வின் வெளிப்பாடே பேய்பிடித்தல் எனக் கூறப்படுகிறது. பாலபாரதியின் கவிதையில் பேய்பிடித்தவள் நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்து வாங்கியதும் குணமாகிறாள். மற்றொரு வகையான பேய் பெருவாரியான பெண்களைப் பிடித்திருப்பதாகக் கூறுமிவர் பேய் மெகாசீரியல் வழியாக வீட்டுக்கே வந்து பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.
பேய்பிடித்தல் என்பது மூடநம்பிக்கையின் பிரதியாகவும் உளவியலின் உண்மையைத் தாங்கியுமிருக்க தொலைக்காட்சியின் மெகாசீரியலின் மூலம் அறிவை மழுங்கடிக்கும் வேலையைச் செய்யும் இப்பேயின் இலக்கு உளவியலை பாதிப்பதாகவே அமைகிறது. அதில் உளவியல் பாதிப்பால் பேய்பிடித்தது, இதில் சீரியல் பேய்பிடித்ததால் உளவியல் பாதிக்கிறது என்ற முரணை முன்வைக்கிறார்.
அரசியல் குறித்த பாலபாரதியின் கவிதைகள் பகடி செய்கின்றன. சிகரம் கவிதை தான் சார்ந்திருக்கும் அரசியல் மீதான நம்பிக்கையின் பதிவாகயிருக்கிறது. தரிசு நிலங்களை மேம்படுத்த வந்த அமைச்சரால் தரிசு நிலங்களாகவே ஆக்கப்படுபவர்கள் விவசாயிகள் என்பதாக அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அதை சரிசெய்ய முன்வராத எம்.எல்.ஏ வை தொலைபேசியில் பிடித்துவிடலாம் எனமுயன்ற போது எப்போது கேட்டாலும் கிடைத்த பதில் “அய்யா குளித்துக் கொண்டிருக்கிறார்” என்பதாகவே இருக்கிறது. தண்ணீர்ப்பிரச்சனையின் போது அரசியல்வாதி மட்டும் குளித்துக் கொண்டேயிருக்கிறார். போலித்தனத்தை நீக்கிவிட்டு மக்கள் சேவையைக் கவனிக்க வேண்டும்; அடிப்படை வசதியை மட்டும் அல்ல தொடர்பு கொள்ளும் வசதியையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனச் சுட்டிக்காட்டுகிறார்.
நாற்காலிகளுக்குதான் இன்று மிகப்பெரிய போட்டியிருக்கிறது. இன்றைய அரசியலில் நாற்காலிக்குரிய இடத்தைக் கொண்டு அங்கதமாக்கியிருக்கிறார் பாலபாரதி. “காலில்லா நாற்காலிக்கு காலில்விழுவதும் காலை வாருவதும் கலாச்சாரமாகிப் போனது நாற்காலிபிச்சை நாங்கள் கொடுத்து அதிகாரத்திற்குவந்த நாற்காலிகள் ஆட்டம் போடுகின்றன. சிம்மாசனங்களை உருட்டியவர்கள் மக்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என எச்சரிக்கிறார். தாமிரபரணி குறித்த கவிதையில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டதையும் அவர்களை ஓடுக்க வன்முறையாளர்கள் எனக் குற்றம் சாட்டுவதும் பொருந்தமற்றதாக இருப்பதைக் கூறும்மிடத்தில் இக்கவிதை போராட்டக் களத்தில் பெறப்படும் சேதங்களைக் காட்சிப்படுத்துகிறது.
அடிவயிற்று உதையில்
உங்களில் எவருக்கேனும்
சிறுநீரோடு ரத்தம்
போனதுண்டா?
கைக்குழந்தை கூட
கலகம் செய்தது என்றா
ஆற்றில் வீசி கொன்றார்கள்.
செல்போன் குறித்த கவிதையில் நேரில் இருப்பவர்களோடு ஒருவார்த்தைகூட பேசிக் கொள்ளாதவர்கள்
“அவரவர் காதில் வைத்து
அவரவர்களாக
பேசிக் கொண்டார்கள்
செல்போனிலேயே
சிலர் சிரித்துக்
கொண்டார்கள்”
தற்போது மக்களிடையே ஆறாவது விரலாகவும் மூன்றாவது கையாகவும் விளங்குகின்ற செல்பேசி புதிய முகங்களை உருவாக்குவதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அவரவர் பரபரப்பு வாழ்க்கையினூடாகப் பேசிக்கொள்ளும் நேரங்கள் அருகி வருகின்றன. நேரடிப் பேச்சு குறைந்தாலும் செல்பேசியில் தொடரும் பேச்சு அதிகரித்த வண்ணமிருக்கிறது. செல்பேசியால் உலகம் சுருங்கிவிட்டது. எல்லைக்கோடுகள் விரிந்து விட்டன. ஆனால் நம்மைச் சுற்றியிருக்கும் சுற்றம் அந்நியமாகிக் கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீந்திக் களித்த நாட்களுக்குள் நினைவைக் கரையவிடும் பாலபாரதி குழந்தையிடம் ஆற்றைக் காட்டியபோது “மணலில் எப்படிக் குளித்தாய்” எனக்கேட்டதாகக் கூறுகிறார். மற்றொரு கவிதையில் ஆறு, குளம் முதலானவற்றை நீர்நிலைகள் எனக்கூறிய தருணத்தில்
“ தண்ணீர் லாரி
சப்தம் கேட்டு
தெருவுக்கு ஓடினார்கள்
பிள்ளைகள் ”
நகரத்துக் குழந்தைகள் மட்டுமல்ல. நீர்நிலைகள் வறண்டுபோன கிராமத்துக் குழந்தைகள் கூட தண்ணீர் என்றதும் தண்ணீர் லாரியை தான் நினைவு படுத்திக் கொள்கிறார். ழேலியலோடு ஒன்றி வாழ முடியாதபடி நெருக்கடிகளுக்குத் தள்ளிவிட்டது சுரண்டல் உலகம். உலகின் பெரும்பான்மை மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை அறுத்துக் கொண்டு இயற்கையின்மீது வன்முறை செலுத்துவதன் விளைவாக இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். நிலத்தடிநீர் வற்றிவிட்ட நிலையில் பூமி பூகம்பத்திலிருந்து காக்கும் திறனிழந்துள்ளது. கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ழேலே அதிகரித்து வருகிறது.
மனதை ஆக்கிரமித்து உணர்வுகளில் ஊசலாடும் சுமை உணர்ந்தவர்களுக்குப் புரியும். பாலபாரதியின் கவிதை
“விலகி விலகியே
சென்றோம்
விலக வேண்டும் என்ற
விருப்பத்தோடும்
விலக முடியாத
துக்கத் தோடும்”
எழுத்தாகி இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களுடைய நினைவு நெஞ்சுக்குள் சுருண்டு படுத்திருப்பதாக, வெளியேற்ற முடியாததாக, ஆக்கிரமித்திருப்பதாக என பலதளங்களில் விரிந்து பரவி வார்த்தைகளுக்குள் அடக்கப்பட்டிருக்கிறது.
தன்னைக் குறித்த தேடலோடு யசோதராவை நிர்கதியாய் விட்டுச் சென்ற புத்தன் பிறருக்கு இரட்சித்ததைக் கேட்கத்துணிந்த பாலபாரதி ‘யார்’ எனும் கவிதையில் தன்னைத் தானே யாரென விசாரணைக்கு உட்படுத்திக் கொள்கிறார். இத்தொகுப்பு மிக எளிய மொழியில் கவிஞரை முன்னிறுத்திக் கொள்ளாமல் தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பேசும் கவிதைகளைக் கொண்டிருக்கிறது.
கவிஞரின் நம்பிக்கையை, இரும்பு மனதை, போராடும் துணிவை, மாற்றத்தைக் கொணடுவர வேண்டுமெனும் சிந்தனையைக் கொண்டுள்ள பெண்ணின் பிரகடனமாக ஒலிக்கிறது. பழமையின் கட்டுகளை உடைத்தெறிந்து கடலின் மகளாக காற்றின் மகளாக சிறகசைத்துப் பறக்கிறார் பாலபாரதி.
- ச.விசயலட்சுமி