சண்டைக்கோழி திரைப்படத்தில் வருகின்ற வசனம் தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறி குட்டிரேவதி கண்டனம் தெரிவிக்க, அவருக்கு ஆதரவாக சில எழுத்தாளர் குழுக்கள், புக் பாயின்ட்டில் ‘உயிர்மை' பதிப்பகம் நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எஸ்.ராமகிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று போராட்டம் செய்தனர். பெண்களையோ, சக பெண் எழுத்தாளர்களையோ, தெரிந்தோ தெரியாமலோ சிறுமைப்படுத்தும் நிகழ்வுகளுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்க முடியும். இதைப்பற்றி ‘காலச்சுவடு' மடத்தில் குருகுல கல்வி பயின்ற மனுஷ்யபுத்திரன், தன்னுடைய வழுக்கலான மொழியில், புத்தகம் வெளியிடும் முதலாளியின் குரலிலும் தன்னுடைய ஆதங்கத்தை இந்த மாத உயிர்மையில் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை நாம் படித்து வந்த, எழுதி வந்த எழுத்துக்களெல்லாம் வைதீக பூச்சு கொண்டவை. அதில் மனிதர்களின் வாழ்வோ, அவர்களின் ஆழ்மனப் போராட்டங்களோ இல்லை. கற்பனை வடிவத்தில் புரட்சியை மழுங்கடிக்கும், சொறிந்துவிடக்கூடிய சுகம் மட்டுமே பல எழுத்தாளர்களின் எழுத்தில் உள்ளது என்று, நல்ல இலக்கியம், நல்ல கவிதையை சிற்றிதழின் மூலமே தரமுடியும் என்றும், கட்டுடைத்து எழுதும் பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தவர் மறைந்த சுந்தர ராமசாமி, அவர் வழியில் வந்த மனுஷ்யபுத்திரன்.
அந்த மனுஷ்யபுத்திரன் தற்போது இல்லை.
1. சுஜாதாவின் திவ்யபிரபந்த புகழ்ச்சியைக் கேட்டுருகும் மனுஷ்யபுத்திரன்
2. வானம்பாடி கவிஞர்களை சூத்திரர்கள்போல் பாவிக்கும் பார்ப்பனக் கொழுந்து ஞானக்கூத்தனைப் போற்றும் மனுஷ்யபுத்திரன்
3. மனு தர்மத்தையும், புராண கால இந்தியாவையும் போற்றி வணங்கும், தமிழ் எழுத்தாளர்களை அவமானப்படுத்தும் நாயர் ஜெயமோகனின் காலை வருடும் மனுஷ்யபுத்திரன்
4. தன்னுடைய திரைப்படங்களின் மூலம் மயிலாப்பூர்வாசிகளின் புலம்பல்களை நியாபப்படுத்தியும், வி.பி.சிங் அமல்படுத்திய இட ஒதுக்கீட்டை விமர்சனம் செய்தும் படமெடுக்கும் ஷங்கரை ஒரு முற்போக்குவாதிபோல் நினைத்து, தன்னுடைய மேடையில் மரியாதை செய்யும் மனுஷ்யபுத்திரன்... என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.
தன்னுடைய நிகழ்ச்சியில் வந்து, எதிர்ப்புக்குரல் எழுத்தாளர்களை, ‘ஜெ.' தன்மையுடன் கண்டித்துள்ளார். அவர் பேசிய முற்போக்குவாதம், பெண்ணியவாதமெல்லாம் தன்னுடைய புத்தக வியாபாரம் என வரும்போது காணாமல் போய்விடுகிறது. க்ரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்களை இலக்கிய வரிசையில் சேர்க்காத இவர்கள், சுஜாதா எழுதிய ‘கணேஷ் - வசந்த்' குப்பைகளையெல்லாம் புதுப்பொலிவுடன் வெளியிடுகிறார்கள். எல்லாம் காலக் கொடுமை.
ஒரு காலத்தில் அக்ரஹாரத்தில் வசித்தவர்கள் இன்று அபார்ட்மெண்ட்டில் வசித்தாலும் ரத்தம் மாறாது என்பதுபோல, நூறுபேர் படிக்கும் சிற்றிதழ்களில் எழுதுவதே பெருமை என்று உபதேசித்த ஜெயமோகன், ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்றவர்களுக்கு இன்று வெகுஜன உடகங்களிலும் எழுதுவதற்கு முடிகிறது. ஆனால் குட்டி ரேவதி போன்ற அதிர்வூட்டுகின்ற பெண் எழுத்தாளர்களுக்கு தங்களுடைய கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பில்லை. அதனாலேயே தங்களுடைய எதிர்ப்பைக் காட்டுவதற்கு சம்பந்தப்பட்ட ராமகிருஷ்ணன் கலந்துகொண்ட அரங்கிலேயே, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அடக்குமுறை யார் செய்தாலும் எதிர்க்கும் அ.மார்க்ஸ், இன்குலாப், ‘அநிச்ச' நீலகண்டனும் உடன் பங்கு கொண்டிருக்கிறார்கள். இது எப்படி தவறாகும்.
இன்று தமிழகத்தில் சாதாரணமாக காலச்சுவடு, தீராநதி, உயிர்மை படிக்கும் எந்த வாசகனுக்கும் குட்டிரேவதி என்ற எழுத்தாளர் இருப்பது தெரியும். உலக இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் ராமகிருஷ்ணனுக்கு குட்டிரேவதி என்ற பெயர் தெரியாது என்று கூறமுடியாது. சினிமா இயக்குநரோ, உதவி இயக்குநரோகூட அந்த வசனத்தை சேர்த்திருந்தால்கூட, படத்திற்கு வசனமெழுதும் பொறுப்பை ஏற்றிருக்கும் ராமகிருஷ்ணன்தான் பொறுப்பேற்க முடியும். திரையரங்குக்கு வருவதற்கு முன்னால், விநியோகஸ்தர்களுக்கும், பிரபலங்களுக்கும் போட்டுக் காண்பிக்கப்படும் காட்சியைக்கூட ராமகிருஷ்ணன் கண்டிருக்கலாம். இப்படி ஒரு வசனம் வருவது, பெண்ணியக் கவிஞரை கேவலப்படுத்துவது போலிருக்கும் என்று ராமகிருஷ்ணன் அவதானித்து இருக்கவேண்டும். காரணம் மனித மனங்களின் உள்வெளிப் போராட்டங்களை அலசி ஆராய்பவராயிற்றே!
தன்னுடைய புத்தக அறிமுக விழாவை அசிங்கப்படுத்தி வியாபாரத்தை பாதிப்படையச் செய்துவிட்டார்கள் என்ற கடுப்பில் மனுஷ்யபுத்திரன், தன்னுடைய தலையங்கத்தில் ‘சோ'தனமாக சில ஆதங்கங்களை வரிசைப்படுத்துகிறார். "வருங்காலத்தில் அ.மார்க்ஸ் பேசும் கூட்டங்களை திருமாவளவன் ஆதரவாளர்கள் கலைக்கலாம். அ.மங்கையின் நாடகத்தில் ராமதாஸின் ஆதரவாளர்கள் ரகளை செய்யலாம். இன்குலாபின் வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போய் மறியல் செய்யலாம். வீ.அரசுவின் ஏதாவதொரு கருத்துப் பிடிக்காத மாணவர்கள், அவருடைய வகுப்புகளில் கண்டனம் தெரிவிக்கலாமென்று...'' பயங்கரமான ‘ஐடியா'க்களை வழங்குகிறார்.
காலச்சுவடுக்காரர்களே கொஞ்சம் அமுக்கி வாசிக்கும்போது, மனுஷ்யபுத்திரன் மட்டும் என் ‘மோடி'புத்திரனாக மாறிப்போனார் என்று தெரியவில்லை. ஊடகங்களில் தங்களைப் பற்றி வரும் செய்திகளுக்கு, மறுப்புக்கு வாய்ப்பளிக்காத பட்சத்தில் அதை நேரிடையாக சம்பந்தப்பட்ட மனிதரோ, குழுவோ வெளிப்படுத்துவது இயல்பானது; சரியானது. (சமீபத்தில் சன் டிவிக்கு எதிராக ஒரு அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கூறலாம்).
தங்களுடன் (கருத்துடன்) பணியாற்றுகிறவரை பெண் கவிஞர்கள் எல்லாரும் பெண்ணியக் கவிஞர்கள். தங்களை எதிர்க்க ஆரம்பித்தால் அவர்களுக்கு வேறு பெயர் வைப்பது என்ன அளவுகோல் எனத் தெரியவில்லை?
(நன்றி: நக்கீரன்)
- சேகுவேரா