எஸ்.ஏ.பி.யின் கடவுள்கள் - மரபுகள், பண்டிகைகள் 

தீபாவளி, கார்த்திகை, தைப்பொங்கல், நவராத்திரி, விநாயகர் வழிபாடு, கிருஷ்ணஜெயந்தி என பல்வேறு வகையான விழாக்கள் மக்களால் கொண்டாடப்படுகின்றன. 

'இவையெல்லாம் பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கைகள்' என்று வெறுப்பின் முகச்சுளிப்புடன் இடதுபுறங்கையால் தள்ளிஒதுக்கிவிட்டுப்போய் விடலாம். ஆனால், கொண்டாட்டங்களும், விழாக்களும், வழிபாடுகளும் தடைபடாமல் மக்களால் காலகாலமாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது என்பது தடுக்க முடியாததொரு புறநிலையதார்த்தம். 

தடுக்க முடியாத கொண்டாட்டமாகத் தொடர்கிற - பல்கிப் பெருகுகிற - விழாக்களாக நீள்கிறது என்றால், அதற்குள் ஏதோவொரு தவிர்க்க முடியாமை ஒளிந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் பௌதீகத் தேவையாக இருக்க வேண்டும். மதம் சார்ந்த புராணீகக் கதைகள் கொண்ட விழாக்கள், பௌதீகத் தேவையாகுமா? 

இந்தக்கேள்வி, ஏகப்பட்ட பாதைகளில் பதில் தேடிப் பயணப்படுகிறது. பதிலற்ற இருட்குழப்பத்தில் மனம் மௌடீகத்துக்குள்ளாகி... கண்ணை மூடிக் கொண்டு மக்களின் பின்னால் கொண்டாடப்போய் விடுகிறது. 'ஊரோட... நானோட' என்று மக்கள் ஜோதியில் யாவரும் கலந்து விடுகிற நிலைமை. ஆனால் தோழர் எஸ்.ஏ.பெருமாள் இதேகேள்வியை எழுப்பி, பாதைகளைத் திறந்துவிட்டு, பதில்களின் சாளரக் கதவுகளைத் திறக்கிறார். வருகிற வெளிச்சக்கீற்றில் நம்மை அப்பாதைகளில் பயணப்படவைக்கிறார், "கடவுகள்கள் - மரபுகள் - பண்டிகைகள்" என்ற நூலின் வழியாக. 

எஸ்.ஏ.பெருமாள் மிகப்பெரிய வாசிப்பறிவு மிக்க தத்துவவியலாளர். அதுமட்டுமல்ல... கற்றறிந்த தத்துவவாசிப்புடன் நடைமுறை வாழ்க்கையில் கண்டறிகிற அனுபவங்களை பொருத்தி, பரிசீலித்து புதிய சுய முடிவுகளுக்கு வந்தடைகிறவர். கற்றதை வகைப்படுத்தி தொகுத்துச் சொல்கிற வெற்று வேலை இவரிடம் இருக்காது. கற்றதுடன் வாழ்வனுபவங்களை குழைத்து, உள்வாங்கி, தன்வயப்படுத்தி, சொந்தச் சிந்தனையாக வெளிப்படுத்துகிற உண்மையான தத்துவச் சிந்தனையாளர்.

வெட்டுக் கிளிகளிடமிருந்து வெள்ளாமையை காக்கிற ஆதிகாலமுயற்சியான தீபவரிசையே... கார்த்திகையாக... தீபாவளியாக பரிணமித்ததை இவர் விவரிக்கிற விதமே தனியாக இருக்கிறது. 'தீபாவளி என்பது வைணவப் பண்டிகை' என்கிற பொதுப்புத்தியின் புரிதலை அடித்துத் தகர்கிறார்.

'கண்ணன் கடவுள் ஆன கதை' என்ற கட்டுரை ஏகப்பட்ட தகவல்களைத்தந்து ஒருபுதிய புரிதல் வெளிச்சம் தருகிறது. தமிழகத்தில் விநாயகர் வழிபாடு என்ற கட்டுரையில் வரலாற்றியலும், சமூகவியலும், பண்பாட்டியியலும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. பிரமிக்கத்தக்க புதிய பார்வையை உருவாக்குகிறது. 

அறிவியலும், இலக்கியமும் புராணமும், வழிபாட்டு வேறுபாடுகளும், பிரதேச வித்தியாசங்களும், மதங்களின் பிரயோகங்களும் கலந்து குழைந்த ஒருவிதமான தத்துவ வெளிச்ச நூல். வாசிப்போட்டமுள்ள துரிதமான நளினமிக்க மொழிநடையில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை நூல்... இயக்கத்தில் பணியாற்றுகிற இளைஞர்களுக்கு மட்டுமல்ல சகலருக்குமான காலடி விளக்கு.

வெளியீடு : கஸ்தூரி பதிப்பகம் 

525, காந்திபுரம், 2வது வீதி விரிவு, 

100 அடி சாலை, கோவை - 641 012 

விலை ரூ.35 

ஆ.சிவசுப்பிரமணியனின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி

மார்க்ஸிஸம் எனும் மகத்தான தத்துவத்தின் அருங்கொடைகளில் ஒன்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதம். 

'மன்னர்கள், மாமனிதர்கள் ஆகியோரின் வீரப்பிரதாப சாகசங்களின் தொகுப்புதான் வரலாறு' என்ற புரிதல் இருந்தது. சம்பவங்களின் நிகழ்வுகளின் விபரப்பட்டியல்களின் தொகுப்பே வரலாறு என்ற புரிதலுமிருந்தது. 

உற்பத்திக் கருவிகளின் மாற்றமும், உற்பத்தி சக்திகளின் மாற்றமும, உற்பத்தி உறவுகளின் மாற்றமுமே வரலாறு என்று புதிய ஞானவெளிச்சத்தைத் தருகிறது வரலாற்றுப் பொருள்முதல்வாதம். உழைப்பும், உழைப்பு சார்ந்த உற்பத்தி உறவுகளுமே வரலாற்றுச் சுழற்சியின் அச்சாணி என்ற புதிய கண்களைத் தருகிறது மார்க்ஸிஸம். மார்க்ஸிஸம் தந்த இந்தக்கோட்பாடு வெளிச்சத்தில்தான் முந்தைய வரலாற்றின் புதர் பாதைகளின் புதிர் விலகி உண்மை தெரிந்தது.

ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் என்கிற தாய்வழிச் சமுதாயம்.. ஆண்டாம் - அடிமைச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், ஆலை முதலாளித்துவ சமுதாயம், விஞ்ஞானப் பொதுவுடைமைச் சமூகம் என்ற சமுதாயப் பொருளாதார வளர்ச்சியின் வளர்ச்சிப் பாதைப் படிக்கட்டுகளின் அடுக்கு வரிசை புரிந்தது. 

இன்றைக்கு பல்வேறு முகாம்களைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களுக்கும், மேதைகளுக்கும் மார்க்ஸிஸம் தந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் ஞானவிளக்குதான் காலடிப் பயணத்திசை காட்டியாகத் திகழ்கிறது. அதுசரி... வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? அவ்வளவு பெரிய ஞானவிளக்கை எப்படி எட்டிப் பிடிப்பது? மேதைகளின் விஷயமான அது, சாமானியர்களுக்கும் வசமாகுமா?

இந்தக் கேள்விக்கெல்லாம் எளிய பதில் ஒன்றே ஒன்று, பேரா. ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய "வரலாற்றுப்பொருள்முதல்வாதம்- ஓர் அரிச்சுவடி" என்ற நூல்தான். வரலாற்றுப் பொருள் முதல்வாதம் குறித்து ஏகப்பட்ட நூல்கள் ஏகப்பட்ட ஆசிரியர்களால் எழுதப்பட்டு ஏற்கெனவே வந்திருந்தபோதிலும், இந்த நூலுக்கு தனித்துவ சிறப்பு உண்டு. வலிமை மிகு தத்துவ ஆழங்களை எளிய மொழியில் எடுத்துப் பகிர்வது, தமிழ் மனதுடன் - தமிழ் மணத்துடன் அந்தத் தத்துவத்தை அழகாக - நளினமாக பகிர்ந்தளிப்பது என்பது இந்த நூலின் தனித்துவ மேன்மையாகும்.

ராகுல்ஜி, மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்று பலரிடமிருந்து மேற்கோள்களை எடுத்துக் கையாளுகிற ஆசிரியர், இத்தாலிய மார்க்ஸிஸ்டான அந்தோணியா கிராம்சியின் விரிவான மேற்கோளையும் ஆரோக்கியமாக எடுத்தாளுகிறார். அதுமட்டுமல்ல அடித்தள கட்டுமானம், மேற்கட்டுமானம் இவற்றுக்கிடையேயுள்ள பரஸ்பர உறவை மிகுந்த நேர்மையுடன் விளக்குகிறார். மேற்கட்டுமானத்தின் கூடுதல் ஆற்றலையும், சிவில் சமூக பண்பாட்டு வீர்யத்தையும் துணிச்சலாகவும், துல்லியமாகவும் முன்வைக்கிறார். 

அத்துடன் தமிழின் வரலாற்றுரீதியான பண்பாட்டுச் சொத்தான சங்க இலக்கியங்களின் மூலமாக வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தை விளக்குகிறார். வேட்டைச் சமூகம், இனக்குழுச் சமூகம், மேய்ச்சல் சமூகம், குறிஞ்சி, மருதநில வேளாண்மை... வனமெரித்து நிலம் படைக்கிற விவசாயம் எனப்படுகிற நிலப்பிரபுத்துவ சமூகம் என்று சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக விளக்குகிற பாங்கு... வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை தமிழ்ப்படுத்தியதாக தோன்றுகிறது.

சொந்த வீட்டுக்குள் நுழைகிற சகஜ உணர்வோடு நூலை வாசிக்க முடிகிறது. வனமிருகங்களை வசக்கி வளர்ப்பு மிருகங்களாக மாற்றுகிற சமூகத் தேவையிலிருந்து ஜல்லிக் கட்டு வந்ததாக போகிற போக்கில் வந்து விழுகிற ஒரு செய்திக் கீற்று நம்மை பிரமிக்க வைக்கிறது.

எளிய மொழி... தமிழ் மணம்... இரண்டும் மிகப்பெரிய தத்துவ விளக்கை யாவருக்குமான கைவிளக்காக ஜனநாயகப்படுத்துகிறது. இதைச் சாதித்த பேரா. ஆ.சிவசுப்பிரமணியனை மனசாரப் பாராட்டலாம். அவரது இந்த நூல் புதிய இளைஞர்களுக்கும், சகலருக்குமான கையேடு. 

விலை : ரூ.60

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 

41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், 

அம்பத்தூர், சென்னை - 98 

போன் : 26251968 - 28359906 

----

கோவை சதாசிவம் எழுதிய உயிர்ப் புதையல்

சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது வயிற்றுக்குச் சம்பந்தமில்லாத - வாழ்வியல் நெருக்கடிக்கு தொடர்பற்ற ஒரு தொலை தூரத்து உலக அக்கறையாக தோற்றமளித்தது, முன்பு. காய்ச்சலுக்கு மாத்திரை கிடைக்காத நிலைமையை பேசாமல், சுவாசத்துக்கான காற்று மாசுபடுகிற 'தூசிப்' பிரச்சனையை 'வேலை மெனக்கிட்டு' பேசுவதாக சூழலியலாளர்களை நினைத்தது, சமூகம்.

ஆனால்.... இப்போதைய நிலைமையே வேறு. குடிதண்ணீரில் உப்புச் சத்து இருப்பதால், கல்லடைப்பு நோய் வந்து ஸ்கேன் எக்ஸ்ரே என்று விலை உயர்ந்த வைத்தியம் செய்ய வேண்டியதிருப்பது கிராமத்து ஏழை மக்களின் பைசாப் பிரச்சனை; பைசாசப் பிரச்சனையும் கூட. கிராமப்புறத்து உழைப்பாளி மக்களுக்கும், சிறுவர்களுக்கும் கூட சர்க்கரைநோய் வருவதற்கும், பசுமைப்புரட்சி ரசாயன உரம், பூச்சி கொல்லி விஷ மருந்து, ஒட்டுவீர்ய விதைகள் பயன்பாட்டுக்கும் உள்ள காரணப் பின்னல்கள் சாதாரண மக்களுக்கும் தெரிந்த ரகசியமாகி விட்டது. சுற்றுச்சூழல் பிரச்சனைகாக கவனமெடுத்து போராடத் துவங்கி... சமரசமற்ற விழிப்புணர்வுடன் முன்னோறினால்.. அது, ஏகாதிபத்திய ஏகபோகமுதலாளிகளை எதிர்த்த சமராக பரிணமிக்கும் என்ற உலக அரசியல் உள்ளூர் மனிதர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக துல்லியப்பட்டு கொண்டிருக்கிறது. 

அப்படியொரு விழிப்புணர்வு அரும்பிக் கொண்டிருக்கிற நிகழ்வை மேலும் பரவலாக மலர வைக்கிற நோக்கத்துடன் வந்திருக்கிற மிக முக்கியமான நூல், கோவை சதாசிவத்தின் 'உயிர்ப் புதையல்'. காடும், காடு சார்ந்த உலகமும் என்ற விவரணையுடன் வந்திருக்கிற நூல். 

கவிஞராக - கதாசிரியராக - குறும்பட இயக்குநராக அறியப்பட்ட கலை இலக்கிய மனமும், மணமும் கொண்ட கோவை சதாசிவத்தின் இலக்கிய மொழிநடையில் மலர்ந்திருக்கிற சூழலியல் கட்டுரைகள், நமது அறிவின் உள்மடிப்புகளை நீவி.... விரித்து, பரத்தி.. விசாலப்படுத்துகிற சமுதாய அரசியல் கல்வியாகவும் ஒளிர்கிறது. 

'அம்மாவின் அம்மா', 'மாமழை போற்றுதும்', 'விதைநெல்', 'நீராலானது உலகு', 'மரமென்னும்தாய்மடி', 'மணல், பூமியின் மேலாடை' இவையெல்லாம் கட்டுரைகளின் தலப்புகளில் சில. 

'அம்மாவின் அம்மா'வை வாசித்த பிறகு, நான் மேற்கு மலைத் தொடர்ச்சியைப் பார்க்கிறபோது, உள்ளுக்குள் மரியாதையும் மதிப்பும் தோன்றுகிறது. இந்த மலைத் தொடர் மட்டும் இல்லாமலிருந்தால்.. கர்நாடகம், ஆந்திரம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னகமே பாலை நிலமாக பாழ்பட்டிருக்கும் என்ற வரியை வாசித்த போது, அதிர்ந்து போகிறது மனசு. 'அட.. ஆமா' என்று வியப்புடன் ஒப்புக் கொண்ட மனசு, மலையின் மடிப்புகளையும் அடுக்குகளையும் நேசத்துடன் பார்க்கிறது. 

மலையின் வளத்தையும் இயல்பையும் காலனிய வெள்ளையரும், சமகால முதலாளிகளும், அரசியல் புள்ளிகளும் கொள்ளையடித்து நாசம் செய்கிற பயங்கரத்தை உணர உணர மனசு கிடந்து பதறிப் போகிறது. நொய்யல் நதியின் சமாதியாக திருப்பூர் நகராட்சி அலுவலகம் போன்ற அரசுக் கட்டிடங்கள் பேருந்துநிலையம் போன்றவை அமைந்திருக்கிற நிஜம் நம்மை அதிர வைக்கிறது.

இருவாச்சி பறவையை பற்றிய விபரங்களும், விவரணைகளும் புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. விதைநெல் கட்டுரை முழுக்க ஏகாதிபத்திய, ஏகபோக முதலாளிகளின் கொள்ளைச் சுரண்டல் பற்றிய கட்டுரை. வளரும் நாடுகளின் வேளாண்iயையே வேட்டையாடுகிற பயங்கரத்தை அதிரும்படி உணர்த்துகிறது. மரபணு விதைகளை நம்பிய விவசாயிகளின் தற்கொலைப் பட்டியல் திடுக்கிட வைக்கிறது.

நூல் வடிவமைப்பு பற்றி சொல்லாமல் போனால் நேர்மையாகாது. 'வெளிச்சம்' பதிப்பக பாலாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். வண்ணத் தோகையுடன் ஒயிலாக அழைக்கிற மயிலின் வனப்பு, முதல் பக்கத்திலேயே வசீகரிக்கிறது. பக்கத்துக்குப் பக்கமாக வண்ண ஒளிப்படங்கள். கட்டுரைகளை வெளிச்சப்படுத்துகிற கச்சிதமான படங்கள். காகிதமும், அச்சும் உலகத் தரத்தில் உன்னதப்பட்டு நிற்கின்றன. 

வெளியீடு : வெளிச்சம் வெளியீட்டகம்,

1447, அவிநாசி சாலை, பீளமேடு, 

கோயம்புத்தூர் - 641 004 

பேச : 0422- 4370945 

விலை : ரூ.120 

-----

குழு முதலாளித்துவத்தின் நெருக்கடி

முதலாளித்துவம் அழகானதாகத் தோற்றம் தருகிறது. முதலாளித்துவம் வளர்கிறது. ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், ஏகபோகம் என்று அறியப்பட்டிருந்ததோடு சேர்ந்து, கூடுதலாக பன்னாட்டு ஏகபோகம் என்றொரு சொல்லாடல் புழங்குகிறது. உலக முதலாளித்துவம் நிதி மூலதனமாகிறது. முன்பேர வர்த்தகமும், யூகபேர வணிகம் என்ற புதிய புதிய சூதாட்டச் சொற்களும் நடைமுறையாகின்றன.

உலகமுதலாளித்துவம் நிதி மூலதனமாகி, பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளாக விரிந்து பெருகி.... சர்வதேச நிதி ஆணையத்தின் மூலம் உலக வங்கி மூலம் வல்லரசுகள் பெரிய கொள்ளையும் சூறையாடலும் நடத்த... பங்குச்சந்தையின் புள்ளிக் கணக்குகளை சர்வசாதாரண மத்திய தரவர்க்கமும் உற்றுப் பார்க்க... கிராமத்து அரசு ஊழியர் கூட காலரைத் தூக்கிவிட்டுச் சொல்கிறார். "நான் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளில் ஆறு கம்பெனிகளின் பங்குதாரராக்கும்" என்று பெருமிதம் பொங்கச் சொல்லுகிற நிலை.

முதலாளித்துவம், எதிர்ப்புக்குரிய சமூக வல்லாண்மையாக தோற்றம் தராமல், தம்மையும் பங்குதாரராக ஏற்றுக் கொண்ட நல்லாண்மையாக கவர்ச்சி காட்டுகிறது. இந்த நிலைமையில்... மார்க்ஸிஸம் பழங்காலச் செல்லாத நாணயம் போல மங்கலாக நினைவில் நின்றது. இப்படிப்பட்ட மிதப்பான உலக நிலைமையில்தான் அமெரிக்கா வங்கிகள் திவால் ஆகின்றன. அமெரிக்க நிதி மூலதனமும், பொருளாதாரமும் சரிந்து நொறுங்கி, விமானத்தால் மோதுண்ட உலக வர்த்தக மைய உச்சிக் கோபுரமாக சிதறுண்டு போகிறது.

பன்னாட்டு ஏகபோகமாகவும், உலகளாவிய நிதி மூலதனமாகவும் மாறிவிட்ட முதலாளித்துவ வளர்ச்சி எனும் வலைப் பின்னலின் காரணமாக, எலியுடன் கட்டுண்ட தவளையைப்போல அமெரிக்கா சரிவு, அமெரிக்காவின் தகர்வாக மட்டும் நிற்காமல்... பின்னலுண்ட சகலநாடுகளின் நெருக்கடிகளாகி மூச்சுத் திணறலாகிறது. 

உச்சாணி அமெரிக்காவில் ஏனிந்த சரிவு? "சர்வகால சாஸ்வதம்' எப்படி சட்டென்று பொய்யாயிற்று? என்ன மர்மமிது? என்ன காரணம் இது? இதை எப்படி விளங்கிக் கொள்வது? எது விளக்கும்? இந்தக்கேள்விகளால் துரத்தப்பட்ட உலக அறிவு ஜீவிகள்...'இந்தப் பொருளாதாரச் சுனாமியின் மர்மத்தை மார்க்ஸிஸம் தான் விளங்கும்' என்று தேடி வருகிறார்கள்.

'மூலதனம்' என்ற கார்ல் மார்க்ஸின் பெரும்படைப்பையும், 'மூலதனம்' குறித்த பல்வேறுவித மார்க்ஸீய ஆய்வாளர்கள் எழுதிய விளக்க நூல்களையும் தேடி அலைகின்றனர். 

உலக வல்லரசாக.. எந்த நாட்டையும் கபளீகரம் செய்யாமலேயே சொந்த உழைப்பில் முன்னேறுகிற சீனமும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியின் முகமாக சாவேஸும், பிடல்காஸ்ட்ரோவும் ஒளிர்கிற புதிய காலத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மூலதன - பன்னாட்டு ஏகபோகங்களின் தடுமாற்றமும், நெருக்கடியும் நிகழ்கிற அவலத்தைக் கூட மார்க்ஸீய நூல்கள் வழியாகத்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற புதிய நிலைமை. ஏ.பி.பரதன் உள்ளிட்ட ஒன்பது சர்வதேச மார்க்ஸிஸப் பொருளியல் அறிஞர்கள் எழுதிய அர்த்த அடர்த்தியும், தகவல் துல்லியமும் நிறைந்த அறிவார்ந்த கட்டுரைகளாலான புத்தகம். 

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற அரிய புத்தகம். 

தோழர் ஏ.பி.பரதன் தமது கட்டுரையில் சமகால ஏகாதிபத்தியங்களின் புதிய வடிவங்கள் குறித்து தெளிவாக எழுதியிருக்கிறார். லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் குறித்த நூல்கள் இப்போதும் புதிய சூழலைப் புரிந்து கொள்வதற்கு உதவுவதை நிரூபிக்கிறார். 

காஸ்டாஸ் பனயோடகிஸ், வின்சென்ட் நாவரோ, ஃபிரெட் மக்டாஃப், பால்பர்கெத், சமீர் அமீன் ஆகிய பொருளாதார மேதைகளின் கட்டுரைகள் பிரமிக்கத்தக்க ஞானவெளிச்சம் தருகின்றன. தற்போதைய பொருளாதார சுனாமியின் சூட்சும முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுகிறது. இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலின் சலனத்தையும், புதிய வடிவத்தையும் துல்லியமாகப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் அரிய வரப்பிரசாதமாக அமைகிறது.

தேவபேரின்பன், 

தென்னக ஆய்வு மையம், 

16, (142) ஜானி ஜான்கான் சாலை, 

இராயப்பேட்டை, சென்னை - 14 

போன் : 28482441, 28482973 

விலை ரூ.85/-