இன்றைய இந்திய அரசியல் மிகவும் சிக்கலானது. அரசியல் வரலாற்றின் உண்மைகளைத் திரித்து எழுவதுவதில் அறிவாளிகளும் அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் ஈடுபடும் காலச் சூழல்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்திய விடுதலை இயக்கத்திலும் 1947 க்குப் பிறகுமான தேச உருவாக்கத்திலும் காந்தி, நேரு, அம்பேத்கர் போன்றோரின் பங்கேற்புகளைப் பற்றி பொய்களும் புனைவுகளும் பரபரப்பான அரசியல் செய்திகளாகப் புனையப்படும் நிகழ்வுகளை அடிக்கடி சந்திக்கிறோம். அச்சில் வந்து விட்டால் அல்லது திரைக் காட்சிகளில் இடம் பெற்றுவிட்டால் அவை அத்தனையும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

veerapandian book on nehruகுறிப்பிட்ட அவ்வகைச் சூழல்களை ஆட்சி­யிலிருக்கும் இந்துத்துவ சக்திகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பது குறித்ததே இந்நூல். விடுதலை இயக்கத் தலைவர்களில் முக்கியமானவரும் நான்கு முறை இந்தியப் பிரதமராக இருந்தவருமான நேரு குறித்த பொய்களும் புனைவுகளும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது.

நூலின் ஆசிரியர் தோழர் மு. வீரபாண்டியன் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர். மென்மையான உணர்வுகளும் மிக நுட்பமான அணுகுமுறைகளும் கொண்டவர். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர். உறுதியான போராளி. நேருவை முன்னிறுத்தி எவ்வகையான பொய்கள் புனையப்படுகின்றன, என்பதனைத் தோழர் வீரபாண்டியன் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்துகிறார்.

காந்தி, நேருவை விட காங்கிரஸ் இயக்கத்தில் அதிகச் செல்வாக்கு பெற்ற தலைவர் வல்லபாய் படேல்!

காஷ்மீர் பிரச்சினையை நேரு தவறாகக் கையாண்டார்!

வி. கே. கிருஷ்ண மேனன் ஒரு கம்யூனிஸ்ட். சீனப் போரில் இந்தியா பின்னடைந்தமைக்கு அவர் ஒரு காரணம்.

ஐ. நா சபையில் பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவியை நேரு சீனாவிற்கு விட்டுக் கொடுத்தது.

நேரு ஒரு நாத்திகர். இந்து மத எதிர்ப்பாளர். போலி மதச் சார்பின்மையாளர்.

நேருவின் வளர்ச்சித் திட்டங்கள் வெற்றிகரமானவை அல்ல.

இவையும் இன்னும் பலவும் நேருவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். தோழர் மு. வீரபாண்டியன் இந்நூலில் நேருவின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுக்கிறார். விடுதலைக்கான போராட்டத்திலும் சுதந்திர இந்தியாவின் உருவாக்கத்திலும் நேரு எத்தனை முக்கியமான பாத்திரம் ஏற்கிறார் என்பதை அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.

* * *

20 ஆம் நூற்றாண்டின் உலக அரசியல் ரஷ்யப் புரட்சியை நோக்கி மட்டுமல்ல, சீனா-இந்தியா போன்ற நாடுகளை நோக்கியும் தான் திரும்பியது.

அது தேச விடுதலைகளை நோக்கி மட்டுமல்ல, உலகம் முழுவதையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற புதிய அரசியலால் இடைவெளியின்றி இட்டு நிரப்பியது.

பூமிக் கண்டத்தில் முதலாளியம், சோசலிசம் என்ற இரண்டு உலகங்களைத் தாண்டி நூற்றுக் கணக்கான சிறிய பெரிய நாடுகளைக் கொண்ட மூன்றாவது உலகம் தோன்றியது. அது மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் தனித்துவத்தை எடுத்துக் காட்டும் தலைவர் களையும் சிந்தனையாளர்களையும் சுமந்தபடி வந்து சேர்ந்தது. அவர்களில் ஒருவர்தான் இந்த நூலின் நாயகரான பண்டித ஜவகர்லால் நேரு ஆவார்.

நேருவின் தனித்த நிலைப்பாடுகளில் ஒன்று அவரது ‘ஆசியப் பார்வை’ என்று சொல்ல வேண்டும். ஆசிய நாடுகளின் தொன்மை, அவற்றின் நிதானமான நவீனமயமாதல், ஆசியாவின் பண்பாட்டு ஓர்மை, சர்வ தேசிய அரசியலில் சனநாயகம், விஞ்ஞான உணர்வை விட்டொதுக்காத அனுசரிப்பு ஆகிய ஒவ்வொன்றிலும் நேரு தனது தனித்த முத்திரைகளைப் பதித்துள்ளார். இவை ஒவ்வொன்றும் இசைவு படுத்திய நிலையில் ஒன்றிணைந்து மிளிர்ந்தன.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளிலிருந்து, இந்திய அரசியலில் காந்தி - நேரு - படேல் என்ற ஒரு போராட்ட வியூகம் கட்டமைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் இந்திய முற்போக்கு சனநாயக அரசியலை ஒட்டு மொத்தமாக மறுப்பதற்கு காந்தி, நேரு ஆகிய இருவரையும் மறுத்தால் போதும் என்பது அவ்வியூகத்தின் திட்டம்.

காந்தி மிக அடர்த்தியான இந்திய மரபுகளின் அர்த்தமுள்ள செழுமையான குறியீடு. நேரு இந்தியாவின் நவீனத்துவப் பாய்ச்சலைக் குறிப்பவர். காந்தி - நேரு இருவருக்கிடையில் முரண்பாடுகள் இல்லாமலில்லை. ஆயின் அவை சன்னம் சன்னமாக விவாதத்திற்குள்ளாகி முன் நகரக் கூடியவை. தமிழக அளவில், இந்திய அளவில், உலக அளவில் அந்த விவாதங்களை நடத்திச் செல்ல முடியும். அவை படைப்புத்தன்மை கொண்டவை.

காந்தியும் நேருவும் முரணா, இணைவாக்கமா? ஒருவர் பிறிதொருவரை இட்டு நிரப்புகின்றாரா? 20 ஆம் நூற்றாண்டின் இரு செம்பாதிகளை அவர்கள் 1947க்கு முந்தி, 1947க்குப் பிந்தி என இணைந்து நின்று எதிர்கொள்ளுகின்றனர். வரலாற்றின் செறிமான சக்தியை காந்தியின் அகிம்சை எடுத்துக் காட்டுகிறது எனின், சனநாயகத்தின் மாண்பினை நேரு எடுத்துக் காட்டுகிறார்.

விவசாயமும் தொழில்நுட்பமும், கல்வியும் ஆரோக்கியமும், பொதுத்துறையும் அய்ந்தாண்டுத் திட்டங்களும், நீர்த்தேக்கங்களும் நெடுங்கால்வாய்களும், ரயில், பேருந்து போக்குவரத்தும் மின் தொடர்புகளும் என நாடும் மக்களும் அங்கிங்கெனாதபடி இணைக்கப்பட்ட சரித்திரம் நேருவின் காலத்தில் நிகழ்ந்தன.

இந்தியாவில் நேருவின் செல்லப்பிள்ளை சனநாயக சோசலிசம், அவரது மற்றுமொரு சாதனை சமய பேதமற்ற மக்களின் நல்லிணக்கம்.

* * *

நவீன காலத்தின் தொடக்கம், புரட்சிகளின் மூதாய் பிரெஞ்சுப் புரட்சி (1789) என்று சொல்ல வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இலக்குகளை பிரெஞ்சுப் புரட்சி முன்வைத்தது. முடியாட்சிகளை முடிவுக்குக் கொண்டு வந்து குடியாட்சிகளை உண்மையாகக் கொண்டு வந்தது பிரெஞ்சுப் புரட்சிதான். குடியாட்சி என்பது தான் சனநாயகம். அதுவே தனிமனித சுதந்திரம். சட்டத்தின் முன்னால் சகலரும் சமம் என்பது சனநாயகம்.

1775 ல் அமெரிக்க சுதந்திரப் போர் வெடித்தது. அன்றுவரை பிரிட்டிஷ் காலனியாக இருந்த அமெரிக்க குடியேற்றங்கள் 1775 ல் விடுதலை அடைந்தன. மேலும் காத்திரமாக சுதந்திரம் பேசப்பட்டது. தேசிய உணர்வு புதிய எல்லைகளை எட்டியது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாகின.

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு 1861ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கறுப்பின மக்களின் புரட்சி வெடித்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டம் திருத்தி எழுதப்பட்டது. அமெரிக்கா அதிகபட்ச சுதந்திரம், சனநாயகம் பற்றிப் பேசியது.

இந்த மூன்று புரட்சிகளின் நோக்கம் சனநாயகம். சனநாயகம் புது உலகின் சட்டமாகவும் எதார்த்தமாகவும் மாறியது. கடந்த காலத்தை மாற்றி அமைப்பது சனநாயகத்தின் ஒழுங்கானது.

ஐரோப்பிய புரட்சிகளில் இன்னும் சமத்துவம் துலக்கமாகப் பேசப்படவில்லை. சமத்துவம், பொது உடைமை, சிவப்புக் குடியரசு போன்ற சொற்கள் ஒளிக்கீற்றுக்கள் போல பாய்ந்து ஒலித்தன. அமெரிக்காவில் கறுப்பின எழுச்சி (1861) தோன்றிய காலங்களில் கம்யூனிஸ்ட் அறிக்கை உருவாகி உலகின் பல மொழிகளுக்கு அது பரவவும் தொடங்கி விட்டது. சனநாயகம், சமத்துவம் ஆகிய இரண்டு இலக்குகளுமே சம அளவில் முக்கியத்துவம் பெற்றன. முதலாளியத்துவத்தை ஒழிப்பது, கடந்த காலத்தின் அனைத்து உடைமை வரலாறுகளையும் சாய்ப்பது என்ற இலக்குகள் உற்சாகமாகப் பரவி வந்தன.

சனநாயகப் புரட்சி என்ற சொல்லுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பொருண்மையை கறுப்பின மக்களின் புரட்சி குறித்து நின்றது.

நேரு சனநாயக சோசலிசம் என்று இந்தியச் சூழல்களில் அல்லது ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் சூழலில் பேசியபோது, மூன்றாம் உலக நாடுகளுக்கே சிறப்பான ஒரு கூட்டு லட்சியத்தை உருவாக்கிப் பேசியது போல் தோன்றியது. வெறுமனே ஐரோப்பியக் கருத்தாக்கங்களை நேரு திருப்பிச் சொல்லவில்லை. அல்லது அவற்றில் இரண்டை சேர்த்துச் சொல்லுவதாகவும் இல்லை.

மாறாக, மூன்றாம் உலகின் தனித்தன்மைகளை மனதில் கொண்டு அந்நாடுகளின் பிரத்தியேகப் பண்புகளை முன்வைத்து ஒரு லட்சியம் உருவாக்கப்பட்டது போல் தோன்றுகிறது. அதுவே நேருவின் ஒரு உள்ளடங்கிய முனைப்பாகவும் தோன்றுகிறது. நேரு மூன்றாம் உலகுக்குச் சொந்தமானவர் என்ற கூடுதல் பொருண்மையை சனநாயக சோசலிசம் என்ற சொல் நமக்குத் தருவதாகத் தோன்றுகிறது.

நேரு, வியட்நாமின் தலைவர் ஹோசிமினை இந்தியாவிற்கு வரவழைத்துச் சிறப்பித்தார். பிடல் காஸ்ட்ரோவும் சேகுவாராவும் அவரது நண்பர்கள். ஒவ்வொரு நாட்டின் விடுதலைப் போரையும் நேரு ஆதரித்தார். ஹிட்லரையோ முசோலினியையோ அவர் ஆதரித்ததில்லை. உலக நாடுகளின் யுத்தங்களை அவர் ஆதரித்ததில்லை. அணி சேரா நாடுகளின் இயக்கம் என்ற ஒன்றை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர். பஞ்சசீலம் அவரது கொள்கைகளில் ஒன்றானது. போரின் வழியாக அல்ல, அமைதியின் வழியில் மூன்றாம் உலக நாடுகள் முன்னேற வேண்டும் என்பதனையே அவர் முன்வைத்துப் பேசினார்.

நேரு குறித்த ஓர் அர்த்தமுள்ள நூலை சரியான அரசியல் சூழலில் பொருத்தமான வாதங்களுடன் உருவாக்கித் தந்துள்ள தோழர் மு. வீரபாண்டியன் அவர்களை ஏராளமாகப் பாராட்ட வேண்டும். குறுகிய காலத்தில் நேருவின் பிறந்த நாளுக்காக நூலை அழகான தோற்றத்துடன் அச்சிட்டு வழங்கியுள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரையும் நன்றி பாராட்ட வேண்டும்.

***

ஜவஹர்லால் நேரு (பொய்ப் புனைவுகளும் உண்மைகளும்)

மு. வீரபாண்டியன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

விலை - ரூ. 50.00

- ந.முத்துமோகன்

Pin It