இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கது புதுக்கவிதையாகும்.

கற்பனைகள் ஆசையோடு குதித்தெழும்போது சுவையான கவிதை பிரசவமாகிறது. எண்ணங்கள் தடையின்றி இதிலிருந்து இதுவரை என்ற வரம்பின்றி பிரவாகம்போல் ஓடும்போது அபூர்வமான முத்துக்கள் சிதறுகின்றன என்று கண்ணதாசன் புதுக்கவிதைக்கு விளக்கம் அளிக்கிறார்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டியில் பிறந்த கவிஞர் சிவராஜ் கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர். தங்களது பூர்வீக இருப்பிடத்தைப் பற்றி நினைவுகூரும் தருணங்கள் கவிஞனுக்கு வாய்த்து விடுகிறது.

தன்னுடன் பால்யத்தில் வாழ்ந்த நண்பர்கள் குறித்தும் தமக்கு கற்பித்த ஆசிரியர்களையும் நினைகூர்ந்து இந்த ஏக்கம் கவலையெல்லாம் கவிதைகளாக மாறும்போது அக்கவிதைகளின் வழியே முழு கிராமத்தின் அவலங்களையும் கிராமத்தின் துயரங்களையும் பதிவு செய்யும் கவிஞனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது இயல்பாகப் பலருக்கும் அமைந்து விடும். அவ்வகையில் சிவராஜின் கவிதைகளில் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.village landscapeசமுதாயம்

சமூகம் சமுதாயம் ஆகிய இரு சொற்களும் மக்கள் கூட்டம் என்ற எளிமையான பொருள் உடையனவாகும். சமூகம் என்ற சொல் ஓர் இனத்தைப் பற்றியும் அவ்வின மக்கள் நாட்டைப் பற்றியும் அல்லது உலக மக்கள் அனைவரையும் குறிப்பதாக அமைகின்றது. அது பயன்படுத்தப்படும் இடத்துக்கும், பிரச்னையின் தன்மைக்கும் ஏற்ப இதனுடைய பொருள் வரையறை அமைகின்றன.

“சமூகம்-கூட்டம் திறம்” என்றும், சமுதாயம் - கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின்திறன், பொருளின் திறள், உடன்படிக்கை (வையாபுரிப்பிள்ளை, 1997) என்றும் கழகத்தமிழ் அகராதி இச்சொல்லுக்குப் பொருள் தருகிறது என எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறுவார்.

சமூகப் பண்பாடு

ஒரு சமூகத்தின் மதிப்புகளைப் பாதுகாத்து, வழிமுறையினரும் பேணத்தகும் அளவில் கற்பிப்பது இச்சமூகத்தின் பண்பாடாகும். பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் (அ.விசுவநாதன் (உ.ஆ.), 2011) என்று கலித்தொகை குறிப்பிடுகின்றது.

பண்பாடு பற்றி அறிஞர் கூறும்போது பண்பாடு என்னுஞ்சொல் அண்மைக்கால ஆக்கமாகும். எனினும் பண்பு, பண்புடைமை, பண்படுத்துதல் முதலிய சொற்கள் இதற்குமுன் வழக்கில் உள்ளவையாகும். இது குறித்து வள்ளுவர் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்து பண்புநலன்களின் கூட்டத்தை பண்புடைமை என்று, அன்புநாண் ஒப்புர கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் பூன்றிய தூண் (பரிமேலழகர் (உ.ஆ.), 1976)வள்ளுவர் கூறியுள்ளதை உணர முடிகிறது.

உலகில் பலவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. ஒவ்வோர் உயிரினமும் தமக்குள் தொடர்புகொண்டு கூட்டு வாழ்வை மேற்கொண்டு வருகின்றன. இது உலக இயற்கையாக அமைந்துள்ளது. உலகில் முதலில் தோன்றிய மனிதர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து குழுக்களாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்துள்ளனர். இங்ஙனம் சேர்ந்து வாழும் அமைப்பும் சமுதாய விழுமியமாக அமைகிறது.

ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் (Community) எனப்படும். இது மக்கள் ஒன்றுகூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓர் இடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கின்றது (ஆ.சிங்காரவேலு முதலியார், வாழ்வியல் களஞ்சியம் தொகுதி -8, 1991) விளக்கம் கூறுவதைக் காணலாம்.

வேளாண் சமூகத்தையும், அவர்களின் உற்பத்தி ஈடுபாட்டையும் அதன் மீதான நேசத்தையும் தமது கவிதைகளில் கவிஞர் சிவராஜ் பதித்துள்ள நிலையை, தண்ணீர் பாய்ச்சி

. . . . . . . . . . . . . .

நடவு நட்டு

நீர்பாய்ச்சி

களை எடுத்து

. . . . . . . . . . . . . .

கதிர் அறுத்து

போர் அடித்து

பொற்குவியலாய்

நெற்குவியலை

மூட்டைகளாய்

வண்டியில் ஏற்றி

இறக்கினேன்

பண்ணையார் வீட்டில் (சிவராஜ், 2004)

இக்கவிதையில் தண்ணீர் பாய்ச்சி, ஏர் உழுது, விதை விதைத்து, நாத்து பறிச்சு, சேரடிச்சு, நடவு நட்டு, களை எடுத்து, கதிர் அறுத்து, போரடித்து, மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி பண்ணையார் வீட்டில் இறக்கினான் என்று தொழிலாளியின் உழைப்பு களவாடப்படுவதையும், முதலாளி என்னும் நிலை இன்னும் இருப்பதையும் பொதுமைச் சிந்தனை இல்லையே என்று நெஞ்சம் குமுறுவதையும் காணமுடிகிறது. பொதுவாக, எல்லா மக்களிடத்தும் சரிநிகர் சமானம் என்னும் நிலை வர வேண்டும் என்று பொது விழுமியப் பண்பாட்டை கவிதை மூலம் பறைசாற்றுகிறார்.

மேலும் மேற்கண்ட கவிதைக்கு வலிமை சேர்ப்பதாக மனிதன் தனித்து வாழும் இயல்புடையன் அல்லன். கூடிவாழும் இயல்பு கொண்டவன். இந்தக் கூட்டு வாழ்க்கையைச் சமுதாயம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றோம். இந்தச் சமுதாய அமைப்பில் இருக்கும் குறைபாடுகளும் வறுமைக்குக் காரணமாக அமைகின்றன. தனியுடைமைச் சமுதாயத்தில் ஒருவர் எவ்வளவு நிலத்தை வேண்டுமானாலும் சேகரித்துக்கொள்ளலாம். எத்தனை தொழில்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். இதனால் நிலமும் மூலதனமும் தொழில்நுட்பங்களும் வலிமை படைத்த சிலரிடத்தில் இன்னும் குவிகின்றன. ஏனையோர் அங்கு கூலிக்கு உழைப்பவர்களாக நிற்கின்றனர்.

இவர்களுக்குக் கிடைக்கும் கூலியின் மதிப்பு இவர்களின் உழைப்பின் மதிப்பைவிடக் குறைவாகவே உள்ளது என்பதை, கவிஞர் மு.மேத்தா ‘அறுவடை’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையில்,

அறுத்த நெல்லை - எடுத்துப்போக

ஆள் வருவாரு - பொன்னா

ஆள் வருவாரு - நெல்லை

அள்ளிக்கிட்டு - நமக்குக் கொஞ்சம்

கூழ் தருவாரு (மு.மேத்தா, 2017)

என்று நிலமற்ற விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுவதையும், உழைத்தவர்கள் மனம் நொந்து புலம்புவதையும் வெளிப்படுத்துகிறது. நிலமற்ற ஏழைகளுக்கு நிலமென்பது ஏட்டில் பதிந்த அறிக்கையாகும். தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்த வேண்டிய தரிசு நிலங்களைப் பலரின் பிடியிலிருந்து மீட்பதென்பது பெரும் சவாலாக அமைகிறது என்ற கவிஞர் மு.மேத்தாவின் கருத்து கவிஞர் சிவராஜின் கவிதைக்கு வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளதை பொது பண்பாட்டு விழுமியமாகக் காண முடிகிறது.

`வரவுத் திருவை' என்னும் கவிதையில் ஒருநாள் பகல் பொழுதை கழிக்க பெரும் பாடுபடும் மக்களின் வாழ்க்கையை சக அக்கறையோடு படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் சிவராஜ்.

வரவுத் திருவையை அரைச்சுட்டுத் தர்ரேன்னு தூக்கிட்டு போனவ கொண்டாந்து போடுறதா, கனம் பொறுக்காமல் இறங்கும் திருவை வரகு என்ற தானியத்தை உமிபோக்கி எடுப்பதற்காக, காட்டாத்துல ஓலை எடுத்தாந்து சாக்குத் துணி வச்சு பூசி பட்டு போட்டாச்சு. வரகை அரைக்க கொடுக்கிறவங்க வரகு மூட்டையைக் கொண்டு வந்து கொடுக்க மாட்டாங்க. நாமே எடுத்து வந்து புள்ளைங்களை தூங்க வைச்சு, காஞ்ச திருவையில் சாணி மொழுவி ஒணத்தி வரவள்ளி போட்டு திருவையைப் பூட்டி இழுத்தா, கைமாத்தி கைமாத்தி விடிய விடிய வரவள்ளி போட்டு இழுத்து, பசியெடுக்க யெடுக்க பச்சத் தண்ணிய குடிச்சிக்கிட்டு புடிங்கிக்கிட்டு வரும் திருவக்குச்சிய அடிச்சிக்குட்டு, தலை சுத்துனாக்க வெத்தலையைப் போட்டுக்கிட்டு

வௌக்க கொளுத்தி

கொஞ்சமா வச்சிக்கிட்டு,

உமிய தள்ளிவிட்டு

பீராய்ஞ்சு பொடச்சு

கலஅரிசி அளந்தாக்க

படிஅரிசி கிடைக்கும்

பகல் பொழுது ஓடும்

சுழலும் திருவைபோல் (சிவராஜ், 2003)

ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தையும், வறுமை நிலையையும் சமூக அக்கறையோடு எடுத்துக்காட்டுவதோடு வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லையே என்று கவிஞர் வருந்துவதைக் காண முடிகிறது.

ஒரு நாடு பற்றிக் குறிப்பிடும்போது அங்கு நிமிர்ந்து நிற்கும் மலைகளையும், வளைந்தோடும் நதிகளையும் விளைந்துள்ள பயிர்களையும் கவிஞர்கள் குறிப்பிடுவது வழக்கம். தமிழ்க் காப்பியங்களில் காணப்படும் நாட்டுப் பாடல்கள் யாவும் இத்தகைய மரபைப் பின்பற்றியுள்ளன.

‘பெருமை பேசுதல்’ என்னும் நிலையிலிருந்து ‘உண்மை பேசுதல்’ என்னும் நிலைக்கு கவிதையின் உள்ளடக்கம் இங்கு மாறியுள்ளது. பச்சை வயல்களும் பனிமலை நதிகளும் மட்டுமல்ல பசித்த வயிறுகளும்தான் பாரதமாகும் (மீரா, 1982)

என்னும் கவிதை வளங்கள் மிகுந்திருந்தும் நம் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லையே என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பசித்துன்பம் ஒழியும் வரை பச்சை வயல்களிலும் பனிமலை நதிகளிலும் நாம் பெருமை கொள்ள முடியாது என்னும் உணர்வையும் இக்கவிதையில் கவிஞர் மீரா எடுத்துக் காட்டியிருப்பது மேற்கண்ட கவிஞர் சிவராஜ் கவிதைக்கு வலுவூட்டுகிறது.

‘செப்புக்காசு’ கவிதை ஒரு கிராமிய மனிதனின் மனசை வாழ்வோடு சேர்த்துக்கட்டி, சுமைபோல சுமப்பதையும், அதிலுள்ள ஓர் ஆன்மா என்றுமே தவித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதில்வரும் அண்ணன் வாழ்க்கைப்பாடு, எவ்வளவு சொல்லியும் மாளாது.

கரும்புக்குத் தண்ணிகட்ட

இரும்பருவா எடுக்கையிலே

நெஞ்சு வலிக்குதுன்னு

நின்ன அண்ணன்

குனிஞ்சதுதான்

நின்ன அண்ணன்

குனிஞ்சதுதான்

குனிஞ்சது குனிஞ்சதுதான்    (சிவராஜ், 2019)

மனித மனங்களில் உள்ள வலிகளின் உச்சத்தை, இதைவிடவும் எழுதிவிட முடியாது. வயிற்றுப் பசிக்காகப் போராடும் மக்களின் வறுமை நிலையை, சித்திரை மாதத்துப் பணியில் நித்திரையைத் தொலைத்து, சாணம், எடுத்து வாசல் பெருக்கி, கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகையில் அடுப்பில் கஞ்சி வெந்திருக்கும், ஏனம் கழுவி நீராரம் குடிக்க கோழி கூவும், அக்கம் பக்கத்து ஓப்படியாள் மருமவளோடு அஞ்சாறு மைல் இருக்கும் முந்திரிக் காடடைந்தால் பொழுது விடியும். மரத்தின்கீழ் குனிந்து சருகையெல்லாம் சீய்த்தால் கிடைத்தாலும் கிடைக்கும் ஒண்ணு ரெண்டு கொட்டை, பாம்பை மிதித்தும் கேள் கொட்டிய இடத்தில் புகையிலை வைத்தும் வயிற்றுக்காய் விரையும் படலம். காலில் தைத்த காரமுள்ளின் வலி செருப்பாய் ஆகும். சேலையில் ஏறிய ஊவம்பழம் பிள்ளையின் நினைவாய் குத்தும், நா வறண்டு பசியெடுக்கையில் முந்திரிக்காய் பறித்து தொண்டையை நனைத்தால் கரகரப்பாய் குரல் மாறும்.

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கையில்    

மேலப்பள்ள கிழவி குளத்தில் கலங்கலாய்

கிடக்கும் ஒலத்தண்ணியில் விழுந்து எழுந்தால் உடம்பெல்லாம் வியர்க்குராய் சேடைப்பூத்து

எரியும். குளவி கொத்தி கண்ணு வீங்கியிருக்கும், முந்திரிப்பால் பட்டயிடமெல்லாம் வெந்து போயிருக்கும். திக்குதெச தெரியாமல் திரும்பி வருகையில் மேலக்காத்து ஆளத்தள்ளும், கண்ணு

மண்ணு தெரியாமல் மண்ணள்ளித் தூத்தும் கொதிக்கும் வாரி மணலில் நடந்து கால்கள்

கொப்பளித்துப் போகும்.

மெல்லக் கடை வந்து எடைக்குப் போட்டா

பாதி விலையிலும் பாதி சொல்வான் பாவி.

தோலின் விலைக்கே பருப்பையும் கொடுத்து வீட்டுக்கு வந்தால்,

வெட்டி வெட்டி, இழுத்த

பிள்ளையின்

காய்ச்சலுக்காய்

இரவெல்லாம்

இவளும் எரிவாள்

விளக்கோடு      (சிவராஜ், 2019)

வறுமையைப் போக்க விடியற்காலத்தே எழுந்து முந்திரிக்கொட்டையைச் சேகரித்து அதை விற்பனை செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தம் வறுமைப்பசியைப் போக்க வீட்டுக்கு வந்தால், பிள்ளையின் நிலைகண்டு விடியும்வரை எரியும் விளக்கோடு விளக்காய் தாயும் விழித்திருக்கும் நிலையை நிதர்சனமாய், உண்மையாய் தம் எழுத்துகள் மூலம் வறுமைநிலை தாண்டவமாடும் சூழலை சமூக அக்கறையோடு எடுத்துக்காட்டுகிறார்.

செவலையெனும் சித்தப்பா, கவிதையில்,

பொய்ய வயக்காட்டில்

இடுப்ப மட்டும் சேற்றிலே

தவழ்ந்து கொண்டு வரும்பொழுது

செவலையைப் பார்க்க பாவமா இருக்கும்

அன்னக்கி அதுக்கு

புண்ணாக்கு கிடைக்கும்

அது நடந்ததயெல்லாம்

நேர்கோடாக்கினால்

ஆசியாக் கண்டத்தையே

அளந்து வந்திருக்கும்

அப்பா போனதுக்கப்புறம்

செவலைதான்

எங்களுக்கு சோறு போட்டுச்சு

மூட்டை ஏத்தி வந்தப்ப

கால் முறிஞ்ச செவலையை

அடிமாடாய் ஏற்றிப் போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த

செவலை இறந்து போனாலும்

எந்தத் தப்பிலாவதும்

தவுலிலாவதும்

அழுதுகொண்டுதான் இருக்கும்

எங்களைப் போல             (சிவராஜ், 2003)

மேற்கண்ட கவிதை முத்தாய்ப்பாய் இத்தொகுப்பில் உள்ளது. ஆநிரைகளை விட்டுவிட்டு, உழவனின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாது. அது நடந்ததையெல்லாம் நேர்கோடாக்கினால், ஆசியாக் கண்டத்தையே அளந்து வந்திருக்கும். பொய்ய வயக்காட்டில் இடுப்பு மட்டும் சேற்றிலே தவழ்ந்து கொண்டு வரும்பொழுது செவலையைப் பார்க்க பாவமாக இருக்கும். அன்னிக்கு அதுக்கு புண்ணாக்கு கிடைக்கும்.

அப்பா போனதுக்கப்புறம் செவலைதான் சோறு போட்டுச்சு, எங்களை விட்டுப் பிரிந்த செவலை இறந்து போனாலும் எந்தத் தப்பிலாவதும் தவிலிலாவதும் அமுதகொண்டுதான் இருக்கும் எங்களைப் போல. இந்தக் கவிதை முடியும் இடத்தில் நமக்குக் கண்ணீர்த்துளி தொடங்கிவிடும். நல்ல கவிதைகள் அழவைக்கும், ஒரு நாள் எழவைக்கும் அந்த சக்தி சிவராஜின் கவிதைகளுக்கு இருக்கிறது. இக்கவிதை உண்மையைப் பேசுகிறது கவிதைக்கும் கவிஞனின் வாழ்க்கைக்கும் தொடர்புள்ள பண்பாட்டு விழுமியத்தைக் காட்டுகிறது.

முடிவுரை

சமூக மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் அவலங்களையும் வறுமைக்கோட்டையும், அவர்கள் ஒரு வேலை சாப்பாட்டுக்கு வழியின்றி போராடும் மக்களின் வாழ்க்கையையும் உண்மைச் சம்பவங்களையும் தம் கவிதைகளில் பதிவிட்டுள்ளார். சமுதாயச் சூழலைப் பல வகைகளில் சித்திரித்துக் காட்டியுள்ளார். மனிதன் நல்வாழ்வெய்திட வறுமை என்னும் பெருநோயைப் போக்க வேண்டும் என்று தம் கவிதைகளில் மானிடத்துக்கு எடுத்தியம்பியுள்ளார். இது போன்ற கவிதைகளின் மூலம் தன்னையும் இன்றுவரை நிலைநிறுத்தி கொண்டுள்ளார்.

நடைமுறையில் உள்ள பல்வேறு சிக்கல்களும் கவிதையாக உருவெடுத்திருக்கின்றன. சமூகத்தை நோக்கி மனம் வெதும்பி பாடியுள்ளதைக் காண முடிகிறது.

தமிழ்ப் புதுக்கவிதைகள் பல்வேறு காலங்களில் பலவித எதிர்ப்புகளைத் தாண்டி சமூக சிக்கல்களையும், சமூக அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டு, தனிமனிதனைச் சீர்படுத்தும் வகையிலும் சமூகத்தைத் திருத்தும் வகையிலும் ஏராளமான கவிதைகள் வந்துள்ளன. அந்த வகையில் கவிஞர் சிவராஜின் கவிதைகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. மக்களிடையே காணப்படும் நல்விழுமியங்கள் காலத்துக்கே மாற்றம் பெறும் சூழலையும் இவரது கவிதைகளில் பதிவிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

துணைநூற் பட்டியல்

1.          சிவராஜ் (2004), எழுத்தின் நிஜங்கள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, முதற்பதிப்பு.

2.          சிவராஜ் (2019), கிளையின் மீதொரு குளம், படி வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு.

3.          சிவராஜ் (2003), நிலமிசை, காவ்யா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு.

4.          சிங்காரவேலு முதலியார், ஆ. (1991), வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-8, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

5.          பரிமேலழகர் (உ.ஆ.) (1976), திருக்குறள், கழக வெளியீடு, சென்னை.

6.          மீரா (1982), ஊர்வலம், விஜயா பதிப்பகம், கோவை, நான்காம் பதிப்பு.

7.          மு.மேத்தா (2017), கண்ணீர்ப் பூக்கள், கவிதா பப்ளிகேஷன், சென்னை.

8.          விசுவநாதன் அ. (உ.ஆ.) (2011), கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.) லிட்., சென்னை.

9.          வையாபுரிப்பிள்ளை. எஸ் (1997), கழகத்தமிழ் அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 13 ஆம் பதிப்பு.

- கோ.திருநாவுக்கரசு

Pin It