சுமைகள் தீராத பகற்பொழுதின்
பாதைகள் எங்கும் நடந்தேறிய
வலி
இரவினூடாக
வீட்டினை உணர்த்துகிறது
வெயில் வெம்மைப் படிந்த உடல்
உழைப்புநீரைச் சிந்தி மீள்கையில்
இரவின் அடர் ஞாபகத்தில்
சிம்னி விளக்காக வீடெரிகிறது
தோளில் சுமத்திய புத்தகப் பையோ
குப்பைகளைப் பொறுக்கிப் போடும்
கோணிப்பையோ
அழுத்தும் பாரத்தின்
சுவடு தீர்ந்தபின்
வீடொன்று நினைவினைத் தட்டுகிறது
அம்மாவின் புகைப்படம் மாட்டிய
பக்கச் சுவற்றில்
அவள் ஈர இதழ்களின் முத்தங்களைப்
பதித்து வைத்திருக்கும் அடையாளம்
நிலவின் ஒளியில் பாலாய் வழிகிறது
முதல் ஒலியினையும்
முதல் கிறுக்கல்களையும்
விளையாட்டுகளையும்
கருச்சூடி நிற்கும் தாய்வயிறு வீடு
சுவரென நிற்கும் அட்டைகளையும்
கூரையென கிடக்கும் தகடுகளையும்
வீடென நினைத்துப் பிரித்து வீசுவோரே
அழகான நகரென்று எதை நினைத்தீர்
பிணங்கள் ஓடும் பெரும் சாலைகளையா?