(இலங்கை அரசின் போர்க் குற்றங்களை எதிர்த்து இரண்டு கட்டுரைகளை எழுதியதற்காக, திசநாயகம் என்ற தமிழ்ப் பத்திரிக்கையாளருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது)
தானியத்தின் விதைகளை ஒத்த எழுத்துகளை
என்ன செய்ய இயலும்
கண்ணீரால் ஈரமாக்கப் பட்ட
நிலத்திலவை வீழ்ந்தபின்
விலங்கிடமுடியா உண்மையின் கைகளை
என்ன செய்ய இயலும்
நீதியின் பதிவுகளை அவை
எழுதிக்கொண்டிருக்கையில்
தவிர்க்கவியலா பொழுதுகளை
என்ன செய்ய இயலும்
அதிகாரத்தின் மீதான குற்றச்சாட்டுகளை
உறுதிப்படுத்தும் நேரத்தில்
அழிக்கவொண்ணா தடயங்களை
என்ன செய்ய இயலும்
ஆணவத்தின் கொடுங்கோன்மையை
அவை புலனாக்கும்போது
மடக்கமுடியா விரல்களை
என்ன செய்ய இயலும்
பாசிசக்காரனான உன்னை அவை
அடையாளம் காட்டுகையில்
எதுவுமே செய்யவியலா ஏதிலியாய்
நிற்கும் ஒரு வேளையில்
நீயிட்ட விலங்கே
உனக்கெதிரான ஆயுதமாய் மாறும்
- யாழன் ஆதி