சாலைகளினிடையே 

கைகாட்டிகளில் நிறுத்தப்படும் 

வாகனங்களை நோக்கி 

பிண்ணிப் பிண்ணி ஓடிவரும் 

பொம்மைக்காரனின் 

பறக்கத்துடிக்கும் பச்சைக்கிளிகள் 

கைகளில் 

கொத்துக் கொத்தாய் 

தொங்குகின்றன. 

 

அவனது ஒட்டிய 

பற்றியெரியும் வயிற்றையோ 

பஞ்சடைத்த கண்களையோ 

ஆற்றிக்கொள்ள விழைய 

உள்ளேயுள்ளவர்களின் 

முகக்குறிகளில் தோன்றும் 

எண்ணங்களைப் படித்தறிவதை 

வாகனங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் 

ஊடுறுவும் கண்ணாடிகள் 

எதிரொலித்து 

திறந்துகொள்ளாமல் 

சைகையினாலேயே மறுதலிக்கப்பட்டு 

சம்பாஷனையின்றி 

முடிவுறுகின்றன. 

 

ஒவ்வொரு வீடுவீதமாய்

முந்தைய 

தீர்ந்துபோன நாட்களின் 

திகதிகள் 

வந்த சேருகின்றன 

குப்பை குழிகளுக்கு! 

 

அவற்றில்  

முக்கியமானதெனவும் 

மடித்துவிடப்பட்டதாகவும் 

குறித்து வைக்கப்பட்டதுமான 

படிக்கப்படாமல் 

மறக்கப்பட்டதுவும் 

இருந்திருக்கலாம்... 

 

எனது  

சவ ஊர்வலத் தேரில் 

நான் பிறந்தது 

நாள் முதலாக 

இன்று வரையிலான 

நாட்காட்டிகளாக 

கிழித்து 

ஒட்டபட்டிருந்தவை, 

இடுகாட்டிலிருந்து 

வந்தவழி நெடுகிலும் 

இறைந்து கிடந்தன. 

 

இரண்டு மூன்று 

கவிழ்க்கப்பட்டத் தேரிலும் 

ஒன்றிரண்டு 

என்னுடன் குழியிலும்.

Pin It