மிகு நீண்ட யோசனைக்கு பின் தான்
உன்னை பகைக்கிறேன் நண்பனே
ஒரு கோப்பையில்
இரு மனங்கள் குதித்த காலம் ஒன்று உண்டு
அன்றெல்லாம் திறந்து விடும் முன்னே
கொட்டி விடும் நின் மழைக்காலம்
அன்பென்று அளந்து கொண்டது கிடையாது
அரூபம் தான் நானென்று உணர்ந்திருந்தாய்
தோள் கொடுத்தாய் அறிவுத் துகில் பகிர்ந்தாய்
பின் ஒரு முள் காட்டில் என்னை
கனவுக்குள் இருந்தும் மீட்டெடுத்தாய்
மென் தேகம் கொண்ட என் காடுகளில்
உன் பாதங்களை நான் மறுத்ததே இல்லை
உன் சொற்களுக்கு ஒருபோதும் மறுப்பு
என் மனதாலும் இல்லை
எந்த காலம் உன்னை ஈக்கள் ஆக்கியதோ
எந்த சாபம் உன்னை காழ்ப்பில் தாக்கியதோ
பாவம் கொம்பு முளைத்த தருணத்தை
நீயும் மறைக்க தான் பார்த்தாய்
கொம்புக்கே உண்டான கொடூரம்
முட்டிக்கொண்டு வந்து விட்டது
எதிர் நின்றாய் நானும் தான் என்றாய்
நானே என்றாய் பிறகு நான் தான் என்றாய்
நானற்ற எனக்கு நீ அற்றிருப்பதும் ஒன்றே என்றேன்
இசைபட நேர்ந்த உடைதல் கோப்பைகளுக்கு புதிதா என்ன
ஆனாலும் உன் வழி நெடுக என் மரங்கள் தான்
உன் மொழியெல்லாம் என் உளிகள் தான்
இனி ஒரு போதும் நெருங்க இயலாது
நின் மணியோசைகள் என் செவியில் விழாது
மூடுபனி மலை உச்சியில் ஒற்றை பறவையென
எனக்கு கிட்ட வரவும் தெரியும் எட்ட விலகவும் தெரியும்
நீரோடைக்குள் மழை காணும் சூட்டில்
நின் மனம் அவிழ வெகு தூரத்து வானம் நான்
நன்மை பயக்கும் பிரிவில் வேறு வழியின்றி
காலத்துக்கும் உன்னை பகைக்கிறேன் நண்பனே
- கவிஜி