மத்திய அரசின் இந்த ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்து கார்ப்பரேட் கம்பெனிகளின் சொத்து கடந்த ஓராண்டில் 3.54 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 10.34 லட்சம் கோடியாக உயர்ந்தள்ளது. ஆனால், இந்திய மக்களில் 77 சதவீதம் பேர் தினசரி ரூ.20 கூட வருமானமின்றித் தத்தளிக்கிறார்கள். விவசாயிகள் அடியோடு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 13.66 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பருவமழையின்றி வறண்டு கிடக்கின்றன. மொத்தம் 6.54 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே விதைக்கப்பட்டுள்ளன.

விவசாய பாதிப்பால் உணவு உற்பத்தி கடுமையாய் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு 20 லட்சம் டன் அரிசி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் 2500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாய்க் கூறப்படுகிறது. ரசாயன உரங்களுக்கான அரசு மானியம் விவசாயிகளுக்கு நேரடியாய்க் கிடைக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்.எஸ்.சாமிநாதன் கமிஷனும், ஒய்.கே., அலாக் கமிசனும் அளித்த சிபாரிசுகளை அரசு நிறைவேற்றத் தயாராக இல்லை. ஆனால், பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய 4.18 லட்சம் கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க அரசு மறுக்கிறது.

மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதில் உறுதியாய் இருக்கிறது. அனைத்தும் தனியார் துறையின் கைகளிலேயே இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கோட்பாடாக மாறியுள்ளது. அமெரிக்க வங்கிகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவிலேயே எழும்போது இங்கு ஆளவந்தோர் அரசின் கையில் இருப்பவற்றைத் தாரை வார்ப்பதிலேயே குறியாய் உள்ளனர்.

பட்ஜெட்டில் இந்த ஆண்டு ஸ்பெக்ட்ரம் 3ஜி ஒரு அலைவரிசையை விற்பனை செய்வதன் மூலம் ரூ.35000 கோடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நான்கு அலைவரிசைகளை விற்றதன் மூலம் 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளது. அதை ஆட்சியாளர்கள் பங்கு போட்டு முடித்ததோடு அதே ஆளையே அந்தத் துறையின் அமைச்சராக்கி விட்டனர்.

சுவிஸ் நாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 86 லட்சம் கோடி ரூபாயைக் கைப்பற்றுவது குறித்து கடந்த தேர்தலின் போது பேசப்பட்டது. பட்ஜெட்டில் அதுபற்றி பேச்சு மூச்சையே காணோம்.

 

Pin It