modi adani

மின்சாரம் தனிப்பெரும் ஊழலுக்கான வழியாகத்தான் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. தனியாருக்கு எதிரான எந்த புகார்களையும் அரசுகளோ நிர்வாகமோ நீதிமன்றங்களோ கண்டுகொள்வதும் இல்லை. ஊடகங்கள் பரிதாபமாக தனியாரின் விளம்பரங்களுக்காக உண்மையை மக்களுக்கு சொல்லாமல் கையைச் சுருக்கிக கொள்கின்றன. ஆனால், மேலே சொன்ன அத்தனை அமைப்புகளும், வினியோக நிறுவனங்களின் இழப்பு குறித்து மட்டும் உரக்கப் பேசுகின்றன. ஏனெனில் இவையனைத்தும் பொதுத்துறை நிறுவனங்கள். கீழே விவரிக்கப்படும் பிரச்சனை 2013லேயே வெளிவந்தும் கூட அரசுகளின் மௌனமே இதுவரை பதிலாக இருக்கிறது.

போற்றி புகழப்படும் குஜராத்தின் முந்தரா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், அதானி நிறுவனத்தின் 4,620 மெகாவாட் மின்நிலையம் உள்ளது. இந்தத் துறைமுகத்தை படுமோசமாக சீரழித்தற்காக நடுவன அரசிடம் அதானி நிறுவனத்திற்கு 200 கோடி தண்டம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டதும், ஒரே மாதத்தில் மத்திய பிரதேசத்தில் அனுமதிக்கப்பட்ட இந்நிலையத்தை குஜராத்திற்கு மாற்றப்பட்டதும், தனித்தனி மற்ற கதைகள். இந்நிலையம் ஹரியானா, குஜராத் மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கிறது. இதற்கான நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேபோல் டாடா நிறுவனமும் அல்ட்ர மெகா பவர் புராஜெக்ட் திட்டத்தின் கீழ் 4000 மெகாவாட் மின்நிலையத்தினை குஜராத்தில் அமைத்துள்ளது. இந்நிலையமும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது.

டாடா அதானி நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களின் பங்குதாரர்கள் என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2010ல் இந்தோனேசியா நிலக்கரி விலையை சர்வதேச விலைக்கு இணையாக உயர்த்தியது. உடனே டாடா, ரிலையன்ஸ், அதானி, எஸ்ஸார் நிறுவனங்கள் அன்றைய நடுவன மின்அமைச்சரைச் சந்தித்து ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டின. ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை மீற முடியாது என்றெல்லாம் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும் அரசு, தனியார் என்று வந்ததும், கொள்முதல் விலையை உயர்த்த நடுவன ஒழுங்கு முறை ஆணையத்திற்குப் பரிந்துரைத்தது. 2013ல் நடுவன ஆணையம் அதானி, டாடா நிறுவனங்களின் மின்சாரக் கொள்முதல் விலையை உயர்த்த உத்திரவிட்டது. ஆனால் ஆணையத்தின் ஒரு உறுப்பிரான திரு. ஜெயராமன் இந்த கட்டணயுயர்வை ஏற்கவில்லை. அவரது உத்தரவில் அதானி நிறுவனங்களின் ஒரு பையிலிருந்து இன்னொரு பைக்குத் தான் இந்த கூடுதல் விலை செல்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு மேல் முறையீட்டு வழக்காக தீர்ப்பாயத்தின் நிலுவையில் இருந்து வந்தது.

நடுவன நிதி அமைச்சகத்தின் வருவாய் விழிப்பு இயக்குனரகம் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கூடுதல் விலைக்கு ‘பில்’ (over invoicing) செய்யப்படுவதாகவும், இது 29,000 கோடிக்கு மேலானதாக இருக்கும் என 50 சுங்கவரி அமைப்புகளுக்கு 31/3/2016 சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கைக்குப் பின் ஒரு வாரத்திற்குள்ளாக 7/4/2016 அன்று தீர்ப்பாயம் மேல் முறையீட்டு மனுவினை கொள்முதல் விலை உயர்வை அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. கூடுதல் நிலக்கரி விலையின் மூலம் பயனடைந்த நிறுவனங்கள் அதானி, டாடா, எஸ்ஸார், அனில் அம்பானி, தமிழ்நாடு மின்வாரியம் போன்றவை. இந்த 29,000 கோடியும் மக்கள் தலையில் மின்கட்டண உயர்வாக சுமத்தப்பட்டுள்ளது.

நிலக்கரியின் வெப்பசக்தி மதிப்பை கலோரி அடிப்படையில் குறிப்பிடுவார்கள். இந்த கலோரியின் அடிப்படையில் தான் ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு எவ்வளவு நிலக்கரி தேவை என்று கணக்கிட்டு மின்சாரக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். சாதாரணமாக இந்திய நிலக்கரி 3000 கிலோ கலோரியும், இந்தோனேசியா நிலக்கரி 5000லிருந்து 6200 கிலோ கலோரி வரையிருக்கும். கூடுதல் கலோரி கிடைப்பதாலேயே இந்தோனேசியா நிலக்கரியை வாங்குவதாக சொல்வார்கள்.

ஆனால் மேலே குறிப்பிட்ட கூடுதல் பில் மதிப்பில் பெரும் பகுதி நிலக்கரியின் வெப்ப சக்தி 3000 கிலோ கலோரி என்றே குறிப்பிட்டுள்ளனர். இப்படியாக ஒரு யூனிட்டுக்கு அதிக நிலக்கரி செலவானதாவும், கணக்கு காட்டி கொள்முதல் விலையை கூட்டியுள்ளனர்.

இத்துடன் இது நிற்கவில்லை.

1,000 மெகாவாட் மேலான மின்நிலையங்களுக்கு இந்திரங்கள் இறக்குமதியில் அரசு சுங்க வரி சலுகை அளிக்கிறது. இது 0 சதத்திலிருந்து 5 சதம் ஆகும். மின்நிலையங்களின் முதலீட்டில் மின்உற்பத்தி இயந்திரங்களின் விலையே பெரும் பகுதியாகும். இந்த முதலீட்டு செலவே நிலைக்கட்டணம் என்ற பெயரில் மின்கொள்முதல் விலையில் ஒரு பகுதியாகும். இந்த மூலதனச் செலவின் அடிப்படையில்தான் லாபமும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே மூலதனச் செலவை பெரிதாக ஆக்கும் பொழுது லாபமும் கூடுவதுடன் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டு கொள்ளை லாபம் கிடைக்கிறது.

மின் இயந்திரங்களின் விலையும், நிலக்கரி போன்றே போலியாக அதிகமாக்கப்பட்டு மின்சாரக் கொள்முதல் விலையை கூட்டியிருக்கிறார்கள். இயந்திரங்கள் சீனாவிலிருந்தும், தென்கொரியாவிலிருந்தும் இறக்குமதியாகும் பொழுது, பில் மட்டும் சிங்கப்பூர், துபாய் என பயணம் செய்து வருகின்றன. 2014லேயே, அதானியின் பல்வேறு மின்நிறுவனங்களுக்கான 6000 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் விலை குறித்து, நிதி அமைச்சகத்தின் விழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயந்திரங்களுக்கு தரப்படுவதாகச் சொல்லப்படும் இந்த கூடுதல் விலை கறுப்புப் பணமாக மாறி வெளிநாட்டில் தங்கிக் கொள்ளும். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும், அதானி நிறுவனங்களின் சொந்தகாரரான கௌதம் அதானியின் சகோதரர், வினோத் சாந்திலால் ஷாவின் பெயர் சமீபத்தில் வெளியான ‘பனாமா பேப்பர்’ கறுப்பு பண பட்டியலில் உள்ளது. விழிப்புத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸ் வினோத் ஷாவுக்குதான்.

இப்படி எல்லாம் கொள்ளை லாபமாகக் கொண்டு செல்லப்பட்ட மக்களின் பணம் 50,000 கோடிக்குக் குறைவானதல்ல.. அதற்கும் மேலாகவே இருக்கும்.

மக்களுக்காக யார் பேசுவார்கள் ???? எப்போது?????

- சா.காந்தி

Pin It