விண்னை முட்டும் கையூட்டு ஊழல் இந்தியாவைப் பிடித்து ஆட்டுகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் மோசடி, கிரிக்கெட் வீரர்கள், பெருமுதலாளிகள், திரைத்துறையினர் சூதாடிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடையே உள்ள ஊழல் வலைப்பின்னல் உறவை எடுத்துக்காட்டியது. அதனால்தான் மட்டைப்பந்து சங்கங்களில் சரத்பவார், அருண்செட்லி, தயாநிதிமாறன், சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட அரசியல் புள்ளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்கிறது. மட்டை பந்து விளையாட்டைக் கொண்டு நாட்டுப்பற்று என்ற பெயரால் இந்திய தேசிய வெறியை கிளப்பும் இவர்கள் இதனைத் தங்கள் ஊழலை மறைக்கும் திரையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

விளையாட்டில் மட்டுமின்றி துறைதோறும் துறைதோறும் திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் தலைவிரித் தாடுகிறது. 1 இலட்சத்து 76 ஆயிரம்கோடி ரூபாய் 2ஜி அலைக்கற்றை ஊழல், 2 இலட்சம் கோடி ரூபாய் இஸ்ரோ எஸ்-அலைப்பட்டை ஊழல் 1 இலட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரிச் சுரங்க ஊழல். 3500 கோடி ரூபாய் ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல், 7000 கோடி ரூபாய் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல், 17000 கோடிரூபாய் பெல்லாரி சுரங்க ஊழல்…. என்று பட்டியல் தொடர்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ ஐந்தரை இலட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல்கள் நடந்திருக்கின்றன.

இந்த ஊழல் வலைப்பின்னலின் முதன்மைப் பயனாளிகள் இந்திய நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகள் ஆவர். இவர்களிடம் பல இலட்சம் கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றதில் கட்சி வேறுபாடு ஏதுமில்லை. சோனியா, மன்மோகன் சிங், நித்தின்கட்கரி, அருண்செட்லி, முலாயம்சிங், மாயாவதி, லல்லுபிரசாத், ஆ.ராசா, கனிமொழி, கருணாநிதி, செயலலிதா என மிகப்பெரும் பாலான தலைவர்கள் ஊழல் நாற்றம் எடுத்தவர்கள்தான்.

ஆனாலும் ஊழல் செய்யும் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிர்கட்சிகள் கூச்சல் எழுப்புவதும் நாடாளுமன்றத்தை முடக்குவதும், போராட்டங்கள் நடத்துவதும், மக்களை ஏமாற்றுவதற்கான வாணவேடிக்கையே அன்றி வேறல்ல.

அரசுத்துறை வலுவாக இருந்தால் இலஞ்ச ஊழல் அதிகரிக்கும் என கூக்குரலிட்டு தாராளமயத்தை பரபரப்பாக ஊக்குவித்தனர். ஆனால் உலகமயம் கோலோச்சிய பின்னால் குறிப்பாக 1990க்குப் பின்னால்தான் இதற்கு முன்னர் எண்ணிபார்க்க முடியாத அளவுக்கு ஊழல் பெருகியது. மொத்த நாடே பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு தவணை தவணையாக விற்கப்படுகின்றது.

இதற்கு ஏற்ப ஒட்டுமொத்த தேர்தல் அரசியலும் உருமாற்றம் பெற்றுவிட்டது. கட்சிகளும், கம்பெனிகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து விட்டன. தேர்தல் சனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பது கூட தொழில்நிறுவனங்களின் பின்னணியோடு நடக்கிறது. கேள்வி கேட்பதற்கு கையூட்டுப் பெறுபவராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாறிப் போனார்கள்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள், பல்லாயிரம் கோடி பணம் போட்டு பதவி பெற்று பின்னால் பல இலட்சம் கோடி கொள்ளையடிக்கும் வழிமுறையாக மாறிப்போயின.

தொழில் முதலாளிகளும், நிதிமூலதன பேரரசர்களும், மனை வணிகச் சூதாடி களும், சுரங்கத் துறை கொள்ளையர்களும், கட்சிகளில் நுழைந்து தலைவர்களாகி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக மாறும் போக்கு மிக வேகமாக அதிகரித்தது. மொத்தமுள்ள 545 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களில் 128 பேர் இவ்வகை முதலாளிகள் ஆவர். கட்சிகளின் வழியாக முதலாளியானவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் களாகவும், வலம் வருவது வேறு கணக்கு.

கிட்டத்தட்ட அனைத்து தேர்தல் கட்சிகளின் மாவட்ட அளவிலான தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் மனை வணிகத்திலும், மணல் வணிகத்திலும் காலூன்றி இருப்பவர்கள் ஆவர்.

இந்த ஊழல் வலைப்பின்னலில் ஊராட்சி வரை உள்ளிழுக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்றூரில் மனைப்பிரிவுக்கு இசைவு தரும் அதிகாரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கு வழங்கப் பட்டிருப்பாதால் மனை வணிகச் சூதாட்டத்தின் பங்குதாரராக அவரும் மாறி விடுகிறார். 25 மனைகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு இசைவு அளிப்பதென்றால் ஒரு பேரூராட்சி தலைவர்க்கு 5 மனை கையூட்டாகத் தரப்படுகிறது. அதன் விலையை கூட்டுவதற்கு வசதியாக அவர் அந்த மனைத் தொகுப்பு இருக்குமிடத்திற்கு உள்ளாட்சி செலவிலேயே சாலை வசதி மின் விளக்கு வசதி, குடி தண்ணீர் இணைப்பு கொடுத்துவிடுகிறார்.

அதனால்தான் உள்ளாட்சித் தலைவர் பதவிக்குக்கூட தேர்தலில் பல இலட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள்.

வளர்ச்சி, நவீனமயம் என்ற பெயரால் இந்த ஒட்டுமொத்த ஊழலுக்கு கோட்பாட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.

உலகமயமும், ஊழல் மயமும், கைகோத்து பயணிக்கின்றன. வலுவான இந்தியா, வளமான இந்தியா என்ற முழக்கத்தின் கீழ் இந்தியத் தேசியம் இதற்கு மூடுதிரையாக பயன்படுகிறது.

கட்சிகளும் தேர்தல் முறையும், ஆட்சிமுறையும், இதற்கு மக்களின் ஒப்புதல் பெரும் வகையில் வடிவம் கொண்டுவிட்டன.

கட்சிப் பற்றின் காரணமாக அல்லது கட்சிகளின் கொள்கை, நடைமுறைகளைப் பாராட்டி வாக்களிப்பதற்கு மாறாக வாக்களிக்க கையூட்டுப் பெறுவது நீக்கமற நிறைந்து நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இலவசங்கள் வழங்குவது திறமையான ஆட்சி முறையாக மாறியிருக்கிறது. மக்கள் வெறும் வாக்காளர்களாக இல்லை. அவர்கள் பயனாளி வாக்காளர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த சீரழிவையும் கண்டு மனம் நொந்தவர்கள் சிலர் துண்டுதுண்டான தனித்தனி முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அன்னாஅசாரே போராட்டம், ஆம் ஆத்மி கட்சியின் முயற்சிகள் ஆகியவை இத்தகைய வையாகும். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்ற இவர்களது முழக்கம் மீண்டும் மீண்டும் மக்களை இந்த புதைச்சேற்றுக்குள்ளேயே சிக்கவைக்கிறது.

இதற்குக் காரணம் இவர்கள் உலகமயத்தையோ, அதன் கூட்டாளியான இந்தியத்தையோ அது செயல்படும் தளமான தேர்தல் சனநாயகத்தையோ கேள்விக்கு உட்படுத்தவில்லை. இந்திய தேசியம், இந்திய பற்று என்பதற்கும் உலகமயம், ஊழல்மயம் ஆகியவற்றுக்கும் உள்ள தவிர்க்க முடியாத இணைப்பை இவர்கள் பார்க்கத தவறுகிறார்கள்.

இந்தியமயமும், தேர்தல் அரசியலும் ஊழலை ஒழிக்க ஒரு போதும் உதவப் போவதில்லை. தேர்தல் அரசியலுக்கு வெளியே, உலகமய - இந்தியமயக் கூட்டணியை எதிர்த்து ஒரு மாற்று அரசியலை முன் வைத்து போர்க்குணமுள்ள மக்கள் எழுச்சியை கட்டி எழுப்பாமல் தனியாக ஊழலை ஒழித்துவிட முடியாது.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்த மாற்று அரசியல் தமிழ்த் தேசியம் ஆகும்.

தமிழ்த் தேசியம் என்பது இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்தைப் படைக்கும் அரசியல் இலக்கை கொண்டதுமட்டுமன்று. ஏனெனில் வெறும் ஆட்சியைக் கைப்பற்றுகிற அரசியல் எவ்வளவு ஈக அரசியலாக இருந்தாலும் அது நீடித்த மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது.

ஒரு புதிய மனிதனை வார்த்தெடுக்கும் மாற்று மெய்யியலில் கால் கொள்ளாத எந்த அரசியலும் அது புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றுகிற அரசியலாக இருந்தாலும் அது நீடித்த மாற்றாக அமைய முடியாது. அது புதிய நுகர்வோரை, பயனாளிகளை கொண்ட கூட்டமாகவே கால ஓட்டத்தில் தாழ்ந்துவிடும்.

தமிழ்த் தேசியம் என்பது அரசு விடுதலையை வென்றெடுக்கும் மேம்போக்கான கருத்தியல் அல்ல. அது தவிர்க்க முடியாமல் சாதி ஒழிப்பு, வர்க்க சமத்துவம், சூழலியல் பாதுகாப்பு, சனநாயக விரிவாக்கம், ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தது.

ஏனெனில் தமிழ்த் தேசியம் என்பதன் மெய்யியல் தமிழர் அறம் ஆகும். ஆட்சி, நீதி, வணிகம், குடும்பம், துறவு, போர் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமத்துவத்தையும், நேர்மையையும், சனநாயகத்தையும் வலியுறுத்தும் உயர்ந்த மெய்யியல் “அறம்”.

பணம், பதவி, விளம்பரம், ஆகியவற்றுக்கு அப்பால் அமைந்த மாற்றுஅரசியலே தமிழ்த்தேசிய அரசியல் ஆகும்.

இந்த மாற்று அரசியல் இலட்சியம் தமிழ்நாட்டு மக்களின் கணிசமானோரைக் கவ்வி அணி திரட்டும் போதுதான் ஊழல் மயத்தை ஒழிப்பதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்படும்.

இந்த தமிழ்த் தேசிய மாற்று அரசியலையே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன் வைக்கிறது.

ஊழல் ஒழிப்பின் திறவுகோல் இதுவே.

Pin It