நம்ம ஊர் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நிச்சயமாகத் தோற்றுத்தான் போவார்கள். குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த ஆடிப்பூர் வாசிகளிடம். வறட்சி நிறைந்து, வளம் குன்றிய அந்தச் சின்னஞ்சிறிய நகரத்து மனிதர்கள் உண்மையிலேயே வித்தியாசமானவர்கள்தான். அவர்கள்! கடவுளுக்குச் சமமாக வணங்குவது யாரைத் தெரியுமா? சார்லி சாப்ளினை! என்ன... வியப்பாக இருக்கிறதா? இது உண்மையிலும் உண்மை.ஆடிப்பூரின் குறுகிய தெருக்களில் பசுமாடுகள் நிறைந்திருக்கும். பால் தொழில் அவர்களுக்கு பிரதானமானது. சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள் மட்டுமே அவர்களின் வாகனங்கள்.
ஷில்லாங் மக்களுக்கு பாப் டிலான் எப்படியோ அப்படித்தானாம் ஆடிப்பூர்க்காரர்களுக்கு சார்லி சாப்ளின். டாக்டர் அஸ்வினியைத் தலைவராகக் கொண்டு அங்கு செயல்பட்டு வரும் அமைப்பு `சார்லி வட்டம்' (Charlie circle) அதில் மிகப்பெரிய மருத்துவர்கள் முதல் சாதாரண சைக்கிள் ரிக்ஷா தொழிலாளி வரை அனைவரும் உறுப்பினர்கள். பள்ளிக்குழந்தைகளும் இதில் அங்கத்தினர்கள்தாம்.
`சார்லி சாப்ளின் எனக்கும் கடவுள், அவர் என் ரத்தம்!'' - என்று உணர்ச்சி பொங்குகிறார் டாக்டர் அஸ்வினி. அழுக்குப் படிந்த அவரது சின்ன மருத்துவமனையில் இந்துக் கடவுள். படங்களுக்கு மத்தியில் சார்லி சாப்ளினின் முழு உருவ வெள்ளைச் சிலையும் ஒரு முக்கியக் கடவுளாக நிமிர்ந்து நிற்கிறது. அதோடு மட்டும் முடிந்து விடவில்லை அந்த மருத்துவரின் சாப்ளின் ஈடுபாடு. தனது மருத்துவமனைக்கு வரும் சில நோயாளிகளுக்கு அவர் சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் அடங்கிய டி.வி.டி.களையே மருந்துச்சீட்டில் மருந்து போல எழுதித் தருகிறார். அதனைப் பெற்றுக் கொண்டு செல்லும் அந்த நோயாளிகளும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் பெற்று விட்ட உணர்வுடன் புன்னகை பூக்கச் செல்கின்றனர்.
சார்லி சாப்ளினோடு இந்த ஊர் மக்களுக்கு இருக்கும் இந்த விசித்திர பக்தியையும், ஈடுபாட்டையும் கேள்விப்பட்டு வியந்து போன ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேத்ரின் மில்லார்ட். 2005-ஆம் ஆண்டு ஆடிப்பூர் வந்து சாப்ளின் சர்க்கிளின் அஸ்வினை சந்தித்திருக்கிறார். சாப்ளினின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற கேத்ரின் அந்தப் பிறந்த நாளுக்கு தனது பரிசாக ஒரு கேக்கை அளித்திருக்கிறார். அது சார்லி சாப்ளினின் பூட் (ஷூ) வடிவத்திலானது. `கோல்ட் ரஷ்' படத்தில் பசியால் தவிக்கும் சாப்ளின் அந்த ஷூவை வேக வைத்துச் சாப்பிடுவார். அதன் நினைவாக அவர் உருவாக்கிக் கொண்டு வந்து தந்த அந்த `பூட் கேக்' தான் அந்தப் பிறந்த நாளில் அங்கே சிறப்புக்குரியதாகியது.
கேத்ரின், ஆஸ்திரேலியாவின் மேக்குவாரி பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறையில் இணைப் பேராசிரியர். சினிமா மீது அவருக்கிருந்த தீராத காதல் அவரை மீண்டும் மீண்டும் புழுதி நிறைந்த அந்த ஆடிப்பூருக்குப் பயணப்பட வைத்தது. தனது அனுபவத்தையும் கலந்து அவர் உருவாக்கிய `பூட்டு கேக்' ஒரு சிறந்த ஆவணப்படமாக உருவாகி விட்டது.
உண்மையில் காத்ரின் மெக்சிகோ முதல் சீனா வரை பயணம் செய்து, அந்த நாடுகளின் மக்களிடத்தில் எந்தளவு சார்லி சாப்ளின் சினிமாக்கள் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என ஆய்வு செய்யவும், அதனை மையமாகக் கொண்டு ஒரு முழு நீளத் திரைப்படத்தை உருவாக்கவும் தான் உண்மையில் காத்ரின் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் குஜராத்தின் ஆடிப்பூர் மக்களின் மனங்களில் பிரிக்க முடியாத அளவு சாப்ளின் குடி கொண்டிருப்பதைக் கண்டு அவர்களோடு கரைந்தே போய் விட்டார். இந்த சினிமா ஆர்வலர் காத்ரின்.
துவக்கத்தில் பச்சைப் பசேலென்றிருக்கும் நெல் வயல்களினூடாகச் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு பஸ் செல்கிறது. அதன் கூரை மீது அமர்ந்து பயணிக்கும் கிஷோர் பார்மர் குஜராத் மொழியில் ஒரு நாடோடிப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறார். அது சாப்ளின் மீது இயற்றப்பட்ட பக்திப்பாடல். சார்லி சாப்ளினின் 116-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஆடிப்பூர் மக்கள் உற்சாகத்தோடு தயாராகிறார்கள். சாப்ளினின் `கோல்ட் ரஷ்' படத்தோற்றத்தை ஒரு ஓவியரின் விரல்கள் இயல்பாக வரைகின்றன. அந்தப் படத்தைத்தான் அன்றைய மாலை வேளையில் நகரின் சதுக்கத்தில் திரையிடப் போகிறார்கள். குழந்தைகள் சாப்ளின் வேஷமிட்டு அன்று அணிவகுப்பு செல்ல ஒத்திகை பார்க்கின்றன. அவர்களின் முகங்களில் சாப்ளினின் அதே மீசை, கைகளில் சாப்ளின் கைத்தடிகள், காத்ரின் இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார். அவரது பரிசாக வருகிறது `பூட் கேக்!'
-இப்படி நகரும் இந்த ஆவணங்கள் படத்தில் அந்த ஊர் மக்களின் மனந்திறந்த பேட்டிகளும் உண்டு. நமக்குக் கூடுதலாக இன்னொரு சுவையான செய்தி என்ன தெரியுமா? புன்னகை மன்னன், தமிழ்ப்படத்தில் சாப்ளின் வேடத்தில் கமல் தோன்றும் காட்சிகளும், இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றனவாம், பொருத்தமான இடத்தில்.
``ஆடிப்பூரின் சார்லி வட்டமும், அந்த மக்களும் சார்லி சாப்ளின் மீது கொண்டிருக்கும் ஈடுபாட்டினை நான் இப்போது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதுகிறேன். அந்த எளிய மக்களின் அதே வகையான உணர்வே இப்போது எனக்கும் உண்டாகி விட்டது'' என்று கூறும் கேத்ரின், ``2001-இல் கட்ச் பகுதியில் ஏற்பட்ட கொடூரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு அந்த மக்கள் தங்களின் வாழ்க்கையை நம்பிக்கையோடு முன்னேற்றிச் செல்ல சார்லி சாப்ளின் மீதான அவர்களின் ஈடுபாடு அவர்களுக்கு ஒரு புதிய வேகத்தையும், பிடிப்பையும் தந்திருக்கிறது! இது என்னை மிகவும் நெகிழச் செய்து விட்டது!'' என்கிறார்.
சார்லி சாப்ளினின் அபூர்வமான நகைச்சுவையும், அதனூடாக வாழ்வின் மீது ஏற்படுத்தும் நம்பிக்கையும், இந்தப் பாமர மக்களின் இதயங்களில் அகல் விளக்காக ஒளி வீசுவது நமக்கெல்லாம் வியப்பைத் தரும் நிஜம்தான்.
- சோழ.நாகராஜன்
(ஆதாரம்: 3.7.2009 தி இந்து நாளிதழ்)