நான் எதைச் சொன்னாலும்
தவறாகவே எடுத்துக் கொள்கிறாய்
நான் எது செய்தாலுமுனக்குத்
தப்பாகவே தோன்றுகிறது

துரோகமிழைக்காமலேயே
துரோகியாகிவிட்ட
அவலமெனக்கு

நேசித்தபோதும்
நேசமற்றவன்
பட்டமெனக்கு

பிறவிக்குணம்
என்னும் படுகுழியிலிருந்து
உன்னைத்தூக்கிவிட எண்ணி
இன்று நானும் குழிக்குள்

தம்பதிகளாயிருந்த சமயமெல்லாம்
உண்டாகும் பிணக்குகளுக்கு
படுக்கையே
பல நேரம்
சமாதானக் கொடியைப்
பறக்கவிட்டிருக்கிறது

இன்று
அதற்கும் வழியற்ற
அத்துவானப் பெருவெளியிலென்
துயரப்பாடலுக்குக் கூடத்
தாளமிடவொரு துணையின்றி...

எல்லா இணைவும் சுகமாகாது
போலவே
எல்லாப் பிரிவும் துயருமாகாது
இரண்டுக்குமிடைப்பட்ட
சொல்லவொண்ணா இந்த
முறிப்பின் தருணங்களே
முள்படுக்கை

உனது புரியாமை
என் சோகம்
உனது அறியாமையோ
என் துரதிர்ஷ்டம்.

Pin It