2073 ல் படம் நடக்கிறது.

இந்த உலகம் அதிக மக்கள் தொகையால் விழி பிதுங்கி நிற்கிறது.

ஆக.....அரச கட்டளை.

வீட்டுக்கு ஒரு குழந்தை மட்டுமே. மீறி இன்னொரு குழந்தையோ அதற்கு மேற்பட்ட குழந்தையோ இருந்தால்......அதை கண்டு பிடித்தால்....மறுபேச்சுக்கு இடமின்றி அந்த குழந்தை கொல்லப்படும். உயிரோடு கொல்வதற்கென்று தனி இயந்திரங்கள் எல்லாம் உண்டு. அவசரத்துக்கு சுட்டுக் கொல்லப்படும்.

what happened to mondayஆனால் விதி வேறு மாதிரி ஒரு வீட்டில் விளையாடுகிறது. ஒரே பிரசவத்தில் ஏழு பெண் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த அம்மா இறந்து விடுகிறார். அப்பா தான் குழந்தைகளை வளர்க்கத் திட்டமிடுகிறார்.

ஏழு குழந்தைகளையும் வீட்டுக்குள் அடைக்கிறார். அந்த வீடே ஒரு பதுங்கு குழி போல கட்டமைக்கப் படுகிறது. அடைகாக்கும் கோழி போல அவர் தன் வீட்டுக்கூட்டில் அவர்களை பாதுகாக்கிறார். சிறகுள்ள பறவைகள்... கண்களில் எப்போதும் மிரட்சியோடு அவ்வீட்டுக்குள் இருப்பதை காணுகையில்.. மானுட பிறவியின் சமநிலை தவறிய மறுபக்கம் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

வீட்டுக்குள் ஏழு பேருக்கும் அவரவர் அடையாளம் இருக்கிறது. ஆனால் வெளியே எல்லாருக்கும் ஒரே அடையாளம்தான். ஏழுவரும் உருவ ஒற்றுமையில் ஒரே மாதிரி இருப்பதால்... ஒவ்வொரு நாளும் ஒருவர் பள்ளிக்கு செல்வார்கள். முதல் பிள்ளைக்கு Thursday என்று பெயர் சூட்டுகிறார். அப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவருக்கும் Friday, Saturday, Sunday, Monday, Tuesday and Wednessday என்று வாரத்தின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்தந்த கிழமையில் அந்தந்த பிள்ளைகள் எல்லாருக்குமான பொதுவான ஒப்பனையில் வெளியே செல்ல வேண்டும். அதை பரிசோதிக்க கண்ணாடியில் கணிப்பொறி இயங்கிக் கொண்டிருக்கும்.

பள்ளியில் என்ன நடக்கிறது என்று அன்று இரவு வந்து எல்லா சகோதரிகள் முன்னிலும் விவரிக்க வேண்டும். அடுத்த நாள் போகிறவர் அதை பின் தொடர்ந்து குறிப்புணர்ந்து இடமுணர்ந்து........சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இப்படித்தான் அவர்களின் வாழ்வு நகர்கிறது. வெளியே காவல்துறையின் கெடுபிடி. இன்னொரு குழந்தை இருக்கிறது என்று தெரியவந்தால் உடனே கைது செய்ய.......மீறினால் சுட்டுக் கொன்று விட துப்பாக்கியோடு சுற்றிக் கொண்டிருக்கிறது.

வெளியே ஏழுவரும் ஒருவரே என்பதுபோல இருந்தாலும்.. வீட்டுக்குள் அவரவர்க்கு தனித்த அடையாளங்கள் இருக்கிறது. ஒருத்தி கணிப்பொறியில் கில்லாடி. ஒருத்தி பாடி பில்டிங்கில்... ஒருத்தி திட்டமிடுதலில். இப்படி.. ஒவ்வொருவருக்கு ஒரு தோற்றம். தோற்றங்களில் ஒரே மாதிரியாக இருந்தாலும்....உள்ளம் ஒவ்வொருவருக்கும் தனி தனியாகவே இருக்கிறது. ஆனாலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகவே இருக்கிறார்கள்.

ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் Thursday தன் ஸ்கேட்டிங் உபகரணங்களோடு வெளியே சென்று விடுகிறாள். விஷயம் தெரிந்து அப்பா கத்துகிறார். பொதுவாக எல்லாரையும் திட்டி.... என்ன செய்வதென தெரியாமல் தவிக்கையில்... உள்ளே வருகிறாள். ஆனால்... கீழே விழுந்து அவள் ஆள்காட்டி விரல் முனை துண்டாகி விட்டிருக்கிறது. ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் வேறொரு முடிவு எடுக்கிறார். எல்லாருக்கும் ஆட்காட்டி விரல் முனையை வெட்டி விடுகிறார். கதையின் வீரியம் இங்கு தான் நமக்கு தெரிய ஆரம்பிக்கிறது. ஏழு பேரும் ஒருவரின் அடையாளத்தோடு வாழ்வதின் சிக்கல்.. மெல்ல மெல்ல திரையை நிரப்புகிறது.

காலம் ஓடுகிறது. முப்பது வருடங்களுக்கு பின்.

ஒரு நாள் அலுவலகம் சென்ற Monday காணாமல் போகிறாள். அவளுக்கு என்ன நடந்தது என்று தெரிவதில்லை. கதை டேக் ஆப் ஆகும் இடம் இது.

What Happened to Monday.

என்ன செய்தும்... எப்படி தேடியும் அவள் பற்றிய ஒரு செய்தியும் கிடைப்பதில்லை. அடுத்த நாள் எது எப்படியோ Tuesday அலுவலகம் போய்தான் ஆக வேண்டும். போகிறாள். காலையில்......அவள்.... முதலில் சந்திக்கும் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டியே... அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான்.

"என்ன.... கரேன்...... ( வெளியே ஏழுவருக்கும் பொதுவான பெயர் ) நேற்று மாலை திரும்பி வருவதை நான் பார்க்கவே இல்லை" என்று கேட்கிறான். சமாளிக்கிறாள். இப்படித்தான்......நேற்று என்ன நடந்தது என்று தெரியாமல் அவள் தொடர்ந்து தினசரி வாழ்வின் எதிர்வினைகளை இப்படித்தான்...... சமாளிக்க வேண்டி இருக்கிறது இன்று.

சாலையில்.. எல்லாமே கட்டுப்பாடு தான். யார் என்ன எதற்கு எப்படி.. ஏன் என்று அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டுதான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் வெளியே சென்று விட்டு வீடு திரும்ப முடியும். சட்டத்திட்டம் அப்படி. கேள்வி கேட்டால் சுட்டு விடுவார்கள். ராணுவ ஆட்சி.....பாசிச ஆட்சி..... டிக்டேட்டிசம்......என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் எல்லாருமே அரச கட்டளைக்கு அடிபணிந்து தான் ஆக வேண்டும். அலுவலகத்தில்... நேற்று என்ன நடந்தது... எந்த கோப்பு எங்கிருக்கிறது... நேற்று சந்தித்தவர்கள்... பற்றி நேற்றிரவே அன்றைய Dayகாரி அடுத்தநாள் Dayகாரிக்கு சொல்லி விடுவாள். ஆனால் நேற்று Monday வீடு திரும்பாததால் இன்று Tuesday தானாகவே சமாளிக்க வேண்டி இருக்கிறது. காதில் ரகசிய போனில் வீட்டில் தொடர்பிலேயேதான் அவர்கள் தினமும் வேலை செய்வார்கள். அப்போது தான்.. எல்லாருக்கும்.. அங்கே என்ன நடக்கிறது என்று தெரிய வரும். ஆக ஒருத்தி வேலை செய்ய மிச்ச இருக்கும் 6 பேருமே வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும். ஆனால் இன்று அப்படி இல்லை. Tuesday தனியாக சமாளிக்கிறாள். அசிஸ்டண்ட் பெண் Tuesday வின் தடுமாற்றத்தை கவனிக்கிறாள். "நேத்தே நீங்க ஓகே சொல்லீட்டிங்க மேடம்... இன்னைக்கு ஏன் இல்லங்கறிங்க" என்பது போல பல சமாளிப்புகள். எப்படியோ மோப்பம் பிடித்த காவல்துறை அவளை கைது செய்து கொண்டு போகிறது. அதே நேரம் இன்னொரு டீம் அவர்கள் வீட்டுக்குள்ளும் நுழைகிறது.

இதற்கு பின் நடக்கும் ஆக்சன் காட்சிகள்... அதகளம்.

நான் இது வரையில் இப்படி ஒரு பெண் பாத்திரங்களை சினிமாவில் கண்டதில்லை. Wednessday.... Friday..... Saturday.... Sunday......நால்வரும் செய்யும் ஆச்சரியங்கள் நம்மை மயிர் கூச்செரிய செய்பவை. திரையைத் தாண்டி சும்மா போட்டுத் தாக்கும் சண்டைகள். உயிரைக் காத்துக் கொள்ள ஒவ்வொருத்தியும் செய்யும் அதிரிபுதிரி அசால்ட்கள்...ஓட்டங்கள்.... ஜம்ப்புகள்... அவர்களுக்கு வீட்டில் இருந்தே வழி காட்டும் Thurday -யின் மூளை. வேகம்.....தொழில் நுட்பம் உள்ளங்கை உச்சியில்.. கணிப்பொறியாக திரை விரிக்க....அதில் செய்தி பரிமாற்றம். கண்களில் வழியே கதவு திறக்கும் சாவி.. என்று அறிவியல் கைப்பிடி சுவரில் அதிரடி ஓவியங்களை சிதறடித்து செல்லும் திரைக்கதை மெய்சிலிர்க்க வைக்கும் மேஜிக் தொகுப்பு.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக மரணிக்க.. தற்காத்துக் கொள்ள செய்யும் எதிர்வினைகள்.. சம்மட்டியடி....சண்டைகாட்சிகளின் தொகுப்பு இந்திய சினிமா கற்றுக் கொள்ள வேண்டிய சிலபஸ்.

ஒரு உயிர் தன்னை தற்காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யும். எப்படி வேண்டுமானாலும் யோசிக்கும். இறுதியில் மூத்தவள் Thursday மட்டுமே இருக்கிறாள். தான் செய்த தவறினால் எல்லாருக்கும் விரல் முனை துண்டானதில் இன்னமும் அவளுக்கு வருத்தம் இருக்கிறது. உள்ளே குமைந்து கொண்டிருக்கும் மூத்தவளின் தவிப்பு அது. இப்போது தன் கண் முன்னாலே ஒவ்வொருத்தியாக சாவதில் நம்பிக்கை இழந்து பொதுவெளியில் சாலையில் கீழே சுருண்டு அழும் போது சகோதரத்துவத்தின் மகத்துவம் மனக்கண்ணில்... வந்து போகிறது. அதுவும் ஐடெண்ட்டிகள் சகோதரிகள் எனும் போது இணைப்பின் இறுக்கம் அதிகம். அவள் அழுகிறாள். சட்டென அவளுக்கு ஹீரோ மாதிரி ஒரு போலீஸ்காரன் உதவுகிறான். அவன் Monday வின் காதலன் என்று நமக்கு தெரிய வருகிறது.

முந்தின காட்சியில்... வீட்டுக்கு வந்து கதவைத் திறந்த Tuesday விடம் நெருங்கி பழக... அவள் தெரிந்தது போலவே சமாளித்து விட்டு...." இரு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்" என்று உள் சென்று Thursday விடம்..." யார் இது... நான் பார்த்ததே இல்ல" என்று கிசுகிசுக்கிறாள். எனக்கு தெரியாது என்று Thursday வும் சொல்கிறாள். அவன் யார்க்கு பழக்கம் என்று தெரிந்து கொள்ள அவனோடு அவன் வீட்டுக்கு செல்கிறாள் Tuesday.

அவ்விரவு அவர்கள் காதலால் கசிந்துருகி... காமத்தால்... சுடர் ஏற்றுகிறார்கள். இந்த ஒரு காட்சி மட்டும் தான் 18+. அவன் பற்றிய செய்தியை அந்த சமயத்தை உபயோகித்து அவள் தன் அக்காவுக்கு பரிமாற்றம் செய்கிறாள்.

விடியலில்... அவன் சொல்கிறான். Monday மட்டும் என்னோடு இருந்தால் போதாது. ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும் என்று.

அப்போது தான் புரிகிறது. அவன் Monday வின் காதலன். ஆனால் இது பற்றி Monday ஒரு போதும் யாரிடமும் சொல்லவில்லை.

அந்த காதலுக்காக.....அலுவலக சதியில் பின்னப்பட்ட மனநிலையில் தான் தவறான முடிவெடுக்கிறாள். அதுமட்டுமல்லாமல் Thursday செய்த தப்புக்கு தனக்கும் விரல் முனை துண்டானதில் அவளுள் காயம் மிக பெரியதாக இறங்கி இருக்கிறது. எப்போதும் இவர்களிடம் இருந்து விடுதலையைத் தான் அவள் விரும்பி இருக்கிறாள். Mondayவும் Thurdayவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சி உணர்ச்சி மிகுந்தது. இருவரும் அவரவர் நியாயத்தை முன் வைக்கையில்... சமநிலை மீண்டும் குலைகிறது. மிக ஆக்ரோஷமாக மோதிக் கொள்கிறார்கள். Thurday பக்கம் அவளோடு சேர்த்து ஆறு பேருக்கான நியாயம் இருக்கிறது. அவளே வெல்கிறாள். ஒரு கண் இழந்த நிலையில் Tuesday வும் கிடைக்கிறாள்.

இறுதியில் போராட்டம் தொடங்குகிறது. அரசை எதிர்த்து....... கிளர்ச்சி எழும்புகிறது. சாகையில் Monday கருவுற்றிப்பது தெரிகிறது. அந்த கருக்களை பாதுகாத்து வளர்க்கிறார்கள். அந்த கருக்களோடு.... நிறைய குழந்தைகள்.. அந்த மருத்துவமனையில்... நிறைகிறார்கள். ஆம் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

Noomi Rapce
*****************
ஹீரோயின். ஏழு பேருமே இவர் தான். ஏழு விதமான் முகபாவனை. ஹேர் ஸ்டைல்.... வளைவு நெளிவு.. பார்வை பதுங்கல்...குரல் மொழி... உடல் மொழி... நடை உடை... பாவனை எல்லாமே ஏழு விதம். ராட்சசி..... அழகி...... அழுக்கி.. செக்ஸி.. சீக்ரெட்டி... கொலைகாரி.. கொலையாளி... அன்பி.. நண்பி..... குறும்புக்காரி.. இயலாதவள்.....இயங்குபவள்..... புணரலில் அதிரடி.. போட்டுத் தாக்குவதில் சதிராடி..... கண்களில் ஒளி கொண்டாள்.... நெற்றியில் விழி கொண்டாள்......இறுகிய உடல்காரி.......இளகிய உடல்காரி...சொல்லிக் கொண்டே போகலாம். ஒரே பிரேமில் ஏழு பேருமே இருக்கிறார்கள். ஏழு பேருமே தனி தனியாக இருக்கிறார்கள்.

ஹேங் ஓவர் இன்னும் இறங்கவில்லை.

தேவதைகள் ஏழு பேராய் தெரிகையில்.... எழுதுகிறவன் எழுபது தடவை காதலிக்க வேண்டியுள்ளது.

Film: What Happened to Monday
Director: Tommy Wirkola
Year: 2017
Language: English

- கவிஜி

Pin It