arrival movieSicario திரைப்பட இயக்குனரின் அடுத்த படம். ஏலியன் சயின்ஸ் பிக்சன். பூமியின் மின்னலால் தாக்கப்படாத பன்னிரென்டு இடங்களில் பன்னிரென்டு ஏலியன் விண்கலன்கள் வந்திறங்குகின்றன. அந்த விண்கலன்களில் உள்ள ஏலியன்களிடம் பன்னிரென்டு நாடுகளின் அறிவியல் வல்லுனர்கள் பேச்சுவார்த்தையைத் தொடங்குகின்றனர். அமெரிக்கப் பகுதியில் இருக்கும் விண்கலத்திலுள்ள ஏலீயன்களின் மொழியைப் புரிந்து அதை மொழிபெயர்க்க, அவர்கள் வந்த நோக்கத்தைத் தெரிந்து கொள்ள மொழி அறிவியல் வல்லுந‌ர் லூயி பேங்க்ஸ் வரவழைக்கப் படுகிறார். அவரின் மொழிபெயர்ப்புப் படலமே "Arrival".

உலகத்தைக் காப்பாற்றாத, வீரசாகசங்கள் எதுவுமில்லாத மிகவும் வித்தியாசமான ஒரு ஏலியன் படம். ஏலியன் விண்கலத்தின் வடிவம், அவர்கள் பேசும் விதம், அவர்களின் எழுத்துகளின் அமைப்பும், அதை மனிதர்கள் எப்படி டீகோட் செய்கிறார்கள் என்பதெல்லாம் கற்பனையின் உச்சம். ஏலியன் விண்கலத்தை மேகங்களுக்கு இடையே முதன்முதலில் காட்டும் பொழுது பின்னணியில் ஒலிக்கும் இசை பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. படத்தின் காட்சிகளைப் புரிந்து கொள்வது சிரமமாகதான் இருந்தது.

முதலில் திரையரங்கில் பார்த்தாலும் மீண்டும் சப்டைட்டிலுடன் தொலைக்காட்சியிலும் பார்த்துவிட்டு இன்டர்நெட்டில் படத்தைப் பற்றிய சந்தேக விளக்கங்களைப் படித்த பின்தான் மனம் நிம்மதி அடைந்தது. இதுபோன்ற படங்கள் முழுவதும் புரியவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் பாடமெடுப்பார்கள் நாம் கவனிக்க வேண்டும் அவ்வளவே. இறுதிக் காட்சியில் இன்டர்ஸ்டெல்லரின் டச் இருப்பதை உணர முடிந்தது. சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து இந்த Arrival.

கதையைத் தோளில் தாங்கிய ஏமி ஆடம்ஸ்க்கு ஆஸ்கர் பரிந்துரை கிடைக்கவில்லையே என இயக்குனர் வருத்தத்தில் இருக்கிறாராம். அவரின் இயக்கத்திற்கும் சேர்த்து எட்டு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

நோலன் இயக்காத ஒரு நோலன் படம்னு இந்தப் படத்தை சொல்லலாம்.

"A Film By Dennis Villeneuve"

IMDB : 8.2, DRAMA/SCI-FI/THRILLER

- சாண்டில்யன் ராஜூ

Pin It