திராவிட இயக்க அரசியலுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் அருமைத் தோழர் சாரதா தேவி. காஞ்சியைச் சேர்ந்த அவர் வங்கி அதிகாரியாகப் பணியிலிருந்த காலம்தொட்டே சமூக உணர்வோடு பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தற்போது அந்தப் பணியையும் உதறிவிட்டு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துள்ளார்.
வர்ணாசிரம மதவாதம், சாதீயம், பெண்ணடிமை, ஆண் மேலாதிக்கம், தீண்டாமை, வடமொழி மற்றும் இந்தித் திணிப்பு போன்ற எண்ணற்ற தடைகள் தமிழரின் - தமிழ்ப் பெருநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக நீண்ட நெடிய காலமாகவே இருந்துவரும் நிலையில் ஓரளவிற்கேனும் விழிப்புணர்வு தோன்றியிருக்கும் தற்போதைய காலத்தில் தோழர் சாரதா தேவி போன்றோர் களமிறங்கியிருப்பதுவும் பெரும் நம்பிக்கையைத் தருவதாகும். திராவிட இயக்கத்தின் அடிப்படைகளைத் தன் கருத்தியல் இயங்குதளமாகக் கொண்டிருக்கும் நூலாசிரியரின் தீர்க்கமான பார்வை ஒவ்வொரு கட்டுரையிலும் மிகவும் இயல்பாக வெளிப்பட்டிருப்பது சிறப்பு.
காத்திரமான கவிஞரும், எழுத்தாளரும், பேச்சாளருமான தோழர் சாரதா தேவி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த புல்டோசர் அரசியல் எனும் சீரிய தொகுப்பில் மொத்தம் 35 கட்டுரைகள். பல்வேறு தேவைகளையொட்டி, அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகள். குறுகத் தரித்தாலும் பொருளில் கனமும் செறிவுமான கட்டுரைகள். பெரும்பாலும் கருஞ்சட்டைத் தமிழர் மின்னிதழில் வெளியானவையே இந்தத் தொகுப்பினில் இடம்பெற்றுள்ளன. தேசம் முழுவதும் இந்துத்துவ சனாதன சக்திகள் தலைதூக்கியிருக்கிற இந்த வேளையில், அவை தமிழகத்தையும் கபளீகரம் செய்யத் துடிக்கிற தற்கால நிலைமையில் அவற்றை எதிர்த்து நிற்கிற கருத்தியல் ரீதியிலான தார்மீக பலத்தைத் தருவனவாக இந்தக் கட்டுரைகள் இருப்பதை நிச்சயம் உணர முடிகிறது.
இந்திய மண்ணில் இஸ்லாமியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகக்கூட வாழத் தகுதியற்று அஞ்சிக் கிடக்கவேண்டிய நிலையினை உருவாக்கி வைத்திருக்கிற அவலத்தைச் சுட்டும் வளைகுடா நாடுகளின் சாட்டை எனும் தலைப்பிலான கட்டுரைதான் நூலின் முதல் திறப்பாக உள்ளது. முகமது நபியவர்களைப் பற்றி அவதூறாகப் பேசப்போய் அது இஸ்லாமிய உலகினையே கொதித்தெழச் செய்ததையும், அதனால் இந்திய ஆட்சியாளர்கள் மண்டியிடவேண்டி வந்தமையையும் விளக்கி, இந்தியா வாழ் இஸ்லாமியர்களின் வாழ்வியல் மாண்புகளுக்குத் துணை நிற்பதாக இந்தக் கட்டுரை மிகச் சரியாக அமைந்திருக்கிறது.
அதுபோல, பன்னாட்டுப் பெண்கள் தின வரலாற்றைச் சொல்லும் கட்டுரை தங்களுக்கெதிரான சுரண்டலுக்கு எதிராகப் பெண்கள் முன்னெடுத்த போராட்டத்தால் ஆண்களும் பலனடைந்து, இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பதை அனுபவிக்க நேர்ந்ததைச் சொல்லுகிறது. பெண் சமத்துவமும், அங்கீகாரமும் அவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மானுடத்திற்கே நன்மை பயக்கக்கூடிய தன்மையது என்பதை அது மெய்ப்பிக்கிறது.
அரசியல் முக்கியத்துவத்தையெல்லாம் கடந்து, வாசிக்கிறபோதே நம் நெஞ்சைப் பிழிந்துபோடும் ஒரு கட்டுரை பெண்களைத் துரத்தும் மரணங்கள் என்பது. ஒரு திகிலூட்டும் மர்மக்கதையைப்போல தொடங்கி, காதல்வயப்பட்டு மடியும் பெண்களுக்காக - குறிப்பாகப் பெண் கலைஞர்களுக்காக நியாய உணர்வோடு பரிந்துபேசும் கட்டுரை மிகமிக காத்திரமான சொற்பிரயோகங்களோடு, உணர்வுமயமாக, உண்மையை விளம்புகிறது. அதி உன்னதமான பெண்ணிய நிலைப்பாட்டில் நின்றுகொண்டு, இந்தச் சமூகத்தின் ஆணாதிக்கக் கேடுகளின் முகங்களைக் கிழித்துப்போடுகிறது. வரலாற்றுப் பார்வைத் தெளிவோடும் இந்தக் கட்டுரை உருப்பெற்றிருப்பதுவும் கூடுதல் சிறப்பு.
“”அன்போ, நேரமோ, கவனமோ, பொருளோ எல்லாவற்றையும் தானே அபகரித்துக்கொள்ளும் நடத்தைக்குப் பெயர்தான் கணவனா?”” - என்று பொட்டிலடித்தாற்போல வினவும் தருணத்தை எதிர்கொள்ளும் எந்த ஆணாதிக்கவாதியின் உள்ளமும் நடுங்கவே செய்யும். பெண்ணை ஆற்றல்படுத்த ஒரு தலைமுறை உழைத்த இச்சமூகம், ஆற்றல்படுத்தப்பட்ட பெண்ணோடு வாழ ஆணைப் பழக்கவில்லை என்று கட்டுரையாளர் முன்வைக்கும் விமரிசனம் எப்போது வழக்கொழியுமோ தெரியவில்லை. இத்தனையையும் பெண்ணின் தலையில் இடியென இறக்கும் ஆணாதிக்கத்தை வாழத் தெரியாத ஆண் சமூகம் என்கிறார். ஆம், தான் வாழத் தெரியாத நிலையில்தான் அது பிறரையும், அதாவது பெண்களையும் வாழ விடுவதில்லை என்பது புதிய முன்வைப்பு மட்டுமல்ல, நிதர்சனமும்தான்.
நூலின் தலைப்புக் கட்டுரையான புல்டோசர் அரசியல் நாடெங்கிலும் சட்டவிரோதமாக அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டு இஸ்லாமியர்களின் வீடுகளை எந்தவித அறிவிப்போ, பேச்சுவார்த்தையோ, சட்டவழிகளோ அல்லாமல் புல்டோசர்களின் துணைகொண்டு இடித்துத் தள்ளுகிற செயல் ஒன்றையே மேற்கொள்ளத் துணிந்த அருவெறுக்கத்தக்க இஸ்லாமிய எதிர்ப்புச் செயல்பாட்டைக் கடுமையாகச் சாடுகிறது. இதற்கு அச்சாரமிட்டதாக காஷ்மீர் ஃபைல்ஸ் எனும் வரலாற்று மோசடித் திரைப்படம் அமைந்துவிட்டதாக நிறுவுகிறார் கட்டுரையாளர்.
இன்னும் இதுபோல ஒவ்வொரு கட்டுரை குறித்தும் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. சாதித்துக்காட்டிய ஸ்டாலின், பிடிஆரின் முதல் நிதிநிலைத் திட்ட அறிக்கை, ஓமந்தூரார் மாளிகை - கலைஞரின் கனவு நனவாகுமா?, குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தமிழ்நாட்டின் எதிர்ப்பும், தில்லைக் கோயிலின் தீண்டாமை, பேரறிஞர் அண்ணாவின் தீர்மானமும் தமிழ்நாடு நாளும் போன்ற இன்னும் பல கட்டுரைகளும் வாசிக்கவும், மனங்கொள்ளவும் வேண்டிய அவசியத்தை உணர்த்துவனவாகும்.
பலதரப்பட்ட பேசுபொருள்களின் தொகுப்பெனவே வந்துள்ள தோழர் சாரதா தேவியின் 5வது படைப்பு இந்த நூல். தற்போது திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்பாட்டாளரான தோழர் சாரதாவின் பிற நூல்கள் உலை எனும் கவிதைத் தொகுப்பு, எல்லார்க்கும் எல்லாமும் எனும் சிறுகதைத் தொகுப்பு மற்றும் கருப்பும் நீலமும், ஆளுமைகள் ஆகிய கட்டுரைத் தொகுப்பு முதலானவை ஆகும்.
168 பக்கங்களைக் கொண்ட, ரூபாய் 170 விலையுள்ள இந்த புல்டோசர் அரசியல் நூலினைக் கருஞ்சட்டைப் பதிப்பகம் மிகச் சிறந்தமுறையில் அச்சிட்டு, வெளியிட்டுள்ளது. எளிய சொற்கட்டுமானத்தோடு, உறுதிமிக்க அரசியல் தெளிவும் பார்வையும் கொண்ட இந்தக் கட்டுரைகளை அரசியல் களத்தின் செயற்பாட்டாளர் ஒவ்வொருவரும் வாசிப்பது மெய்யாகவே பயனுள்ளதென்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
- சோழ.நாகராஜன்