தேர்தல் முடிவுகளும், தேர்வு முடிவுகளும் இப்போதெல்லாம் உடனுக்குடன் தெரிந்துவிடுகின்றன ப்ளஸ்2, பத்தாவது தேர்வு முடிவுகளை முன்பெல்லாம் பேப்பரில்தான் பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியிருக்கும். பாசா, பெயிலா என்று பேப்பரில் நம்பர் போட்டிருப்பார்கள். சிலசமயங்களில் ஒரு பேப்பரில் பாஸ் என்றும், இன்னொரு பேப்பரில் பெயில் என்றும் இருக்கும். மதிப்பெண் சான்றிதழ் வருகிறவரை இந்த மாணவனது நிலை திரிசங்கு நரகம்தான். மதிப்பெண் சான்றிதழும் உடனே வராது. ஒரு மாதத்திற்கு மேலாகும்.

நான் பத்தாவது தேர்வு எழுதிமுடித்துவிட்டு வெளியேவந்த உடன் நிச்சயம் பெயில்தான் என்ற உறுதியான முடிவுக்கு வந்தேன். பத்தாவது கணக்கு வாத்தியார் உனக்கு பின்னக் கணக்கு மட்டுமல்ல, சின்னக் கணக்கு கூட வரமாட்டேன் என்கிறது. நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என்று அடிக்கடி வாழ்த்துரை வழங்கிக்கொண்டே இருப்பார். அதற்காக அறிவியல் பாடத்தில் நான் புலி என்று நீங்கள் முடிவு செய்துவிடக்கூடாது. அறிவியல் வாத்தியார்,  விலங்கியல், தாவரவியல் எதுவும் பிடிபடாததால்  நீ மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லை என்று உறுதியாக அறிவித்துவிட்டார்.

கோடைவிடுமுறை முழுவதும் நுழைவுத்தேர்வுக்கு இப்போது மாணவர்கள் தயாராவது போல மாடு மேய்க்கும் பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போதுதான் மாடு மேய்ப்பது எவ்வளவு கடினமான வேலை என்று புரிந்தது. அதுவும் எருமை மாட்டையும், பசுமாட்டையும் சேர்த்து மேய்ப்பது அந்த கண்ண பராமாத்மாவுக்குக் கூட தெரியாத கலை. எனவேதான் அவர் விவரமாக எருமை மாடுகளை தவிர்த்துவிட்டு பசுமாடுகளை மட்டுமே மேய்த்ததை நீங்கள் படத்தை பார்த்து புரிந்துகொள்ள முடியும். அதிலும் ஒன்றுகூட கிழட்டு மாடுகளாக இருக்காது. எல்லாம் கன்றுக்குட்டிகள்தான். ஒருவேளை கிழட்டு மாடுகள் எல்லாம் கோகுலத்தில் இருந்து ரதமேற்றி அனுப்பிவைத்துவிட்டார்களோ என்னவோ?

 

பத்தாவது வகுப்பு தேர்வு முடிவு நெருங்க, நெருங்க மாடுகளின் மீது நெருக்கமும் நேசமும் அதிகரித்துவிட்டது. கடைசிகட்ட அதிரடியாக நாளை எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியாகிறது. முதல் மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு என்று தினத்தந்தியில் செய்தி போடப்பட்டிருந்தது. அப்போது மனதில் நாமும் ஒரு பத்திரிகை ஆரம்பித்து பெயிலானவர்களுக்கு பரிசு என்று கொட்டை எழுத்தில் செய்தி போடவேண்டுமென்று ஆசைப்பட்டேன். பத்திரிகை துறைக்குத வந்துவிட்டாலும் கூட அந்த ஆசை மட்டும் நிறைவேறவில்லை.

வழக்கமாக காலை எட்டுமணிக்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லும் நான் அன்று இருள் பிரியும் முன்பே மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டேன். வழக்கமாக செல்கிற காட்டுப்பகுதிக்கு செல்லாமல் வேறுபகுதிக்கு மாடுகளோடு மர்மமாகிவிட்டேன். இவனுக்கு இன்றைக்கு என்னாச்சு என்று மாடுகளுக்கு புரியவில்லை. அதுக்கு தெரியுமா இன்றைக்கு ரிசல்ட் போடுகிறார்கள் என்று.

11 மணியளவில்தான் எங்கள் ஊருக்கு பேப்பர் வரும். எனது தேர்வு எண்ணை சுவிட்சர்லாந்து வங்கி கணக்கு எண் போல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தேன். உடன்படித்த ஒற்றர்கள் மூலம் எப்படியோ என் நம்பரை கண்டுபிடித்த என் அண்ணன், பேப்பரை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார். அதில் நான் பாஸானவர் பட்டியலில் இருந்தேன். மாலை  6 மணி வரை நானும் சக மாடுகளும் வீடுதிரும்பவில்லை. ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து விட்டார். அவரை தூரத்தில் பார்த்தபொழுது அடிக்க வருபவர் போலவே தோன்றியது. ஒருவழியாக பாஸ் என்கிற விபரத்தைச் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது கூட எனது நம்பர் அச்சுப்பிழையாக இடம்பெற்றிருக்கும் என்பதே என்னுடைய அழுத்தமான நம்பிக்கையாக இருந்தது. ஒரு மாதம் கழித்து மதிப்பெண் சான்றிதழை வாங்கிப்பார்த்தபோது கணக்கு, அறிவியல் பாடங்களில் பார்டரில் தாண்டிக்குதித்திருந்தேன். யாரோ என்னைப்போல அறிவாளிகளைப்பெற்ற பிள்ளைக்குட்டிக்கார வாத்தியார்தான் பேப்பரை திருத்தியிருக்கிறார்.

இப்போது ப்ளஸ்2 முடித்தவுடன் அடுத்தது என்ன  படிக்கலாம் என ஆங்காங்கே முகாம் நடத்துகிறார்கள். முகாம் நடக்கும் இடம் எங்கே இருக்கிறது என்று முக்கால் பக்கத்திற்கு விபரம் போட்டிருப்பார்கள். அப்போதுதான் இனி பியுசி கிடையாது, பத்தாவது முடித்தவுடன் பள்ளிக்கூடத்திலேயே இரண்டு ஆண்டுகள் முடித்துவிட்டு நேராக கல்லூரிக்கு சென்றுவிடலாம் என அரசாங்கம் அறிவித்தது. வயிற்றில் பால் வார்ப்பது போல கலைப்பிரிவு என்று ஒரு பிரிவு இருக்கும் என்றும், அந்த வகுப்பு இருக்கும் பக்கம் கூட கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் வரமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்த திருவடியார் கூட்டத்தில் நானும் சென்று மகிழ்ச்சியாக இணைந்துகொண்டேன்.

இப்போதெல்லாம் ப்ளஸ்2 தேர்வு முடிவு இணையத்தில் உடனடியாக வந்துவிடுகிறது. மார்க்கையும் அதிலேயே பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை பெயிலாகி இருந்தால் கூட ஒரு மாதத்திலேயே எழுதி பாசாகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. அப்போது ஒரு பாடத்தில் ஒரு மார்க்சில் பெயிலாகி இருந்தால்கூட ஒரு வருடம் வனவாசம் போகவேண்டியதுதான். காட்டுக்கு போய்விட்டால் கூட அங்கிருக்கும் எந்தவிலங்கும் திட்டப்போவதில்லை. வீட்டில் இருந்தால்தான் வினை. வீட்டில் இருக்கும் அன்பானவர்களே விதவிதமான விலங்குகளாக அவதாரம் எடுப்பார்கள்.

தேர்தல் முடிவும் அப்படித்தான். இப்போது மிஷின் வந்துவிட்டதால் மதியச் சாப்பாட்டிற்குள் முடிவு தெரிந்துவிடுகிறது. அப்போது ஒவ்வொரு பெட்டியாக உடைத்து அடுக்கி பிரித்து எண்னுவதற்குள் மாலையாகிவிடும். அதற்குள் அவர் லீடிங், இவர் லீடிங் என்று ஆங்காங்கே உள்ள கருத்துக்கணிப்பாளர்கள் கதைவிட்டுக்கொண்டிருப்பார்கள்.

உண்மையில் அப்போது பாதிப்பெட்டியைக்கூட உடைத்திருக்க மாட்டார்கள். இப்போதும் கூட பெட்டியை உடைத்துப்பார்த்தால் யார் ஜெயித்தார்கள் என தெரியும் என்று கூறுகிறார்கள். இப்போது மிஷனை உடைத்தால் ஒன்றுமே தெரியாமல் போய்விடும்.

அப்போது வானொலியில் சரோஜ் நாரயாணசாமி, செல்வராஜ் போன்றவர்களின் குரலில் தேர்தல் முடிவை கேட்பதே ஒரு சுகமான அனுபவம்தான். ரேபரேலித் தொகுதியில் போட்டியிட்ட இந்திரகாந்தி ராஜ் நாராயணனிடம் தோற்றார் என்று வானொலியில் கேட்ட வார்த்தைகள் இன்னமும் ரீங்காரம் செய்துகொண்டிருக்கிறது.

Pin It