periyar 311சட்டசபை தேர்தல்களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து விட்டார்கள். அவர்களில் பெரும்பாலோரும் ஏதாவது ஒரு கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டே நியமனச் சீட்டுத் தாக்கல் செய்திருப்பார்கள். சிலர் ஜெயிக்கும் கட்சியை எதிர்பார்த்து எதில் வேண்டுமானாலும் சேருவதற்கு வசதி வைத்துக் கொண்டு நியமனச் சீட்டைத் தாக்கல் செய்திருப்பார்கள்.

பொதுவாக தேர்தல்களில் நிற்கப்படுபவர்களில் பெரும்பான்மையோரின் யோக்கியதைகளையும் நாணயங்களையும் குறித்து முன் ஒரு தலையங்கத்தில் விவரமாய் கூறியிருக்கிறோம்.

கொள்கையும் நாணயமும் எப்படி இருந்தபோதிலும் தேர்தல் சமயங்களில் கட்சியின் பேரால் நிற்பவர்கள் தங்கள் கட்சிக்காக என்று கட்சியின் சார்பாய் பொதுமக்களின் மனதைக் கவரத்தக்க ஏதாவது சில கொள்கைகளை வெளியிடுவது என்பது எங்கும் நடைபெற்று வரும் வழக்கமாகும்.

அதுபோலவே இத்தேர்தலிலும் நமது மாகாண சட்ட சபைக்கு நிற்கும் இரண்டு முக்கிய கட்சியாரும் தங்கள் தங்கள் கொள்கைகள் என்பதாக சில விஷயங்களை அறிக்கையின் மூலம் வெளியிட்டு விட்டார்கள். இவ்விரு கக்ஷி அறிக்கைக் கொள்கைகளும் நம்மைப் பொறுத்தவரை தேர்லுக்கு ஓட்டு வாங்குவதற்காக வெளியிட்ட அறிக்கைகளாகும் என்பதே நமது அபிப்பிராயமாகும்.

ஆனபோதிலும் இருவர்களின் உண்மையான கொள்கைகளை நாம் அறிய முடியவில்லை என்று சொல்லி விடுவதற்கில்லை. ஜஸ்டிஸ் கட்சி 6 வருஷ காலம் அதிகாரத்தில் இருந்த போது செய்திருக்கும் வேலைகளையும் சுதந்திர தேசியக் கட்சி என்னும் இப்போதைய மந்திரி கட்சி நாலு வருஷ காலம் அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்து வந்திருக்கும் வேலைகளையும் கவனித்துப் பார்க்க பொது மக்களுக்கு தக்க சௌகரியம் கிடைத்தே இருக்கின்றது.

ஆதலால் இரு கட்சியாரும் விசேஷ சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஒழிய இனியும் அவைகளையே தான் - அவற்றை அனுசரித்தே தான் நடந்து கொள்வார்கள் என்பதாகவே அறிவுள்ள எவரும் முடிவு செய்து கொள்வார்கள். இரண்டு கட்சியும் தனது அதிகார காலத்தில் அரசியல் வேலைகளைக் காட்டிலும் சமூக சீர்திருத்த வேலைகளில் மிக்க கவனம் செலுத்தி தக்க வேலைகள் செய்திருக்கின்றன வென்பதை சீர்திருத்தவாதிகள் யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள்.

இதற்கு உதாரணம் சுருக்கமாக வேண்டுமானால் இரு கட்சியும் சீர்திருத்த விரோதிகளான பார்ப்பனர்கள், விரோதமாகவே கருதி வருகின்றார்கள் என்பதினாலேயே அறிந்து கொள்ளலாம்.

இரு கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் அரசியல் சம்மந்தமான கொள்கைகளைப் பற்றி வெளியிட்டிருப்பதற்கும், அக்கட்சியார்களின் மனதில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் நமக்கு நன்றாய் தெரியும். அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் வலையில் பட்டவர்களைச் சமாதானப்படுத்தவும் ஒரு கட்சி மற்றொரு கட்சியைக் குற்றம் சொல்வதன் மூலம் தோற்கடிக்கவும் எண்ணம் கொண்டு கோர்த்த வெறும் வார்த்தைகளேயாகும். ஆகவே அதைப்பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.

பொதுவாக இரண்டு கட்சியும் சைமன் கமிஷனை ஆதரித்தேயிருக்கின்றது; வரவேற்றுமிருக்கின்றது. அக்கட்சியார் இருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை சைமன் கமிஷனுக்கு ஒரு முகமாக சமர்ப்பித்தவர்களேயாவார்கள்.

சட்ட மறுப்பியக்கத்தில் சேராதவர்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் சட்ட மறுப்பு இயக்கத்தை அடக்கும்படி சர்க்காருக்குத் தெரிவித்துக் கொண்டவர்களுமாவார்கள்.

ஆனால் சட்டமறுப்பு மூலமாய் நிரபராதிகள் கஷ்டப்பட்டதற்கு வருந்தினவர்களுமாவார்கள். இது சம்மந்தமாக உபயோகித்த வார்த்தைகளில் மாத்திரம் வேண்டுமானால் ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும் சிறிது வித்தியாசமிருக்கலாம்.

இது சகஜமேயாகும். ஏனெனில் அதிகாரத்தில் இருப்பவர்கள் சில பொறுப்பை சுமந்து கொண்டிருப்பவர்களானதால் அவர்கள் சற்று அடக்கமாக பேச வேண்டியதும், அது இல்லாதவர்கள் சற்று துடுக்கமாகப் பேசுவதும் இயற்கையானதேயாகும்.

நமது நாட்டைப் பொறுத்தவரை அதாவது தமிழ்நாட்டைப் பொறுத்தவரைப் பார்ப்பனரல்லாதார்களில் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்கள் சீர்திருத்தத் துறையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுபவர்களே யாவார்கள்.

ஏனெனில் இது சமயம் தமிழ்நாடு சீர்திருத்தத் துறையிலேயே செல்வாக்குப் பெற்றிருப்பதால் எவரும் அதை மதித்துத்தான் ஆக வேண்டும். அந்தப்படி அதை மதித்து அதற்கு இணங்காதவர்கள் எவ்வளவு மெஜாரிடியுடன் சட்டசபையில் வீற்றிருந்தாலும் வெளியில் தலைகாட்ட சிறிதும் செல்வாக்கு இருக்க முடியாது.

ஆகையால் பொதுவாக இத்தேர்தலில் அடியோடு முடியாவிட்டாலும் கூடுமானவரையாவது அவர்களது அளவுக்கு மேல் பார்ப்பனர்களை நுழைய விடாமல் செய்ய வேண்டியதைத் தவிர தேர்தலில் நம் போன்றவர்களுக்கு வேறு வேலை இருக்காது என்றே கருதுகிறோம்.

மற்றபடி இரண்டு கக்ஷியையும் நாம் பொதுவாக மதித்து வந்திருந்தும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் நெல்லூரில் ஏமாற்றினதையும் நாணயத் தவறுதலாய் நடந்து கொண்டதையும் மக்களை மறக்கும்படி செய்ய அது ஒரு முயற்சியும் செய்யவில்லையானதினால் அதன் பலனை அவர்கள் அடைந்தே விட்டார்கள்.

இதற்கு ஆதாரம் என்னவென்றால், அது நெல்லூரில் சட்டசபைக்கே நடவடிக்கைகளில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கே ஆபத்து வந்து விடும் என்று மாய்மால கூக்குரலிட்டு விட்டு மூன்று மாதத்திற்குள்ளாகவே ஜஸ்டிஸ் கக்ஷியில் பார்ப்பனர்களை சேர்க்காவிட்டால் ஜஸ்டிஸ் கக்ஷியே அடியோடு போய்விடும் என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டதே போதுமானதாகும்.

இதற்கு மேலும் அக்கக்ஷித் தலைவர்களுக்கு தங்கள் தவறுகளுக்கு புத்திக் கற்பிக்க வேண்டிய காரியம் ஒன்றை அவர்கள் எதிர்ப்பார்கள் என்று நாம் நினைக்கவில்லை. இது வினையின் பயனேயாகும்.

இவை நிற்க ஓட்டர்களுக்கு நமது அபிப்பிராயத்தை தெரிவித்துக் கொள்ள வேண்டிய முறையில் சில வார்த்தைகளைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றோம். அதாவது:- தேர்தல்களில் ஓட்டர்கள் எப்பொழுதும் கக்ஷிகளை கவனிக்கக்கூடாது என்பதேயாகும். இதை வெகுநாளாகவே நாம் சொல்லி வந்திருக்கின்றோம்.

நமது நாட்டில் காங்கிரசானது ஒரு காலத் தில் செல்வாக்காய் இருந்து அந்த செல்வாக்கின் பேரால் முனிசிபாலிட்டி முதலிய தேர்தல்களை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதாக தீர்மானித் துக் கொண்டு பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரஸ் கக்ஷி அபேக்ஷகர்களாய் நின்ற காலங்களில் நாம் காங்கிரஸ் கமிட்டித் தலைவராயும், காரியதரிசியாயும் அதில் முக்கிய அங்கத்தினராயும் இருந்த காலங்களிலும் கூட “கக்ஷிப் பெயரைப் பார்க்காதீர்கள் நிற்கும் ஆசாமிகளின் யோக்கியதையையும், நாணயத்தையும் பார்த்து ஓட்டுச் செய்யுங்கள்” என்றுதான் சொல்லியும், எழுதியும் வந்ததோடு இதை யனுசரித்து பல துண்டுப் பிரசுரங்களும் பதினாயிரக்கணக்காய் வெளிப்படுத்தியும் இருக்கின்றோம்.

கக்ஷிகள் என்பது அனேகமாய் மந்திரி பதவிக்கும் உத்தியோக ஆசைக்கும் தான் வேண்டியதாய் இருக்கும். தனிப்பட்ட நபர்களோ பொது நலக்காரியங்களுக்கு வேண்டியவர்களாய் இருப்பார்கள்.

உதாரணமாகச் சொல்லுவோமானால் திருவாளர்கள் று.ஞ.ஹ.சௌந்தரபாண்டியன், சு.மு.ஷண் முகம், ஹ.கூ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியின் பேரால் நிற்பார்களானால் ஓட்டர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியினிடத்தில் எவ்வித அதிருப்தி உள்ளவர்களாயிருந்தாலும் மேற்கண்ட கனவான்களையும் அவர்கள் போன்றவர்களையும் கக்ஷியின் காரணமாக தள்ளிவிட முடியாதென்றே சொல்லுவோம்.

அது போலவே திருவாளர்கள் ளு. முத்தய்யா முதலியார், னுச. சுப்பராயன் போன்றவர்களையும் சுதந்தர தேசியக் கக்ஷி· என்பதின் சார்பாக நின்ற போதிலும் அக்கக்ஷியினிடம் திருப்தி இல்லாதவர்கள் அக்கனவான்களை தள்ளிவிட முடியாதென்றே சொல்லுவோம். ஏனெனில் அவரவர்கள் தங்கள் தங்கள் ஆதிக்கங்களின் கீழ் இருந்த ஸ்தாபனங்களின் மூலம் செய்திருக்கும் வேலைகளைப் பார்த்தே இதைச் சொல்லுகின்றோம்.

இவ்விஷயத் தில் நமது அளவுகோல் சீர்திருத்த விஷயத்திலும் பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் அனுகூலமாயிருந் தார்களா? இருக்கின்றார்களா? என்பது வேயாகும். இவைகளைத் தவிர மற்ற விஷயங்களில் தங்கள் தங்கள் சவுரியங் காரணமாக தாக்ஷண்யம் காரணமாக கக்ஷி காரணமாக சில தந்திரங்கள் செய்திருந்தாலும் இருக்கலாம்.

அதாவது இரு கக்ஷியாரும் பார்ப்பனர்களை தங்கள் தங்கள் கக்ஷியில் சேர்க்க தங்களுக்கு உதவிசெய்ய அவர்களை மானமிழந்து கெஞ்சுகின்றார்கள். இரு கக்ஷியாரும் வருணாசிரம - புராண மூடக்கொள்கையுடைய ஜாதி மத ஆணவம் கொண்ட ஆசாமிகளை தங்கள் கக்ஷிகளின் பேரால் நிறுத்தி தங்களுக்கு அவர்களுடைய ஆதரவைத் தேடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் கொள்கைக்காரர்களையும் சுயமரியாதை கொள்கை விரோதிகளையும் தங்கள் தங்கள் கக்ஷியில் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அன்றியும் அப்பேர்ப்பட்டவர்களை உத்தேசித்து தங்கள் தங்கள் கொள்கைகளைக் கூட சிறிது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கிறார்கள்.

ஆகவே இவைகளையெல்லாம் நடு நிலைமையில் இருந்து பார்த்தால் இப்போதைய தேர்தல்களுக்கு இவை அவசியமான தந்திரங்களாகவே இருந்து வருகின்றது. ஆனாலும் ஓட்டர்கள் ஞானமுடையவர்களாகி யோக்கியமும் நாணயமும் உடையவர்களாகின்ற வரையில் மேற்கண்ட புரட்டுகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆதலால் இந்த தேர்தல்களில் ஓட்டர்கள் யாரும் கக்ஷிப் பெயர்களைக் கண்டு விருப்பு வெறுப்புக் கொள்ளாமல் அபேக்ஷகர்களின் தனிப்பட்ட யோக்கியதைகளையும் முன்பின் அவர்கள் செய்த காரியங்களையும் செய்யக் கூடிய சவுகரியம் இருப்பதையும், கவனித்து அபேக்ஷகர்களை தெரிந்தெடுக்க வேண்டுவதே தற்கால நிலையில் முறையாகுமென்று வற்புறுத்துகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.08.1930)

Pin It