2024 ஆம் ஆண்டு ஒன்றியத்தின் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் 2022இல் நடைபெற இருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி தன் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்திட முயன்று வருகிறது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல், ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு ஓர் அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்று 15-06-2022 அன்று டில்லி அரசியலமைப்பு மன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக்தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி என 17 கட்சிகள் மம்தா பானர்ஜி தலைமையிலான அக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பவார் முன் நிறுத்தப் பட்டாலும் அவர் மறுத்து விட்டார். எதிர்வரும் 21 ஆம் நாள் சரத் பவார் தலைமையில் மீண்டும் கூடி முடிவெடுக்க உள்ளன எதிர்கட்சிகள்.

ஒன்றிய அரசின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 10.86 இலட்சம்.

இதில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு 48 விழுக்காடு வாக்கு மதிப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவும், சிதறாத வாக்குகளால் மட்டுமே பா.ஜ.க வின் வெற்றியைத் தடுக்க முடியும், தடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் நாட்டின், மக்களின், நலன் கருதி, கிடைத்துள்ள வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

 பா.ஜ.க தோல்வியைத் தழுவ வேண்டும்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It