ramadoss anbumani copyசமூகநீதியும், தேர்தல் அரசியலும்

மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்கள் தேர்தல் காலங்களில் நடத்தும் வித்தைகள் ஏராளம். இந்த 2021 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் சந்திக்கும் பல விசித்திரங்களில் பாமக வின் கூட்டணிக்கான முன் நிபந்தனை விபரீதமானதும் கூட.

ஆம், எல்லாம் அறிந்த சமூகநீதிச் செம்மல் ராமதாஸ் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டை முழுவதுமாக வன்னியருக்கென்று எந்த அணி ஏற்கிறதோ அவர்களோடுதான் கூட்டணி என அறிவித்து விட்டார். இந்த முன் நிபந்தனை சில பிரத்யேக காரணங்களுக்காக மாற்றப்படும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்றாலும், பாமக வின் தற்போதைய நிலைப்பாடும் அது தொடர்பில் மருத்துவர் வைக்கும் வாதங்களும் வில்லங்கமானவை.

இந்தக் கோரிக்கை புதியதல்ல என்றாலும், அதன் பொருட்டு முன் வைக்கும் வாதங்கள் முற்றிலும் தவறானது. சமூக நீதி அரசியலின் அடிப்படைகள் அறிந்த யாரும் இந்த ரீதியிலான வாதங்களை வைக்க கண்டிப்பாக யோசிப்பார்கள். ராமதாஸ் அரசியல் களத்தில் வன்னியர் வாக்கு வங்கியை தனது பலமாக பாவிக்க விடுத்த சவால்கள், எடுத்த சபதங்கள் எண்ணிலடங்காதவை.

அவற்றை பட்டியலிட்டால் இந்தக் கட்டுரை ஒரு புத்தகமாக விரிந்து விடக் கூடும். அதைவிட அந்தச் சொல்லாடல்கள் மிகப் பிரபலம் என்பதால் இங்கு தேவையில்லை. ஆனாலும் அவரால் இன்னும் ஒரு சிறு வன்னியர் தொகுதியைக் கையாள முடிகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சாதி அடையாளம் சார்ந்த பெருமிதத்தை உரிமை எனும் மந்திரக்கோல் கொண்டு கையாளும் செப்படி வித்தைதான் மருத்துவர் அவர்களின் சாகசம். நிற்க.

எம் பி சி சாதிகளும், டி என் சி சாதிகளும்

தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டு முறை யாரும் அறியாத ரகசியமில்லை. மொத்தம் 69% இட ஒதுக்கீட்டில் எஸ் சி / எஸ் டி பிரிவினருக்கான 19% ஒதுக்கீடு போக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு முறையே 30% ( இதில் இஸ்லாமியர் உள் ஒதுக்கீடு 3.5% ) மற்றும் 20% என உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில்தான் வன்னியர் சமூகமும் உள்ளது.

வன்னியர்கள் தவிர இன்னும் 104 சாதிகள் உள்ளன என்கிறார் ராம்தாஸ். அவரது பேச்சில் விடுபடும் மிக முக்கியமான தகவல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பிலுள்ள இரு வகைமையான சாதித் தொகுப்புகள் பற்றிய தகவல். ஆம், அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுதியில் 41 சாதிகளும், குற்றப் பரம்பரைச் சட்டப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ( Denotified castes ) 68 சாதியினரும் உள்ளனர்.

இவர்களிலும் ஒட்டுமொத்த சாதியும் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்குள்ளான சாதி பிரமலைக் கள்ளர்கள். இவர்கள் தவிர்த்து கொண்டையன் கோட்டை மறவர்கள் பெரும்பாலும் இந்தக் கொடுஞ்சட்டத்திற்காளானவர்கள். தவிர வலையர்கள், குரவர்கள், வேட்டுவக் கவுண்டர்கள், தொட்டிய நாயக்கர்கள் எனப் பல்வேறு சாதியினரும் பரவலாக இந்தச் சட்டத்திற்கு ஆட்பட்டிருந்தனர். இந்தப் பட்டியலில் படையாட்சி எனும் வன்னியர் சாதியினரும் உண்டு. ஆனால் அவர்கள் மிகக் குறிப்பாக கடலூர் மாவட்டம் வேலயன்குப்பம் மற்றும் திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமே.

இந்த இரு வகைமைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களும், டிஎன்சி பட்டியலில் கள்ளர்களும், மறவர்களும் எண்ணிக்கைப் பெரும்பான்மையினர். இதற்கடுத்த நிலையில் வேட்டுவக் கவுண்டர்கள், ஊராளி கவுண்டர்கள், வலையர்கள் போன்றோரும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர்.

அது தவிர்த்த பல்வேறு குரவர் சாதியினர், தொட்டிய நாயக்கர்கள், நாவிதர், சலவைத் தொழில் செய்வோர், போயர்கள் என பல சாதியினர் எண்ணிக்கை சிறுபான்மையினர். இந்த எண்ணிக்கைச் சிறுபான்மையினர் சமூக மற்றும் கல்வி வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒப்பானவர்கள் மட்டுமே. அவர்கள் அரசியலதிகாரமின்மையால், குரலற்றவர்களும் கூட. கடந்த முப்பதாண்டு கால 20% ஒதுக்கீட்டிலும் கூட பலனடையாதவர்கள்.

எம்பிசி/ டிஎன்சி தொகுப்பு எப்படி உருவானது

அந்தப் புள்ளியில் வன்னியர்கள் போராட்டம் ஒரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தது என்பதைச் செய்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. வன்னியர் போராட்டத்தின் அடிப்படைக் கோரிக்கையே , தங்களுக்கென்ற தனித்த ஒதுக்கீடு என்பதுதான்.

அதாவது 50% பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் தங்களுக்கு உரிய வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. சமூக, கல்வி ரீதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் வன்னியர்கள் உள்ளார்கள், எனவே தனித்த இட ஒதுக்கீடு வேண்டுமென்பதுதான் கோரிக்கை. அதிலொன்றும் பிழையில்லை.

ஆனால் அவர்கள் கேட்ட 20% ஒதுக்கீடு, ஒரு வகையில் 100% ஒதுக்கீடு என்பதில்தான் சிக்கல். தங்கள் மக்கள் தொகை எண்ணிக்கை அளவின் படியான ஒதுக்கீடு. அவர்கள் போராடிய காலத்தின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, 50% மட்டுமே ஒட்டு மொத்த ஒதுக்கீடும் எனும் போது எப்படிச் சாத்தியம் என்பதைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.

சமூகநீதிக் கொள்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனும் பிரிவை உருவாக்கும் போது, ஒற்றைச் சாதிக்கென்று ஒதுக்கீட்டை உருவாக்க முடியாது. அது சமூகநீதி கிடையாது, சாதிக்கான நீதி. எனவேதான் பிற்படுத்தப்பட்டோரில், சமூக, கல்வி ரீதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைத் தொகுத்தனர். அவர்களோடு ஏற்கனவே அவர்களைப் போலவே சமூக, கல்வி வாய்ப்பில் மிகவும் பின் தங்கியிருந்த, கூடுதலாக காலனிய ஆட்சிக் காலத்தில், கட்டாயப் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டும், கடுமையான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்களுமான குற்றப்பரம்பரைச் சட்டத்தினின்று விடுபட்டோரையும் இணைத்தனர். இப்படித்தான் எம்பிசி/டிஎன்சி என்ற ஒரு புதிய தொகுப்பை, சமூகநீதிச் சிந்தமையாளர் கலைஞர் உருவாக்கினார்.

டிஎண்டி கோரிக்கையும், ராமதாஸ் அவர்கள் ஆட்சேபமும்

சமீப காலங்களில், டிஎன்சி தொகுப்பிலுள்ள சாதிகள், ஒருங்கிணைந்து, தங்களை மீண்டும் 1979 ஆம் ஆண்டிற்கு முன் இருந்தபடி டிஎண்டி ( Denotified Tribes ) என்ற குற்றப்பரம்பரை பழங்குடி சமூகமென சான்றிதழ் வழங்க வேண்டுமென கோரிக்கையை வைத்து போராடி வருகிறார்கள்.

1979 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பொதுத் தொகுப்பில் சேர்க்கப்படும் வரை அவர்களது சாதிகள் டிஎண்டி எனவே பதியப்பட்டது. அந்த டிஎண்டி பட்டியலால் தனித்த ஒதுக்கீடு பலன் இல்லையெனினும் , கூடுதல் கல்வி உதவித் தொகை (Special Scholarship ) போன்ற சிறப்புச் சலுகைகள் பெற்று வந்தனர். எம்ஜிஆரை அரியணையில் ஏற்றியதில் இந்த டிஎண்டி சாதியினருக்கு பெரும்பங்கு உண்டு.

அதற்குப் பரிசாகவே அவர்களது சிறப்புச் சலுகையை உருவி கைமாறு செய்தார் எம்ஜிஆர். இப்போதும் ஒன்றிய இந்துத்துவ மோடி அரசு இவர்களை வளைக்க மீண்டும் “ நாடோடி சாதிகள் மற்றும் குற்றப் பரம்பரை சாதிகளுக்கு “ சிறப்புக் கல்விச் சலுகை என்ற வலையை விரித்துள்ளது.

அதன் விளைவாகவே இந்தப் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. அநேகமாக அதற்கான அரசாணை கூட தயாராகி விட்ட நிலையில்தான் மருத்துவர் அந்தச் சலுகைகளை தரக் கூடாது என ஆட்சேபிப்பதோடு, தனித்த 20% வன்னியர் ஒதுக்கீடு என்ற கோரிக்கையையும் முன்னெடுக்கிறார். அவரது ஆட்சேபத்திற்கு அவர் முன் வைக்கும் காரணம், மேற்படி சாதிகள் மிகவும் முன்னேறிய சாதிகள் என்பதல்ல, மாறாக அவர்கள் போராடவில்லை என்பதுதான்.

சமூகநீதிக் கோரிக்கைகள் எண்ணிக்கை பலம் மற்றும் கவனம் பெறும் போராட்டங்கள் அடிப்படையில் ஏற்கப்பட வேண்டுமென வாதிடுவதே மக்களாட்சி மற்றும் சமூகநீதிக் கொள்கைகளில் நம்பிக்கையற்றதையே காட்டுகிறது. 1870கள் துவங்கி 1931 வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், வன்னியர்கள் தங்களை ஷத்திரியர் என வர்ணாசிரம உரிமையுடன் பட்டியலிட வேண்டுமெனக் கேட்டுப் போராடியது கூட ஆவணப்படுத்தப்பட்ட வரலாறுதான்.

வன்னியர்கள் ஷத்திரியர் உரிமைக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, கைரேகைச் சட்டத்தின் கொடுமைகளுக்கு ஆளாகி நின்றவர்களிடம்தான் இப்போது முரண்பட்டு நிற்கிறார் ராமதாஸ். தங்களுக்கு வேண்டுவதோடு, பிறருக்கு மறுக்க வேண்டும் என்ற அவரது கொள்கையை என்னவென்பது. மருத்துவர் பொதுவாழ்க்கையின் லட்சணம் இது. சாதிகளை மோதவிட்டு குளிர் காயும் வேலை. போகட்டும்.

அன்புமணி முதல்வர் கனவும், தனித்த 20% வன்னியர் ஒதுக்கீடும்

ஒரு பெருங்கனவின் அபூர்வ நிகழ்வாக அன்புமணி அவர்கள் முதல்வராகி, தனித்த 20% வன்னியர் ஒதுக்கீட்டை அரசு ஏற்றுக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும். எம்பிசி/ டிஎன்சி தொகுப்பிலுள்ள பிற சாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றாகும்.

அதாவது வன்னியர்களுக்கு 100% ஒதுக்கீடு, பிறருக்கு 0% ஒதுக்கீடு. ராமதாஸ் அவர்களைக் கேட்டால் அது என் பிரச்னை இல்லை என்பார், இப்போது எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் ஆட்சியிலிருப்பவர்கள் அப்படித் தீர்மானிக்க முடியாது என்பது எளிய உண்மை. இல்லை அப்படித்தான் என்று பிடிவாதமாக நின்றால் அன்புமணி அடுத்த நாள் முதல்வர் நாற்காலியை காலி செய்ய வேண்டியதாகும்.

ஏனெனில், இந்த வாதத்தைத் தொடர்ந்தால், எம்பிசி/ டிஎன்சி தொகுப்பிலிருந்து வெளியேற்றப்படுபவர்களுக்கும், ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ளவர்களுக்கும் சேர்த்து 26.5 % இட ஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பான 30% ல் 3.5% இஸ்லாமியருக்கு ஏற்கனவே உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் வன்னியர் தவிர்த்த ஒட்டுமொத்த இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 26.5%. இந்தத் தொகுப்பு மக்கள் தொகையில் 55% குறையாதவர்களாக இருப்பார்கள்.

ஏன் முதல்வர் அன்புமணி பதவி விலக வேண்டியதாகும்.

மருத்துவர் ராமதாஸ் வன்னியர்களது வாக்கு வங்கி பலத்தை எந்த அடிப்படைகளுமின்றி வானுயர உயர்த்துபவர். வன்னியர் வாக்கு வங்கி அரசியலுக்கு ராமதாஸ் அவர்களிற்கு முன்னரே நாற்பது ஆண்டு நிருபிக்கப்பட்ட வரலாறு உள்ளது. அதே போல அவரது பட்டாளி மக்கள் கட்சியும், ஏற்கனவே இருந்த வன்னியர் கட்சிகளின் மறு அவதாரம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் தேர்தலிலேயே திரு,மாணிக்கவேலர் தலைமையிலான ‘காமன் வீல் பார்ட்டி’ வடாற்காடு மாவட்டத்தில் ஆறு தொகுதிகளையும், திரு.ராமசாமி படையாட்சியார் தலைமையிலான ‘ உழவர் உழைப்பாளர் கட்சி ‘ தென்னாற்காடு/ சேலம் மாவட்டங்களில் பத்தொன்பது இடங்களில் வென்றன.

முதலில் காமல் வீல் கட்சி 1952 லேயே ராஜாஜி அமைச்சரையை வலுப்படுத்த மாணிக்கவேலர் அமைச்சராகியதன் மூலம் காங்கிரசில் கரைந்தது. பின்னர் 1954 ஆம் ஆண்டில் ராமசாமிப் படையாட்சியாரின் கட்சி, அவர் காமராஜர் அமைச்சரவையில் இடம் பெற்றதன் வழி காங்கிரசோடு ஐக்கியமானது. மாணிக்கவேலர் காங்கிரசிலேயே தொடர, 1957 தேர்தலில் ராமசாமிப் படையாட்சியாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட அவர் ‘உழவர் உழைப்பாளர் கட்சியை’ மீள உருவாக்கி, அதன் ஒற்றை உறுப்பினராக /வன்னிய மக்களின் பிரதிநிதியாக அவரது வாழ்நாள் இறுதிவரை இருந்தார்.

எனவே வன்னியர் வாக்கு வங்கி எவ்வளவு விரித்தாலும் முப்பத்தைந்து தொகுதிகளை மீற முடியாது என்பதே நிலை. இல்லை ராமதாஸ் வாதத்தின்படியே, வன்னியர்கள் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும் 65 தொகுதிகளையும் தனித்தே வெல்வதாக வைத்துக் கொண்டாலும், ஆட்சியைப் பிடிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் வேண்டுமென்ற நிலை.

தமிழகச் சட்டமன்றத்தின் உறுப்பினர்களில் சுமார் 190 -195 உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்தான். குறைந்தபட்சம் 140 முதல் 160 வரையான எண்ணிக்கை கொண்ட தொகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வாய்ப்பைச் சுருக்கி விட்டு அல்லது மறுத்து விட்டு எப்படி அன்புமணி அரியணையில் அமர்ந்து, இன்று வன்னிய இனத்தவருக்கு கொடுக்கும் பொய் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.

ஆட்சியில் அமர வாய்ப்பு கிடைத்த மறுநொடியில் வன்னிய மக்களை மறந்து விடுவது மட்டுமே அவரால் செய்ய முடியும். ஏற்கனவே உள்ள வரலாறு அது மட்டுமே சாத்தியம் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் உறுதி செய்கிறது. எனவே இந்தக் கோரிக்கையே ஏமாற்று வேலை மட்டுமே.

ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், இன்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (டிஎன்சி உள்ளிட்ட) சாதிகளில் ஆதிக்க சாதிகளாக அறியப்படுபவற்றில், மூக்குலத்தோர், வெள்ளாளக் கவுண்டர்கள், நாடார்கள், வெள்ளாளர்கள், முதலியார்கள் ஆகியவர்களைவிட ஒப்பீட்டளவில் வன்னியர் சமூகம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார அளவுகோல்களில் நிச்சயமாக பிந்தங்கியே உள்ளது.

அந்த நிலையை தங்களுக்கு சாதகமாக்கும் கூட்டமே ராமதாஸ் கட்சியினர். இது வன்னியர்கள் அளவில் மட்டுமில்லை இதர சாதிக் கட்சிகளும், அவர்கள் யாருக்காகப் போராடுவதாகக் கூறுகிறார்களோ அவர்களது நலனுக்கு ஊறு விளைவிப்பவர்களே. சாதிக்கான அதிகாரம், சாதி வழியான அதிகாரமென எந்தத் தரப்பு வாய் வீசினாலும் அது முழு ஏமாற்று வேலை மட்டுமே.

சாதிக் கட்சிகள், அந்தந்த சாதிகளை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகள் மட்டுமே. ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாத பாமக போன்ற சாதிக் கட்சிகள் வன்னியர்களுக்கான பிற கட்சிகளிலான வாய்ப்புகளை இழக்கச் செய்து அவர்களை அந்தந்தக் கட்சிகளில் பலவீனமாக்கும் பணிக்கு மட்டுமே உதவும்.

யாருக்குத் தேவை உள் ஒதுக்கீடு

தற்போதைய நிலையில் பிற கோரிக்கைகளைப் புறந்தள்ளி எம்பிசி/ டிஎன்சி தொகுப்பிலுள்ள சமூக, கல்வி மேம்பாட்டில் அதலபாதாளத்தில் இருக்கும் பல்வேறு எண்ணிக்கை சிறுபான்மை அடிநிலை சாதியினருக்கு தனித்த உள் ஒதுக்கீடு வழங்குவதே அசலான சமூகநீதியாக இருக்கும்.

அதுதான் சமூகநீதிக்காரனின் குரலாக ஒலிக்க முடியும். அரசியலதிகாரம் கொண்ட எண்ணிக்கைப் பெரும்பான்மை சாதிகளின், வன்னியர்கள்,கள்ளர்கள்,மறவர்கள், வாக்கு வங்கி பலம் சமூகநீதிக் கொள்கையைத் தீர்மானிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஒற்றைச் சார்பான சாதியின் வாக்கு வங்கி என்பதே அரசியல் பிழைப்புவாதிகளின் ஏமாற்று வேலை மட்டுமே.

எந்தச் சாதியும் உள்முரண்களற்ற தொகுப்பல்ல. சாதிகளை ஜனநாயகமயப்படுத்துவதும் சாதி ஒழிப்பை நோக்கிய பாதையே. அதன் படிநிலையில் சாதிக்கட்சிகள் ஒழிப்பும் பிரதானமானது. சாதியை வைத்துப் பேசப்படும் பேரங்களை முற்றாக நிராகரிப்பதே அதற்கான நல்ல துவக்கமாக இருக்க முடியும்.

- சுப குணராஜன்

Pin It