உச்ச நீதிமன்றத்தால் ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவில் இருந்து அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அது தமிழகத்தின் அவமான சின்னமாக காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழ்ச் சமூகத்தை மதுவாலும், ஊழலாலும் சீரழித்த ஒரு பார்ப்பன பாசிஸ்ட்டான ஜெயலலிதாவின் சமாதி அங்கிருந்து நீக்கப்படவில்லை என்றால், அது இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு அயோக்கியர்களுக்கும், அரசியலில் பொறுக்கித் தின்னுவதற்காகவே களம் இறங்கும் கழிசடைகளுக்கும் தங்களுக்கான உத்வேகத்தைப் பெறும் இடமாக மாறிவிடும். அப்படித்தான் தற்போது மாறியிருக்கின்றது. தினகரன், தொடங்கி தீபா, விஷால் வரை ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கி விட்டு வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அம்மாவின் வழியில் மக்களுக்கு சேவை செய்வோம் என்கின்றனர். இதன் மூலம் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கிவிட்டு வந்த ஒருவன் அம்மாவைப் போலவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள யார் தாலியை அறுக்கவும் தயங்க மாட்டான் என நாம் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.

eps ops and madhusudhanan

ஜெயலலிதா செத்து சரியாக ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுகவின் இரண்டு அணிகளான நாகபதனியும், நாகப்பதனியும் ஒன்றாக இணைந்து இரட்டை இலையை மீட்டு, தங்களது வரலாற்றுக் கடமையை ஆற்றும்வரை பொறுமை காத்த தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கப்பட்ட உடன் தேர்தல் தேதியை அறிவித்து தங்களைப் போன்ற ஆளுங்கட்சியை நக்கிப் பிழைக்கும் மானங்கெட்ட அமைப்பு இந்த உலகத்தில் வேறு எங்குமே கிடையாது என தெரியப்படுத்தியது. ஆளுங்கட்சியை வெற்றிபெற வைப்பதில் ஆளும்கட்சியைவிட தேர்தல் ஆணையமே அதிக சிரத்தையுடன் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றது. சென்ற முறை நடந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக தேர்தலை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் தற்போது அப்படி எதுவும் நடக்காமல் தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என உத்திரவாதம் கொடுத்திருக்கின்றதா எனத் தெரியவில்லை.

எந்த வகையிலும் இந்தத் தேர்தல் மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என்பது அனைவருக்கும் தெரியும். மோடியின் ஆசி இருக்கும் வரை இந்த அழுக்கு பிடித்த ஆட்சி தமிழகத்தில் நீடிப்பதை யாரும் தடுக்க முடியாது. ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இல்லை என்பதோடு ஆளுங்கட்சிக்கு எதிராக மிக மோசமான எதிர்ப்பு நிலவுக்கின்றது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளாலும் மிக மோசமான முறையில் ஊழல்படுத்தப்பட்டவர்கள் என்பதால், இந்தக் கருமத்தை எல்லாம் சகித்துக்கொண்டு சும்மா பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதுவே ஐரோப்பாவிலோ, லத்தின் அமெரிக்க நாடுகளிலோ, இல்லை அமெரிக்காவிலோ இப்படி ஒரு கேவலமான மக்கள் விரோத ஆட்சி நடந்து கொண்டிருந்தால் மக்கள் தெருவில் இறங்கி ஆட்சியாளர்களை ஓட ஓட வீட்டிற்கு விரட்டியடித்திருப்பார்கள்.

எப்போதுமே இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்பது தவிர்க்க முடியாத நியதியாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் களத்தில் தாங்களும் இருக்கின்றோம் என்பதைக் காட்டிக் கொள்ள மெனக்கெட்டுக் கொண்டு வேலை செய்யும். பிறகு தேர்தலில் தோற்றவுடன் ஆளுங்கட்சி முறைகேடான வழிகளில் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கும். இது எல்லாம் நாம் காலம் காலமாக பார்த்து வருவதுதான். ஆனால் இந்தத் தேர்தல் அப்படி இருக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம்தான். உண்மையில் தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை நேர்மையாக நடத்தும் என்றால், ஆளும் கட்சி மிகப் பெரிய தோல்வியடையவே வாய்ப்பிருக்கின்றது. அப்படி ஒரு மிக மோசமான தோல்வியை ஆளுங்கட்சி சந்தித்துவிடக் கூடாது என்பதற்காகவே தேர்தல் ஆணையம் ஓட்டை குறைந்த பட்சம் பிரிக்க சக்தியுள்ள ஒவ்வொருவரையும் திட்டமிட்டு தேர்தலில் போட்டியிட முடியாமல் வெளியேற்றுகின்றது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் விஷாலில் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்துகொண்டு வரும் ஆட்சியானது மக்களுக்கு பெரும் சோர்வை கொடுத்திருக்கின்றது. மக்கள் சின்ன சின்ன கோரிக்கைகளுக்குக் கூட தெருவில் இறங்கிப் போராட இந்த அரசு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றது. அப்படியே போராடினாலும் இந்த அரசு ‘அம்மாவின் வழியில்’ நின்று போராடும் மக்களை குண்டாந்தடிகளால் அடக்குகின்றது. தற்போது இந்த அரசை முழுவதும் காப்பாற்றிக் கொண்டிருப்பது காவல்துறைதான் என்றால் அது மிகையாகாது. பாசிசம் எப்போதுமே தன்னை அடக்குமுறை மூலமே தக்கவைத்துக் கொள்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணமாக இந்த அரசு இருந்து வருகின்றது. எப்படியாவது ஏதாவது அதிசயம் நடந்து இந்த அரசு கவிழ்ந்துவிடாதா என்றுதான் ஒவ்வொரு தமிழ் மக்களும் விரும்புகின்றார்கள். ஒவ்வொரு நாளும் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் மக்கள், பைத்தியக்காரர்கள் ஆட்சி செய்யும் நாட்டில் வசிப்பது போலவே தங்களை உணர்கின்றார்கள்.

இப்படி ஒரு நிலை தமிழ்நாட்டில் நிலவும் போது அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு மக்களை ஓரணியில் திரட்டி ஆளும் கட்சிக்கு எதிராக போர்க்குணம் கொண்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய, தங்களை மாற்று சக்திகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கட்சிகள் அதைச் செய்யத் திராணியற்று வழக்கம் போல திமுகவிற்குக் காவடி தூக்கும் வேலையைச் செய்கின்றன. குறிப்பாக சிபிஎம். சென்ற முறை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் வேட்பாளரை அறிவித்த சிபிஎம் இந்த முறை வேட்பாளரை அறிவிப்பதற்குக்கூட திராணியற்று, திமுகவை ஆதரித்து இருக்கின்றது. திமுக வெற்றி பெறுவதன் மூலம் மதவாத சக்திகள் வீழ்த்தப்படுவார்கள் என தன்னுடைய பிழைப்புவாதத்திற்கும், ஒட்டுண்ணிதனத்திற்கும் சப்பைக்கட்டு கட்டுகின்றது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் சிபிஐயும், சிபிஎம்மும் ஒட்டுண்ணியாகவே வாழும் என்பது கட்சியில் நேற்று சேர்ந்தவர்கள் கூட அறிந்து வைத்திருக்கின்றார்கள். புரட்சிப் பாதையை தவிர்த்து பாராளுமன்றப் பாதைதான் சரியானது என தேர்தெடுத்துக் கொண்டவர்களால் அதைகூட ஒழுங்காக செய்ய முடியாத அவமானகரமான தோல்வியை தமிழ்நாட்டில் தழுவி இருக்கின்றார்கள்.

இந்த லட்சணத்தில் ‘மார்க்ஸியம் கற்போம், மார்க்ஸிடம் கற்போம்’, ‘லெனினியம் கற்போம், லெனினிடம் கற்போம்’ என ஏதோ புரட்சி செய்ய அணியமாகின்றவர்கள் போல மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினின் நூல்களை முன்பதிவு திட்டம் போட்டு விற்கின்றார்கள். இதை எல்லாம் வாங்கிப் படித்துவிட்டு வந்த ஒருவர், ‘தோழர்… எல்லாம் படித்தாகிவிட்டது. இனி நாம் என்ன செய்யலாம்’ என்று கேட்டால், ‘அப்படி கேளுங்க தோழர்... நாமெல்லாம் மானமுள்ள கம்யூனிஸ்ட்கள். அனைத்தையும் படித்து கற்றுத் தேர்ந்தவர்கள். அதனால் தனியாக மேடை போட்டு திமுகவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்போம். நமக்கு சித்தாந்தம்தான் முக்கியம்’ என்று சொல்வார்கள். தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்கள் பெயரைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்குவதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். நேற்று கட்சி ஆரம்பித்த சீமானும், கட்சியே இல்லாத விஷாலும் தனியாக நிற்க முற்படும் போது தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து, ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆன ஒரு கட்சி இப்படி தன் வாழ்நாள் எல்லாம் ஒட்டுண்ணியாகவே வாழ ஆசைப்படுவது அதன் சாபக்கேடுதான். பினராயி விஜயனைப் பார்த்து இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் எல்லாம் கடைசி வரை வயிறு எரிந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். அந்தக் கொடுப்பினை எல்லாம் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்கப் போவதில்லை. இவர்களுக்கு ஒட்டுண்ணி வேலை பார்க்கவும், சினிமா கழிசடைகளை அழைத்து வந்து பாராட்டு விழா எடுக்கவுமே நேரம் சரியாய்ப் போய்விடுகின்றது.

அதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. அது அதிமுகவின் இடத்தில் வேண்டுமானால் திமுகவைக் கொண்டுவரும். ஆனால் சித்தாந்த ரீதியாக அதே ஊழலையும், மக்கள் விரோத ஆட்சியையுமே அது மீண்டும் நிலைநாட்டும். ஆட்சியை பிடிப்பதற்காக பிழைப்புவாதிகள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தி, அவர்களை நேர்மையான அரசியலின் பின் அணிதிரட்ட வேண்டியவர்கள், அப்படி அணிதிரட்டப் போவதாக சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் தாங்கள் வழக்கம் போல ஜல்ரா போடுவதற்கும், சொம்பு தூக்குவதற்கும், ஒட்டுண்ணிகளாய் வாழ்வதற்குமே பயிற்றுவிக்கப்பட்டவர்கள், எங்களால் செய்ய முடிந்த அதிகபட்ச புரட்சி என்பது தனியாய் மேடை போட்டு எங்கள் சரணாகதியை அறிவிப்பதுதான் என்ற அளவில் தங்களது அரசியல் நாடகத்தை முடித்துக்கொண்டார்கள்.

- செ.கார்கி

Pin It