இந்திய _ அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் ரகசிய சரத்துக்களைக் கொண்ட இந்திய _ அமெரிக்க ராணுவக் கூட்டு வேகமாக மாறும் புத்துலக உறவிற்கு ஒவ்வாதது. இந்த ராணுவக் கூட்டு அமெரிக்க அரசின் பஞ்சதந்திர கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, நமக்கும் அமெரிக்க மக்களுக்கும் பயன்தரும் நட்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த ஏகாதிபத்திய தந்திரம் நமக்கு புதிதுமல்ல. சராசரி அமெரிக்கனையும், பாமர இந்தியனையும் ஏமாற்ற ஆட்சியில் இருக்கும் பெரும் தலைகளும், செல்வாக்குள்ள மீடியாக்களும் பரப்புவதென்ன? இது ராணுவக் கூட்டல்ல! பாதுகாப்பு ஒப்பந்தம்!, அமெரிக்காவிற்கு அருகிலுள்ள கியூபாவால் அபாயமிருக்கிறது. வட கொரியா, ஈரான் போன்ற சுண்டைக்காய் நாடுகள் அணுகுண்டு செய்யும் தொழில் நுட்பத்தை திருடி உலகை மிரட்டுகின்றன. அமெரிக்காவையும், இந்தியாவையும் சுற்றி பகைமை கொண்ட நாடுகள் உள்ளன. 9/11, 26/11 தேதிகளில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் நடந்தது போன்ற பயங்கரவாதிகளின் செயல்கள் மக்களின் நிம்மதியை கெடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா, அமெரிக்கா இரண்டும் ஆகப் பெரிய ஜனநாயக நாடுகளாகும். எனவே ஜனநாயகத்தைக் காக்கும் சர்வதேசக் கடமை காத்து இருக்கிறது.
இக்காரணங்களுக்காக இந்திய, அமெரிக்க ராணுவக் கூட்டுப் பயிற்சி, கூட்டு நடவடிக்கை, நவீன அமெரிக்க ஆயுதங்களை கையாள இந்திய ராணுவத்திற்கு பயிற்சி. அமெரிக்க ஆயுதங்களையும், ராணுவ விமானங்களையும் வாங்கி குவிக்க வேண்டும், என்பது ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துக்கள்.
ஒபாமா சேல்ஸ் மேனாக வந்தார். ராணுவ விமானங்களை நம் தலையில் கட்டிவிட்டார். சி17 குலோப் மாஸ் டர் தேர்டு என்ற ராணுவ விமானங்கள் 10 வாங்க இந்தியா சம்மதித்துள்ளது. போயிங் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனமே இதனை தயார் செய்கிறது. இதனால் 22 ஆயிரம் பேருக்கு வேலையும் 4.1 பில்லியன் டாலர் வருமானமும் அமெரிக்காவிற்கு கிடைக்குமென்று அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. அவர்கள் சொல்லாமல் விட்டது இந்தியாவிற்கு கடன் சுமை ஏறும் என்பதை.
1957இல் உருவான ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் ஆய்வு மையத்தை பலப்படுத்தி இந்த 53 வருடங்களில் நாமே இத்தகைய விமானங்களை உற்பத்தி செய்து குவித்திருக்க முடியும். நாம் வாங்கப்போகும் சி17 குளோப் மாஸ்டரின் திறனைக் கொண்டவை 17கஜராஜ் என்ற ஆகாயக் கப்பல் ராணுவச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானமாக ஏற்கனவே இங்கு தயாரிக்கப்பட்டு ராணுவம் பயன்படுத்தி வருகிறது. போபால் விஷவாயு விபத்திற்குப் பிறகு, ஆலையிலுள்ள விஷ வாயுவை அகற்ற இந்த கஜராஜ் விமானங்கள் தான் பல லட்சம் லிட்டர் நீரை சுமந்து பறந்து வந்து பாதுகாப்பு கொடுத்தது.
கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தோர், திட்டமிட்டிருந்தால், அப்துல் கலாம் போன்ற டெக்னிஷியன்களை, பயன்படுத்தி நவீன விமானத் தொழிலை மேம்படுத்தி இருக்கலாம். சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஆகாயக் கப்பல்களை உலகச் சந்தையில் குவித்திருக்கலாம். சந்திரயான் திட்டத்திற்கு ராக்கெட் செய்ய முடியுமென்றால் நமது பாதுகாப்பிற்கு விமானங்களை செய்ய முடியாதா? எதற்கு அமெரிக்காவிடம் கையேந்த வேண்டும். அணுகுண்டு சோதனைகள் என்று பணத்தை வீணடிக்காமல் இதற்கு பயன்படுத்தியிருந்தால் நாட்டு பாதுகாப்பு உறுதிப்பட்டிருக்கும். வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கும். அந்நிய செலாவணி வேறு வகையில் பயன்பட்டிருக்கும். கடன் சுமையின்அளவு குறைந்திருக்கும்.
பொது அறிவு உள்ளோர் கேட்பது என்ன?
இந்த இந்திய, அமெரிக்க ராணுவக் கூட்டு எப்படி பயங்கரவாதத்தை வேரறுக்க உதவும்? எப்படி ஜனநாயகத்தைக் காக்கவும் பரப்பவும் உதவும்?. எப்படி நமது நாட்டின் பாதுகாப்பையும் எல்லையையும் காக்க உதவும்? எப்படி அணுகுண்டுகளே இல்லாத உலகை உருவாக்கும்? வரலாற்று அனுபவங்களும், கண் முன்னே நடப்பதுவும் இதற்கு நேர் மாறாக உள்ளனவே என்று கேட்கின்றனர்.
எல்லா வகையிலும் பலம் கொண்ட நேட்டோ ராணுவக் கூட்டு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ‘எந்திரன்’ வகை ராணுவத் தளவாடங்கள் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கும். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், ஆசிய நாட்டு மக்களை கொன்று குவிக்கிறதே தவிர, பின்லேடனை பிடிக்க மறுப்பதேன்? எண்ணெய் வயல்களை கைப்பற்றுகிறதே தவிர, பயங்கரவாதிகளை தனிமைப்படுத்த மறுக்கிறதே ஏன்? நம் நாட்டு ஜனநாயகத்தை இந்த ராணுவக் கூட்டு எப்படி பாதுகாக்கும்?
1954இல் அமெரிக்க, பாகிஸ்தான் ராணுவக் கூட்டு ஏற்பட்டதன் அனுபவமென்ன? ஏராளமான ஆயுதங்களை அமெரிக்கா, பாகிஸ்தான் தலையில் கட்டியது, இன்றும் சுமத்தி வருகிறது. பாக். ராணுவத்திற்கு ஆயுதங்களும் அமெரிக்க அரவணைப்பும் கிடைத்தது. ஆனால் அங்கு ஜனநாயகம் புதை குழிக்குப் போனது. ஏனெனில் கடனும் வட்டியும் பாக். அரசின் வருமானத்தில் பெரும்பகுதியை விழுங்குவதால் மக்களின் தேவைகள் கிடப்பில் போடப்பட்டன. கலவரச் சூழல் உருவானது. பாக். அரசியல் நிர்ணயச்சட்டம் புதைக்கப்பட்டது. மூன்று முறை அமெரிக்க அரசின் ஆசியுடன் ராணுவ சர்வாதிகாரிகள் ஆட்சியை கைப்பற்றினர். அமெரிக்காவின் ராணுவத் தளமாக பாகிஸ்தான் ஆனது. அதையும் விட கொடுமை அமெரிக்க ‘எந்திரன்’ இயக்கும் ராணுவ விமானங்களின் தாக்குதலுக்கு இன்று இரையாகுமிடமாக பாகிஸ்தான் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை பாதுகாக்கவே அமெரிக்காவோடு ராணுவக் கூட்டு என்றால் யாரை ஏமாற்ற இந்தப் பொய் என்ற கேள்விக்கு நமது பிரதமர் பதில் சொல்ல வேண்டும்.
அடுத்து இந்தியா போன்ற பெரிய நாடு, ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்து பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியுமா? முடியாது. அர்ஜென்டினா என்ற தென்அமெரிக்க நாட்டின் அனுபவமென்ன? அந்த நாடு முன் காலத்தில் அமெரிக்காவோடு செய்து கொண்ட ராணுவ ஒப்பந்தத்தால் பட்ட பாட்டை சற்று திரும்பிப் பார்ப்பது அவசியம். ஆயுதங்களும் ஏவுகனைகளும் நிறையவே அமெரிக்கா கொடுத்தது. அர்ஜென்டினாவிற்கு மிக அருகில் உள்ள மால்வினாஸ் தீவை ஆறாயிரம் மைலுக்கு அப்பால் உள்ள பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத் தளமாக பயன்படுத்தியது. (இந்துமா கடலில் டியோகார்ஷியா தீவைப் பயன்படுத்தியதைப் போல). பின்னர் அந்தத் தீவை பால்க்லாந்து தீவு என்று பெயரிட்டு சொந்தம் கொண்டாடிவிட்டது. தனது எல்லைக்குள் இருக்கும் தீவை மீட்க அர்ஜென்டினா 1982இல் முயற்சித்த பொழுது, பிரிட்டிஷ் கப்பற்படையோடு அமெரிக்கா கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட நேர்ந்தது. பிரிட்டனோடு சண்டையிட தாங்கள் கொடுத்த ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்தது. ஏவுகனைகளை செயலிழக்கச் செய்துவிட்டது. மால்வினாஸ் தீவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பகுதி என்றும் அமெரிக்கா அறிவித்து விட்டது.
வரலாற்றை நோக்கினால், 18ஆம் நூற்றாண்டின் முடிவில் அறிவொளி இயக்கத்தின் விளைவாக மேலை நாடுகள் மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டன. மதவாத நோய்கள் நீங்கின. முன்னேற்றம், விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற லட்சியங்களை காட்டி, முதலாளித்துவம் வீறுகொண்டு எழுந்தது. ஆனால் மேலை நாட்டு முதலாளி வர்க்கம் உலகை முன்னேற்றுவதற்கு பதிலாக ஐரோப்பிய அறிவுலகம் கண்ட விஞ்ஞான தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்டு சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் போட்டியில் இறங்கின. இராணுவக் கூட்டுகளை உருவாக்கின, இரண்டு உலக யுத்தங்களைக் கொண்டு வந்தன. விஞ்ஞானமும், தொழில்நுட்பங்களும் ஆயுதத் தளவாடங்களையும், பேரழிவு ஆயுதங்களையும் செய்து குவிக்கவே திருப்பி விடப்பட்டன. இந்திய மன்னர்களின் பலவீனத்தை பயன்படுத்தி இந்தியாவை பிரிட்டன் அடிமைப்படுத்தியது.
பிரிட்டனும், பிரான்சும் சீனா மீது யுத்தம் தொடுத்து அபின் இறக்குமதியை ஏற்கவைத்து அந்த நாட்டை சீர்குலைத்தது. மேலை நாடுகள் ஆப்பிரிக்க மக்களை அடிமையாக்கி சந்தையில் விற்றன. காலனியாதிக்கத்தை நிலை நாட்டின. சுருக்கமாக மேற்கத்திய முதலாளித்துவ உற்பத்தி முறை, ஏகாதிபத்திய ஆசைகளை வளர்த்ததே தவிர, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ வளர்க்க உதவவில்லை. இன்று உலகம் முற்றிலும் மாறிவிட்டது. ஆனால் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க வெறி மட்டும் நீடிக்கிறது. இந்த ராணுவக் கூட்டு அந்த வெறிக்கு துணைபோவது ஆகும். இன்று அடுத்தவனை பிச்சைக்காரனாக்கி செல்வம் திரட்டும் மேற்கத்திய முதலாளித்துவம், அமெரிக்காவின் தலைமையில் இருளை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது. இன்றையத் தேவை ராணுவக் கூட்டல்ல, ஆயுத பெருக்கமல்ல, உலகளவில் புதிய சமத்துவ வர்த்தக உறவு. நாடுகளிடையே ஒத்துழைப்பு. உழைப்பிற்கு மதிப்பு.புதிய பணக்கோட்பாடு.
இன்றைய கட்டத்தில் நமது நாட்டு விவேகமற்ற அரசியல் தலைவர்களால் உருவாக்கப்படும் அமெரிக்கஇந்திய ராணுவக் கூட்டு நமக்கு நாமே வைக்கிற வேட்டு.