இனி பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் உயர்த்தப்பட்டாலும் வியப்பதற்கில்லை. இந்த ஆண்டிலேயே இரண்டாவது முறையாக இப்போது பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இந்திய அரசு.

இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள லிட்டருக்கு ரூ.7.54 என்பது அண்மைக்கால வரலாறு காணாத செங்குத்தான விலைப்பாய்ச்சலாகும். இந்த விலை உயர்விலும் இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்குத் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் விலைஉயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லிக்கு பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ. 7.54 என்றால் தமிழ்நாட்டிற்கு ரூ.7.98!

அடிமைத் தமிழ்த் தேசத்திற்கு இந்திய ஏகாதிபத்தியம் அளிக்கும் கூடுதல் பரிசு இது!

இந்த பெட்ரோல் விலைஉயர்வு பொதுவாக தவிர்த்திருக்கக் கூடியது என்பது ஒரு புறமிருக்க, இவ்வளவு கடும் விலை உயர்வைத் தமிழ்நாடு சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்திய ஏகாதிபத்தியத்தின் கீழ் கட்டுண்டுக் கிடப்பதால் எண்ணெய் வளம் மிக்கத் தமிழ்நாடு இவ்விலை உயர்வைச் சுமக்க வேண்டியுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு இரண்டு காரணங்களை இந்திய அரசு கூறுகிறது. (1) இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர் இழப்பைச் சந்திக்கின்றன. குறிப்பாகக் கடந்த 2012 மார்ச்சு 31 கணக்கின்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.6.28 இழப்பை இந்நிறுவனங்கள் சுமக்கின்றன. (2) அமெரிக்க நாணயமான டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெருமளவு சரிந்துவிட்டதால் இறக்குமதியாகும் கச்சாஎண்ணெய் விலை ரூபாய் மதிப்பில் உயர்ந்துவிட்டது.

இந்த இரண்டு காரணங்களுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கடும் விலைஉயர்வை நியாயப்படுத்திவிட முடியாது.

முதலாவதாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குகின்றன என்பது அப்பட்டமானப் பொய் ஆகும். மோசடியான கணக்கீட்டு முறையினால் அரசின் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதாகப் பொய்ச்சித்திரம் தீட்டப்படுகிறது. இதனை இந்திய அரசு நியமித்த நரசிம்மம் குழுவும், நாடாளுமன்ற நிலைக்குழுவும் தெளிவாக எடுத்துக்காட்டிவிட்டன.

இந்தியாவிற்குள் உற்பத்தியாகும் பெட்ரோலியம் உள்ளிட்டு அனைத்துமே வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாவதாகக் கணக்கில் காட்டப்படுகின்றன. அமெரிக்க டாலர் மதிப்பில் அனைத்து எண்ணெயும் இறக்குமதியானதாக கற்பனையாகக் காட்டப்படுகிறது. அதற்குக் கப்பலில் கொண்டுவந்ததற்கான கட்டணம் என்று இன்னொரு கற்பனைக் கணக்கு காட்டப்படுகிறது. கடல்வழியில் கப்பலில் கொண்டு வரும்போது கசிந்துவிட்டதாக ஒரு கணக்கு. இதுவும் கற்பனைதான். பிறகு ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமான செலவு என்ற இன்னொரு கற்பனைக் கணக்கு. இவற்றையெல்லாம் கூட்டிச்சேர்த்துத்தான் கச்சா எண்ணெயின் அடிப்படை விலை தீர்மானிக்கப்படுகிறது.

இந்தக் கணக்கீட்டின் வழியிலேயே கூட எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொள்ளை இலாபம் கிடைக்கிறது. ஆனால் இந்த இலாபத்தை மறைத்து நட்டம் ஏற்படுவதாகப் பொய்யாகக் கணக்குக் காட்டப்படுகிறது. அரசு அமைத்த ஆய்வுக் குழுக்களே இதனை எடுத்திக் கூறிவிட்டன.

உண்மையில் ஆண்டுதோறும் இந்நிறுவனங்கள் அரசுக்குக் கோடிகோடியாய் இலாப ஈவுத் தொகையை வழங்கி வருகின்றன.

கற்பனையான இறக்குமதியையும் அடிப்படையாகக் கொண்டு கச்சா எண்ணெயின் விலை தீர்மானிக்கப்படும்போது, அதில் ஏற்படும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்ற காரணியும் அரசின் கற்பனைக்கு மெருகூட்டப் பயன்படுகிறதேயன்றி உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதில்லை.

மேற்கண்டவாறு எண்ணெயின் அடிப்படை விலையைத் தீர்மானிப்பதில் மோசடியான கணக்குமுறை ஒருபுறம் செயல்படுகிறதென்றால், மறுபுறம் பெட்ரோல் டீசல் மீதான அரசின் வரிவிதிப்பு விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.

பெட்ரோல் விலை இப்போதைய உயர்வுக்குப் பிறகு, லிட்டருக்கு ரூ.77.53 என்றால் இதில் ரூ.45.75 தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது இந்திய, தமிழக அரசுகள் விதிக்கும் வரித்தொகையாகும். பெட்ரோல் மீது இந்திய அரசு விதிக்கும் சுங்கவரி, உற்பத்திவரி, மேல்வரி, கல்விவரி ஆகியவை மொத்தம் 32 விழுக்காடு. மாநில அரசின் விற்பனைவரி (இப்போது அது வாட்வரி) 27 விழுக்காடு.

பெட்ரோல் விலை உயர்வு என்பது ஒருவகையில் இந்திய அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. கடந்த நிதியாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீது இந்திய அரசுக்குக் கிடைத்த வரி வருவாய் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்த வரியைப் பாதி குறைத்தால் கூட பெட்ரோல் விலை உயர்வைத் தவிர்க்க முடியும்.

இது ஒட்டுமொத்த இந்திய நிலை. இதைக் கூட தமிழகம் சுமக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் அமைந்துள்ள நரிமணம், அடியக்கமங்கலம், புவனகிரி, கோயில்களப்பால் ஆகிய இடங்களில் மொத்தம் 28 எண்ணெய், எரிவளிக் கிணறுகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து மாதந்தோறும் 40 ஆயிரம் கிலோலிட்டர் பெட்ரோலும், 1.20 இலட்சம் கிலோலிட்டர் டீசலும் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் பெட்ரோல் நுகர்வு மாதத்திற்கு 1.20 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும். டீசல் நுகர்வு மாதத்திற்கு 3.60 இலட்சம் கிலோ லிட்டர் ஆகும்.

அதாவது தமிழகத்தின் பெட்ரோல், டீசல் தேவையில் மூன்றில் ஒரு பங்கு தமிழகத்திலேயே கிடைக்கிறது. குறைந்தபட்ச இலாபம் உட்பட அதன் அடிப்படை விலையானது அதிகம் போனால் லிட்டருக்கு 39 ரூபாய்தான்.

மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு தேவைக்குத் தமிழகம் இங்கிருந்து ஈட்டும் அயல் செலாவணியிலிருந்து வெளிநாட்டில் கச்சாஎண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என நிதி சுதந்திரத்தை இந்திய அரசு வழங்குமேயானால் இப்போது சர்வதேசச் சந்தையில் இறங்குமுகமாக உள்ள விலையில் தமிழகம் வாங்கிக் கொள்ள முடியும்.

இவ்வாறு தமிழ்நாட்டு பெட்ரோலிய எண்ணெய் தமிழகத்திற்கே சொந்தம் என்ற உரிமையும், அயல்நாட்டுச் சந்தையில் தமிழகமே பெட்ரோலியத்தை நேரடியாக இறக்குமதி செய்துகொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலை சுமார் 50 ரூபாய் விலையில் தாராளமாக வழங்கலாம். டீசலையும் இது போல் குறைந்த விலையில் வழங்கலாம்.

தமிழ்நாட்டின் எரிவளித் (எரிவாயு) தேவையில் சுமார் 80 விழுக்காடு தமிழ் நாட்டிலேயே கிடைக்கிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவளி தமிழக அரசுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்பட்டால் இப்பொதுள்ள விலையை விட மலிவான விலையில் இயற்கை எரிவளி உருளை (சிலிண்டர்) குடும்பங்களுக்கு வழங்கமுடியும்.

எனவே தமிழ்நாட்டின் எண்ணெய் வளம் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தமாக வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். முதலமைச்சர் செயலலிதாவின் வெறும் கண்டன அறிக்கைகளால் பயன் ஏதும் கிடைக்காது.

இம்மண்ணிற்கான மாற்று வழிகளைச் சொல்லாமல் “பெட்ரோல் விலையைக் குறை” என்ற எதிர்க்கட்சிகளின் வெற்று முழக்கத்தாலும் நிலையான பலன் ஏதும் விளையாது.

தமிழக எண்ணெய் வளத்தைத் தமிழ்நாட்டிற்கே சொந்தமாக்கு!

பெட்ரோல் டீசல் மீதான வரிகளை இந்திய அரசே திரும்பப் பெறு!!

என்ற முழக்கத்தை முன் வைத்து தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அதுதான் பெட்ரோல் டீசல் விலை குறைய உரிய வழியாகும்.

Pin It